|
|
|
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம் கேட்டுக்கொண்டான். துரோணர் மறுக்கிறார். தன் மகனான அஸ்வத்தாமனுக்கே பிரமசிரஸ் என்ற-பிரமாஸ்திரத்துக்கும் மேற்பட்ட-அஸ்திரப் பயிற்சியைத் தரமறுத்தவர் அவர். ஏகலவ்யனுக்கு அவர் வேறு ஏதோ சமாதானம் சொல்லி ஆயுதப் பயிற்சியளிக்கவில்லை. (ஏகலவ்யன் சாதாரண வேடன் அல்லன்; அவன் ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத ராஜனுடைய மகன். இவற்றையெல்லாம் வேட அரசனும் வேடமில்லா அரசனும், வேடன் பிடிபட்டான் ஆகிய தவணைகளில் பார்த்திருக்கிறோம்.) அவர் பீஷ்மருடைய ஆணையால் ஹஸ்தினாபுரத்தில் ஆசிரியராக அமர்த்தப்பட்டிருந்தார். எனவே அவரால் கௌரவ (அதாவது, பாண்டவர்களையும் உள்ளிட்ட ஆரம்ப கட்டத்து) வம்சத்துக்கு எதிரான விளைவுகள் ஏற்படும் என்ற பேச்சுக்கு இடமிருக்கும் எதையும் செய்ய முடியாது. ஏகலவ்யன் இந்த வம்சத்துக்கு எதிரான, வலுவான சக்தியாக முளைப்பான் என்று எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தபடியே நடந்தது. இதையெல்லாம் பார்த்தோம். இப்படி இருக்கும்போது அவரால் எப்படி அந்தப் பயிற்சியை அளிக்க முடியும்? இவனோ துரியோதனனிடத்தில் மிக நெருக்கமானவனாக இருப்பதும், பாண்டவர்களுக்கு எதிரியாக இருப்பதும் ஊரறிந்த ரகசியம். இந்த இடம் இப்படி விவரிக்கப்படுகிறது:
"அப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட துரோணர், அர்ஜுனனிடத்தில் விருப்பமுள்ளவராதலாலும் கர்ணனுடைய துஷ்டபுத்தியை அறிந்ததாலும் அவனைப் பார்த்து, 'விதிப்படி விரதத்தை அனுஷ்டித்த பிராமணன், பிரம்மாஸ்திரத்தைத் தெரிந்துகொள்ளத் தக்கவன்; அல்லது, மிகுந்த தவத்தையுடைய க்ஷத்திரியனும் தெரிந்துகொள்ளத் தக்கவன்; மற்றவன் எவ்விதமும் தெரிந்துகொள்ளத் தக்கவனல்லன்" என்று சொல்லி, கர்ணனுக்குப் பயிற்சியளிக்க மறுக்கிறார். "ஓ வேந்தனே! இவ்விதம் சொல்லப்பட்ட கர்ணன் அங்கிரஸ ஸ்ரேஷ்டரான துரோணரைப் பூஜித்து விடைபெற்றுக் கொண்டு மஹேந்திரமென்னும் மலையை நோக்கி உடனே சென்றான். அந்தக் கர்ணனோ பரசுராமரையடைந்து, தலையால் வணங்கி, 'நான் ப்ருகு வம்சத்திற் பிறந்த பிராம்மணன்' என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டு வந்தனஞ் செய்தான். பரசுராமரானவர் கோத்திரம் முதலானவற்றைக் கேட்டு அவனை அங்கீகரித்துக் கொண்டார்.' (பாரதம் தொகுதி 7, சாந்தி பர்வம், அத்: 2) (கிஸாரி மோகன் கங்கூலி இதை இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: Thus addressed by him, Drona, from partiality for Phalguna, as also from his knowledge of the wickedness of Karna, said, 'None but a Brahmana, who has duly observed all vows, should be acquainted with the Brahma weapon, or a Kshatriya that has practised austere penances, and no other.' When Drona had answered thus, Karna, having worshipped him, obtained his leave, and proceeded without delay to Rama then residing on the Mahendra mountains. Approaching Rama, he bent his head unto him and said, 'I am a Brahmana of Bhrigu's race.' This procured honour for him. With this knowledge about his birth and family, Rama received him kindly and said, 'Thou art welcome!' at which Karna became highly glad.-இதில் ராமர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடங்கள், பரசுராமரைக் குறிப்பவை.)
நாம் முன்னமே சொன்னதைப்போல, பரசுராமர் க்ஷத்திரியர்களுக்குப் பரம எதிரி. வில்வித்தையை க்ஷத்திரியர்களுக்குப் பயிற்றுவிப்பதில்லை என்று உறுதிபூண்டவர். அவரிடத்தில்-அவரிடத்தில் மட்டுமல்ல, எவரிடத்தில் பயிலவேண்டுமானாலும், அவருடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். கர்ணன் 'நான் ப்ருகு வம்சத்தில் பிறந்த பிராமணன்' என்று சொன்னது அவ்வளவு எளிதல்ல. ஒருவன் தன் குலத்தைச் சொல்லும்போது, அதற்கான அபிவாதனத்தைச் சொல்லவேண்டும். இது மூன்று குலத்தவருக்கும் பொதுவான ஒன்று. 'கோத்திரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவனைத் தன் மாணவனாக ஏற்றுக்கொண்டார்' என்பதும் அவ்வளவு சுலபத்தில் முடிகிற ஒன்றன்று. ப்ருகு வம்சத்தவன் அதற்குரிய அபிவாதனத்தில், 'இன்ன கோத்திரத்தில், இன்ன சூத்திரத்தில், இன்ன வேதத்தை ஓதுபவனான, இன்ன பெயர்கொண்ட நான் உங்களை வணங்குகிறேன்' என்று சொல்லவேண்டும். அப்படியானால், கர்ணன், தான் 'இன்ன கோத்திரத்தைச் சேர்ந்தவன்' என்று சொல்லியிருந்தால் மட்டும் போதாது, அபிவாதனத்தையும் சேர்த்துச் சொல்லித்தான் குருவை நமஸ்கரிக்கவே முடியும். நமஸ்கரிக்காமல் வித்தையைப் பயில முடியாது. சுலபத்தில் ஏமாந்து போவதற்கு இங்கே இருப்பதோ யாரோ ஒருவர் அல்லர். பரசுராமர். அவரை ஏமாற்றும் விதமாக அபிவாதனத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டிராவிட்டால், அவரிடத்தில் எப்படிப் பயிலமுடியும்? சரி, போகட்டும். சொல்லுகின்ற பொய்யை முழுமையாகச் சொல்லியிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். |
|
இவன் துரோணரை விட்டுப் பிரிந்ததும், பரசுராமரிடத்தில் பொய் சொல்லிச் சேர்ந்துகொண்டதும் பிரம்மாஸ்திரத்தைத் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக. பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளும் வேட்கையின் பின்னாலே இருந்த ஒரே காரணம், அர்ச்சுனனைப் போரில் வெல்லவேண்டும், அல்லது அவனுக்குச் சமானமானவனாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக. பயிற்சியே முடிந்திராத இந்தக் கட்டத்தில், அர்ச்சுனனோடு இவனுக்கு என்ன பகை? அர்ச்சுனன்தான் இவனை எந்தவிதத்திலாவது-இந்தக் கட்டத்தில்-அவமதித்தோ வேறேதேனும் தவறான சொற்களைப் பேசி இழிவுபடுத்தியோ செய்திருக்கிறானா? ஒன்றுமில்லை. பிறகு ஏன் இந்தத் தணியாத தாகம்? அங்கே போருக்கான ஆரம்பப் பிரயத்தனங்கள் தொடங்கிவிட்டிருந்தன. போர் மூளும்போது, பீமனுடைய கதாயுதப் பயிற்சியை எதிர்கொள்ளத் தன்னால் முடியும்; அர்ச்சுனனுடைய வில்வித்தைக்கு இணையானவனாக ஒருவன் வேண்டும் என்று துரியோதனன் நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. "நீ எந்த இனத்தைச் சேர்ந்தவன்" என்று கிருபர் கேள்விகேட்ட ஆட்டக்கள நிகழ்வு இன்னமும் நடைபெறவில்லை. அதற்கு இன்னமும் பலகாலம் இருக்கிறது. அதாவது, அப்படியொரு சங்கடமான நிலையில், துரியோதனன் திடுமெனப் பிரவேசித்து "உன்னை அங்கநாட்டின் மன்னனாக்குகிறேன்" என்று சொல்லி, அவனுடைய மானத்தைக் காத்ததன் செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அந்த செஞ்சோற்றுக் கடன் என்பது இன்னமும் கர்ணனைச் சற்றும் பற்றாத நேரம். இப்போது இவனுக்கும் அர்ச்சுனனுக்கும் என்ன பகை என்று இந்த முன்தயாரிப்பு? இப்படிப் பொய்சொல்லி ஏன் ஒரு பயிற்சி? துரியோதனிடத்தில் கர்ணனுக்கு உண்டாகியிருந்த நட்பும் பற்றும் இதைச் செய்யத் தூண்டியது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
சரி. அப்படியானால், குலத்தைக் காரணம் காட்டி இவனுக்குப் பயிற்சியளிக்கவில்லை, குலங்களின் சமமற்ற தன்மையினாலேயே-இவன் சூரிய புத்திரனாக இருந்த போதிலும்-இவனுக்குத் தரப்படவேண்டிய பயிற்சிகள் மறுக்கப்பட்டன என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பச்சைப் பொய்க்கு அத்தனை அறிஞர்களும் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், சூதன் என்றால் தாழ்ந்த குலத்தவனா, தாழ்ந்த குலம் என்றால் எந்த வகையில் தாழ்ந்த குலம் என்று பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. ஆகவே இதற்குள் நுழைகிறேன். நுழைவதற்கு முன்னால் ஒன்று சொல்லிவிடுகிறேன். சூதன் என்றால் என்ன என்பதைக் கர்ணனே வரையறை செய்கிறான். கர்ணனுடைய தொடையிலே தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்த பரசுராமர், ரத்தப்பெருக்கால் கண்விழித்ததும், "இப்படியொரு துன்பத்தைத் தாங்கிக்கொள்ள பிராமணனால் முடியாது. நீ யார்?" என்று கேட்கும்போது கர்ணன் இதைச் சொல்கிறான். இந்த இடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, இதன் வடமொழி மூலஸ்லோகத்தையும் தருகிறேன்:
tam uvāca tataḥ karṇaḥ śāpabhītaḥ prasādayan brahmakṣatrāntare sūtaṃ jātaṃ māṃ viddhi bhārgava
rādheyaḥ karṇa iti māṃ pravadanti janā bhuvi prasādaṃ kuru me brahmann astralubdhasya bhārgava
(Mahabharata, Book 12, Ch. 3, Sloka 26 and 27; www.sacred-texts.com/hin/mbs/mbs12003.htm)
இதன் மொழிபெயர்ப்பு: "ஓ பார்க்கவரே! பிராம்மணருக்கும் க்ஷத்திரியருக்கும் வேறான இடத்தில் பிறந்த ஸூத ஜாதியாக என்னை அறியும். பூமியில் ஜனங்கள் என்னை ராதையினுடைய பிள்ளையான கர்ணனென்று சொல்லுகிறார்கள். ஓ ப்ருகு வம்சத்திலுண்டான பிராம்மணரே! அஸ்திரத்தில் பேராசையடைந்த எனக்கு அனுக்ரஹம் செய்யும்." (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 7, பக். 9-10). ‘O thou of Bhrigu's race, know me for a Suta, a race that has sprung from the intermixture of Brahmanas with Kshatriyas. People call me Karna the son of Radha. O thou of Bhrigu's race, be gratified with my poor self that has acted from the desire of obtaining weapons. என்பது கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.
ஆக, சூதன் என்பவன் நமக்குச் சொல்லப்பட்டு வருவதைப்போல நாலாவது வருணத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவனும் க்ஷத்திரியனே; பிராமண-க்ஷத்திரிய கலப்பால் உண்டான க்ஷத்திரியன். தாயோ தந்தையோ பிராமணராகவும், மற்றவர் க்ஷத்திரியராகவும் இருந்ததால் உண்டான குலம். இது தேரோட்டிய காரணத்தால் தாழ்ந்த குலமன்று. தேரோட்டியாக இருப்பது ஒரு பெரிய பொறுப்பு. ஏதோ கார் டிரைவர் வேலையைப் போன்றதன்று. சஞ்சயன் சூதன்; தசரதருடைய தேரோட்டியும் மந்திரியுமான சுமந்திரனும் சூதன்; விராட மன்னனுடைய மனைவியான சுதேஷ்ணையின் சகோதரன் கீசகனும் சூதன். இன்னும் பலர் சூத வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அரசாண்டிருக்கிறார்கள்; அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்; அதே சமயத்தில் தேரும் ஓட்டியிருக்கிறார்கள். கர்ணனுடைய வளர்ப்புத் தந்தையான விகர்த்தனன் சூதன்-தேரோட்டி. அவனைத்தான் கர்ணன் மேற்படி வருணணையால், "பிராமண-க்ஷத்திரிய கலப்பால் உண்டான சூதன்" என்று சொல்கிறான் என்பது தெளிவு. வைகர்த்தனன் அமைச்சனாக இருக்கவில்லை. ஆனால், தேரோட்டிகளுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்படவில்லை. மாறாக அது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதொரு அவசியமான கலையாக இருந்தது. இந்த விவரங்களை மேலும் பார்ப்போம்.
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|