கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றக்கூட்டம் வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
|
|
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். |
|
- மணி மு.மணிவண்ணன்|ஜூலை 2005| |
|
|
|
ஜூலை 16, 2004. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து. 93 மொட்டுகள் கருகுகின்றன. டிசம்பர் 26, 2004. சுனாமித் தாக்குதல். இருபதே நிமிடத்தில், நாகப்பட்டினம் மாவட்டக் கரையோரப் பகுதிகள், கடலின் சீற்றத்தில்
கலங்குகின்றன. 6065 பேர் இறப்பு. 176,184 பேருக்கு இழப்பு. 700 கோடி ரூபாய் பொருட்சேதம்.
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத இந்த இரண்டு இடர்ப்பாடுகளிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற முறையில் அரசின் மீட்புப் பணிகளுக்குத் தலைமையேற்றவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இருபது நிமிடப்
பேரலைகளில் அனைத்தும் இழந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் நன்றிக்குப் பாத்திரமானவர். சுனாமி மட்டுமல்ல கும்பகோணம் பள்ளித் தீவிபத்தின் பின்னால் வாடியிருந்த மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும்
முயற்சியிலும் பாராட்டப்பட்டவர். "சுனாமி ஹீரோ" என்று பத்திரிக்கைகளிடம் செல்லப்பெயர் பெற்றவர். நாகப்பட்டினத்தின் வியக்கத்தக்க மீட்பு நடவடிக்கைகளைக் கவனித்த இலங்கை அரசு, தமிழக அனுபவங்களை இலங்கை
நிபுணர்களோடு பகிர்ந்து கொள்ள மார்ச் மாதத்தில் இவரையும் அழைத்தது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவராக சுனாமி நிவாரணப் பணிகளைப் பார்வையிட அண்மையில் நாகப்பட்டினத்திற்குச் சென்றார். இந்த இளம்வயதில் பெரும்பொறுப்பை
ஏற்றிருக்கும் ராதாகிருஷ்ணன் தனது பணிகளில் பெருமிதம் கொள்வதோடு மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று துடிப்பது கிளிண்டனை அசத்தியது. தான் பார்வையிட்ட மையங்களிலேயே நிவாரணப் பணியில்
முன்னணியில் இருப்பது நாகப்பட்டின மையம் என்றும் அதற்குக் காரணமானவர் இந்த இளம் ஆட்சித்தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஐ.நா. அமைப்புகளோடும், சேவை நிறுவனங்களோடும் இணைந்து மிகத்
திறமையாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சி என்று இவரைக் கிளிண்டன் பாராட்டினார்.
கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு காலத்தில் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்று விரும்பினாராம். இப்போது சுனாமி நிவாரணப் பணியில் இவரது தலைமையை மெச்சி அமெரிக்க
அரசின் வெளியுறவுத்துறை இவரைப் பன்னாட்டு விருந்தினர்-தலைவர்கள் கருத்துப் பரிமாற்றத் திட்டத்தின் (http://exchanges.state.gov/education/ivp/) கீழ் அமெரிக்காவுக்கு அழைத்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்
மூலம் அமெரிக்காவுக்கு இதுவரை வந்திருக்கும் பலர் பின்னால் அந்தந்த நாடுகளில் மிகப் பெரிய பொறுப்புகளை ஏற்றுத் தலைமை வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று வார நிகழ்ச்சிக்குப் பல நாடுகளில் பேரிடர் மீட்சிப்பணிகளில் தலைமையேற்றுச் செயலாற்றியவர்களை அமெரிக்கா அழைத்திருந்தது. வந்த விருந்தினர்கள் வாஷிங்டன் டி.சி., மயாமி, சியாட்டில், சான்
ஃபிரான்சிஸ்கோ, ஹவாயி நகரங்களில் தொற்று நோய், சூறாவளி, சுனாமி, நிலநடுக்கம், எரிமலை போன்ற இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அவசர நிலைகளைக் கையாளும்
அனுபவங்களை அந்தந்த மையங்களின் அமெரிக்க நிபுணர்களோடு பகிர்ந்து கொண்டு அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் அறிந்து கொண்டார்கள்.
கும்பகோணம் தீவிபத்து, மற்றும் சுனாமி நிவாரண நிதிகளுக்குத் தாராளமாக நன்கொடை வழங்கிய தென்றல் வாசகர்கள் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம். கல்லூரி மாணவர் போல்
தோற்றமளிக்கும் இவரை 37 வயது மூத்த அதிகாரி என்று நம்புவது கடினம். இவருடன் வந்திருந்த இளம் மனைவி கிருத்திகாவும் இவரைப்போலவே எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர். கும்பகோணம் பள்ளித்
தீவிபத்துக்குப் பின்னர் நெகிழ்ச்சியுடன் மக்களுக்கு ஆறுதல் வழங்கும் காட்சிகளில் இந்தத் தம்பதிகள் இருவரோடு இவர்கள் 7 வயது மகன் அரவிந்தையும் காணலாம்.
பயணத்தின் முக்கிய நோக்கம்
'இயற்கை இடர்ப்பாடுகளை நாம் எப்படி சமாளிப்பது' என்கிற தலைப்பில் பேச வந்துள்ளோம். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளும் தமது அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கக் கூடிய
வாய்ப்புகளை அளிக்கிறார்கள். இங்கு இருக்கிற முன்னேறிய தொழில்நுட்பங்கள், மற்றும் கருவிகளோடு நமது அனுபவத்தையும் இணைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது..
ஆயத்த நிலை, சேதக் குறைப்பு இவை இரண்டிலும் மிகமிக அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே இங்கு ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளப் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்கள். அதனை
எதிர்கொள்ளும் ஆயத்த முனைப்புகளில் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் தனிப்பட்ட வலிமை மற்றும் நலிவு..
நமது மிகப்பெரிய வலிமை நலிவுக்குப் பிறகும் வில் போல் நிமிர்ந்து எழும் மீட்டெழுச்சித் தன்மை. நம் மக்களுக்கு எதையும் தாங்கும் இதயம். அதுபோல எதிர்பார்த்த இடர்ப்பாடுகள் வரும்போது திட்டமிட்ட முறையில்
செயலாற்றுகிறோம். வறட்சி மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள், மார்ச் மாதத்தில் நடந்த சுனாமி எச்சரிக்கை நடவடிக்கை இவையே எடுத்துக்காட்டு.
நம் நலிவு எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்ப்பது. பொதுவாக யாரும் காப்பீடு செய்வதில்லை. அரசோ தொண்டு நிறுவனமோ அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அமெரிக்க முறையில்
பொதுமக்களுக்குப் பொறுப்பு மிக அதிகம்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற அலட்சிய மனப்பான்மை குறித்து..
சுனாமிக்கு மிகப்பெரிய நன்மை என்ன வென்றால் ஒருவிபத்து என்பது நமக்கும் வரும் என்கிற உணர்வு பொதுமக்களிடம் முதன் முதலாக வந்துள்ளது. இதுவரை எந்த விபத்தை நினைத்தாலும், நமக்கு வராதவரைக்கும் இது
வேறு யாருக்கோ வரக்கூடிய ஒரு பிரச்சனை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். நகர்ப்புறம், நாட்டுப்புறம் எல்லாவற்றிலேயும் தனிமனிதப் பொறுப்புணர்வு தோன்றியுள்ளது.
இந்தியாவில் உயிருக்கு மதிப்பில்லை என்ற எண்ணம் பற்றி..
அரசுப் பயிற்சிகளில் இறப்பு, இழப்புகள் வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, ஒவ்வொருத் தருடைய இழப்பும் அது தனி இழப்பு என்று உணர்த்தப்படுகிறது. சுனாமியைப் பொறுத்த வரை எதிர்பாராத அபாயம். முதல் மூன்று
நாட்களாக நிலைகுலைந்து போயிருந்தது உண்மைதான். ஒவ்வோர் இடர்ப்பாட்டிலும் பல பாடங்கள் கற்றுக் கொள்கிறோம். செய்யும் பிழையையே திரும்பத் திரும்பச் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
இடர்ப்பாடு நிவாரணப் பணிகளைத் தொழில்முறையில் செய்ய வேண்டும் என்பது தேசிய அளவில் வலுப்பெற்றிருக்கிறது. நாகப்பட்டினத்தில் 1952-லிருந்து இதுவரை 2000 அல்லது 3000 பேர் புயலில்
இறந்திருக்கிறார்கள். ஆனால், சுனாமி நடந்த 20 நிமிடத்தில் 6065 பேர் இறந்திருக்கிறார்கள். இது எதிர்பாராத இடர்ப்பாட்டின் விளைவு. இப்போது அடிக்கடி சூறாவளி வந்து தாக்கும் அனுபவமுள்ள ·பிளாரிடா
மாநிலத்துடன், மயாமி நகரத்துடன் கருத்துப் பரிமாற்றத் தொடர்பு கொள்ளவிருக்கிறோம். இடர்ப்பாடு ஆயத்தம் மற்றும் நிவாரணம் என்பது அரசின் பணி மட்டுமோ, தொண்டு நிறுவனங்களின் பணி மட்டுமோ இல்லை. ஒரு
கூட்டு முயற்சி. பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடக நண்பர்கள் - எல்லோருமே சேர்ந்து ஒரு குழுவாக அணுகினால்தான் முன்னேற முடியும்.
சட்டங்கள் இருக்கின்றன என்றால் அது வீம்புக்கான சட்டங்கள் இல்லை. மக்களைப் பாதுகாக்கிற சட்டங்கள்தான், அதை நாம் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். ஒரு ஓட்டையான கட்டிடம் கட்டிவிட்டு அதன் பிறகு
அது இடிந்துவிட்டது என்று வருத்தப் படக்கூடாது.
ஒரு அதிகாரியாக இல்லாமல் சாதாரண ஒரு மனிதராக, சுனாமியைப் பற்றி உங்கள் மனதைத் தொட்ட ஒரு நிகழ்ச்சி...
முதலாவது மக்கள் மனிதாபிமானம். கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களில் பலர் ஏழைகள், சம்பவம் நடந்து ஆறு மாதம்கூட ஆகாத நிலையில் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சுமார்
ஒன்றரை லட்சரூபாய் வசூல் செய்து எங்கள் மூலமாக அனுப்பி வைத்தார்கள். அவர்களே இன்றைக்கு மீண்டு வரமுடியாத நிலையில் இருந்தும்கூட அவர்கள் இந்த விபத்தை உணர்ந்து செய்தது மிகப் பெரிய விஷயம்.
அவர்கள் அளித்த தொகையைவிட அவர்களின் அந்த செயல் போற்றக்கூடியது.
இரண்டாவது, சுனாமிக் குழந்தைகள். இந்த இடர்ப்பாடுகளில் நிறைய பேர் ஒரு பக்கம் அநாதையாக ஆனார்கள். இவர்களது நிமிர்ந்தெழுந்து நிற்கும் தன்மை. சுனாமியால் எவ்வளவு மனது தளர்ந்த போதும், மேலும் செய்ய
வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே என்று கவலைப்படும் போதெல்லாம், இந்தக் குழந்தைகளின் நிமிர்வு என்னை நிஜமாகவே தொட்டது. எல்லாவற்றையும் இழந்த அவர்களுக்கே மறுவாழ்வில் அவ்வளவு தூரம் ஒரு
நம்பிக்கை இருக்கின்ற போது நம்மால் முடியும் என்று புத்துணர்ச்சி பிறந்தது.
சுனாமி நிவாரண நடவடிக்கைகளில் சவால் என்ன...
சுனாமியில் இறப்பும், இழப்பும் இருக்கின்ற குடும்பங்கள் மறுவாழ்க்கைக்கு வரத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இறப்பு, இழப்பு இல்லாமல் ஓரளவுக்கு பாதிப்பான குடும்பங்களுக்கு இன்னமும் சில சமயங்களில் அவர்களுக்கு
தேவைகளுக்கும், ஆசைகளுக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. நான் அவர்களுக்குச் சொல்வது என்னவென்றால் இறந்த அன்று நாம் ஏதாவது கேட்டிருப்போமா? உயிர் இருந்தால் போதும், வேறு ஏதுவும்
வேண்டாம் என்றுதானே கேட்டிருப்போம். என்ன நிஜமான இழப்பு நமக்கு இருக்கிறதோ அதோடு நாம் நிறுத்த வேண்டும்.
நாகப்பட்டினத்திற்கு மட்டும் 150 கோடி ரூபாயை அரசு மட்டும் வழங்கியிருக்கிறது. அது இல்லாமல் தொண்டு நிறுவனங்கள் நிறைய செய்ய வருகிறார்கள். செய்யும் போது குறிப்பாக மக்கள் செய்யும் போது இவர்களுக்கு
இன்னும் செய்ய வேண்டும் என்கிற நினைப்புடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிற நிலை யோடு இருக்க வேண்டும் என்பதை நான் நாகப்பட்டினத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் நினைக்கிறேன்.
'இவர்களுக்கு இன்னும் நாம் கொடுக்கணுமா? ஏன் கொடுத்தோம்?' என்று யாரும் நாளைக்குச் சொல்லக்கூடாது. அந்த மாதிரியான மன நிலையும் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது. நாம் கொடுத்த அன்பளிப்புகள் சரியாகப்
பயன்படுகின்றன என்று அவர்களுக்கு ஒரு திருப்தி உருவாக வேண்டும். தேவைகளை முன்னிறுத்தி நாம் நிவாரணம் செய்ய வேண்டும். ஆசைகளை முன்னிறுத்தி அல்ல என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
நிவாரண நிதியைக் கொடுத்த சிலர் யாருக்குத் தேவையோ அங்கு போய்ச் சேருமா என்று சந்தேகப்படுகிறார்களே?
இத்தனை பெரிய இயற்கை அழிவில் அங்கு ஓரிரண்டு இடங்களில் சரியாக நடக்காமல் இருந்திருக்கலாம். தவறுகள் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான நிதி சரியான மக்களுக்குச் சென்ற
டைந்தது என்றே சொல்வேன். நான் எதற்கு இதை இவ்வளவு ஆணித்தரமாகச் சொல்கிறேன் என்றால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் சுனாமி பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்குத் தமிழகம் வந்திருந்த போது
தொண்டு நிறுவனம், அரசோடு ஒருங்கிணைப்பு நாகப்பட்டினத்தில் மிகச் சிறப்பாக இருந்தது என்று சொல்லிவிட்டு போகக்கூடிய அளவிற்கு அவர் செய்தார் என்றால் நம்பிக்கையில்லாம லேயோ, அல்லது அவ்வளவு பெரிய
தலைவர் வந்து சாதாரண ரீதியில் இப்படி சொல்லியிருப்பாரா? |
|
அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பற்றி உதவிகரமாக இருந்தார்களா?
கண்டிப்பாக தொண்டு நிறுவனங்கள் மிகப் பெரிய உதவியை செய்தார்கள். நாகப்பட்டினத்தைப் பொருத்தவரை 20 ஆயிரம் வீடுகளுக்கான நிலத்தை அரசு இலவசமாக அளித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசே
கட்டுவதற்கு வேண்டிய நிதியையும் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வீடுகள் அனைத்தையும் தொண்டு நிறுவனங்களே வாங்கிக் கட்டிக் கொடுப்பதற்கு சம்மதித்திருக்கிறார்கள். எல்லாத் தொண்டு நிறுவனங்களுக்கும்
வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் நிதி உதவி வந்திருக்கிறது. அவர்களும் செய்ய விரும்புகிறார்கள். முதன்முதலாகத் தொண்டு நிறுவனங்கள் உணவு போன்ற விஷயங்களில் எங்களுக்கு உதவி செய்தன. அதன்
பிறகு நாங்கள் உணவு வழங்கும்போது, புட்டிககளில் தண்ணீரும் கொடுக்கச் சொன்னோம். ஒவ்வொரு தொண்டு நிறுவனத்தின் வலிமைக்கு ஏற்ப, தேவைப்படும் இடங்களில் தொண்டாற்ற ஒருங்கிணைத்தோம்.
பல பில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கிய அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக அமெரிக்கத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பெரும்பாலான கொடைகள் அரசுசாராத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களோடு நாங்கள் இணைந்து வேலை செய்கிறோம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்குக் கொடையளித்தவர்களுக்குக் கணக்குக்
காட்டும் கடமைப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் நாங்கள் கண்கூடாகத் தொண்டு நிறுவனங்கள் வேலை செய்வதைப் பார்க்கிறோம். நன்கொடை அளித்தவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை அணுகி எந்தத் தொண்டு
நிறுவனத்தைப் பற்றிக் கேட்டாலும், எங்களிடம் பதிவு ஒப்பந்தம் செய்து தொண் டாற்றி வரும் நிறுவனங்களின் செயல் குறித்து எங்களால் சொல்ல இயலும்.
குழந்தைகள் உடல்களைக் குப்பை போல் வாரிப் புதைத்தார்கள், இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதில் தயக்கம் இருந்தது, ராணுவமும் உதவவில்லை என்ற செய்திகள் பற்றி...
முதல் சில நாட்களில் தொற்று நோய் பரவக்கூடாதே என்ற பயத்தில் உடல்களை அவசரமாகப் புதைத்தது உண்மைதான். நிலைமை கட்டுக்குள் வந்ததும் அடையாளம் இல்லாமல் உடல்களைப் புதைப்பது இருந்தி ருக்காது.
இது இரக்கமற்ற மனத்தால் அல்ல, வாழ்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் நடந்தது. உடல்களைப் புதைப்பதில் எல்லோருமே ஈடுபட்டோம். தலித் இளைஞர் இயக்கம் (DYF), ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்
(RSS), முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று எல்லோருமே எந்தவிதத் தடையும் இல்லாமல் உடல்களை அப்புறப்படுத்தினார்கள். நாகப்பட்டினத்தைப் பொருத்தவரையில் ராணுவத்தின் பணி பாலத்தை அடைத்துக்
கொண்டிருந்த பெரிய படகுகளை அப்புறப்படுத்துவதுதான். அவரவர் பணியை அவரவர் சிறப்பாகச் செய்தார்கள். ஆறுமாதம் எடுக்கக் கூடிய வேலையை நாலு நாட்களில் முடித்துத் தண்ணீர், மின்சார வசதியைத் திரும்பக்
கொண்டு வந்தார்கள். இல்லாவிட்டால் 31-ம் தேதிக்குள் எல்லாவற்றையும் முடித்திருக்க முடியாது. இதெல்லாம் பரப்பான செய்தியில்லை என்பதால் வெளியில் வராது. காக்காய் ஓர் உடலைக் கொத்திக் கொண்டிருப்பதுதான்
பரபரப்பான செய்தி. பொதுவாக மனிதாபிமானச் செயல்கள் அதிகம் என்பது தான் உண்மை.
முகாம்களில் சாதி வேறுபாடு, தீண்டாமை இருந்தது என்று ஒரு குற்றச்சாட்டு இருந்ததே?
இதுபற்றிய செய்தியை ஜனவரி 6/7 தேதிகளில் செய்தித்தாளில் பார்த்தோம். உண்மை என்னவென்றால் எங்கள் மாவட்டத்தில் அது நடக்கவில்லை. வயலில் வேலை செய்யும் மக்கள் உடனடியாக வேலை தேடி வேறு
மாவட்டங்களுக்குப் போய்விட்டார்கள். கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தவர்களில் 3% மக்கள்தாம் ஆதி திராவிடர்கள். ஆரம்ப நாட்களில் கல்யாண மண்டபங்கள் தற்காலிகக் குடியிருப்பாக இருந்தபோது இட நெருக்கடி.
ஒவ்வொரு தற்காலிகக் குடியிருப்பிலும் அந்தந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள்தாம் இருந்தார்கள். நிவாரணப் பொருள்களை விநியோகிக்க அங்கு குடியிருந்தவர்களே பொறுப்பேற்று அந்தத்தப் பகுதியில் வாழ்ந்தவர்களை
அடையாளம் கண்டு கொண்டு விநியோகித்தார்கள். இதனால், வேறு பகுதியைச் சார்ந்த மீனவராக இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை. இருந்தாலும், செய்தி வந்தவுடனே உயர் அதிகாரிகள் எல்லா தலித்
குடியிருப்புகளுக்கும் சென்று இதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். அப்படி நடந்ததற்கு ஆதாரம் ஏதும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து இதை எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறோம். பல இடங்களில்
மீனவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் எல்லோரும் சேர்ந்து இருக்கிறார்கள்.
மாபெரும் இடர்ப்பாடுகளை இளம் வயதிலேயே முதிர்ச்சியுடனும், கனிவுடனும், திறமையாகவும் சமாளித்து வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக் கூறி விடை பெற்றோம்.
சந்திப்பு / தொகுப்பு: மணி மு. மணிவண்ணன் ஒலிபெயர்ப்பு: கேடிஸ்ரீ படங்கள்: சிவா சேஷப்பன் |
|
|
More
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றக்கூட்டம் வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
|
|
|
|
|
|
|
|