|
|
|
|
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக உத்யோக பர்வத்தின் யாநஸந்தி பர்வம் 58ம் அத்தியாயத்திலும் (திருதிராஷ்டிரனிடத்தில் ஆலோசனைக் கூட்டத்தின்போது) தூதுவந்த கண்ணனிடத்தில் "ஓ கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினாலே குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக் கொடுக்கத் தக்கதில்லை" என்று இரண்டாம் முறையாக உத்யோக பர்வத்தின் பகத்யாநபர்வம் 128ம் அத்தியாயத்திலும் இது துரியோதனன் வாய்மொழியாக வெளிப்படுகிறது. "மந்திரிகளுடன் கூடிய உனக்குப் பூமியினுடைய பாதியானது ஜீவிப்பதற்குப் போதுமானது" என்று 58ம் அத்தியாயத்தில் திருதிராஷ்டிரன் கெஞ்சுகிறான். "பாதிராஜ்ஜியம் போதுமடா மகனே! பாதி அரசை பாண்டவர்களுக்குக் கொடு" என்று யுத்தம் விளையப்போகும் நேரத்திலும் திருதிராஷ்டிரன் துரியோதனனிடத்தில் கெஞ்சியும், காந்தாரி மூலமாக அவனுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லியும், துரோணரும் பீஷ்மரும் அரசு தர்மபுத்திரனுடையதே என்பதை விளக்கியும், "இந்த அரசில் எனக்கே உரிமை இல்லாதபோது, உனக்கு எங்கிருந்து உரிமை வந்தது" என்று திருதிராஷ்டிரன் கேட்டும் துரியோதனனுடைய பிடிவாதம் இளகவில்லை. இப்படி ஒரு மூர்க்கமான பிடிவாதத்துக்கு எது வித்திட்டது? இதற்கு திருதிராஷ்டிரனும் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. பாண்டவர்களை அரக்கு மாளிகையில் எரிக்க ஏற்பாடு செய்தவன் அவன்தானே. இருந்தாலும் இப்படியொரு சூழல் ஏற்பட்டதற்கு முக்கியமானதொரு பின்புலம் இருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பை பாண்டு விதுரரிடம் ஒப்படைத்துவிட்டு கானகத்துக்குச் சென்றான். விதுரர் அரசாட்சியில் அமரச் சம்மதிக்கவில்லை. அவர் திருதிராஷ்டிரனை அரியணையில் அமர்த்தி, தான் நிதிப்பொறுப்பை கவனித்தார்; படைகளுக்கு பீஷ்மர் தலைமையேற்று, ராணுவத்தை கவனித்துக் கொண்டார். இந்த விவரங்களையெல்லாம் 'காலம் மாறினால் கௌரவம் மாறுமே' என்ற தலைப்பில் முன்னர் பேசியிருக்கிறோம், அப்படியானால், வனம்சென்ற பாண்டுவுக்குப் பிள்ளைகள் பிறந்தது எப்போது, அந்தப் பிள்ளைகள் ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பியது எப்போது என்ற கேள்விகள் எழும். பாண்டு வனம்புகுந்து எத்தனை நாள் கழித்து யுதிஷ்டிரன் பிறந்தான் என்ற கேள்விக்கு டாக்டர் K.N.S. பட்நாயக் விடைகண்டிருக்கிறார். பாண்டு வனம்புகுந்து ஓராண்டு கழித்து தர்மபுத்திரனும், இரண்டாண்டுக்குப் பிறகு பீமனும், மூன்றாண்டு கழித்து அர்ஜுனனும், நான்காமாண்டில் நகுல-சகதேவர்களும் பிறந்தனர் என்பது பெரிதும் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஆய்வாளரின் கூற்று.
எப்போது ஐவரும் ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பினார்கள் என்பதற்கு மஹாபாரதத்திலேயே நேரடியாக விடையிருக்கிறது. கதை கேட்டுக்கொண்டு வரும் ஜனமேஜயர் வைஸம்பாயனரைப் பின்வருமாறு கேட்கிறார். "தேவர்களால் கிடைத்த பாண்டுபுத்ரர்கள் எந்த வயதில் ஹஸ்தினாபுரம் சேர்ந்தனர்? அவர்களின் பூர்ணமான ஆயுள் எவ்வளவு?" இது ஆதிபர்வம், ஸம்பவ பர்வத்தில் 134ம் அத்தியாயத்தில் வருகிறது. (நான் கொடுக்கும் குறிப்புகள் எல்லாமே கும்பகோணம் பதிப்பு என்பதனால், குறிக்கப்படாத இடங்களிலெல்லாம் கும்பகோணம் பதிப்பின் குறிப்பு என்பது பெறப்படும்.) இந்த அத்தியாயத்தில் பாண்டவர்கள், கிருஷ்ணர் முதலிய பலருடைய வயதுக்கணக்கு விவரமாகச் சொல்லப்படுகிறது. "அஸ்தினாபுரம் போனபோது யுதிஷ்டிரருக்குப் பிராயம் பதினாறு; பீமஸேனனுக்குப் பதினைந்து; அர்ச்சுனனுக்குப் பதிநான்கு; நகுல ஸஹதேவர்களுக்குப் பதின்மூன்று. அந்த அஸ்தினாபுரத்தில் பதின்மூன்று வருஷகாலம் த்ருதராஷ்டிர புத்ரர்களோடு வசித்தனர். அரக்கு மாளிகையிலிருந்து விடப்பட்டு ஆறுமாசமிருந்தனர். அப்போது கடோத்கசன் பிறந்தான். ஏகசக்ரபுரத்தில் ஆறுமாசமிருந்தனர்..." என்று மிக விவரமாக வயதுக்கணக்கு சொல்லப்படுகிறது. இது டாக்டர் பட்நாயக் முயன்று சேகரித்திருக்கும் விவரங்களால் இன்னமும் முழுமைபெறுகிறது.
இதற்குள் இப்போது ஏன் நுழைந்தோமென்றால், பீமனுக்கு ஒருநாள் இளையவனான துரியோதனன், பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பும் நாளளவும், தன் சகோதரகளுடன் பதினைந்து ஆண்டுகாலம், "இனி வருங்காலத்தில் தான் ஒருவனே ஏக சக்ரவர்த்தி" என்ற மனோபாவத்தில் வளர்ந்திருக்கிறான். திருதிராஷ்டிரனுக்கும் இந்த எண்ணம் இருந்திருக்கிறது. பாண்டவர் ஐவர் ஹஸ்தினாபுரம் திரும்பியதால் அந்த எண்ணத்துக்கு எப்போதும் ஊசலாட்டம் இருந்திருக்கிறது-அதாவது திருதிராஷ்டிரனுக்கு. 'இப்போது அரசு யாருடையது, தம்பி மகனுடையதா, தன் மகனுக்குப் போகுமா' என்ற எண்ணம் அவனை அரித்திருக்கிறது. இது, துரியோதனனுடைய மனத்தில் பொறாமையாக வடிவெடுத்திருக்கிறது. இந்தப் பொறாமை, பாண்டவர்களுக்குப் பாதியரசு தரும்போது, அளவால் பாதியாக, ஆனால் பயனால் வெறும் காடாக, கிடந்த காண்டவ வனத்தை அளிக்கும்போது பெரிய அளவில் உறுத்தவில்லை. என்றாலும், அந்த வெறுங்காட்டைத் திருத்தி நாடாக்கி, பெரிய அளவில் அங்கே மக்கள் குடியேறி, அவர்களுடைய அரசு அர்ச்சுனனாலும் பீமனாலும் பெரிய அளவிலும் நகுல சஹதேவர்களுடைய முயற்சியால் ஓரளவிலும் விரிவடைந்ததும், தர்மபுத்திரனுடைய புகழ், பாரதி பாஞ்சாலி சபதத்தில் (வியாச பாரத மொழிபெயர்ப்பாகச்) சொல்வதைப்போல்,
தென்றிசைச் சாவகமாம் - பெரும் தீவுதொட்டே வடதிசை யதனில் நின்றிடும் புகழ்ச்சீனம் - வரை நேர்ந்திடும் பலபல நாட்டினரும் வென்றிகொள் தருமனுக்கே - அவன் வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண்ணம் நன்றுபல் பொருள் கொணர்ந்தார் - புவி நாயகன் யுதிட்டிரன்என உணர்ந்தார். |
|
பரவியிருந்தது. இதைத்தான் தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் கண்டு, துரியோதனன் பொறாமையடைந்ததாக பாரதி தன் காவியத்தைத் தொடங்குகிறான். தென்திசையில் ஜாவா தொடங்கி, வடக்கே சீனாவரையில் உள்ள பல நாடுகளின் மன்னர்களும் அவன் வேள்விக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்டுவந்தனர். 'ஏதோ வெறும் காட்டைக் கொடுத்தால் அந்தக் காட்டை இவ்வளவு பெரிய செழிப்பான நாடாக மாற்றி, அதை வைத்துக்கொண்டே தருமனுக்கு இவ்வளவு பெரியபுகழ் சேர்ந்துவிட்டதே' என்பதே துரியோதனனுடைய பொறாமை பெருகிவளரக் காரணம். பாண்டவர்கள் சிறியவர்களாக இருந்தபோதே இது தொடங்கிவிட்டது. அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் நட்பை ஏற்படுத்தியவர் துரோணர். இந்த விவரம் ஆதிபர்வம், ஸம்பவ பர்வத்தின் 151ம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. அச்சமயத்தில் அர்ஜுனன் திக்விஜயம் செய்கிறான். 'வீரனாகிய பாண்டுவும் எவனை அடக்கவில்லையோ அந்த யவனதேசத்து அதிபதியாகிய ஸெளவீர ராஜன் அர்ச்சுனனால் ஜயிக்கப்பட்டான்' என்ற குறிப்பும், அந்தச் சமயத்தில் அர்ஜுனனுடைய வயது பதினைந்து என்ற குறிப்பும் இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகின்றன. இன்னொரு முக்கியமான குறிப்பும் இந்த அத்தியாயத்தில் கிடைக்கிறது. 'தனஞ்சயன் தனக்குவியலைக் குருதேசத்திற் கொண்டுவந்து சேர்த்தான். அவன் பதினைந்தாவது பிராயத்தில் இதையெல்லாம் செய்ததனால் த்ருதராஷ்டிர புத்ரர்களுக்குப் பயமுண்டாயிற்று.' இதுமட்டுமில்லை. 'எந்த பீமஸேனன் த்ருதராஷ்டிர புத்ரர்கள் எல்லோருக்கும் தன் பலத்தினால் அபகாரம் செய்தானோ, அந்தக் கெட்ட எண்ணமில்லாத பீமஸேனனைக் குற்றத்தையே நாடும் த்ருதராஷ்டிர புத்திரர்களைனவரும் அவனுடைய செய்கையிலுண்டான பயத்தினால் குற்றமுள்ளவனாக நினைத்தனர்.' (ஸம்பவ பர்வம்: அத். 151, முதல் தொகுதி, பக். 569).
அதாவது, அர்ஜுனன் பதினைந்து வயதிலேயே, தந்தை பாண்டுவே வெல்லாதவனாகிய ஸௌவீர ராஜனை வென்றதும், மற்ற பேரரசர்களை வென்று தனக்குவியலைக் கொண்டுவந்து திருதிராஷ்டிரனிடத்தில் சமர்ப்பித்ததும் நூற்றுவருக்கு அச்சத்தை உண்டாக்கியது; கெட்ட எண்ணம் இல்லாத, விளையாட்டாகச் சில செயல்களைச் செய்தவனான பீமனை அவர்கள் குற்றவாளியாகவே பார்த்தனர். இதனாலேயே அவனை பிரமாணகோடியில் நஞ்சூட்டப்பட்ட உணவை அளித்தும், நதியில் தள்ளிவிட்டும் கொல்ல துரியோதனன் முயன்றிருக்கிறான். இதற்குக் கர்ணனுடைய ஆலோசனையும் இருந்திருக்கிறது. அதாவது, பீமனுக்கும் துரியோதனனுக்கும் 16 வயது அளவில் இருந்த சமயத்தில், அவர்களைக் காட்டிலும் 17 வயது பெரியவனான கர்ணன் துரியோதனனுடைய உற்ற நண்பனாக இருந்திருக்கிறான். இதை, கர்ணனுடைய பாத்திரப்படைப்பைப் பேசும்போது விரிவாகப் பேசுவோம்.
இதிகாசத்தின் முதல் பர்வமாகிய ஆதிபர்வத்தின் தொடக்கத்திலேயே துரியோதனனுடைய பொறாமை விரிவாகச் சொல்லப்படுகிறது. இந்திரப் பிரஸ்தத்தில் தர்மபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தின் சிறப்பைக் கண்டே துரியோதனனுடைய ஆரம்பகாலப் பொறாமை பேரளவுக்குப் பெருகியது என்ற குறிப்பு ஆதிபர்வத்தின் முதல் அத்தியாயத்திலேயே முன்குறிப்பாகச் சொல்லப்படுகிறது. தன்னிடத்தில் வந்து பொறாமையால் புலம்பிய துரியோதனனுடைய மொழிகளைக் குறித்து திருதிராஷ்டிரன் ஸஞ்சயனிடத்தில் பின்வருமாறு சொல்கிறான்: "என் புத்திரர்களிடத்தும் பாண்டு புத்திரர்களிடத்தும் எனக்கு பேதமில்லை. என் புத்திரர்கள் கோபத்தை மேற்கொண்டவர்களாய் என்னை வெறுக்கின்றனர். நானோ கண்ணில்லாதவன்; மனத் தளர்ச்சியினாலும் புத்திரர்களிடமுள்ள அன்பினாலும் அதைப் பொறுக்கிறேன்; புத்தியில்லாத துரியோதனனுடைய மூடத்தனத்தை அனுசரித்து நானும் மூடனாயிருக்கிறேன். ராஜஸூய யாகத்திற் பெரிய சக்திமானும் பாண்டுபுத்திரனுமான யுதிஷ்டிரனுடைய ஐஸ்வர்யத்தைக் கண்டும் ஸபையின் படிகளைப் பார்க்கையில் அந்தப் பரிஹாஸத்தையடைந்தும் ஆற்றாதவனாகவும், பாண்டவர்களைத் தானாகப் போரில் வெல்ல வல்லமை அற்றவனாகவும், க்ஷத்திரியனாக இருந்தும் நல்ல ராஜ்யலக்ஷ்மியை அடைய உற்சாகமற்றவனாகவும் சகுனியோடு சேர்ந்து மோசமான சூதாட்டத்தை ஆலோசித்தான்."
கதையின் தொடக்கத்திலேயே இந்த குண்டு வந்து விழுகிறது. பதினைந்து வயதில் அர்ஜுனன் திக்விஜயம் செய்ததைப் பின்னால் அறிகிறோம். ராஜசூய யாகம் செய்தபோது தர்மபுத்திரருக்கு வயது 76 ஆண்டு, ஆறு மாதம், பதினந்து நாள் என்று டாக்டர் பட்நாயக் கணக்கிடுகிறார். அதாவது துரியோதனனுக்கு ஒரு வயது குறைவு. 75 வயது. பதினைந்து வயதில் அர்ஜுனன் சாதித்ததை, 75 வயதிலும் துரியோதனன் சாதிக்கவில்லை. பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் பன்னிரண்டாம் வருடத்தில் கர்ணன் செய்த திக்விஜயம்தான் துரியோதனனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மிக அடிப்படையான உண்மையை வரிவரியாகக் கதையை மனத்தில் பதித்துக் கொண்டாலொழிய மனத்தில் நிறுத்திக்கொள்வது கடினம். கர்ணன் இதற்கு முன்னாலும் ஒரு திக்விஜயம் செய்தான். துரியோதனன் அப்படி எந்தத் தனிப்பட்ட பெரிய அளவு வெற்றியையும் பெற்றிருக்கவில்லை. வெற்றி பெறவே இல்லை என்பதில்லை. குறிப்பிடும் அளவுக்கு எதையும் தானே முன்னின்று சாதித்திருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|