Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்...
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2018|
Share:
திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம். ஆனால், அந்தச் சமயத்தில் பாஞ்சாலி நாட்டைக் கேட்கவில்லை. மாறாக, 'அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட என் கணவர்கள் தங்களுடைய பராக்கிரமத்தால் தமக்குரிய நாட்டைத் தாமே படைத்துக்கொள்வார்கள்' என்ற பொருள்படப் பேசினாள். தர்மபுத்திரன் திருதராஷ்டிரனிடத்திலே விடைபெற்றுக்கொள்வதற்காக வந்து கைகூப்பி நின்ற சமயத்தில் திருதராஷ்டிரன் 'நீங்கள் திரும்பிச் சென்று உங்கள் ராஜ்யத்தை ஆளுங்கள்' என்று சொல்லி, பாண்டவர்களுக்கு அவர்களுடைய தேசத்தைத் திருப்பித் தந்தான் என்பதையும் பார்த்தோம். இப்படி நாட்டைத் திருப்பித் தந்த சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்திருக்கவில்லை. ஏனெனில், நாடு இவ்வாறு திரும்பத் தரப்பட்டது என்பதை துச்சாதனன் முதலில் 'கேள்விப்படுகிறான்.' மகாபாரத நிகழ்வுகளை ஜனமேஜயருக்கு விவரித்துக்கொண்டிருக்கும் வைசம்பாயனர் சொல்கிறார்: "ஜனமேஜய ராஜாவே! புத்திசாலியான திருதராஷ்டிரனால் அந்தப் பாண்டவர்கள் அனுப்பப்பட்டதை அறிந்து துச்சாஸனன் மனதில் வருத்தங்கொண்டு (கர்ணன், சகுனி முதலான) மந்திரிகளுடன் கூடியிருக்கும் துரியோதனனை அடைந்து" நடந்ததைத் தெரிவித்தான். (அனுத்யூத பர்வம், அத்: 96) O king, learning that the Pandavas had been commanded by the wise Dhritarashtra to return to their capital, Dussasana went without loss of time unto his brother என்று இதை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். எனவே, நாடு திருப்பியளிக்கப்பட்டபோது துரியோதன, துச்சாதனர்களும் கர்ணனும் சகுனியும் அங்கே இருந்திருக்கவில்லை என்பது தெளிவு.

திருதராஷ்டிரனிடத்தில் உடனடியாக நால்வரும் விரைந்தனர். தேவ குருவான பிருஹஸ்பதி இந்திரனுக்குச் செய்த உபதேச மொழியோடு தன் பேச்சைத் தொடங்குகிறான் துரியோதனன். 'Hast thou not heard, O king, what the learned Vrihaspati the preceptor of the celestials, said in course of counselling Sakra about mortals and politics? Even these, O slayer of foes, were the words of Vrihaspati, 'Those enemies that always do wrong by stratagem or force, should be slain by every means.' பாண்டவர்களோ நமக்குப் பகைவர்கள். அவர்களை அழிப்பதற்கு எல்லா வகையான உபாயங்களையும் கைக்கொள்ள வேண்டும். இறுதியில் யுத்தம்தான் செய்யப்போகிறோம் என்றாலும் மற்ற மன்னர்களையும் நம்பக்கம் சேர்த்துக்கொண்டு போரிடுவோம். அதற்கு இந்தப் பாண்டவர்களுடைய தனங்களைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு?' என்று தொடங்குகிறான். If, therefore, with the wealth of the Pandavas, we gratify the kings of the earth and then fight with the sons of Pandu, what reverses can overtake us? அவர்களை அழிக்க அவர்களுடைய செல்வத்தையே பயன்படுத்திக்கொள்வதில்லையா புத்திசாலித்தனம் என்று கேட்டு, ஏதோ இந்திரனுக்கு பிருஹஸ்பதி இதைத்தான் உபதேசித்தார் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான் துரியோதனன். முதலில் ஆசை வார்த்தை காட்டியாயிற்று; அடுத்ததாகத் தான் ஒரு அதிபுத்திசாலி என்பதையும் பிருஹஸ்பதியை மேற்கோள் காட்டி நிறுவியாயிற்று. அடுத்ததாக பயமுறுத்த வேண்டும்.

துரியோதனன் சொல்கிறான்: "கெடுப்பதற்காக வந்த கோபித்த சர்ப்பங்களைக் கழுத்திலும் முதுகிலும் போட்டுக்கொண்டு எவன் கொல்லாமல் விடுவான்?" (பக்: 310) When one hath placed on the neck and back of venomous snakes full of wrath for encompassing his destruction, is it possible for him to take them off? இந்தப் பாண்டவர்களோ நம்மை அழிப்பதற்காகக் கிளம்பியிருக்கின்ற விஷப்பாம்புகள். இவர்களை நாம் 'கழுத்திலும் முதுகிலும் போட்டுக்கொண்டிருக்கிறோம்'. இனிமேல் இவர்களை இறக்கிவிட முடியுமா அல்லது இந்த விஷப்பாம்புகள்தாம் நம்மைக் கடிக்காமல் விடுமா? இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ச்சுனனும் பீமனும் எவ்வாறு தங்கள் தேர்களில் ஏறிக்கொண்டு சென்றார்கள்; எவ்வாறு அர்ச்சுனன் கவசங்களை அணிந்து, காண்டீவத்தை எடுத்துப் பார்த்துப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி போனான்; எப்படி பீமன் தன் கதையை எடுத்துக்கொண்டு தேரில் சென்றான்; நகுல சகதேவர்கள் எப்படி ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு சென்றார்கள்; தருமன் எப்படி சகதேவனோடு குறிப்புகளால் சமிக்ஞை செய்துகொண்டார்; எப்படி அவர்கள் சேனைகளைத் திரட்டப் போயிருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரித்துவிட்டு (இவனுக்கு இதுவரையில் நாட்டைக்கொடுத்த செய்திதான் தெரியவில்லையே ஒழிய, ஒற்றர்கள் மூலமாகப் பாண்டவர்கள் எப்படிப் போனார்கள் என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் திரட்டியிருக்கிறான்.) அடுத்த முக்கியமான வெடியைத் தூக்கிப் போடுகிறான்:
"ஒருகாலத்தில் நம்மால் தீங்கு செய்யப்பட்ட அவர்கள் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்." அவர்களுக்கு நாம் பல தீங்குகளைச் செய்திருக்கிறோம்; அவர்கள் நம்மைச் சும்மா விடப்போவதில்லை. அதற்குமேலும் ஒன்றிருக்கிறது: "திரெளபதியைக் கஷ்டப்படுத்தினதை அவர்களில் எவன் பொறுக்கக் கூடியவன்?" நாம் திரெளபதியை அளவுக்கு மீறித் துன்புறுத்திவிட்டோம்; அவமானப்படுத்திவிட்டோம். அவர்களுக்கு ஆயுதங்களையும் தேர்களையும் கொடுத்து, சுதந்திரமாகத் திருப்பியனுப்பிப் போதாக் குறைக்கு நாட்டையும் கொடுத்துவிட்டால், நாம் செய்தனவற்றுக்கெல்லாம் அவர்கள் பொங்கி எழாமல் இருப்பார்களா என்று கேட்கும் துரியோதனன் அர்ச்சுனனுடைய கோபத்தையும் அவனுடைய ஆற்றலையும் பற்றி மிக விரிவாக விவரிக்கிறான். 'யுத்தம் வேண்டாம்' என்று பேச்செழும்போதெல்லாம், 'அர்ச்சுனனைப் பற்றி ஒரு கவலையுமில்லை. பீமனை நான் பார்த்துக்கொள்வேன்; அர்ச்சுனைக் கர்ணன் கொன்றுவிடுவான்' என்று வீம்பு பேசுபவனான அவனுடைய பேச்சா இது என்று வியப்பேகூட எழுகிறது:

"தேராளிகளிற் சிறந்தவர்களான பீஷ்மர், துரோணர், கர்ணன், அசுவத்தாமா, கிருபர்....... கௌரவர்களைச் சேர்ந்த மற்றுமுள்ள அரசர்கள் இவர்கள் அனைவரும் யுத்தம் செய்யத் தொடங்கினாலும் அர்ஜுனனுக்கு எதிர் நிற்கமாட்டார்கள். பராக்கிரமத்தில் அர்ஜனனுக்குச் சமமான வில்லாளி உலகத்தில் இல்லை. இரண்டு கைகளுள்ள இவ்வர்ஜுனன், ஆயிரம் கைகளுள்ள (கார்த்தவீரிய) அர்ஜுனனுக்குச் சமமானவன்' என்று சொன்னான்." (பக்கம் 311) இதைத் தொடர்ந்து எந்தக் கர்ணன் அர்ச்சுனனைக் கொன்றுவிடுவான் என்று வாய்க்கு வாய் பீற்றிக்கொள்கிறானோ அந்தக் கர்ணன் எவ்வாறெல்லாம் அர்ச்சுனனிடத்தில் தோல்வியடைந்தான் என்று திரெளபதி சுயம்வரத்தின் இறுதியில் அர்ச்சுனனுக்கும் கர்ணன் உள்ளிட்ட மற்ற அரசர்களுக்கும் நிகழ்ந்த போரைக் குறிப்பிட்டு, "அர்ஜுனன் பராக்கிரமத்தின் வன்மையினால் கர்ணன் முதலான அவ்வரசர்கள் அனைவரையும் யுத்தத்தில் ஜயித்தான்" என்று சொல்லி (அனுத்யூத பர்வம், அத்: 97, பக்: 315) அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைக்குச் சென்றது, உலூபியை மணந்தது, மலையத்வஜ பாண்டியனின் மகளை மணந்தது, ஐந்து முதலைகள் இருந்த ஒரு குளத்தில் குளிக்கும்போது வெறுங்கையால் அந்த ஐந்து முதலைகளையும் தூக்கி, முதலை வடிவமாக இருந்த அப்சரஸ்களை விடுவித்தது, காண்டவ வனத்தை அழித்தது, அச்சமயத்தில் தேவேந்திரனோடு நடந்த போரில் தேவர்களை வென்றது என்று மிக விஸ்தாரமாக விவரிக்கிறான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பவன் பார்வையற்ற ஒரு தந்தை என்றால் அவனுடைய மனத்தில் இந்த வர்ணனைகள் எப்படிப்பட்ட கிலியையெல்லாம் உருவாக்கும் என்பதைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதுவும் திருதராஷ்டிரன் துரியோதனன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தான். அவனுடைய பாசம், தாய் காந்தாரியின் பாசத்தை விஞ்சிய ஒன்று. 'குலத்தின் நன்மையைக் கருதி, பாண்டவர்களை மறுசூதுக்கு அழைக்கும் துரியோதனனைக் கைவிட்டுவிடலாம். இவனால் பட்டது போதும். குலம் நாசமடைய வேண்டாம்' என்று காந்தாரியே சற்றுநேரத்தில் சொல்லப் போகிறாள். ஆனால் கண்ணற்ற திருதராஷ்டிரனுக்குப் பாசம் 'கண்ணை மறைத்துவிட்டதால்' அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை.

"அப்போது திருதராஷ்டிர மகராஜன் இவ்வளவு அச்சத்தை உண்டாக்கிய பிறகு 'பாண்டவர்கள் எவ்வளவு தொலைவு சென்றிருந்தாலும் திரும்ப வரச்சொல். 'உமது பிதாவாகிய திருதராஷ்டிரா மகாராஜர் உம்மை வந்து ஆடச்சொல்கிறார்' என்று கூறி அழை. அவர்களை மறுசூதுக்கு திருதராஷ்டரனும் துரியோதனனும் அனுப்பியது விதுரரை இல்லை. அவர் போகமாட்டார் என்பது தெரியுமென்பதால், பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்துவருவதற்காக அனுப்பிய தேரோட்டியான பிராதிகாமியை அனுப்பினார்கள். அவன் சொன்னதைக் கேட்ட தருமபுத்திரர், 'நன்மையும் தீமையும் விதியின்வசத்தால் ஏற்படுகின்றன.' "மறுபடியும் ஆடவேண்டுமா? சொக்கட்டான் ஆடுவதற்காக அழைப்பது கெடுதலுக்குக் காரணமென்று தெரிந்திருந்தாலும் கிழவருடைய கட்டளையினால் அதை நான் விடமுடியவில்லை. பொன்மயமான மிருகம் இருப்பதில்லை. ஆகிலும் ராமர் பொன்மானின்மேல் ஆசைப்பட்டார். கஷ்டம் நெருங்கின காலங்களில் புத்திகளும் மிகவும் மாறிப்போகின்றன' என்று சொல்லிக்கொண்டே தன் சகோதர்களுடன் திரும்பினார்". (அத்: 98, பக்: 321)

இந்த அனுத்யூதம் எனப்படும் மறுசூதில் நாடு வைத்தாடப்படவில்லை. மாறாக நாட்டை ஆளும் உரிமையே வைத்து ஆடப்பட்டது. இது முக்கியமான முடிச்சுகளில் ஒன்று என்பதால் இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline