பத்மா விஸ்வநாதன்
|
|
ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தின் விஷால் ரமணி |
|
- மதுரபாரதி|செப்டம்பர் 2008| |
|
|
|
|
நேர்காணல்: (ஆங்கிலம்) DK தமிழ் வடிவம்: மதுரபாரதி
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார் விஷால் ரமணி. (பார்க்க: 'ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி - நூறு அரங்கேற்றங்களைத் தாண்டி', தென்றல், ஜூலை 2008). ஒரு தனி நபராக பரதநாட்டியம் கற்றுத் தரத் தொடங்கி இப்போது ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி என்ற ஆலமரமாக விரிவடைந்திருக்கிறார். மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து குழந்தைகளின் உள்ளத்தில் இந்த இந்தியப் பாரம்பரியக் கலையின் விளக்கை ஏற்றி வைத்துள்ள விஷால் ரமணி, ஆகஸ்ட் 2008ல் நூறு அரங்கேற்றங்கள் என்ற முக்கியமான மைல்கல்லைக் கடந்தார். தன் சொந்தக் குழந்தை இறந்த துக்கத்தையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அன்பின் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு ஆயிரமாயிரம் குழந்தைகளின் கால்சலங்கையில் தன் குழந்தையின் குரலைக் கேட்டவர் விஷால் ரமணி. ஒரு தாயின் அன்பும் ஒரு குருவின் கண்டிப்பும் கலந்தது இவரது வழிமுறை. தென்றலுக்காக இவரைப் பேட்டி கண்ட போது...
கேள்வி: நூறு அரங்கேற்றங்கள் என்ற ஒரு முக்கியமான மைல்கல்லை 31 ஆண்டு களில் எட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: இந்தச் சாதனையில் தென்றல் மற்றும் எல்லாப் புரவலர்களின் உதவியையும் நான் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். பரதநாட்டியக் களத்தில் தொடர்ந்து பணிசெய்து அமெரிக்காவில் வளரும் குழந்தைகளின் திறனை வெளிக்கொணர்ந்திருக்கிறேன். சந்தேகமில்லை; சாதித்தோம் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் இப்போது தான் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். வயதாகிறதுதான், ஆனாலும் மனத்தில் உற்சாகம் குறையவில்லை.
ஓர் சிறிய இசைக்குழுவை அமைப்பதுகூட மிகக் கடினமாக இருந்த காலம் உண்டு. அப்படிப்பட்ட அமெரிக்காவில் இந்தச் சாதனை பெரியதுதான். தற்போது மிகுந்த திறமைசாலிகள் இங்கே உள்ளனர். எழுபது எண்பதுகளில் மொழி, கலாசாரத் தடைகள் காணப்பட்டன. தற்போது அந்தத் தடைகளும் விலகியுள்ளன. இணையமும் இதில் பெரிதும் உதவியுள்ளது. முப்பத்தொரு ஆண்டுகள் மிக நீண்ட காலம்தான். ஆனால் பரதநாட்டியம் என்ற அற்புதக் கலை அதை எளிதாகவும் இனிதாகவும் கடக்கச் செய்துவிட்டது. இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய பக்கம்; உணர்வுகளால் நிரப்ப வேண்டிய ஒரு வெற்றுத்தாள்.
| இந்த உலகத்தில் நாம் படும் துயரங்களுக்கு ஏதோவொரு விசேடக் காரணம் இருக்க வேண்டும். இந்தப் போர்க்களத்தில் நாம் போர்வீரர்கள் மட்டுமே. எப்படி ஒருவரைத் துயரம் துளைக்கிறது என்பதே வினோதமானது. மனதைத் திடமாக வைத்துக் கொண்டு, தீரத்துடன் துயரத்தை எதிர்கொண்டால் அது நமக்குப் புதிய பலத்தைத் தருகிறது. | |
கே: ஓர் இளம்பெண்ணாகக் கடல்கடந்து இங்கே வந்தீர்கள். இந்தியக் கலாசாரத்தைக் கொண்டு வந்ததில் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவாகியுள்ளீர்கள். வந்த வழியை நினைவுகூர முடியுமா?
ப: அதை வைகறைக் காலம் என்று நான் சொல்வது வழக்கம். நமது பயணம் எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதை நம் எல்லோருக்கும் மேலே இருப்பவன் திட்டமிடுகிறான். திருமணமாகி வந்த புதிதில் நாங்கள் மௌண்டன் வியூவில் இருந்தோம். அருகிலிருந்த ஸ்டேன்போர்டு பல்கலையில் சில இந்திய மாணவர்கள் தென்பட்டார்கள். அப்போதெல்லாம் ஒரே ஒரு இந்தியரைப் பார்த்தாலே போதும், எனக்கு ஒரே சந்தோஷமாகிவிடும். ஸ்டேன்போர்டு இந்தியன் அசோஷியனைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் பரதநாட்டியம் ஆட விரும்புகிறேன் என்ற தகவலை ஒரு நபர் வழியே அனுப்பினேன்.
நான் இன்றைக்கு இருக்கும் நிலையை அன்று கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லை. நாட்டியம் ஆடவேண்டும் என்பது ஒன்றே என் ஆசையாக இருந்தது. அதேசமயம் சான்டா கிளாரா பல்கலையில் MBA படிக்கவும் விரும்பினேன். ஆனால் வேறெவரிடமும் வேலை செய்ய விரும்பவில்லை. ஏதாவது செய்யவும் வேண்டும், அதே நேரத்தில் என் குழந்தைகளோடு வீட்டிலிருக்கும் தாயாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். நான் மிக அன்பாகப் பழகுவேன். பிறருக்கு உதவுவது எனக்கு இயல்பாக இருந்தது. புதிதாக முயற்சிப்பது, கற்பது, சாதிப்பது என்று இவை என்னுள்ளே மறைந்து கிடந்தன. நான் முடங்கிக் கிடக்கிறேன், கண்ணுக்குத் தெரியாத மூடியால் அடைக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தபோது எனக்குள்ளிருந்து இவை பொங்கிக் கிளம்பின. என்னால் பரதநாட்டியம் இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை.
கே: 1977ல் சன்னிவேல் சமூகக் கூடத்தில் கொடுத்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் கலைப் பாதையில் புகழைக் குவித்தவண்ணமே இருந்தீர்கள். ஸ்ரீக்ருபா எப்படி உருவானது என்பதைச் சொல்லுங்கள்...
ப: எனது சன்னிவேல் நடன வகுப்பு நிரம்பி வழிந்தது எனக்கு ஆச்சரியத்தைத்தான் தந்தது. நான்கு வகுப்புகளில் 60 மாணவர்கள் இருந்தனர். பல இனங்களைச் சேர்ந்தவர்கள். எப்போது சனி, ஞாயிறு வரும், எப்போது இந்த இளம்பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுப்பது என்று நான் ஆவலோடு காத்திருப்பேன். அவர்களில் ஏற்படும் மாற்றம் ஒரு மாயமந்திரம் போல இருக்கும்! ஒரு வகுப்பு முடிந்ததும் ஓடிப்போய் விடாமல், கையில் சாப்பாட்டுடன் சிலர் வருவார்கள். அங்கேயே சாப்பிட்டுவிட்டு இரண்டு மூன்று வகுப்புகளைத் தொடர்வார்கள்.
1978-ல் என் மகளை இழந்தேன். மிகுந்த துயரத்தில், தன்னிரக்கத்தில் உழன்றேன். ஆனால் அது நீடிக்கவில்லை. வெங்கடேசப் பெருமாளிடம் 'எல்லாக் குழந்தைகளும் என் குழந்தைகளே என்ற எண்ணத்தில் நான் புதிய உத்வேகத்துடன் வாழ்ந்து காட்டுகிறேன்' என்று சவால் விட்டேன்.
இந்த உலகத்தில் நாம் படும் துயரங்களுக்கு ஏதோவொரு விசேடக் காரணம் இருக்க வேண்டும். இந்தப் போர்க்களத்தில் நாம் போர்வீரர்கள் மட்டுமே. எப்படி ஒருவரைத் துயரம் துளைக்கிறது என்பதே வினோதமானது. மனதைத் திடமாக வைத்துக் கொண்டு, தீரத்துடன் துயரத்தை எதிர்கொண்டால் அது நமக்குப் புதிய பலத்தைத் தருகிறது.
என் தட்டுகழி எனக்கு வேண்டும். அதுதான் எனக்குள் ஒரு புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு குழந்தையையும் என் குழந்தையாகவே பாவித்து, அதன் பலம் பலவீனங்களை கண்டறிந்து, என்னுடைய சக்தி அனைத்தையும் அதற்குத் தரவேண்டும். 'என் துயரத்தை வென்று சமுதாயத்துக்குப் பங்களிப்பவளாக என்னை ஆக்கு' என்று சக்தியைத் தொடர்ந்து பிரார்த்தித்தேன். அப்படித்தான் புதிய கலைப்பள்ளி பிறந்தது. முதலில் 'ராக தரங்' என்று. பின்னர் 'ஸ்ரீக்ருபா' ஆனது.
கே: முதல் அரங்கேற்றத்தை எப்போது, யாருக்காக நடத்தினீர்கள்?
ப: 1983இல் சசிகலா பட் என்ற இளம் மாணவிக்கு முதல் அரங்கேற்றம் நடத்தினேன். Y.T. தாத்தாசாரியும் அவரது மனைவி மாதுரியும் எனது நெருங்கிய நண்பர்கள். அவர் விஞ்ஞானத்தில் பெரிய அறிவாளி. சமஸ்கிருதம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர். மாதுரியும் வீணை வித்வான். முதல் அரங்கேற்றத்துக்கு அவர்கள் என்னோடு மிகவும் ஒத்துழைத்தனர். நளினி ராதா கிருஷ்ணன் (எனது நடன மாணவி), கல்பகம் கௌஷிக் ஆகியோர் பாடினார்கள். மாதுரி வீணை வாசித்தார். ஒருவர் வயலினும் ஒருவர் மிருதங்கமும் வாசித்தார். எல்லோரும் ஒத்திசைந்து வாசிப்பதும் வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடுவதும் முதலில் கஷ்டமாக இருந்தது. பழக்கத்தில் சரியாகிவிட்டது.
சசிகலாவின் லயமும் அங்கசுத்தியும் மிகச் சிறப்பாக இருந்தன. ஒருவழியாக எல்லாமும் நன்றாகச் சேர்ந்து அமைந்தன. என்ன இருந்தாலும் அது என்னுடைய முதல் அனுபவம்தானே. அப்போது 'கன்னட கூட்டா' அமைப்பினர் மொத்தமாக அரங்கேற்றதுக்கு வந்திருந்து என்னையும் சசியையும் பாராட்டி, நினைவுப்பரிசு தந்த போது நான் வானத்தில் பறந்தேன்.
அது நடந்து கபர்லி அரங்கத்தில். அந்த அரங்கத்தைப் பயன்படுத்திய முதல் இந்தியக் குழு நாங்கள்தாம். நாங்கள் அங்கே என்ன அரங்கேற்றுகிறோம் என்பதைப் பற்றி ஒரு தாளில் எழுதித் தரச் சொன்னார்கள். அவர்களுடைய மேடை மற்றும் அரங்கக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம் என்று உறுதியும் தரச் சொன்னார்கள். |
|
கே: சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஸ்ரீக்ருபா பலவற்றை முதலில் செய்துள்ளது. அவற்றைப் பற்றிச் சொல்கிறீர்களா?
ப: அந்தப் பகுதியின் முதல் நடனப் பள்ளி நாங்கள்தாம். எல்லா அம்சங்களிலுமே புதுமைகள் செய்வதில் நாங்கள் முன்னணியில் இருந்திருக்கிறோம். பாடுவதற்கே ஆள் கிடைக்காது, பலரைத் தொலைபேசியில் அழைத்துப் பேச வேண்டியிருக்கும். எப்படியோ நாங்கள் நினைத்தது நடந்தே தீரும்.
மிகப்பெரிய விற்பன்னர்களான பத்மஸ்ரீ சஞ்சுக்தா பாணிக்ரஹி, பத்மவிபூஷண் கேலுசரண் மொஹாபாத்ரா, அலர்மேல் வள்ளி, வைஜயந்திமாலா பாலி போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களை எங்கள் நிறுவனம் இந்தப் பகுதிக்குக் கொண்டுவந்தது. முழுநீள நடன நாடகமான 'சுபாகமன்' என்பதை சான் மேடியோ அரங்கத்தில் மேடையேற்றினோம். சுவாமி சச்சிதானந்தா அவர்கள் வர்ஜீனியாவில் எழுப்பிய தாமரைக் கோவிலுக்கு (Lotus Temple) இதன்மூலம் நிதி திரட்டினோம். பல நாட்டியச் சித்திரங்களைப் படைத்துள்ளோம். அவற்றில் பெருமையோடு குறிப்பிடத்தக்கவை: 'கமனீய கிருஷ்ணா', 'புகழின் கவிதைக் காட்சிகள்', 'அன்னை கங்கா-அமர நதி', 'ஸ்ரீ மாத்ரே நமஹ', 'வந்தே த்வம் ரிது தேவதே' ஆகியவை.
கே: உங்களுக்கு இவற்றைச் செய்ய உள்தூண்டுதலாக அமைந்தவை என்ன?
ப: நான் நடனம் ஆடாத ஒரு காலமே என் வாழ்க்கையில் இருந்ததாக எனக்கு நினைவில்லை, குழந்தைப் பருவம் உட்பட. நான் அமெரிக்காவில் நடன முயற்சிகளில் ஈடுபட்ட போது 'நீ என்ன செய்தாலும் அதில் பெருஞ்சக்தியாக விளங்குவாய். போ, அங்கே ஒரு நடனப் பள்ளி தொடங்கு' என்று எனது மாமனார் ஸ்வயம்பு அவர்கள் கூறினார். அவர் பாரத கனரக மின் கருவிகளில் CMD ஆக இருந்தார். 'ஆமாம், நிறைய நடன நிகழ்ச்சிகளை வழங்குவேன், இன்னும் மேலே கற்பேன்' என்று நான் ஒரு புன்னகையோடு நினைத்துக் கொள்வேன். TELCOவில் பொதுமேலாளராக இருந்த எனது தந்தையாரும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். எனக்கு அழகான இரண்டு நடன உடைகளைத் தைத்துக் கொடுத்தார். அமெரிக்காவுக்கு வந்தவுடனே நான் ஆடத்தொடங்க வேண்டுமே! என் தாயார் நல்ல பாடகி என்பதோடு வயலினும் நன்றாக வாசிப்பார்.
கே: நீங்கள் அடிப்படையில் ஒரு நாட்டியக்காரர். நடன ஆசிரியரானது எப்படி?
ப: நான் நடன வகுப்புகளைத் தொடங்கிய காலத்தில் என் மகள் சுஷ்மிதா சிறுகுழந்தை. ஆனால், அவள் கற்கவேண்டுமென்று விரும்பினேன். பல பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று என்னை அணுகிக் கேட்டார்கள். இது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.
எனக்கு இப்போது அழகான இரண்டு பெண்குழந்தைகள், அவரவர் வழியில் மிகவும் சிறந்தவர்கள். என் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், இங்கு வளரும் மற்றக் குழந்தைகளுக்கும் நடனம் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இதை வருவாய்க்கான ஒரு வழியாக நினைக்கவில்லை. ஆனால் 'time is money' என்பதால் பள்ளி தொடங்க வேண்டியதாகி விட்டது. அதற்கான எல்லாப் பரிவாரங்களும் வந்துவிட்டன.
இப்போதும் நான் மாசற்ற இளம் முகங்களைப் பார்க்கிறேன், அவற்றுக்கு நடனக் கலையைக் கற்பிக்க அதே ஆவலோடுதான் இருக்கிறேன். இப்போது எனது பேர்த்தி அனிஷா என்னைக் குறுகுறுப்பாகப் பார்க்கிறாள். அவளுக்கு மூன்று மாதம்தான். எப்போது அவள் என்னிடம் நடனம் கற்கப் போகிறாள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்!
| எங்கள் ஒவ்வொரு அரங்கேற்றமும் தனித்துவம் கொண்டதுதான். தூய பாரம்பரிய மார்க்கத்தில் எங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளையும் நாட்டிய நாடகங்களையும் அமைத்து வழங்குகிறோம். எழுதிவைத்த வர்ணங்களும் பதங்களும் கடல்போல காணக்கிடைக்கின்றன. புதிதாக எழுதுபவர்களோடும் தொடர்பில் உள்ளோம். | |
கே: ஐந்து வயதுக் குழந்தைக்குக் கூட நீங்கள் கற்றுக்கொடுத்துவிடுவீர்கள் என்கிற புகழ் உங்களுக்கு உண்டு. அந்தச் சிறு வயதில் அவர்களது கவனத்தை எப்படி உங்களால் கட்டிப்போட முடிகிறது?
ப: நான் குழந்தைகளுடன் குழந்தையாகி விடுவேன். ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கென்று திறமையும் தேவையும் உண்டு. அவர்களிடத்தில் அபிநயத்திலும் நடன அசைவிலும் ஓர் ஆர்வத்தைத் தூண்டி விட்டால் போதும். குழந்தைகளுக்கு எண்களைப் பிடிக்கும். நடனத்தை ஒரு விளையாட்டாக அவர்களோடு சேர்ந்து விளையாடினால், அது சுவையான தாகிவிடுகிறது. அவர்கள் நன்றாகச் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு பாராட்டுப் பார்வை, தட்டிக் கொடுத்தல், ஒரு Pooh Bear sticker - இவை மந்திரம்போல வேலை செய்யும். கண்கள் விரிய, கன்னம் குழிய அவர்கள் செய்யும் புன்னகைக்கு விலையே இல்லை. குழந்தைகள் கற்கும் வேகமே அலாதியானது. குழந்தைகளுக்கு நானே தான் கற்றுக் கொடுப்பேன் என்றாலும் சில உதவியாளர்களும் இருக்கின்றனர்.
கே: ஒவ்வொரு குழந்தையிடமும் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் அந்தப் பொறியைக் காண்பதற்கான உங்கள் தவம், அதை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?
ப: நான் வெறும் நாட்டியம் மட்டும் சொல்லித் தருவதில்லை. பெற்றோர், ஆசிரியர் பெரியோரை மதிப்பது போன்ற பண்புகளையும் சொல்லித் தருகிறேன். வகுப்பில் அவர்களது நடத்தைக்குக் கடுமையான வரைமுறைகள் உண்டு. உள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டிருக்க முடியாது. நேரத்துக்கு வர வேண்டும். ஒருவர் மற்றவருக்குக் கற்பதில் உதவ வேண்டும். வகுப்பு நடக்கும் போது குறுக்கிட முடியாது, கேள்வி நேரம்வரை காத்திருக்க வேண்டும்.
இவற்றை நாம் தெளிவாக்கிவிட்டால் அவர்கள் வியக்கத்தக்க ஒழுங்கைக் காண்பிக்கிறார்கள். நமக்குத்தான் பொறுமை வேண்டும். இதை ஒரு நிறைவைத்தரும் அனுபவமாக நினைத்தால் யாருக்கு எவ்வளவு நேரம் யார் கற்பிக்கிறார்கள் என்ற கேள்விகள் மறைந்துவிடும். ஓடியாடப் போகிறோம் என்று நினைத்துதான் குழந்தைகள் வருகிறார்கள். ஆனால் விரைவிலேயே அந்தச் சூழ்நிலையின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொண்டு மாறிவிடுகிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு பயிலத் தொடங்குகிறார்கள். இந்தச் சாதனை அவர்களுக்குப் பெருமிதத்தைத் தருகிறது.
கே: பக்க வாத்தியக் குழு பரத நாட்டியத்துக்கு மிகவும் அவசியமானது. நிறையப் பேருடன் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். விரிகுடாப் பகுதி இசையுலகில் பலரை முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதில் உங்கள் அனுபவம் என்ன?
ப: உள்ளூர், அமெரிக்காவின் பிற மாநிலங்கள், இந்தியா என்று பல இடங்களிலிருந்தும் நான் இசைக்கலைஞர்களை இங்கே தருவித்திருக்கிறேன். நல்ல இசைக்கான என் தேடுதல் இதைச் செய்ய வைத்திருக்கிறது. 'Echoes of India' என்ற தொலைக்காட்சி நிலையமும் உலகத் தரம் கொண்ட கலைஞர்களை இங்கே கொண்டு வருவதற்கும், அவர்களை எனது பள்ளி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தவும் உதவியுள்ளது. திறமையான பலர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்றே ஒரு பக்கவாத்தியக் குழுவை வைத்துக் கொள்வது திறம்படவும் வேகமாகவும் செயல்பட உதவுகிறது. நான் பயிற்றுவிக்கும் மாணவிகளின் நிகழ்ச்சிகளுக்கு இவர்களால் சிறப்பான துல்லியமான பின்னணி இசையைத் தரமுடிகிறது.
குழுவினரும் நானும் ஒரு குழந்தையின் திறனைப் பொறுமையாகச் செதுக்கி வடிவமைக்கிறோம். அந்தக் குழந்தை ஒரு வைரக்கல்லைப் போல! நாட்டிய வேதம் தொடங்கி எமது மகத்தான பாரம்பரியத்தை இவர்களுக்குக் கையளிக்க வந்த தேவதூதர் போல நாங்கள் உணர்கிறோம்.
கே: அரங்கேற்றம் ஆன பிறகும் பயிற்சியைத் தொடரச் செய்வதில் ஸ்ரீக்ருபா முதலாவதாக இருக்கிறது. உங்களால் எப்படி முடிகிறது?
ப: கற்க நிறைய இருக்கிறது. அரங்கேற்றத்தோடு முடிவதில்லை. மாணவர்களே இதை ஒப்புக்கொள்வார்கள். அவர்களுக்குள்ளே மேலும் கற்கவும், நிகழ்ச்சிகள் தரவுமான தாகம் இருக்கிறது. மேடையேறி ஆடும் ஆர்வத்துக்கு அணைபோட முடியாது. தனியாக ஆடவும், நாட்டிய நாடகங்களில் பங்கேற்கவும் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புத் தருகிறோம். அரங்கேற்றம் கண்ட மாணவர்களுக்கென்றே வாரத்தில் மூன்று முழு வகுப்புகள் நடத்தும் கலைப்பள்ளி நாங்களாகத்தான் இருக்க வேண்டும். பள்ளிக்கூடப் பாடங்களோடு இந்த பாரத்தையும் சுமக்கும் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்!
கே: உங்கள் நிகழ்ச்சிகள் எப்போதுமே 'ஹவுஸ்ஃபுல்'தான். சாதாரணமாக 400 பேர், சமீபகாலத்தில் 1500 பேருக்குமேல், வருகிறார்கள். பாரம்பரியக் கலைகள் மீதான ஈடுபாடு புத்துயிர் பெற்று வருகின்றதா?
ப: எங்கள் ஒவ்வொரு அரங்கேற்றமும் தனித்துவம் கொண்டதுதான். தூய பாரம்பரிய மார்க்கத்தில் எங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளையும் நாட்டிய நாடகங்களையும் அமைத்து வழங்குகிறோம். எழுதிவைத்த வர்ணங்களும் பதங்களும் கடல்போல காணக்கிடைக்கின்றன. புதிதாக எழுதுபவர்களோடும் தொடர்பில் உள்ளோம். புதுமையே ஒரு போதைதான். ரசிகர்களும் புதிய உருப்படிகளைப் பார்க்க ஆவல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், வங்காளம், போஜ்பூரி என்று பல மொழிகளைச் சேர்ந்த மாணவிகள் என்னிடம் இருக்கிறார்கள். எல்லா மொழிகளுக்கும் நான் நடனம் அமைத்திருக்கிறேன். கலைக்கு மொழி ஒரு தடையல்லவே. வருவோரை ஈர்க்க நான் இவற்றைப் பயன்படுத்துகிறேன். ஸ்ரீக்ருபா மாணவர்களின் பெற்றோரே குறிப்பாகக் கோடைக்காலத்தில், நிறைய வருகிறார்கள்.
கே: அழகப்பா கலைப் பயிற்சித் திட்டத்தில் பரதநாட்டியத்துக்கான பட்டம், பட்டயக் கல்வியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அதில் சேர்ந்து தகுதி பெறலாமா?
ப: வகுப்புக்கு வந்து கற்க முடியாதவர்களுக்கு இது புதிய திட்டம். வேலை செய்பவர்கள், கல்லூரிக்குச் செல்பவர்கள் போன்றவர்களுக்கு. அவரவர் வசதிப்படி இதில் கற்க முடியும், ஆனால் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. காரைக்குடி அழகப்பா கல்லூரிதான் இறுதி மதிப்பீடு செய்கிறது. முழுவதும் தெரிந்து கொள்ள www.shrikrupa.org வலைதளத்தில் பார்க்கவும்.
கே: இந்திய சமுதாயம் ஸ்ரீக்ருபாவுக்கு எப்படி உதவியது?
ப: இந்திய சமுதாயம்தான் என் முயற்சிகளுக்குத் தூணாக நின்றது. எல்லா நிகழ்ச்சிகளிலும் ஸ்ரீக்ருபா மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். கௌசல்யா ஹார்ட் அவர்கள் சிவ-முருகன் கோவிலில் எமது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி இருக்கிறார்கள். விரிகுடாப் பகுதித் தெலுங்கு சங்கம், கன்னட கூட்டா, தமிழ் மன்றம், கிரேட் அமெரிக்காவின் தீபாவளி/ஹோலி நிகழ்ச்சிகள், FIA என்று எல்லோருமே எங்களை ஆதரிக்கிறார்கள். பஹாய் கோவில், தைவானிய வணிகப் பேரவை, இந்திய மருத்துவர் சங்கம், ஃபிஜி சங்கம், சீன நடனச் சங்கம் ஆகியோரும் தான். சமீபத்தில் ஸ்பெயின், ஹைதராபத், ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி வழங்கினோம். சான் ஹோசே நகரக் கலாசாரத்துறை, சான்டா கிளாரா கலைக் கழகம் ஆகியவையும் ஸ்ரீக்ருபாவுக்கு நிதி ஒதுக்கி உதவியுள்ளன. இவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.
கே: அடுத்து என்ன?
ப: அடுத்து...? ஒவ்வொரு நாளும் 'இன்றைய நாளை நேற்றைவிட ஒளி யுள்ளதாக ஆக்கு' என்று கடவுளைப் பிரார்தித்தபடிதான் நான் எழுந்திருக்கிறேன்.
வெளியே நான் கடுமையானவளாகத் தெரியலாம். ஆனால் நான் ஒவ்வொரு குழந்தையைக் கண்டதும் அன்பினால் உருகிப் போய்விடுவேன். அவர்களுக்குத் தொடர்ந்து கற்பித்துவர விரும்புகிறேன்.
இந்த உலகில் வாழ்க்கையைச் செம்மையாக்க எத்தனையோ எண்ணங்கள் உள்ளன. நான் மட்டுமே செய்துவிட முடியுமா? ஏன் முடியாது? என்னைச் சுற்றியுள்ளவர்களையும் என்னைப் போலவே சிந்திக்கச் செய்தால் முடியுமே. இந்தக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கான அடிப்படைக் கருத்துக்களை கற்பிக்கலாம். தேவைப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். நம்மோடு இந்த உலகத்தைப் பகிர்ந்து கொள்பவர்களை நினைத்துப் பார்த்தால் தன்னலமின்றி இருக்கலாம். நம்மைவிடக் குறைந்த செல்வாக்குக் கொண்டவர்களிடம் பொறுமையோடு, அன்போடு இருக்கலாம். இவற்றுக்காக நான் ஆரோக்கியமாக, திடமாக நீண்டகாலம் வாழ விரும்புகிறேன்.
புத்தகங்கள் எழுத வேண்டும். உலகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். நிறையப் புத்தகம் படிக்க விரும்புகிறேன். ஓ! எத்தனை செய்ய வேண்டியிருக்கிறது. நானும் என் நண்பருமாக எண்ணற்ற புத்தகக் கடைகளுக்குப் போய் கணக்கில்லாத புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறோம். தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என்று. நமது வரலாறு, கலாசாரம், உணவு, பழக்கவழக்கம் என்று இவற்றையெல்லாம் பற்றி ஒரு நூலகம் வைக்கவேண்டும் என்ற ஆசையில் செய்தோம். இந்தப் பணியைச் செய்து முடிக்க கடவுள் எனக்குப் போதிய வலுவைக் கொடுக்கவேண்டும்.
நீங்கள் ஓய்வு பெறுவதாகவே இல்லையா என்று விளையாட்டாக நாம் கேட்கிறோம். அதற்கு விடையாக ஒரு புன்னகைதான் கிடைக்கிறது. நாம் விஷால் ரமணி அவர்களுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படுகிறோம்.
சூளையில் வேக வேண்டும்...
கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எல்லாம் தெரியும் என்ற திமிர் வந்துவிடக் கூடாது. ஒரு கலைஞர் மற்றொரு கலைஞரை இகழ்ந்து பேசும்போது என் மனம் புண்படுகிறது. பரத முனிவர் நம் எல்லோருக்கும் பொதுவானவர். யாருக்கும் பரதநாட்டியத்தின்மீது ஏகபோக உரிமை கிடையாது. என்னுடைய பாணிதான் ஒரே பாணி என்று யாரும் சொல்லிக்கொள்ள முடியாது.
வாழ்நாள் முழுவதும் பரதநாட்டியத்தை மட்டுமே ஆராய்ச்சி செய்தாலும் அதன் சிகரத்தைத் தொட்டுவிடமுடியாது. நாம் அறிந்ததோடு ஒப்பிட்டால் நமக்குத் தெரியாதது எவ்வளவு என்று உணரும் போதுதான் பயணம் தொடங்குகிறது. 'நான் மகாபண்டிதன், எனக்கு எல்லாம் தெரியும்' என்று நினைப்பதுதான் மரணம்.
சும்மா உட்கார்ந்து கொண்டு மற்றவர்களுக்குக் கற்பித்துவிட முடியாது. வகுப்பறைக்கு வெளியேயும் ஒரு மாணவர் கற்கிறார். தனது ஆன்மாவுக்குள் மூழ்கி உயிர்த்துடிப்பை அறிவது ஒவ்வொரு நடனமணிக்கும் அவசியம். அதற்கு அர்ப்பண உணர்வும் தியாகமும் தேவைப்படுகின்றன. ஒருவருக்குள் இருக்கும் கலைஞரும் செம்மையான வடிவம் கிடைக்கும்வரை சூளையில் வேகவேண்டியதிருக்கிறது. துணிச்சலோடு இந்தப் பயணத்தின் கடுமையை எதிர் கொண்டவர்கள் கலையுலகில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
-குரு விஷால் ரமணி
விஷால் ரமணிக்கு உதவி செய்வதென்றால் அல்வா சாப்பிடுவது போல. கேட்பதற்குள் ஒப்புக்கொண்டுவிடுவார்.
அது தென்றலின் முதல் இதழ் (டிசம்பர் 2000). எல்லாவற்றுக்குமே ஆள் தேட வேண்டிய நிலைமை.
அப்போது பரத் பாலா ப்ரொடக்ஷன்ஸின் பரத் பாலா விரிகுடாப்பகுதிக்கு வந்திருந்தார். அவரைத் தென்றலுக்காக நேர்காணல் செய்ய நினைத்தோம். உடனே தோன்றியது 'விஷால் ரமணியைக் கேட்டால் என்ன?'. கேட்டோம். எதிர்பார்த்தபடியே அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது அந்தத் தென்றல் முதல் இதழுக்காக விஷால் ரமணி, பரத் பாலாவுடன் உரையாடும் காட்சிதான்!
நேர்காணல்: (ஆங்கிலம்) DK தமிழ் வடிவம்: மதுரபாரதி |
மேலும் படங்களுக்கு |
|
More
பத்மா விஸ்வநாதன்
|
|
|
|
|
|
|
|