|
சங்கர நேத்ராலயா டாக்டர் எஸ். பத்ரிநாத் |
|
- கேடிஸ்ரீ|ஜூன் 2005| |
|
|
|
ஒளியிழந்த விழிகளுக்கு வெளிச்சம் கொடுப்பது சங்கர நேத்ராலயா. இந்தியாவில் தலைசிறந்த கண் மருத்துவமனையாக விளங்கும் சங்கர நேத்ராலயா தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும். சுமார் 26 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லுகின்ற டாக்டர் பத்ரிநாத்தின் அயராத உழைப்பும், மருத்துவ சேவையும் போற்றத் தக்கன.
அனைவருக்கும் ஒரே தரமிக்க சேவை; பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கு இலவசமான அதே நேரத்தில் தரமான சிகிச்சை என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு 25 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் 'சங்கர நேத்ராலயா' கண்மருத்துவமனை இன்று கண் அறுவை சிகிச்சை மற்றும் கண் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவின் பிறபகுதிகளிலிருந்து மட்டு மல்லாமல் உலகநாடுகள் பலவற்றிலிருந்தும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சங்கரநேத்ராலயாவின் நிறுவனரும், கண் சிகிச்சை வல்லுநருமான டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களைச் சந்தித்தபோது...
சங்கரநேத்ராலயாவின் தொடக்கம்
காஞ்சிப் பெரியவர்களின் ஆசியினால் சங்கர நேத்ராலயா உருவானது. கிறிஸ்துவ மதத்தில் இருக்கும் சேவை நிறுவனங்கள் போல் இந்து மதத்திலும் மக்களுக்குச் சேவை செய்யப் பெரியவர் ஆசைப்பட்டார். சங்கரர் பெயரிலேயே உருவானதுதான் சங்கர நேத்ராலயா.
1978-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. அன்று விநாயகர் சதுர்த்தி. பிரபல விஜயா மருத்துவமனையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி யில் கர்நாடக இசைமேதை செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சங்கர நேத்ராலயா என்ற பெயரில் உள்ள 'சங்கர' என்ற சொல் எப்போதும் எனக்கும் எனது சக ஊழியர்களுக்கும் ஜெகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் 'இறையுணர்வுடன் கூடிய சேவைத்திட்டம்' என்னும் ஆணையை நினைவுபடுத்தும். 'நேத்ராலயா' என்னும் சொல் நாங்கள் பணியாற்றும் இடம் ஓர் ஆலயம் என்பதையும் அங்கே பணியாற்றுவது அர்ப்பணிப்பு மனப்பாங்குடன், உன்னதமான அன்புடன் ஆற்றும் ஆராதனை என்பதை நினைவுபடுத்தும்.
நோக்கங்கள்
சங்கர நேத்ரலயாவைத் தொடங்க மூன்று முக்கிய நோக்கங்கள் உண்டு. ஒன்று, உலகத் தரத்திலான கண் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களுக்கும் முழுமையான, தரமான அதே நேரத்தில் இலவசமான சிகிக்சையை அளிப்பது. மற்றும், நோயாளிகளின் வசதிக்கேற்பக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பது. மாத வருமானம் 2,240 ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கு நாங்கள் இலவச சிகிக்சை அளிக்கிறோம். சென்ற ஆண்டு எங்கள் மருத்துவமனையில் சுமார் 9000 அறுவை சிகிச்சைகள் செய்தோம். அதில் சுமார் 35 சதவிகிதம், அதாவது 3000 அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்திருக்கிறோம். நேத்ராலயா ஆரம்பித்ததி லிருந்து சுமார் 280,000 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறோம். கேடராக்ட் என்று மட்டும் இல்லாமல் கண் தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் எங்கள் மருத்துவ மனையில் இலவச சிகிச்சை அளிக்கிறோம்.
இரண்டாவது நோக்கம் கண் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியை அளிப்பது. இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் ஆயிரம் பேருக்கு நாங்கள் பயிற்சி அளித்திருக்கிறோம். மூன்றாவது, கண் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வது.
சிறப்பு அம்சங்கள்...
உலகளவில் இன்று கண் சிகிச்சை, கண் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் தலைமையகமாகச் சங்கர நேத்ரலயா திகழ்கிறது. இங்கே 65 கண்மருத்துவ விற்பன்னர்கள், உதவியாக 65 கண்ணியல் நிபுணர்கள் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இவர்களைத் தவிர நூறுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர். தவிர, பல்வேறு சிறப்புத் துறைகளில் பட்டமேற்படிப்புப் படித்த சிறப்பு மருத்துவர்கள் 40 பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலேயே இதுவரை மிக அதிகமான விழித்திரை நோய்களுக்கான அறுவை சிகிச்சை செய்துள்ள பெருமை கொண்டது எங்கள் மருத்துவமனை.
குழந்தைகளுக்கான கண் மருத்துவம், கார்னியா, கிளாகோமா, விட்ரியோ ரெட்டினல், கண் நரம்பியல், ஆக்குலோ பிளாஸ்டி, யூவிஐட்டிஸ் என்று எல்லாத் துறைகளும் இங்கு உள்ளன.
சென்னையைத் தவிரப் பிற கிளைகள்
நான் முன்னர் கூறியது போல் நாங்கள் இந்தியா முழுவதும் சுமார் ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்தோம். அதன் தொடர்ச்சியாகப் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் எழுந்தது. அந்தச் சமயத்தில் மகாராஷ்டிராவிலிருந்து பி.ஆர். பார்வாலே என்பவர் என்னைத் தேடி வந்தார். அவர் 'மில்கா ஐ பிரிக்' நிறுவனத்தின் சேர்மன். சென்னையில் நேத்ராலயாவைப் பார்த்த அவர், இதே மாதிரி மருத்துவமனை ஒன்றை மகாராஷ்டிரத்தில் நிறுவ முடியுமா என்று என்னைக் கேட்டார்.
கடவுள் அருளால், பார்வாலே அவர்களின் நிதி உதவியுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜால்னாவில் 'ஸ்ரீகணபதி நேத்ராலயா' என்கிற பெயரில் மருத்துவமனை ஒன்றை நிறுவினோம். இன்று அந்த மருத்துவமனை யில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தவிர காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அறிவுரைப்படி அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான கெளஹாத்தியில் 'சங்கர தேவ நேத்ராலயா' என்கிற மருத்துவமனையை உருவாக்கினோம். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் ஆரம்பித்து 12 வருடங்களுக்கு மேல் ஆகின்றன.
மேற்கு வங்காளத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காகச் சென்னைக்கு வருவதால், நாம் ஏன் அவர்கள் செளகரியத்திற்காக அங்கேயே ஒரு மருத்துவமனையை ஆரம்பிக் கக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது. இதன் விளைவாகக் கொல்கத்தாவில் அடுத்த கிளை 'ரோட்டரி நாராயண சங்கர நேத்ராலயா' என்ற பெயரில் உருவாயிற்று.
இங்கு நான் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். கொல்கத்தாவில் எங்கள் மருத்துவமனை தொடங்குவதற்கு அம்மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா பெரிதும் உதவியாக இருந்தார். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் டாக்டர் டேவிட் ஷெட்டி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பெங்களூரில் 'ஹிருதயாலயா' என்கிற பெயரில் நிறைய அறுவை சிக்சை செய்து வருகிறார். அவராடு சேர்ந்து நாங்கள் நடத்துவதுதான் கொல்கத்தாவில் உள்ள 'ரோட்டரி நாராயண சங்கர நேத்ராலயா'.
பெங்களூரிலிருந்து நிறையப் பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். அப்படி வரும் நோயாளிகளுடன் அவர்களது உறவினர்களோ, அல்லது நண்பர்களோ வருகிறார்கள். நோயாளி ஒருவர் சென்னைக்கு வந்து சிகிச்சை எடுத்து திரும்புவதற்கு குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றன. இதனைத் தவிர்க்கவே பெங்களூர் கிளையைத் துவக்கினோம். மற்றொரு கிளை இலங்கையிலுள்ள கொழும்பு நகரில் உள்ளது. அங்கே லாஸிக் (Lasik) அறுவை சிகிச்சைகளும் செய்கிறோம். இந்த அறுவை சிகிச்சைக்கு பின்பு ஒருவர் கண்ணாடி அணிந்து கொள்ளாமலேயே நன்றாகப் பார்க்க முடியும். சென்னையிலிருந்து இதற்காக மருத்துவர்கள் அங்கு அனுப்பப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் டயபடிக் ரெட்டினோபதி போன்ற நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறோம். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு விழித்திரை பாதிக்கப்படலாம். இதைச் சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால் கண் பார்வையை இழக்க நேரிடலாம். ஆகவே முதலில் கண்ணைச் சர்க்கரைநோய் பாதித்து உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். இருப்பதைக் கண்டு அறிந்தவுடனே சிகிச்சை அளித்தால் கண் பார்வை இழப்பைத் தவிர்க்கலாம். இப்போது தமிழகத்தில் இந்தச் சேவையைச் செய்து கொண்டிருக்கிறோம். கிராமங்களில் இத்தகைய நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து வந்து மருத்துவம் செய்து அனுப்பி வருகிறோம்.
பிறநாட்டினர் வருகை
பங்களாதேஷ், பாகிஸ்தான், மொரிஷியஸ் உள்பட சுமார் 40 நாடுகளிலிருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மொரிஷியஸ் தீவிலிருந்து வாரத்திற்குச் சுமார் 10 பேராவது வருகிறார்கள்.
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைத்த 'தொலைத் தொடர்பு கண் மருத்துவம்' (Tele Ophthalmology) பற்றி...
குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் 2003-ம் ஆண்டு அக்டோபர் தொலைத்தொடர்பு கண் மருத்துவ வசதியைத் தொடங்கிவைத்தார்கள். இதன் மூலம் நோயாளிகள் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்புகிறார்களோ அவர்களுடன் பெங்களூரில் உள்ள பசவன்குடியில் அமைந்திருக்கும் எங்கள் மருத்துவமனையில் 'டெலி கான்·பரன்ஸ்' மூலமாகத் தொடர்பு கொண்டு சிகிச்சை பெறலாம்.
பெங்களூர் கிளை ஆரம்பித்ததற்கான காரணம் நாங்கள் சிறந்த ஆய்வு வசதிகளை ஏற்படுத்தி இருப்பதுதான். கண்ணில் ஏற்பட்ட தொற்று (Infection) எந்தக் கிருமியால் ஏற்படுகிறது என்பதை அடுத்த எட்டு மணி நேரத்திற்குள் சொல்லிவிடும் Rapid Molecular Diagnostic Technic-ஐ நாங்கள் பயன்படுத்துகிறோம். இத்தகைய முறையை மேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகிறார்கள். ஒருவருக்கு பாக்டீரியா, ·பங்கஸ், மற்றும் வைரஸ் இருந்தால் எளிதில் அறிந்து கொண்டு, எந்த வகையான மருந்துகளைக் கொடுக்கலாம் என்பதை ஆய்ந்து கொடுக்க முடிகிறது. இந்தச் சோதனை மூலம் நோயைத் துல்லியமாக, விரைந்து கண்டு பிடித்து, கண்ணைக் காப்பாற்ற முடியும்.
இதன்மூலம் ஒருவருக்கு எந்தவிதமான தொற்று இருந்தாலும் அவரது 'specimen' எடுத்துவந்து எங்கள் கிளையில் கொடுத்தால் நாங்கள் அதை அன்று மாலையே விமானத்தின் மூலமாக சென்னைக்குக் கொண்டு வந்து அடுத்த நாள் காலை 11 அல்லது 12 மணிக்குள் அதைப் பற்றிய விவரங்களைத் (Diagnose) தொலைபேசி மூலமாகத் தெரிவித்துவிடுகிறோம். நாங்கள் தான் முதன்முதலாக இத்தகைய வசதியை பெங்களூரில் ஆரம்பித்திருக்கிறோம். |
|
அமெரிக்காவில் செயல்படும் 'ஓம் டிரஸ்ட்' (Ophthalmic Mission Trust)
அமெரிக்காவில் 'ஓம் டிரஸ்ட்' என்கிற பெயரில் எங்கள் அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. அமெரிக்க வருமான வரித்துறை (Internal Revenue Service) இதற்கு 100% வரி விலக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் எங்களுக்கு நிதி உதவி அளித்தால், அந்த நன்கொடைக்கு 100% வரிவிலக்குக் கிடைக்கிறது. 'ஓம்டிரஸ்டி'ல் 10, 12 பேர் தீவிரமாகப் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் திருமதி வேதவல்லி வாஷிங்டனில் கச்சேரி நிகழ்த்தி, நிதி திரட்டி அளித்தார். அதுபோல் ஒய்.ஜி. மகேந்திரன் நாடகங்கள் நடத்தினார். புகழ்பெற்ற வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் அவர்கள் தன்னுடைய 75 வயதிலும் உடல் நலம் பாராமல் எங்களுக் காக அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் கச்சேரி நிகழ்த்தி நிதி திரட்டித் தந்ததை நான் இங்கு சொல்ல வேண்டும். நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் இதுபோல் பல்வேறு கலைஞர்களை கொண்டு அவ்வப் போது அமெரிக்காவில் நிகழ்த்துகிறோம்.
இணையவழிக் கல்வி
http://www.ekalavya.org என்ற இணையத்தளத்தின் மூலம் கல்விக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கண் பராமரிப்பு குறித்த சேவையை பலர் கற்க முடிகிறது. அத்துடன் அந்தச் சேவையில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். இந்த இணையத்தளம் அந்தந்தச் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் பலதரப்பட்ட பாடங்களைப் பற்றிய புலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு அல்லது வாரத்திற்கு ஒரு முறை இந்த தளத்தில் புதிய நோயாளிகளைப் பற்றிய குறிப்புகளும், விவாதங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கான பாடக் குறிப்புகள், துறையில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தளத்தில் செய்முறை விவரங்களும் வழங்கப்படுகின்றன. எளிதாக படிப்பதற்கேற்பப் பட விளக்கங்களுடன், தேவைப்படும் இடங்களில் அசையும் (அனிமேஷன்) படங்களுடன் வழங்கப்படுகிறது.
தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி மற்றும் பயிற்சிகள் பற்றி...
எங்கள் மருத்துவமனையில் ஆர்பிஸ் அமைப்பு வழங்கும் குழந்தைகள் கண் மருத்துவப் பயிற்சி 72 கண் மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ·பேக்கோ எமல்சிபிகேஷன் முறையில் கேடராக்ட் அறுவை சிகிச்சைக்கான பயிற்சி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் கண் மருத்துவர் களுக்கு வழங்குகிறோம். மேலும் மத்திய அரசின் தேசியப் பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத் தின் கீழ், சிறுதுளை மூலம் (laparoscopy) கேடராக்ட் அறுவை சிகிச்சை செய்யும் பயிற்சியையும் கண் மருத்துவர்களுக்கு அளிக்கிறோம்.
நடமாடும் தொலைத்தொடர்பு கண் மருத்துவ ஊர்தியைப் பற்றி...
கிராமப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் எங்கள் நடமாடும் தொலைத் தொடர்பு கண் மருத்துவ வாகனம். இதற்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த மொபைல் வண்டி செயற்கைக் கோள் மூலமாக சங்கரநேத்ராலயா மருத்துவ மனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள நோயாளிகளைச் சோதனை செய்து, குறிப்பிட்ட முக்கியமான நோயாளிகளைத் தேர்வு செய்து, அவர்களைச் சென்னை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுடன் கலந்து ஆலோசிக்க வைக்கிறோம். இதுவரை இதுமாதிரி 325 முகாம்களை முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 24 ஆயிரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறோம். தொலைத்தொடர்பு மூலமாக 6000 பேர்களை எட்டியுள்ளோம்.
முகாம் நடக்கும் ஊர்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நாங்கள் மடிக்கணினி (laptop) மூலம் கண் சம்பந்தப்பட்ட விவரணப் படங்களை மக்களுக்குக் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அவர்களுக்குச் சந்தேகங்கள் எழுந்தால், எங்களால் பயிற்றுவிக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் உடனடியாகத் தீர்த்து வைப்பார்கள். ஏதாவது முக்கியத் தகவல்கள் தேவைப்பட்டால் எங்கள் நடமாடும் ஊர்தி மூலம் மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு தெளிவடைவார்கள். இவ்வாறு ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு நாள்கள் இந்த ஊர்தி இருக்கும். ஒரு மாதத்தில் 24 நாள்கள் இவ்வூர்தி பணி செய்கிறது.
இவ்வூர்தி மாதத்திற்கு ஒருமுறை ஒரு மருத்துவமனைக்குச் சென்று உரையாடி, அங்குள்ள மருத்துவர்களின் சந்தேகங் களைத் தீர்க்கிறது. அவர்களுக்கு இங்கிருந்தே பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். இதுவரை ஒரே வேன்தான் எங்களிடம் இருக்கிறது. கூடிய விரைவில் பெங்களூருக்காக மற்றோர் ஊர்தி வாங்கவிருக்கிறோம்.
எதிர்காலத் திட்டங்கள்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த ஒருவர் இத்தாலிக்குச் சென்று Otto Odanto Keratoplasy என்ற கண் அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து கொண்டு வந்தார். இந்தியாவில் அப்போது அதைச் செய்ய வசதி இல்லை.
சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இத்தாலிய மருத்துவர் சங்கர நேத்ராலயாவிற்கு வருகை தந்தார். எங்கள் மருத்துவர்களுக்கு அந்த முறையைப் பயிற்றுவித்தார். தற்போது இத்தகைய டிஜிட்டல் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் எங்களிடம் உள்ளன.
முன்பெல்லாம் கார்னியா பழுதானால் (கண்ணின் கருவிழி) அதை முழுதாக மாற்றி வைக்க வேண்டியிருக்கும். இது நூறு சதவிகிதம் வெற்றியைத் தராமல் போகலாம். கார்னியாவின் பின்பாகத்தை மட்டும் மாற்றியமைப்பது Deep Lamellar Endothelial Keratoplasty என்ற முறை. இந்த முறை இப்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான வசதி களையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இனி எங்கள் மருத்துவமனையில் நம் நாட்டில் இதுவரை செய்யாத அறுவை சிகிச்சைகள், புதிய சிகிச்சை முறைகள், தைராய்ட் போன்றவைகளுக்கான மருத்துவம் அளிக்கவிருக்கிறோம். இதற்காக 'தைராயிட் கிளினிக்' ஒன்றைத் தொடங்க இருக்கிறோம். தேவையான மருத்துவர்கள் வாரத்திற்கு இருமுறையோ, மூன்று முறையோ வந்து சிகிச்சை அளிப்பார்கள். இதுபோலப் புதிய Super Speciality Care Centre ஒன்றை இந்த வருடம் துவங்கவிருக்கிறோம்.
எங்கள் இரண்டாவது முக்கிய எதிர்கால திட்டம் என்னவென்றால் National Institute for Research in Vision and Ophthalmology (NIRVO) என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஆராய்ச்சிக்கான வசதிகள் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நாம் வெளிநாடுகளுக்கெல்லாம் இத்தகைய சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இங்கு வந்து சிகிக்சை பெற்றுச் செல்லலாம்.
கல்வித்துறை என்று எடுத்துக் கொண்டால் நாங்கள் எஸ்ஸிலார் (Essilor) என்ற கண்ணாடிகள் செய்யும் பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறோம். நம் ஊரில் கண் மருத்துவர் எழுதிக் கொடுத்தாலும் கண்ணாடிகள் சரியாகச் செய்யப்படுவதில்லை. கண்ணாடிகள் செய்வதில் புதிய நுட்பங்கள் வரவில்லை. ஆகையால் நாங்கள் All India Distance Education Program in Dispensing Optics என்ற பயிற்சித் திட்டம் ஒன்றை எஸ்ஸிலார் அமைப்பின் உதவியுடன் செய்யலாம் என்று நினைக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியைத் துவக்கிவிடுவோம். இதன் மூலம் dispensing optic will improve in our country.
இதைத்தவிர இந்த ஆண்டு இரண்டு முக்கியப் பன்னாட்டு மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஒன்று பார்வை அளவையியல் (Optometry) பற்றியது. ஆப்டோமெட்ரியில் நான்கு ஆண்டுப் பட்டயப் படிப்பு நாங்கள் நடத்துகிறோம். இதை பெர்க்கலியில் உள்ள கலி·போர்னியா பல்கலைக்கழகத்துடனும் பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் அமைப்புடனும் இணைந்து வழங்குகிறோம். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் இந்தக் கருத்தரங்கிற்கு 25 உலக அளவிலான வல்லுனர்கள் வருகை தருவார்கள். அவர்கள் ஆப்டோமெட்ரி பற்றி வகுப்புகளும் நடத்துவார்கள். தவிர, 600 பேர்வரை கருத்தரங்கில் பங்கேற்பார்கள்.
இரண்டாவது கருத்தரங்கம் நவம்பர்
2005-ல் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளப் பிரபல கண்மருத்துவ வல்லுனர் டாக்டர் எம். மும்மந்தால் இஸ்ரேலில் இருந்து வருகிறார். அவருடன் சுமார் 75 இஸ்ரேலிய மருத்துவர்களும் வருகிறார்கள். புதிய உத்திகளும் தொழில் நுட்பமும் கொண்ட சிகிச்சைகளைக் குறைந்த செலவில் கொடுப்பது எப்படி என்று டாக்டர் மும்மந்தால் நமது மருத்துவர் களுக்குக் கற்பிப்பார். அவர் தன் நாட்டில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். நமது நாட்டுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சந்திப்பு: கேடிஸ்ரீ தொகுப்பு: மதுரபாரதி புகைப்படங்கள்: வெங்கடேசன்
******
நன்கொடை அளிக்க
நீங்கள் கொடுக்கும் 50 டாலர் ஒருவருக்குப் பார்வை தரும். இன்னும் பலவகை நன்கொடை வாய்ப்புகளும் http://www.omtrust.org என்ற தளத்தில் காணக் கிடைக்கும். அமெரிக்க வருவாய்த்துறை நன்கொடை களுக்கு நூறு சதவீத வரி விலக்குக் கொடுத்துள்ளது. (IRS Tax ID #52-1611548).
இணையத்தளத்தின் மூலம் நன்கொடை கொடுக்க: www.omtrust.org அஞ்சல் வழியே அனுப்பவேண்டிய முகவரி: S V Acharya, Treasurer, 14613, Pommel Drive, Rockville, MD 20850, USA மின்னஞ்சல்: omtrustusa@hotmail.com தொலைபேசி: 301.251.3078
******
சில சுவையான தகவல்கள்
சங்கர நேத்ராலயா ஒரு ISO தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்.
சென்னையில் மட்டும் நான்கு வளாகங்களில் சேவை செய்கிறது.
தினமும் சுமார் 1400 புற நோயாளி களுக்கு மருத்துவம் செய்கிறது.
24 அறுவைச் சிகிச்சைக் கூடங் களில் தினமும் சுமார் 100 பேருக்கு அறுவை சிகிச்சை செய்கிறது.
கல்வி மற்றும் ஆய்வுக்காக ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து உட்படப் பல நாட்டின் மருத்துவ அமைப்புகளுடன் கைகோர்த் துள்ளது.
அறுவை சிகிச்சை நடந்தபின் தொற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியம் உலகச் சராசரி விகிதம்: 0.07-0.13% நேத்ராலயாவில்: 0.01%
மேலும் விபரம் அறிய: http://www.sankaranethralaya.org |
|
|
|
|
|
|
|
|