|
|
|
பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் கார்காலத்தை துவைத வனத்தில் கழித்துவிட்டு, காம்யக வனத்துக்குச் சென்றார்கள். அவர்களைத் தேடிவந்த ஓர் அந்தணர், "கண்ணபெருமான் உங்களைக் காணவேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கிறார். நீங்கள் காம்யக வனத்துக்கு வந்திருப்பது அவருக்குத் தெரியும். அவர் இங்கே வரப்போகிறார். அதைத் தவிர, மார்க்கண்டேய மகரிஷியும் இங்கு வருவதாக இருக்கிறார்" என்றார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணனின் தேருக்கான வலாஹகம், மேகபுஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்ற நான்கு குதிரைகளில், சைப்யம், சுக்ரீவம் என்ற இரண்டும் பூட்டப்பட்ட தேரில் கண்ணனும் சத்தியபாமாவும் வந்து இறங்கினர். இறங்கிய கண்ணபெருமான் தனக்கு மூத்தவர்களான தர்மபுத்திரரையும் பீமனையும் தௌமியரையும் நிலத்தில் படிய விழுந்து வணங்கினார். அர்ஜுனனைத் தழுவிக்கொண்டார். சத்யபாமாவும் திரெளபதியும் தழுவிக்கொண்டனர். அனைவரும் கிருஷ்ணனைச் சூழ்ந்து அமர்ந்தனர். அர்ஜுனன் தான் சொர்க்கம் சென்று வந்த விவரங்களைச் சொன்னான். துவாரகையில் தங்கியிருக்கும் தன் மனைவி சுபத்திரையையும் அபிமன்யுவையும் பற்றி விசாரித்தான். அர்ஜுனன் தேவலோகத்துக்குச் சென்றதையும் சிவபெருமானிடமிருந்தும் இந்திரன், வருணன், குபேரன், யமன் உள்ளிட்ட தேவர்களிடமிருந்தும் திவ்யாஸ்திரங்களைப் பெற்று வந்திருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார் கண்ணன். துருபதனால் அழைத்துச் செல்லப்பட்ட உபபாண்டவர்கள், ஆயுதப் பயிற்சியில் பெருவிருப்பம் கொண்டவர்களாய் துவாரகைக்கே வந்துவிட்டதையும், தன் மகன் பிரத்யும்னன் உபபாண்டவர்களுக்கும் சுபத்ரையின் மகனான அபிமன்யுவுக்கும் பலவிதமான ஆயுதங்களில் பயிற்சி அளிப்பதையும் சொன்னார். "துருபதனும், திருஷ்டத்யும்னன் உள்ளிட்ட திரெளபதியின் சகோதரர்களும் அவர்களுக்கு நாட்டையும் ஆட்சியையும் கொடுத்த போதிலும் அவர்கள் ஆயுதப் பயிற்சியிலுள்ள நாட்டத்தால் துவாரகையிலேயே தங்கியிருக்கிறார்கள்" என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். தருமபுத்திரர், "கேசவரே! எங்களுக்கு நீரே புகல். நாங்கள் காட்டில் பன்னிரண்டாண்டுகள் வசித்துவிட்டோம். அக்ஞாத வாசகாலத்தையும் முடித்தபிறகு உம்மை வந்து அடைவோம்" என்று சொன்னார். அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே மார்க்கண்டேயர் வந்து சேர்ந்தார். மூப்பும் மரணமும் இல்லாத அவர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்பவரென்ற போதிலும் இளமைமாறாமல் காட்சியளித்தார்.
அவரோடு கண்ணனும் யுதிஷ்டிரரும் உரையாடத் தொடங்கினார்கள். "மகரிஷியே! நாங்களெல்லோரும் உம்மிடமிருந்து முன்னர் நடந்த புண்ணியக் கதைகளையும் அரசர் வரலாறுகளையும் கேட்க விரும்புகிறோம்" என்று யுதிஷ்டிரர் கேட்டுக்கொண்டதும், மார்க்கண்டேயர் அவர்களுக்குப் பல கதைகளையும் வரலாறுகளையும் சொன்னார். இதில் ஒன்றுதான் நாம் அனைவரும் அறிந்த "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்று ஒரு இல்லத்தரசி கேட்ட கதை.
கௌசிகன் கதை காட்டில் நெடுங்காலம் தவமிருந்த கௌசிகன் என்ற அந்தணன் ஒருவன் தலையில் ஒரு கொக்கு ஒரு சமயம் எச்சமிட்டுவிட்டது. அதைக் கோபத்துடன் கௌசிகன் நிமிர்ந்து பார்த்ததுமே அது எரிந்து சாம்பலானது. ஆச்சரியப்பட்ட கௌசிகன், சிலகாலம் கழித்து யாசகத்துக்குச் சென்ற சமயத்தில், ஒரு வீட்டின் வாயிலில் காத்து நின்றான். அந்த வீட்டுப் பெண் கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். வாயிலில் சற்றுநேரம் காத்திருந்த கௌதமனுக்குக் கோபம் வந்தது. கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளை முடித்துக்கொண்டு அந்தப் பெண் வாயிலுக்கு வந்ததும் அவளைக் கோபமாகப் பார்த்தான். அப்போதுதான் அந்தப் பெண், "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்று கேட்டாள். எங்கோ காட்டில் நடந்து, தனக்குமட்டுமே தெரிந்ததான இந்த நிகழ்வு இவளுக்கு எப்படித் தெரிந்ததென்று கௌசிகன் ஆச்சரியப்பட்டான். அப்போது அந்தப் பெண், "நீ எவ்வளவோ பயிற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் இவையெல்லாம் போதாது. மிதிலை நகரில் தர்மவியாதர் என்பவர் இருக்கிறார். அவரிடம் போய் தர்மங்களைக் கேட்டு அறிந்துகொள்" என்று சொன்னாள். அதன்படி, கௌசிகன் தர்மவியாதரைத் தேடிக்கொண்டு மிதிலைக்குச் சென்றான். அங்கே போனதும்தான் அவனுக்கு தர்மவியாதர் மான்களையும் எருமைகளையும் கொன்று அவற்றின் இறைச்சியை விற்பவர் என்று தெரிந்தது. அந்தணனான கௌசிகனுக்கு தர்மவியாதர் என்ற இறைச்சி வியாபாரி, பல தர்மங்களை உபதேசித்த கதையை மார்க்கண்டேயர் பாண்டவர்களுக்குச் சொன்னார்.
எங்கே, யார் தர்மத்தில் சிறந்து விளங்குவார்கள், நமக்கு உபதேசம் செய்யும் குருவாக விளங்குவார்கள் என்பதெல்லாம் நாம் அறிந்திருப்பதில்லை என்று கௌசிகன் அறிந்துகொண்ட நிகழ்வு அது. அதன்பிறகு மார்க்கண்டேயர் பாண்டவர்களுக்கு அக்னியின் வம்ச உற்பத்தி, கந்தன் பிறப்பு, கந்தபுராணம், போன்றவற்றை விரிவாக எடுத்துச் சொன்னார். |
|
இதையடுத்து திரெளபதியும் சத்யபாமாவும் உரையாடிய திரளபதி-சத்யபாமா சம்வாத பர்வம் வருகிறது. இதன் ஒரு பகுதியை மார்ச் 2019 இதழில் அத்தானும் அம்மான்சேயும் என்ற தலைப்பில் சொல்லியிருந்தோம். () இதன்பிறகு கிருஷ்ணன் பாண்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, சத்தியபாமாவுடன் தேரில் ஏறிக்கொண்டு துவாரகை திரும்பினார். கிளம்புவதற்கு முன்னர் திரெளபதியை அழைத்து அவளுக்கு ஆறுதல் மொழிகளைச் சொன்னபிறகே விடைபெற்றார் என்பது, கிருஷ்ணனுக்கு திரெளபதியிடத்திலிருந்த பரிவை வெளிப்படுத்தும். பாண்டவர்கள் கிருஷ்ணனை வழியனுப்பி வைத்தார்கள்.
இதற்குச் சிலகாலம் கழிந்தபிறகு கதைசொல்வதில் வல்லவனான ஓர் அந்தணன் அங்குவந்தான். பாண்டவர்களோடு சிலகாலம் தங்கியிருந்தான். இந்த அந்தணன் காம்யக வனத்திலிருந்து புறப்பட்டு ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று திருதராஷ்டிரனைச் சந்தித்தான். பெரிய மன்னர்களான பாண்டவர்களும் திரெளபதியும் காட்டில் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்று திருதராஷ்டிரனிடத்தில் சொன்னான். பாண்டவர்கள் பல துன்பங்களை அனுபவித்த போதிலும் அவற்றைத் துன்பமாக எண்ணி உழன்றதில்லை. எனினும் அந்தணன், "எவ்வளவு பெரிய மன்னர்கள், அரண்மனையில் வசித்தவர்கள், இப்படித் தரையில் கிடந்து தூங்குகிறார்களே" என்று வருந்தி திருதராஷ்டிரனுக்கு அவற்றை விவரித்துச் சொன்னான். பாண்டவர்கள் பட்ட துயரங்கள் எல்லாமும் திருதராஷ்டிரனுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்து வந்திருக்கின்றன என்றபோதிலும், பெரியப்பாவான அவனுக்கு மனவருத்தம் மிகுந்தது. "பாண்டவர்கள் இப்படித் துன்பப்படுகிறார்கள் என்பதைக் கேட்க எனக்குப் பொறுக்கவில்லை. சூதாட்டத்தில் வல்லவனும் கெட்ட குணமுள்ளவனுமான சகுனிக்கு வசப்பட்ட என் பிள்ளைகள் வீணாக விரோதத்தைத் தேடிக்கொண்டார்கள். அரசனாயிருப்பவன் அநீதியின் மூலமாக நாட்டையும் செல்வத்தையும் அடைய முயலலாமா? துரியோதனன், கர்ணன் போன்றோர் மரக்கொம்பின் நுனியிலுள்ள தேனைப் பார்ப்பது போல இந்த நாட்டைப் பார்க்கின்றனர். ஆனால், அந்த மரத்துக்குக் கீழே பீமன், அர்ஜுனன் என்ற படுகுழிகள் இரண்டு இருப்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள். என் மக்கள் இந்தப் படுகுழியில் விழுந்து அழியப்போகிறார்கள். அர்ஜுனன் இந்திரலோகம் சென்று பல தெய்வீக அஸ்திரங்களைப் பெற்றுவந்திருக்கிறான். உடலோடு சொர்க்கத்துக்குச் செல்வது என்ற சாத்தியமற்ற காரியத்தை அர்ஜுனன் சாதித்திருக்கிறான். இப்படிப்பட்ட பெருஞ்செயல்களை அவன் செய்த பின்னரும் என் மக்கள் கொஞ்சமும் அஞ்சாமலிருக்கின்றனரே! என்ன செய்வேன்" என்றெல்லாம் அந்த அந்தணனிடம் திருதராஷ்டிரன் புலம்பினான்.
சகுனியின் தந்திரம் இவை அனைத்தையும் சகுனி மறைவில் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். உடனே அங்கிருந்து சென்று, நடந்ததையெல்லாம் துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் தெரிவித்தான். கர்ணனும் சகுனியும் தங்களுக்குள் கலந்தாலோசித்த பிறகு, துரியோதனனிடத்தில் கர்ணன் பின்வருமாறு சொன்னான்: "பரதகுலத்தவனே! உன்னுடைய வல்லமையால் பாண்டவர்களைக் காட்டுக்குத் துரத்திவிட்டோம். இந்திரன் சொர்க்கத்தை அனுபவித்து வருவதைப்போல நீ ஒருவனாக இந்த உலகத்தை அனுபவித்து வருகிறாய். எல்லா அரசர்களும் உனக்கு அடங்கிக் கப்பம் கட்டி வருகின்றனர். பாண்டவர்களுடைய செல்வமெல்லாம் உன்னை அடைந்திருக்கிறது. நட்சத்திரக் கூட்டத்துக்கு நடுவில் பிரகாசிக்கும் சந்திரனைப்போல நீ பிரகாசிக்கிறாய். உன் ஆணைக்குக் கட்டுப்படாத பாண்டவர்கள் இப்போது காட்டில் துன்பப்படுகின்றனர். துவைத வனத்தின் அருகிலுள்ள தடாகத்தின் கரையில் இப்போது வசித்துக் கொண்டிருக்கின்றனர். நீ உன்னுடைய செல்வத் திரட்சியோடும், படைகளோடும் அங்கே செல்லவேண்டும். உன்னுடைய செல்வச் செழிப்பையும், படைகளின் மிகுதியையும் பார்த்து அவர்கள் மனம்புழுங்கி வருந்தவேண்டும். பகைவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துவதே ஒரு மன்னனுக்கு ஆனந்தத்தைத் தரும். எனவே, நீ உன் சேனையுடன், நல்ல ஆடைகளை அணிந்துகொண்டும், செல்வச் செழிப்பைக் காட்டிக்கொண்டும் அங்கே சென்றால், திரெளபதி மிகவும் வருந்துவாள். உன் மனைவியரையும் அவர்களுடைய ஆடை அணிகலன்களையும் கண்டு அவள் மனம் வருந்துவாள். எனவே இப்போதே நாம் துவைத வனத்துக்குச் செல்லவேண்டும்." கர்ணனுடைய இந்தச் சொற்கள் துரியோதனனுக்கு வெறியை உண்டுபண்ணின.
"திரெளபதியையும் பாண்டவர்களையும் மனவருத்தம் அடையச் செய் பார்க்க எனக்கும் பெரிய விருப்பம் இருக்கிறது. ஆனால் அங்குச் செல்ல என் தந்தை சம்மதிக்க மாட்டார். பாண்டவர்கள் தவத்தில் மேம்பட்டவர்கள் என்று அவர் நம்புகிறார். ஆகவே அங்குச் செல்வதற்கு அனுமதியளிக்கமாட்டார். ஏதேனும் ஓர் உபாயத்தின் மூலம்தான் நாம் இதைச் செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்பதை, நாளைக்கு சபையிலே தீர்மானிப்போம்" என்று துரியோதனன் சொன்னான். மறுநாள் விடிந்தது. கர்ணன் தன்னுடைய ஆலோசனையுடன் துரியோதனனிடத்தில் வந்தான். தன்னுடைய உபாயத்தைச் சிரித்தபடி சொன்னான்: "நான் ஓர் ஆலோசனையை வைத்திருக்கிறேன். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆநிரைகளைக் கணக்கெடுக்கும் வழக்கம் ஒன்று உண்டு. இதை கோஷ யாத்திரை என்பது வழக்கம். மாடுகளைக் கணக்கெடுக்க வேண்டும்" என்று திருதராஷ்டிரனிடத்தில் சொல்லி அனுமதி வேண்டுவோம். அவரை இதற்கு எப்படியாவது சம்மதிக்கச் செய்துவிடலாம்" என்றான். இந்த ஆலோசனையைச் சகுனி ஆரவாரத்தோடு வரவேற்றான்.
அன்று சபை தொடங்கியது. கர்ணனால் அனுப்பப்பட்ட சங்கவன் என்ற இடையன் திருதராஷ்டிரனிடத்தில் வந்தான். "அரசே! பசுக்கூட்டங்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன" என்று சொன்னான். சங்கவன் இப்படிச் சொன்னதும் கர்ணனும் சகுனியும் திருதராஷ்டிரனைப் பார்த்து, "அரசே! பசுக்கூட்டங்கள் வந்திருக்கின்றன என்று அறிகிறோம். பசுக்களுடைய எண்ணிக்கையைக் கணக்கிடவேண்டும். வயது, நிறம், ஜாதி, பெயர் இவற்றைப் பதிவுசெய்ய வேண்டும். கன்றுகளுக்கு அடையாளம் இடவேண்டும். இவ்வாறு செய்வதற்கு நீங்கள் துரியோதனனுக்கு அனுமதி தரவேண்டும். அதுமட்டுமல்லாமல், துரியோதனன் வேட்டையாட விரும்புகிறான். எனவே இதற்கும் நீங்கள் அனுமதி தரவேண்டும்" என்றனர். திருதராஷ்டிரனுக்கு இது நியாயமாகப் பட்டது. இடையர்களை மட்டுமே நம்பியிராமல் நாமே கணக்கெடுப்பது அவசியம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், பக்கத்திலேயே பாண்டவர்கள் இருக்கிறார்கள். தருமபுத்திரன் எப்படியிருந்தாலும் கோபம் கொள்ளமாட்டான். ஆனால் பீமனோ கோபம் மிகுந்தவன். அறியாமையாலும் செல்வச் செருக்கினாலும் நீங்கள் அவர்களிடம் வம்பு செய்வீர்கள். பாண்டவர்களுக்குக் கோபம் வந்தால் உங்களை எரித்துவிடுவார்கள். ஆகவே துரியோதனன் போகவேண்டாம். வேறு யாராவது போகட்டும் என்றான்.
துரியோதனன் அங்கே போகவேண்டும் என்பதுதானே ஆட்டத்தின் அடிப்படை? அதற்கு திருதராஷ்டிரன் மறுக்கிறான். இந்தச் சமயத்தில் சகுனி குறுக்கிட்டு தந்திரமான வார்த்தைகளைச் சொன்னான்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|