Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நாடாமல் வந்தடைந்த நாடு
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2018||(1 Comment)
Share:
'வரம் தருகிறேன். என்ன வேண்டுமானாலும் கேள்' என்று சொன்ன திருதராஷ்டிரனிடத்தில் பாஞ்சாலி கேட்ட முதல் வரம் இது:

"பரத சிரேஷ்டரே! நீர் எனக்கு வரம் கொடுப்பதாயிருந்தால் கேட்கிறேன். எல்லா தர்மங்களையும் அனுசரிப்பவரும் மேன்மை பொருந்தினவருமான யுதிஷ்டிரர் தாஸர் ஆகாமல் இருக்கக் கடவர். உயர்ந்த மனமுள்ளவனும் என் புதல்வனுமாகிய பிரதிவிந்தியனை, அறியாத சிறுவர்கள் 'தாஸபுத்ரா!' என்று அழையாமல் இருக்கவேண்டும். பாரதரே! முதலில் சாதாரண மனிதனாக இராமல் ராஜபுத்திரனாக இருந்து கொண்டாடப்பட்ட புருஷன், தான் தாஸபுத்திரன் என்றறிந்தால் இறந்துவிடுவான் அன்றோ?' என்று சொன்னாள்". (பாரதம் ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 93, பக்: 305). இந்தப் பகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்ப்போம்: "Draupadi said, 'O bull of the Bharata race, if thou will grant me a boon, I ask the handsome Yudhishthira, obedient to every duty, be freed from slavery. Let not unthinking children call my child Prativindhya endued with great energy of mind as the son of a slave. Having been a prince, so superior to all men, and nurtured by kings it is not proper that he should be called the child of a slave."

இந்தப் பிரதிவிந்தியன் தர்மபுத்திரருக்கும் பாஞ்சாலிக்கும் பிறந்தவன். உபபாண்டவர்களில் ஒருவன். உபபாண்டவர்கள் பதினோரு பேர். தர்மனுக்கும் பாஞ்சாலிக்கும் பிறந்தவன் பிரதிவிந்தியன்; பீமனுக்குப் பிறந்தவன் சூதசோமன்; அர்ச்சுனனுக்குப் பிறந்தவன் ஸ்ருதகீர்த்தி; நகுலனுக்கு ஸதானிகன்; ஸஹதேவனுக்கு ஸ்ருதகர்மன். இவர்கள் ஐவரோடு தர்மபுத்திரனுக்கும் அவனுடைய இன்னொரு மனைவியான தேவிகாவுக்கும் பிறந்தவன் யௌதேயன். பீமனுடைய இன்னொரு மனைவியான வலந்தராவுக்குப் பிறந்தவன் சார்வாகன். அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன் அபிமன்யு; நகுலனுக்கும் கரேனுமதிக்கும் பிறந்தவன் நிரமித்ரன்; சகதேவனுக்கும் விஜயாவுக்கும் பிறந்தவன் ஸுஹோத்ரன். இந்தப் பத்துப் பேர்களோடு பீமனுக்கும் ஹிடிம்பிக்கும் பிறந்த கடோத்கசனையும் சேர்த்து உபபாண்டவர்கள் மொத்தம் பதினோரு பேர். இந்தக் கணக்கில் அர்ச்சுனனுடைய மற்றப் பிள்ளைகளான இராவான், பப்ருவாஹனன் போன்றோர் இல்லை.

இவர்களில் தர்மபுத்திரருடைய மகனான பிரதிவிந்தியன் 'அடிமையின் பிள்ளை' என்று அழைக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டுக் கேட்கிறாள் பாஞ்சாலி. அவளுடைய பார்வையில் முதலும் முக்கியமுமான அடிமை யுதிஷ்டிரனே. சூதாட்டத்தில் அடிமையானவன் என்ற நேரடிப் பொறுப்பு அவனுக்கு இருப்பதால் இந்தப் பதினோரு பேரில் பிரதிவிந்தியனுக்கு எந்த அவமானமும் நேரக்கூடாது என்று அவனைக் குறிப்பிட்டுக் கேட்கிறாள். "இந்த வரத்தைத் தந்தேன்" என்று திருதராஷ்டிரன் தர்மபுத்திரனை அடிமைத் தளையினின்றும் விடுவிக்கிறான்.

"இன்னொரு வரம் கேள்" என்று மீண்டும் திரெளபதியிடத்தில் திருதராஷ்டிரன் சொன்னதும் அவள் கேட்ட இரண்டாவது வரம் இது: "அரசரே! ரதங்களும் விற்களும் உள்ளவர்களான பீமஸேன அர்ஜுனர்களும் நகுல சகதேவர்களும் அடிமைகளாய் இராமல் சுதந்திரர்களாய் இருக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டாள்". (மேற்படி.) அவர்களையும் அடிமைத் தளையிலிருந்து விடுவித்த திருதராஷ்டிரன் "இந்த வரங்களால் நீ முழு நன்மையையும் பெறவில்லை. ஆகவே மூன்றாவதாக ஒரு வரம் கேள்" என்று பாஞ்சாலியிடம் சொல்ல, "மகிமை பொருந்தியவரே! ஆசையானது தர்மத்தைக் கெடுக்கும். ஆதலால் நான் ஆசைப்படவில்லை" (மேற்படி, பக். 306) என்று சொல்லிவிட்டாள். ஆகவே முதல் வரத்தால் தருமபுத்திரனை விடுவித்தாள்; இரண்டாவது வரத்தால் மற்ற நால்வரையும், 'தேர்களோடும் ஆயுதங்களோடும்' விடுவித்தாள். துரியோதனாதியருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது இந்த அம்சம்தான். அவர்கள் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டது போதாதென்று இந்தக் கிழவர் 'தேர்களோடும் ஆயுதங்களோடும்' அவர்களை விடுவித்திருக்கிறாரே! கொடிய பாம்புகளை நம்முடைய மனம்போன போக்கிலெல்லாம் துன்புறுத்திய பிறகு அவற்றைச் சுதந்திரமாகத் திறந்துவிட்டால், பற்களோடு இருக்கும் அவை சும்மாவா விடும்' என்று அவர்களுக்கு அச்சம் பிறக்கிறது. அதைச் சற்றுப் பொறுத்துக் காண்போம்.

மூன்றாவது வரம் கொடுத்தும் திரெளபதி கேட்காமல் விட்டுவிட்டவை இரண்டு உண்டு. ஒன்று. பாண்டவர்கள் ஐவரையும் அடிமைத் தளையினின்றும் விடுவித்தாளே தவிர, தன்னை அடிமையில்லை என்ற அறிவிக்கச் சொல்லவில்லை. 'என்னை ஆட்டத்தில் வைத்ததே செல்லாது' என்று ஆரம்பத்திலிருந்தே அவள் சொல்லிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவள், தான் அடிமையாக ஆனதையே ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தன்னை அடிமைத் தளையினின்றும் விடுவிக்கும்படியாகக் கேட்டுக்கொள்வதற்கான அவசியமே ஏற்படவில்லை என்பது அவளுடைய தீர்மானமான கருத்து. இங்கேதான் பாரதி பேசும் அந்த 'திமிர்ந்த ஞானச் செருக்கு' வெளிப்படுவதைக் காண்கிறோம். பாண்டவர்களை அடிமைத் தளையினின்றும் விடுவிக்க வேண்டும்; அவர்களுடைய ஆயுதங்களையும் தேர்களையும் கொடுக்க வேண்டும் என்று கேட்ட பாஞ்சாலி, கேட்காத விஷயம் இன்னொன்றும் இருக்கிறது. நாடு! 'நாட்டைத் திருப்பித் தா' என்று அவள் கேட்கவே இல்லை. வெறும் காடாகக் கிடந்த காண்டவ வனத்தையே திருத்தி இந்திரப்பிரஸ்தத்தைச் சமைத்த தன் கணவர்களால் இன்னொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற அசாத்தியத் துணிச்சல் அவளுடைய போக்கில் வெளிப்படுவதைக் காண்கிறோம்.

மூன்றாவது வரத்தை மறுக்கும் அவளுடைய பேச்சில் இது வெளிப்படுவதைக் காணலாம்: "இந்த என் கணவர்கள் மிகப் பாபமுள்ளவர்களாக ஆகி இப்போது கரையேற்றப்பட்டனர். இனி, தம் நற்செய்கைகளினால் நன்மைகளை அடைவார்கள்" (O king, these my husbands freed from the wretched state of bondage, will be able to achieve prosperity by their own virtuous acts! என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு.) 'என் கணவன்மார்கள் அடிமைகள் அல்லர். அது போதும். இதற்குமேல் அவர்களுக்கு வேண்டியதை அவர்களுடைய நல்ல செயல்களால் பெற்றுக்கொள்வார்கள்' என்ற மனோதிடம் இருந்த காரணத்தால் வாய்ப்பிருந்தபோதும் நாட்டைக் கேட்கவில்லை. அல்லது, 'தேர்களோடும் ஆயுதங்களோடும்' அவர்களை விடுவிக்கச் சொன்னபோதே, 'தேர்களோடும் ஆயுதங்களோடும் நாட்டோடும்' என்றோ 'இழந்த பொருட்களோடும்' என்றோ கேட்டிருக்கலாம். இது திமிர்ந்த ஞானச் செருக்கில்லையென்றால் வேறெது அப்படிச் சொல்லத் தகுதியானதாகும்!
இதைக் கேட்டுக்கொண்டிருந்த கர்ணனுக்கு ஏமாற்றமேற்பட்ட போதிலும் பரிகாசமாகச் சிரித்தான். "அழகினால் பெயர்பெற்ற மானிடப் பெண்கள் நாம் கேட்டிருப்பவர்களுக்குள் யாருக்கும் இப்படிப்பட்ட செய்கை இருந்ததைக் கேட்டிலம். இந்தச் சபையில் திருதிராஷ்டிர புத்திரர்கள் பாண்டவர்களின்மேல் கரைகடந்த கோபாவேசம் கொண்டிருந்த சமயத்தில், துருபத புத்திரியான கிருஷ்ணை பாண்டவர்களுக்குப் பரிகாரமானாள். ஓடமில்லாத ஜலத்தில் விழுந்து தரை அகப்படாமல் முழுகிக்கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் பாஞ்சாலி கரைசேர்க்கும் கப்பலானாள்" (மேற்படி, அத். 93) என்று பரிகசித்தான். பீமனுக்குக் கோபாவேசம் பொங்கியது. அர்ச்சுனனோ, "பாரதனே! மேலோர், இழிவானவன் கடுஞ்செற்களைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவனுக்கு மறுமொழி கூறுவது ஒருக்காலுமில்லை. எல்லாந் தெரிந்தவர்களும் தமக்குத் தாமே கௌரவத்தைப் பெற்றவர்களுமான சான்றோர்கள் பிறர் செய்த உபகாரங்களை மட்டுமே நினைப்பார்கள்; அபகாரங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றை நினையார்' என்று சொன்னான்." (அத். 93).

இங்கே பேசப்படுகின்ற ஒவ்வொரு சொல்லும் ஆழமாகச் சிந்திக்கத் தக்கவை. 'தமக்குத் தாமே கௌரவத்தைப் பெற்றவர்களான சான்றோர்' என்பதைப்பற்றி அப்படிச் சிந்திக்க வேண்டும். 'இனிமேல் பேச்சால் பயனில்லை. இவர்களை இங்கேயே இப்போதே கொன்றுவிடுகிறேன். இந்தப் பூமியை நீர் ஆளும்' என்று பீமன் போருக்குத் துடித்தான். அப்போதும் தருமர் 'பாரதனே! இது வேண்டாம். பேசாமலிரு' எனறு அவனை அடக்கினார். அவ்வாறு அடக்கிவிட்டு திருதராஷ்டிரனிடம் சென்று கைகளைக் கூப்பிக்கொண்டு நின்றபடி சொல்லலானார்:

"பரத வம்சத்து அரசரே! உமக்கு நாங்கள் என்ன செய்யக்கடவோம்? எங்களுக்குக் கட்டளையிடும். நீர்தாம் எங்களுக்குப் பிரபு. பாரதரே! எப்பொழுதும் உமது கட்டளைப்படி நடக்கக் கருதுகிறோம்' என்று சொன்னார்" (மேற்படி, அத். 95). இவ்வளவு கொடுமைகள் நடந்து முடிந்திருந்தாலும், கர்ணனுடைய பரிகாசம் இப்போதும் அடங்கவில்லையென்றாலும், அர்ச்சுனன் சொன்னதைப்போல, 'கடுஞ்சொற்களுக்கு மறுமொழி பேசுவது' அவனுக்கு இயல்பில்லை. இந்தக் கணத்தில்கூட இவ்வளவுக்கும் காரணமான பெரிய தந்தையினிடத்தில் 'கட்டளையிடும்படி' கேட்டுக்கொண்டு கைகூப்பியபடி நிற்கிறான்.

இப்போதுதான், கேட்டிருக்க முடியுமென்றாலும் பாஞ்சாலி கேட்காமல் ஒதுக்கிவிட்ட அந்த வரத்தை தருமபுத்திரனுக்கு திருதராஷ்டிரன் வழங்குகிறான். "அஜாதசத்துருவே! உனக்கு நன்மை உண்டாகட்டும். நீங்கள் க்ஷேமமாய் உபத்திரவமில்லாத வழியில் செல்லுங்கள். என்னால் விடைகொடுக்கப்பெற்ற நீங்கள் உங்கள் தனங்களுடன் சென்று ராஜ்யத்தை ஆளுங்கள். ("Dhritarashtra replied. 'O Ajatasatru, blest be thou. Go thou in peace and safety. Commanded by me, go, rule thy own kingdom with thy wealth") அ-ஜாத-சத்துரு என்றால், சத்துரு என்றொருவன் இன்னமும் பிறக்கவே பிறக்காதவன் என்று பொருள். இது தருமபுத்திரருடைய இன்னொரு பெயர். திருதராஷ்டிரன் மேலும் சொல்கிறான்: நடந்ததையெல்லாம் மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டாம். "உன் தாயான காந்தாரியையும் உன் குணத்தில் அன்புடன் வந்திருக்கும் முதியோனும் கண் தெரியாதவனும் உன் தந்தையுமாகிய என்னையும் பார். நான் நமது புத்திரர்களின் சிநேகிதர்களையும் பலாபலங்களையும் பார்க்கக் கருதியதனால் தெரிந்துதான் இந்தச் சூதாட்டத்தை விலக்காமல் இருந்தேன்." என்று அவன் சொல்லும்போதே பூனைக்குட்டி வெளியே வந்துவிடுகிறது!

'இந்தச் சூதாட்டத்தை என் புத்திரர்களும் அவர்களுடைய தோழர்களும் விரும்பியதால் 'என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்று நினைத்ததால், நான் தெரிந்தேதான் இந்தச் சூதாட்டத்தைத் தடுக்கவில்லை' என்று சொல்லிவிட்டு, 'விதுரனை அமைச்சனாகவும், உன்னை (தர்மபுத்திரனை) அரசனாகவும் கொண்டிருக்கும் கௌரவர்கள் கவலைப்படவேண்டியதே இல்லை' என்று அப்படியே தட்டைத் திருப்பிப் போடுகிறான் பெரிய தகப்பன்! இதற்கும் எந்தவிதமான மனவேறுபாட்டையும் காட்டாமல் உள்ளதை உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளும் தருமபுத்திரன் விடைபெற்றுக்கொண்டு, இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாகத் தன் நாட்டை நோக்கித் திரும்புகிறான்.

இப்போது 'துஷ்ட சதுஷ்டயா' என்று வியாசர் வருணிக்கும் அந்த அயோக்கிய சிகாமணிகளான துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நால்வருக்கும் தாங்கள் அரும்பாடுபட்டு 'வென்ற' செல்வங்களையும் நாட்டையும் இப்படி அநியாயமாக ஒரே கணத்தில் தூக்கிக் கொடுத்துவிட்டாரே கிழவர் என்ற கோபமும் சலிப்பும் மேலிடுகின்றன. திருதராஷ்டிரனே சொன்னபடி அவன் 'என்ன நடக்கிறது பார்ப்போம்' என்று நினைத்ததால் சூதாட்டத்தைத் தடுக்கவில்லை. ஆகவே அவனிடத்தில் இந்தச் சூதாட்டத்துக்கு சம்மதம் மட்டுமல்லாமல் விருப்பமும் இருந்திருக்கிறது. இப்போது அனைத்தையையும் தூக்கிக் கொடுத்துவிட்டான் என்றால் அதற்குக் காரணம் பயம்தான் என்பது தெளிவாகவே தெரிகிறது. போகட்டும். பயத்தால் கொடுத்ததை, இன்னொரு பயத்தை ஏற்படுத்தினால் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். இப்போது திருதராஷ்டிரனுக்கு வேறுமாதிரியாக 'பயங்காட்ட' வேண்டும். அப்படிப் பயங்காட்டிதான் அனுத்யூதம் எனப்படும் மறுசூதுக்கான வித்து விழுகிறது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline