Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
ஹரிமொழி
கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன்
- ஹரி கிருஷ்ணன்|ஆகஸ்டு 2020|
Share:
மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான கோஷ யாத்திரைக்குச் செல்வதைத் தடுக்கிறான் என்றதும் கதையையே மாற்றினான். திருதராஷ்டிரனோ துரியோதனன் பாண்டவர்களை வம்புக்கிழுப்பான் என்று அஞ்சுகிறான். பீமசேனனுடைய வலிமை ஒருபுறம் இருக்க, அர்ஜுனன் தேவலோகத்துக்குச் சென்று திவ்யாஸ்திரங்களைப் பெற்றுத் திரும்பியிருப்பது அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அஸ்திரப் பயிற்சி இல்லாதபோதே அசைக்கமுடியாதவனாக விளங்கிய பார்த்தன், இப்போது ஆயுத பலத்தோடும் விளங்குவது திருதராஷ்டிரனுக்குக் கலக்கத்தையே தந்தது. சகுனி அவனைப் பார்த்து, "பாரதரே! பாண்டவர்களுள் மூத்தவனான யுதிஷ்டிரன் தர்மத்தை அறிந்தவன். அவன், ஸபையில் பன்னிரண்டாண்டு காலம் காட்டில் வசிப்பதாய் பிரதிஜ்ஞை செய்திருக்கிறான். தர்மசாரிகளான எல்லாப் பாண்டவர்களும் அவனை அனுஸரித்திருக்கிறார்கள். குந்தீபுத்ரனான யுதிஷ்டிரனோ நம் விஷயத்தில் கோபத்தைப் பாராட்டமாட்டான். எங்களுக்கோ, வேட்டையைக் குறித்துச் செல்வதற்கு விருப்பம் பெருகுகிறது. நாங்கள் பசுக்களுடைய எண்ணிக்கையைச் செய்ய விரும்புகிறோம். பாண்டவர்களைப் பார்க்க விரும்பவில்லை. அந்த இடத்தில் கெட்ட செய்கை ஒன்றும் நடைபெறாது. எந்த இடத்தில் அவர்களுக்கு வாஸமோ, அந்த இடம் நாங்கள் செல்லமாட்டோம்' என்று சொன்னான்." (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம், அத். 250, பக். 907)

துவைத வனத்துக்குப் போவதே, பாண்டவர்களைச் சீண்டிப் பார்க்கவும், திரெளபதிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தவும்தான். (திரெளபதிக்கு இதனால் வருத்தம் ஏற்படும் என்று இவர்கள் நினைத்தார்கள்.) திருதராஷ்டரன் சம்மதிக்கவில்லை என்றதும் அப்படியே புரட்டிப்போட்டு, 'நாங்கள் பாண்டவர்கள் இருக்கும் பக்கம்கூடப் போகமாட்டோம்' என்று உறுதியளித்தான் சகுனி. இதைக் கேட்டதும் "மந்திரியோடு கூடிய துரியோதனன், விருப்பப்படிப் போகலாம்" என்று அரைமனதுடன் திருதராஷ்டிரன் அனுமதியளித்தான். துரியோதனன், நகரவாசிகளையும் அழைத்துக்கொண்டு 'எண்ணாயிரம் ரதங்களும், முப்பதினாயிரம் யானைகளும், பல்லாயிரம் காலாட்களும், ஒன்பதினாயிரம் குதிரைகளும், வண்டிகளும், கடைகளும், வியாபாரிகளும், துதிபாடகர்களும், வேட்டையையே தொழிலாகக் கொண்டவர்கள் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் பின்தொடர, மிகுந்த ஆரவாரமாக ஆநிரைக் கணக்கெடுப்புக்குக் கிளம்பினான். துவைதவனத்தின் தடாகத்தை அடைந்ததும் அதிலிருந்து ஒரு கவ்யூதி தூரத்தில் தங்கினான். (ஒரு கவ்யூதி என்பது இரண்டு குரோசங்கள், அல்லது நான்கு மைல் தொலைவு). இனிமேல் கவ்யூதி, குரோசம் என்ற கணக்குகளை அடிக்கடி பார்க்க நேரும். ஒரு குரோசம் என்பது இரண்டு மைல்; ஒரு கவ்யூதிக்கு இரண்டு குரோசம் அல்லது நான்கு மைல் என்பதை நினைவில் கொண்டால், இனிமேல் ஜயத்ரத வதம் உள்ளிட்ட பல இடங்களில் தொலைவைக் கணக்கிட உதவும்.

துவைதவனத் தடாகத்தருகில் தங்கிய துரியோதனன், சில வேடர்களை அழைத்துக்கொண்டு சென்று, சிறுத்தை, எருமை, மான் போன்ற விலங்குளைக் கொன்று குவித்தான். இடையர்களோடு சென்று பால்மறக்காத கன்றுகள், மூன்று வயதான கன்றுகள், பசுக்கள், அவற்றின் இனம் என்று வகைவகையாகக் கணக்கெடுத்தான். பல்லாயிரக்கணக்கான அந்த மாடுகளை அடையாளப்படுத்திக் கணக்கெடுத்தான். பிறகு தடாகத்துக்குத் திரும்பினான். அவனுக்கும் அவனுடைய தம்பிகளுக்குமாகத் தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த, எல்லா வசதிகளும் நிறைந்த விடுதிகளில் அனைவரும் தங்கினார்கள்.

அந்தத் தடாகத்தின் அருகில்தான் தர்மபுத்ரரும் மற்ற பாண்டவர்களும் தங்கியிருந்தனர். அன்று யுதிஷ்டிரர், "கற்றறிந்தவர்களும், வனத்தில் வஸிப்பவர்களுமான பிரம்மணர்களோடு கூடித் திவ்யமும் வனத்தில் வஸிப்பவர்களுக்குத் தக்க முறையோடு கூடியதும், ஒரு பகலால் முடியத்தக்கதுமான, ராஜரிஷிகள் செய்யத்தக்க யஜ்ஞத்தினால் தற்செயலாக(த் தேவதைகளை) ஆராதித்தார்." (மேற்படி, அத். 251, பக். 909). அதாவது அன்றைய தினத்தில் தர்மர், தற்செயலாக ஒருநாளில் முடிக்கக்கூடிய ஒரு யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆகவே, விரதத்தில் இருந்தார். அந்தப் பக்கத்தில் துரியோதனன், 'தடாகத்துக்கு அருகில் விடுதிகளையும், கூடாரங்களையும் உடனே ஏற்படுத்துமாறு' தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டான். வீரர்கள் அந்தப் பணியில் இறங்கினார்கள். அன்று, அந்தத் தடாகத்தில் கந்தர்வர்களின் தலைவனான சித்திரசேனன் தன்னுடைய கந்தர்வக் கூட்டத்தாருடன் வந்து இறங்கியிருந்தான். தேவலோகத்தில் அர்ஜுனனுக்கு நடனம் கற்றுக்கொடுத்த அதே சித்திரசேனன்தான் இவன். துரியோதனனுடைய பணியாட்கள் கூடாரங்களையும் விடுதிகளையும் அமைக்க முற்பட்டபோது, அங்கே காவலுக்கு நின்றிருந்த கந்தர்வர்கள் வந்து தடுத்தார்கள். வீரர்கள் துரியோதனனிடத்தில் சென்று, தங்களை கந்தர்வர்கள் தடுப்பதாகச் சொன்னதும் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. 'அந்த கந்தர்வர்களை இங்கிருந்து விரட்டுங்கள்' என்று அவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் கந்தர்வர்களிடம் சென்று, 'இங்கே துரியோதனர் தங்கியிருக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் நீர்விளையாட்டுக்காக இங்கே வருவார். எனவே நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள்' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட கந்தர்வர்கள் உரக்கச் சிரித்தார்கள். 'தேவலோக வாசிகளான எங்களை இங்கிருந்து போகும்படிச் சொல்லும் உங்கள் அரசனுக்கு அறிவில்லை. உடனே நீங்கள் மூடனான உங்கள் அரசனிடம் சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் இறக்க நேரும்' என்று எச்சரித்தார்கள். இதை வீரர்கள் மூலமாகக் கேட்ட துரியோதனனுக்குப் பொறுக்கமுடியாத கோபம் ஏற்பட்டது. 'இந்திரனே தடுத்தாலும் விடாதீர்கள். அவர்களை இங்கிருந்து விரட்டுங்கள். அதன்பிறகு நாம் இங்கு விளையாடலாம்' என்று உத்தரவிட்டான். அவ்வளவுதான். அடுத்த கணமே வீரர்களும், துரியோதனனுடைய தம்பிகளுமாகச் சேர்ந்துகொண்டு கந்தர்வர்களோடு போரிடத் தொடங்கினார்கள்.

கந்தர்வர்களோடு போரிட முடியுமோ? அவர்கள் சித்திரசேனனிடம் முறையிடவும், 'நீங்களும் திருப்பித் தாக்குங்கள்' என்று அவன் அனுமதியளித்தான். கௌரவர்களால் கந்தர்வர்களை எதிர்க்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான கந்தர்வர்கள் சூழ்ந்துகொண்டு தங்கள் மாயப்போர் முறைகளைத் தொடங்கினார்கள். சித்திரசேனன், தானே நேரில்வந்து போரில் கலந்துகொண்டான். அவர்களுடைய மாயப்போர் முறைகளை துரியோதனனுடைய தம்பியரால் எதிர்கொள்ள முடியவில்லை. கர்ணன் மட்டும் தைரியமாக நின்று போராடினான். மற்றவர்கள் சிதறியோடினர்.
ஆயிரக்கணக்கான கந்தர்வ வீரர்கள் தொடர்ந்து வந்து போரிட்டார்கள். கந்தர்வர்களோடு கர்ணன் போரிட்டுக்கொண்டிருப்பதை துரியோதனன், சகுனி போன்றோர் பார்த்துக்கொண்டே இருந்தனர். பல்லாயிரக்கணக்கான கந்தர்வர்கள் ஓடிவந்து கர்ணனோடு போரிட்டு, அவனுடைய தேரைப் பொடிப்பொடியாக்கினர். உடனே கர்ணன் தன்னுடைய வில், அம்புகளுடன் விகர்ணனுடைய தேரில் ஏறிக்கொண்டு போரிடத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவனாலும் நின்று போரிட முடியவில்லை. பாரதம் சொல்கிறது: "தோள்களில் தொங்குகின்ற வில்லுடன் கூடியவனும், ஓடுகின்றவனும், மகாபலசாலியும் ஸூதபுத்திரனுமான கர்ணன், கத்தியையும் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு, ரதத்தினின்று துள்ளிக் குதித்து, விகர்ணனுடைய ரதத்தை அடைந்து கந்தர்வர்களிடத்தினின்று தன்னை விடுவித்துக் கொள்வதற்காகக் குதிரைகளை விரைவாக ஓட்டினான்" (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம் அத். 242, பக். 914)

அப்படி குதிரைகளை ஓட்டிய கர்ணன், தன் நண்பன் துரியோதனனைத் தனியே விட்டுவிட்டு, களத்தைவிட்டே ஓடிப்போனான். துரியோதனன் மட்டும் தொடர்ந்து போரிட்டான். இந்த நிலையில் சித்திரசேனன் ஓடிவந்து துரியோதனனை உயிருடன் பிடித்துக்கொண்டான். அவனுடைய இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டித் தன் தேரில் ஏற்றிக்கொண்டான். இதைப்போலவே துச்சாதனன், விவிம்சதி போன்ற மற்ற கௌரவ நூற்றுவர்களை மற்ற கந்தர்வர்கள் உயிருடன் பிடித்துக்கொண்டனர். தோல்வியடைந்த கௌரவ சேனை, நேரே ஓடிப்போய்ப் பாண்டவர்களைச் சரணடைந்தது. துரியோதனனுடைய மந்திரி போன்றோரெல்லோரும் ஒன்றாக தர்மபுத்திரரிடம் சென்று, 'துரியோதனனைச் சித்திரசேனன் என்ற கந்தர்வன் பிடித்துக்கொண்டு செல்கிறான். அவனைத் தொடர்ந்து சென்று. துரியோதனனை விடுவியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். தர்மர் அப்போது விரதத்தில் இருந்ததனால் பீமனையும் அர்ஜுனனையும் பார்த்தார்.

'நம்மைத் துன்பப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்திருக்கும் துரியோதனாதியரை கந்தர்வர்கள் பிடித்துச் செல்கிறார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள், சரியான விளைவைச் சந்தித்திருக்கிறார்கள். வெய்யிலிலும் மழையிலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைவதற்காக துரியோதனன் வந்தான். அதற்குரிய அவமானத்தை அடைந்திருக்கிறான். நன்றாக அவமானப்படட்டும்' என்று பீமன் மகிழ்ந்தான். "கடுஞ்சொல் கூற இது நேரமில்லை பீமா" என்று தர்மபுத்திரர் அவனை அதட்டினார். "நம்மிடையே பகைமை இருக்கலாம். ஆனால் நம் குடும்பத்தைச் சேராத வேறொருவன் துரியோதனனைப் பிடித்துக்கொண்டு செல்லும்போது கடுஞ்சொல் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் ஏற்படும் அவமானம் நம் குடும்பத்தைச் சேரும். நம்முள் பகைமை ஏற்பட்டிருக்கும்போது நாம் ஐவர், அவர்கள் நூற்றுவர். அன்னியர் நம் குலத்தைத் துன்புறுத்தும்போது, நாம் நூற்றைந்து பேர். நான் விரதத்தில் இருக்கிறேன். இல்லையென்றால் நானே சென்று போரிடுவேன்" என்றெல்லாம் சொன்ன பிறகும் பீமனுடைய சினம் தணியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கைகள் பிணிக்கப்பட்டு, சித்திரசேனனுடைய தேரில் இழுத்துக்கொண்டு செல்லப்படும் துரியோதனனால் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "பாண்டவர்களே! எங்களைக் காப்பாற்றுங்கள்! மனைவி மக்களுடன் சித்திரசேனன் எங்களை இழுத்துச் செல்கிறான். என்னைக் காப்பாற்றி நம் குலத்துக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியைப் போக்கிக்கொள்ளுங்கள்" என்று கதறினான்.

அவனுடைய அபயக் குரலைக் கேட்ட யுதிஷ்டிரரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பரபரப்படைந்தார். "துரியோதனனைக் காப்பாற்றும் பொருட்டு உடனே செல்லுங்கள். அவனுடைய அபயக் குரலைக் கேட்டபின்னும் வாளாவிருக்க என்னால் முடியவில்லை" என்று பீமனிடம் சொன்னார். அருகில் நின்றிருந்த அர்ஜுனன் "அண்ணா! இதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் போய் கந்தர்வர்களிடம் நல்ல வார்த்தை சொல்லி, துரியோதனனை அழைத்து வருகிறேன். இல்லாவிட்டால் போரிடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

கோபத்தால் கொதித்துக் கொண்டிருந்த பீமன், அர்ஜுனன் கிளம்பியதைப் பார்த்ததும் மறுபேச்சுப் பேசாமல் முகமலர்ச்சியுடன் கவசங்களை அணிந்து, ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினான். கந்தர்வர்களைப் பாண்டவர்கள் எதிர்க்க வந்ததை அறிந்த கௌரவசேனை உற்சாகத்துடன் போரிடத் தொடங்கியது. போர், முதலில் எளியமுறையில் நடைபெற்றது. இப்படிப் போரிட்டால் கந்தர்வர்களை வெல்லமுடியாது என்பதை விரைவிலேயே உணர்ந்த அர்ஜுனன் கந்தர்வர்களிடம், "நீங்கள் மனிதர்களோடு போரிட்டது மட்டுமல்லாமல், அவர்களுடைய மனைவியரையும் பிடித்துக்கொண்டு செல்கின்றீர்கள். இது கந்தர்வர்களுக்குத் தகுதியானதன்று. திருதராஷ்ரன் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்" என்று சொன்னான். அவர்கள் சிரித்தார்கள். "நாங்கள் எங்களுடைய தலைவனான இந்திரனுடைய கட்டளையைத் தவிர, வேறு யார் சொல்வதையும் கேட்க மாட்டோம். எங்களை அதிகாரம் செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை" என்றனர்.

"என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு, நீங்கள் இவர்களை விடவில்லையென்றால், என்னுடைய முழுவலிமையைக் காட்டிப் போரிட வேண்டியிருக்கும்" என்று அர்ஜுனன் எச்சரித்தான். அம்புமழையைப் பொழியத் தொடங்கினான். கந்தர்வர்கள் துரியோதனாதியரைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் எழுந்தனர். இதைப் பார்த்ததும் பீமன், அர்ஜுனன், நகுலன், சகதேவன் ஆகிய நால்வரும் எதிர்த்துத் தடுத்தனர். அர்ஜுனன் இந்திரஜாலம், ஆக்னேயாஸ்திரம் போன்றவற்றைப் பிரயோகித்தான். சித்திரசேனன் மறைந்து நின்று போரிடத் தொடங்கினான். உடனே அர்ஜுனன், ஓசையை அடையாளம் கண்டுசென்று தாக்கும் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எய்தான். (சப்தவேதியைக் குறித்த விவரங்களுக்குக் காண்க: அழைக்காமலும் வருவேன்) அர்ஜுனன் இந்த அஸ்திரத்தை எய்ததும், மறைந்து நின்று போரிட்ட சித்திரசேனன், "அர்ஜுனா! என்னைத் தெரியவில்லையா? நான் உன் நண்பன் சித்திரசேனன்" என்று சொல்லிக்கொண்டே அர்ஜுனன் முன்னால் தோன்றினான். தன் நண்பனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன் தான் எய்த சப்தவேதியைத் திரும்ப அழைத்துக்கொண்டான்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline