Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
Tamil Unicode / English Search
ஹரிமொழி
விழித்திருந்து கண்ட கனவு
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2020|
Share:
பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள், ஒரு பெண்பேயை ஏவி, துரியோதனனை இரவோடு இரவாகப் பாதாளலோகத்துக்குக் கொண்டுவந்தனர். அவன் வந்ததும், அவனைச் சூழ்ந்துகொண்டு, தற்கொலை நரகத்துக்கே செலுத்தும் என்றெல்லாம் எடுத்துக்கூறி, அவனை திடப்படுத்தி, தற்கொலை எண்ணத்தைக் கைவிடச் செய்தனர். துரியோதனனைத் தாங்கள் (தைத்யர்கள்) சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அடைந்ததாகச் சொன்னார்கள். அதற்குமேல் ஒருசில செய்திகளை துரியோதனனுக்குத் தெரிவித்தார்கள். இவர்கள் பேசியதெல்லாம் துரியோதனனுக்கு, ஏதோ கனவில் காணும் காட்சியைப் போலத் தோன்றியது. தைத்யர்கள் சொல்கிறார்கள்: "அரசனே! முற்காலத்தில் நீ மஹேஸ்வரரிடத்திலிருநது எங்களால் தவத்தினால் அடையப்பட்டாய். உன்னுடைய (தேகத்தில்) நாபிக்கு மேற்பாகமானது முழுவதும் வஜ்ரக்குவியல்களால் நியமிக்கப்பட்டதும், அஸ்திரங்களாலும் சஸ்திரங்களாலும் பிளக்கமுடியாததுமாய் இருக்கிறது. உன்னுடைய (தேகத்தில்) நாபிக்குக் கீழ்ப்பாகமானது தேவியினால் புஷ்பமயமாகவும் ரூபத்தால் ஸ்த்ரீகளுடைய மனத்தைக் கவரும்தன்மை பொருந்தியதாகவும் செய்யப்பட்டிருக்கிறது. அரசர்களுள் உத்தமனே! இவ்வண்ணம் உன்னுடைய தேகமானது ஈஸ்வரராலும் தேவியினாலும் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்ரேஷ்டனே! ஆதாலால் நீ தெய்வத்தன்மை பொருந்தியவன். மனிதனல்லை. மகாவீர்யமுள்ளவர்களும் சூரர்களுமான பகதத்தன்* முதலிய க்ஷத்ரியர்கள் திவ்யாஸ்திரங்களை அறிந்திருக்கிற உன் பகைவர்களை (பாண்டவர்களை) கொல்லுவார்கள். ஆகையால் உனக்குத் துயரம் வேண்டாம். உனக்கு உதவுவதற்காக வீரர்களான அப்படிப்பட்ட தானவர்கள் (அசுரர்கள்) பூமியில் பிறந்திருக்கிறார்கள்" என்றெல்லாம் துரியோதனனுக்கு எடுத்துச் சொன்னார்கள். (* இங்கே குறிப்பிடப்படும் பகதத்தன், நரகாசுரனுடைய பேரன். பன்னிரண்டாம் நாள் போரில், தன் தாத்தாவான நரகாசுரனிடத்திலிருந்து பெற்ற வைஷ்ணவாஸ்திரத்தை, தான் அமர்ந்திருந்த சுப்பிரதீகம் என்ற யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசத்தில் மந்திரித்து ஏற்றி, அர்ஜுனன் மீது வீசியவன். இவற்றையெல்லாம் போர்க் காட்சிகளைப் பார்க்கும்போது விரிக்கலாம்.)

இப்படிச் சொல்லிக்கொண்டு வந்த தைத்யர்கள், மேலும் சில திடுக்கிடும் உண்மைகளை துரியோதனனுக்குத் தெரிவித்தார்கள். கிஸாரி மோகன் கங்கூலி (தமிழில் அருள்செல்வப் பேரரசன்) சொல்வது இது: மற்ற அசுரர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிறரைப் பீடிக்க இருக்கின்றனர். அவ்வசுரர்களின் பிடிக்குள் இருக்கும் அந்த வீரர்கள், உனது எதிரிகளுடன் போரிடும்போது, தங்கள் கருணையைக் கைவிடுவார்கள். உண்மையில் அந்தத் தானவர்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து, அவர்களை முழுதும் பீடித்ததும், அனைத்துப் பாசங்களையும் தூக்கியெறிந்தவர்களாய், இதயத்தில் கடுமையை நிறைத்துக் கொள்ளும் அவ்வீரர்கள், போரில் தங்களை எதிர்த்து வரும் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள், நண்பர்கள், சீடர்கள், உறவினர்கள் ஆகியோரை மட்டுமல்ல குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரையும்கூட அடிப்பார்கள்."

இது கும்பகோணம் பதிப்பிலும் இருக்கிறது. கர்ணன் மட்டுமல்லாது, பீஷ்மர், துரோணர் முதலான - பாண்டவர்கள்மீது அன்பு வைத்திருந்த - பெரியோர்கள் எல்லோரும் பலவிதமான அரக்கர்களால் பீடிக்கப்பட்டிருந்தது இதில் முக்கியமான செய்தி. இதன் தாக்கத்தை உத்தியோக பர்வத்திலிருந்தே பார்க்கலாம். கண்ணனால் கொல்லப்பட்ட பூமித்தாயின் மகனான நரகாசுரனுடைய ஆன்மா கர்ணனைப் பீடித்திருந்ததையும் பார்த்தோம். நரகனுக்குக் கண்ணன்மேல் இருந்த பகைமை முழுவதும் கர்ணன் வாயிலாகப் பெருகி, அது கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் தாக்கப்போகிறது என்பதையும் தைத்யர்கள் சொல்கிறார்கள்.
'கர்ணனிடத்தில் இவ்வளவு பகைமை சேர்ந்திருப்பதால், இதை அறிந்திருக்கின்ற இந்திரன் கர்ணனிடத்தில் வந்து அவனுடைய கவச-குண்டலங்களைப் பெற்றுக்கொள்வான்' என்று தைத்யர்கள் முன்னறிவிக்கிறார்கள். 'ஆனால் நீ இதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம் துரியோதனா! இந்தக் காரணத்துக்காகவே நாங்கள் சம்சப்தகர்கள் என்ற அரக்க இனத்தவரை நியமித்திருக்கிறோம். அவர்கள் அர்ஜுனனைக் கொல்வார்கள்' என்று உறுதியளிக்கிறார்கள். அங்கேதான் அவர்களுடைய கணக்கு தவறுகிறது. பதின்மூன்றாம் நாள் அபிமன்யு வதத்தின்போதும், பதினான்காம் நாள் ஜயத்ரத வதத்தின்போதும் இந்த சம்சப்தகர்கள் அர்ஜுனனைத் திசைதிருப்பி அவனை வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். சம்சப்தகர் என்றால், தங்களுடைய லட்சியத்துக்காக உயிரையும் விடத் துணிந்தவர்கள் என்று பொருள். இவர்களால் தங்கள் உயிரை விடமுடிந்ததே ஒழிய, அர்ஜுனனைக் கொல்ல முடியவில்லை. உண்மையில் இவர்கள் கிருஷ்ணனுடைய நாராயண சைனியத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு அக்குரோணி அளவு இருந்த இவர்களைத்தான் துரியோதனன் கண்ணனிடத்தில் கேட்டுப் பெறுகிறான். அரக்கர்களின் வலிமையும் தந்திரமும் முன்யோசனையும் சேர்ந்து அர்ஜுனன் மீது ஏவப்பட்டாலும் அவனுடைய வில்லாற்றலும், கண்ணபெருமானுடைய வழிகாட்டலும் இவர்களுடைய திட்டம் எல்லாவற்றையும் பலனற்றுப் போகச் செய்கின்றன. கிருஷ்ணன், 'அழியப்போகின்றன' என்று அறிந்தேதான் தன் நாராயண சேனையை துரியோதனனுக்குத் தந்தான். அவ்வளவு பெரிய சேனையின் தலைவனான கிருதவர்மா மட்டும்தான் போரின் இறுதியில் உயிருடன் மிஞ்சுகிறான். நினைத்திருந்தால் அபிமன்யுவைக் காத்திருக்க முடிந்த கண்ணன், யுத்தத்தின் போக்கில் துளியும் குறுக்கிடாமல் வெறுமனே வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். "எம்மால் அர்ஜுனனுடைய வதோபாயமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்கிறார்கள் தைத்யர்கள். (கோஷயாத்ரா பர்வம், அத். 253, பக். 942) And, O hero, with respect to the fear that is in thy heart rising from Arjuna, we have already settled the means for slaying Arjuna என்று இதை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார்.

வனபர்வம் முடியப் போகிறது. பாண்டவர்களுடைய அக்ஞாதவாசம் தொடங்கப் போகிறது. இந்த நேரத்தில் துரியோதனனிடத்தில் தைத்யர்கள் தெரிவித்த கருத்துகள் போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இவற்றையெல்லாம் சொல்லி முடித்ததும் தைத்யர்கள் துரியோதனனை இறுகத் தழுவிக்கொண்டனர். 'சென்று வெற்றியை அடை, போ!' என்று சொல்லி அவனைப் போக அனுமதித்தனர். அவனை பாதாளத்துக்குக் கொண்டுபோன கிருத்தியை, உயிரை விடுவதற்கு நிச்சயித்து அமர்ந்திருந்த இடத்துக்கே மீண்டும் கொண்டுபோய் விட்டது. அவள் சென்றதும், 'நடந்ததெல்லாம் ஒரு கனவு' என்ற உணர்வே துரியோதனனுக்கு ஏற்பட்டது. கிஸாரி மோகன் கங்கூலி சொல்கிறார்: And having set that hero down and paid him homage, the goddess vanished, taking the king's permission. O Bharata, when she had gone, king Duryodhana considered all (that had happened) as a dream.

வனபர்வத்தின் இறுதிக்கட்டத்தில், துர்வாசர் வருகை போன்ற சில சம்பவங்கள் எஞ்சியிருக்கின்றன. அத்துடன், வியாச பாரதத்தின்படி கர்ணன் கொடையாளியானதையும் பார்க்க வேண்டும். சுருக்கமாகப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline