|
|
|
|
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக ஒரு வருடம் காத்திருந்திருக்க வேண்டும்" என்றோர் ஐயத்தை எழுப்பியிருக்கிறார். முந்தைய தவணைகளிலேயே இதற்கான விடையைச் சொல்லியிருக்கிறோம். இருந்தாலும் ஒரு வசதிக்காக இதை மீண்டும் சொல்கிறோம்: மே மாத இதழில் வெளிவந்த 'அரக்கு மாளிகையின் வித்து' என்ற தவணையைப் படிக்கவும். அதைச் சுருக்கமாகச் சொன்னால்:
பாண்டவர்களைக் கொல்வதற்காக தீட்டப்பட்ட சதியில், அவர்களை ஹஸ்தினாபுரத்துக்கு வெளியே வேறெங்காகிலும் கொல்லவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்படிச் செய்ய வசதியான இடமாக வாராணாவதத்தைத் தேர்கிறார்கள். இப்போது திருதிராஷ்டிரனுக்கு ஒரு கவலை ஏற்படுகிறது. 'வாராணாவதத்து மக்களுக்குப் பாண்டு பலவிதமான நன்மைகளைச் செய்திருக்கிறான். அந்த மக்களும் பாண்டு செய்தனவற்றை மறவாதவர்களாக இருக்கிறார்கள். அந்த இடத்தில் அவர்களைக் கொன்றால், மக்கள் நமக்கெதிராக வெகுண்டெழுவார்கள். அவர்கள் நம்மைக் கொல்லவும் கூடும். இதைத்தான் திருதிராஷ்டிரன் பேச்சாக மேற்கோள் காட்டியிருக்கும் பகுதி குறிப்பிடுகிறது. மீண்டும் பாருங்கள்: 'குழந்தாய்! பாண்டுவினால் முன்னே ஆதரிக்கப்பட்ட அந்நகரத்து* ஜனங்கள் யுதிஷ்டிரனுக்காக நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் ஏன் கொல்லார்கள்?' என்று கேட்கப் போகிறான். (மேற்படி, பக்கம் 584) (*வாரணாவதத்து மக்கள்). ஒரு தெளிவுக்காக, இதே வாக்கியத்தை கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் பார்க்கலாம். "Thus benefited of old by Pandu, shall not, O child, the citizens slay us with all our friends and relatives now on account of Yudhishthira?" நாம் பாண்டவர்களை வாரணாவதத்துக்கு 'அனுப்பினால்'--அதாவது நாடுகடத்தினால்--மக்கள் யுதிஷ்டிரனுக்காகப் பரிந்து எழுந்து நம்மைக் கொன்றே போட்டுவிடுவார்கள். மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற காரணத்தினால், மக்களின் கண்களுக்கு 'இது ஒரு விபத்து என்று தோற்றமளிக்கும்படியாக அரக்குமாளிகை பற்றியெரிவது இருக்கவேண்டும்' என்பது முதன்மையான நோக்கம்.
இப்படிப்பட்ட செயலைச் செய்ய ஏற்ற நாளாக கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியைத் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது அமாவாசைக்கு முந்தைய நாளிரவு. ஒவ்வொரு கிருஷ்ணபட்ச சதுர்தசியிலும் இந்த 'விபத்தை' நிகழ்த்த இது சரியான சமயமா என்று புரோசனன் பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு வருட காலத்துக்குப் பிறகே அவனுக்கு அப்படியொரு வாய்ப்பு அமைந்தது. ஆனால் அவனுக்கு அத்தகைய வாய்ப்பு அமையப்போகிறது என்பதை அவனுக்கு முன்னாலேயே பாண்டவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இதுதான் அவர்கள் தப்பிக்கக் காரணமாக இருந்தது. என்னதான் மன்னராட்சி என்றாலும், மன்னனும் மக்களுக்குக் கட்டுப்பட்டவனே (accountable) என்பதை உறுதிசெய்யும் இடங்களில் இதுவுமொன்று. எனவே, அரக்கு மாளிகைக்குத் தீயிட புரோசனனுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இப்படி ஒரு வருஷகாலம் அங்கே வசித்தார்கள் என்ற குறிப்பு பாரதத்தில் வெளிப்படுகிறது: "ஒரு வருஷத்துக்குமேல் ஒற்றுமையான மனத்துடன் வஸித்திருந்த பாண்டவர்களைப் புரோசனன் கண்டு (அவர்கள்) தன்னை நம்பினவர்கள் என்றறிந்து களிப்புற்றான்." (ஆதி பர்வம், ஜதுக்ருஹ பர்வம், அத்: 160). கிஸாரி மோகன் கங்கூலி இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: "Vaisampayana said, 'Seeing the Pandavas living there cheerfully and without suspicion for a full year, Purochana became exceedingly glad." தமிழ் மொழிபெயர்ப்பின்படி, 'ஒரு வருடத்துக்கும் மேல்'; ஆங்கில மொழிபெயர்ப்பின்படி, ஒரு முழு வருடம்.
இனி, பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பும்போது, அங்கே அவர்களைப் போலவே ஒரு தாயும் ஐந்து மகன்களுமாக வந்து தங்கி அரக்கு மாளிகை எரியும்போது எரிந்து போய், கருகிச் சிதைந்த அவர்களுடைய உடலைப் பார்க்கும் மக்கள், 'இது குந்தி, இந்த ஐவரும் பாண்டவர்கள்' என்ற முடிவுக்கு வந்தார்களல்லவா? அந்த வேடர்கள் அரக்கு மாளிகைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பார்ப்போம். இந்த ஒரு கட்டத்தில் கிஸாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பும், கும்பகோணப் பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் பெரிய அளவில் மாறுபடுகின்றன. இந்தக் குறிப்பிட்ட இரவில் அரக்கு மாளிகைக்குத் தாங்களே தீயிட்டுவிட்டுத் தப்புவதாக பாண்டவர்கள் முடிவெடுக்கிறார்கள். குந்தி நிறைய தானங்களைச் செய்கிறாள். விருந்து படைக்கிறாள். இந்த விருந்தில் உண்பதற்காக அங்கே வந்த வேட்டுவப் பெண்ணும், அவளுடைய ஐந்து மகன்களும் என்று கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். "Then on the occasion of an almsgiving, O king, Kunti fed on a certain night a large number of Brahmanas. There came also a number of ladies who while eating and drinking, enjoyed there as they pleased, and with Kunti's leave returned to their respective homes. Desirous of obtaining food, there came, as though impelled by fate, to that feast, in course of her wanderings, a Nishada woman, the mother of five children, accompanied by all her sons. O king, she, and her children, intoxicated with the wine they drank, became incapable. Deprived of consciousness and more dead than alive, she with all her sons lay down in that mansion to sleep". இதைப் பார்க்கும்போது, ஏதோ ஒருநாள் அங்கே உணவருந்துவதற்காக வந்து, மதுமயக்கத்தால் அங்கே தம் வசமிழந்து கிடந்த வேட்டுவப் பெண்ணும் அவளுடைய ஐந்து மகன்களும் என்ற அபிப்பிராயம் ஏற்படுகிறது. ஆனால் கும்பகோணப் பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு சொல்கிறது: |
|
"பிறகு குந்தி அன்னதானஞ் செய்வதை வியாஜமாகக் (பாவனை, தோற்றம்--pretence, appearance) கொண்டு இரவில் பிராமண போஜனம் செய்வித்தாள். ஸ்திரீகளும் அங்கே வந்தனர். பாரதரே! அந்த ஸ்திரீகள் இஷ்டப்படி விளையாடி போஜனமும் பானமும் செய்து குந்தியிடம் விடைபெற்றுக் கொண்டு, இரவிலேயே தம்தம் வீடுகளுக்குச் சென்றனர். புரோசனனால் தூதுவிடப்பட்ட ஒரு வேடச்சி கெட்ட எண்ணத்துடன் எப்போதும் ஸமயம் பார்த்துக் கொண்டு குந்தியையே அடுத்திருந்தாள். அந்த வேடச்சிக்கும் ஐந்து புத்திரர்கள் இருந்தார்கள். முன்னமேயுள்ள பழக்கத்தினால் குந்தியினிடம் ஸ்நேகஞ் செய்துகொண்டு அவளுக்கு ஸகியாயிருந்த அந்த வேடச்சி, பலவகையான தேன்களையும் கிழங்குகளையும் கனிகளையும் எடுத்துக் கொண்டு, அன்னத்தை விரும்பிக் காலத்தினால் தூண்டப்பட்டவளாகப் புத்திரர்களுடன் வந்து சேர்ந்தாள். மிகக் கொடியவளும் ஐந்து புத்திரர்களுள்ளவளுமான அந்த வேடச்சி குந்திக்கு மனமொத்தவளாயிருந்தாள். அவள் புத்திரர்களுடன் மதுபானஞ்செய்து மயக்கமுற்று அதனால் அயர்ந்திருந்தாள்."
அதாவது, புரோசனனால் 'தூதுவிடப்பட்ட' அல்லது ஏவப்பட்ட வேடப்பெண். புரோசனன் எதற்காக இவளை ஏவியிருப்பான்? 'கெட்ட எண்ணத்துடன் எப்போதும் ஸமயம் பார்த்துக்கொண்டு...' தகுந்த சமயம் வாய்த்ததும் அதைப் புரோசனனுக்கு அறிவிப்பதற்காக குந்தியுடன் தோழமையாகப் பழகிவந்தாள். இந்தக் குறிப்பிலிருந்து ஒன்று தெரிகிறது. அவள் குந்தியுடனேயே தங்கியிருக்கவில்லை; வந்து போய்க்கொண்டிருந்தாள். அந்தக் குறிப்பிட்ட இரவில் அவள் அங்கே வரக் காரணம், விருந்தில் பங்கேற்க. 'காலத்தினால் தூண்டப்பட்டு' என்றொரு குறிப்பும் இருக்கிறது. அவளை அரக்கு மாளிகையை வந்தடையுமாறு காலம் தூண்டியிருக்கிறது. 'விதியினால் தூண்டப்பட்டு' என்றும் கொள்ளலாம்.
இந்தச் சமயத்தில்தான் பீமன் அரக்கு மாளிகைக்குத் தீ வைத்தான். அதுவும் எங்கே? "பீமன் அந்த வீட்டைப் புரோசனன் எங்கே படுத்திருந்தானோ அந்த இடத்தில் கொளுத்தினான்." Bhima then set fire to the house just where Purochana was sleeping. என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு. என்ன முயன்றாலும் தப்ப முடியாது என்பது குறிப்பு.
இப்போது, தங்களைக் கொல்லும் பணியில் அமர்த்தப்பட்டிருந்த புரோசனனையும் கொளுத்தியாயிற்று; தங்களை வேவு பார்ப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்த வேடப் பெண்ணையும் அவளுடைய ஐந்து மகன்களையும் கொளுத்தியாயிற்று. விபத்தில் இறந்தவர்கள் குந்தியும் பாண்டவர்களுமே என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியாயிற்று. டாக்டர் KNS பட்நாயக் இந்தச் சம்பவத்தைப்பற்றி, The Lac Palace was set on fire on Keelaka Phalguna 13/14th Day night in the third Jhama or Quarter. (A day consists of 8 prahars, 4 during day time and 4 during night.) Pandavas crossed river Ganga on Keelaka Phalguna New Moon Day morning. என்று குறிப்பிடுகிறார். www.hindunet.org
மறுநாள் அங்கே கூடிய வாரணாவதத்து மக்கள், இது ஒரு விபத்து என்பதை ஏற்கத் தயாராயில்லை. மாறாக, 'துரியோதனனால் ஏவப்பட்ட புரோசனன் எரிந்து போவதற்காகவென்றே இந்த மாளிகையை ஏற்படுத்தியிருக்கிறான். திருதிராஷ்டிரனுடைய புத்தி செம்மையாக இல்லை. தூயவர்களான பாண்டவர்களை, விரோதிகளைப்போல் நடத்தி, கொளுத்தியும் விட்டான். இதில் புரோசனனும் இறந்துவிட்டான் என்பது நல்ல செய்தி' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு எரிந்து போன அந்த மாளிகையை சூழ்ந்துகொண்டு புலம்பினார்கள். இப்போது சதித்திட்டம் வெளியே தெரிந்துவிட்டது. நிரூபணம்தான் இல்லை. ஊகிக்க முடிகிறது. அவ்வளவே.
இவ்வாறாக, தம்மைச் சூழ்ந்திருந்த பேராபத்தைப் பாண்டவர்கள் கடந்தார்கள். அடுத்ததாக ஏகசக்ரபுரத்தில் சிலகாலம் மாறுவேடத்தில் வசித்தார்கள். இதற்கிடையில் அவர்கள் எவ்வாறு தப்பித்தார்கள் என்பது குறித்தும் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. அடுத்ததாக அதைப் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|