Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கலைமாமணி இலட்சப்பா பிள்ளை
- கேடிஸ்ரீ|மே 2005|
Share:
Click Here Enlargeஇசை என்றாலே சட்டென்று திருவாரூர்தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட திருவாரூரில் புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞரான சாமிநாத பிள்ளையைப் பற்றியும், இன்றும் தங்கள் குடும்பச் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வரும் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த தந்தத்தால் செய்யப்பட்ட அபூர்வ நாதஸ்வரத்தைப் பற்றியும் நம்மோடு பேசுகிறார் கலைமாமணி இலட்சப்பா பிள்ளை. நாதஸ்வரம் முதன்முதலாக எங்கு தோன்றியது என்பது பற்றி ஒரு சுவையான கதையையும் சொல்கிறார்.

தந்தத்தில் செய்த ஒரு ஜோடி நாதஸ்வரத்தில் இன்று ஒன்று மட்டுமே இவர் கையில் இருக்க மற்றொன்று இவரது அக்காவின் திருமணத்தின்போது சீதன மாகக் கொடுக்கப்பட்டது. அந்த நாதஸ்வரம் தமிழ் இசைச் சங்கத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இனி இலட்சப்பா பிள்ளையிடம் உரையாடுவோம்...

நாதஸ்வரம் வந்த கதை

முதன் முதலாக நாதஸ்வரக் கலை தமிழகத்தில் எங்கு தோன்றியது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

திருவாரூரில் குடிகொண்டிருக்கும் தியாகராஜப் பெருமான் இம்மண்ணுலகில் இசையைப் பரப்ப வேண்டும் என்று நினைத்தார். ஆகையால் அவர் தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்தார். அப்போது அவருடைய பரிவாரங்களுடன் நாதஸ்வரம் என்கிற இசைக் கருவியும் வந்தது. சுவாமியுடன் வந்தவர்கள் நயினாரடியார் என்று அழைக்கப்பட்டனர். நயினாரடியார்களைத் தவிர தேவரடியார்களும் மண்ணுலகிற்கு வந்தனர். நயினாரடியார்கள் சுவாமிக்குப் பூஜை நடக்கும் எல்லாக் காலங்களிலும் நாதஸ்வரத்தை வாசித்தார்கள். தேவரடியார்கள் சுவாமிக்கு வேண்டிய பூ கட்டிக் கொடுத்தல், கோயிலைச் சுத்தப்படுத்தல் போன்ற பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இப்படித்தான் நாதஸ்வரம் என்ற கலை பூமிக்கு வந்தது. அக்காலத்தில் நாதஸ்வரம் திருவாரூர் கோயிலைத் தவிர வேறு எந்த திருக்கோயிலிலும் வாசிக்கப் படவில்லை.

தந்தத்தில் செய்த நாதஸ்வரம்

தொடர்ந்து சில ஆண்டுகளாக தஞ்சாவூர் ஜில்லாவில் பருவமழை பொய்த்து மக்கள் பெரும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். மக்களின் துயரத்தைக் கண்ட மன்னன் பெரும் கவலை கொண்டான். ஒருநாள் மன்னன் தன் அமைச்சருடன் திருவாரூரில் குடிகொண்டிருக்கும் தியாகராஜ சுவாமியை தரிசிக்க வந்தான். தரிசித்த பின் கோயில் மண்டபத்தில் இளைப்பாறிக் கொண்டிருக் கையில் நயினாரடியார்களின் நாதஸ்வர இசையைக் கேட்டுத் தன்னை மறந்தான் மன்னன். அமைச்சரிடம் நயினாரடியாரைத் தன் நாட்டிற்கு வரவழைத்து, மழை வேண்டி நாதஸ்வரம் வாசிக்க வேண்டும் என்று கூறினார். மன்னனின் விருப்பத்தை அமைச்சரும் நயினாரடியாரிடம் சொல்ல, அவர்களும் அதற்கு இசைந்து தஞ்சைக்குச் சென்றனர்.

தஞ்சாவூர் அரண்மனையில் நாதஸ்வர இசை அடுத்த இரண்டு நாட்களில் தொடங்கியது. தொடர்ந்து அரைமணி நேரம் நாதஸ்வரம் வாசித்தும் மழை வரவில்லை. அதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி அரண்மனைக்குள் சென்றுவிட்டான். மன்னனின் வருத்தத்தைப் பார்த்த அமைச்சர் அரண்மனை மாடத்திற்குச் சென்று மழை வருகிறதா என்று பார்க்க, வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அரண்மனைக்குள் விரைந்து சென்று மன்னனிடம் மழைச் செய்தியைக் கூறினார். மன்னனும் மனமகிழ்ந்து நயினாரடியாரை நேரில் கண்டு "உங்கள் பெருமையறியாது நடந்து கொண்டேன். என்னை மன்னிக்கவேணும்" என்று கூறினான். ''இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று மன்னன் கேட்க, நயினாரடியார் ''தந்தத்தால் கடைந்த நாதஸ்வரம் வேண்டும்'' என்று கூறினர். உடனே மன்னனும் தந்தத்தால் கடையப்பட்ட நாதஸ்வரத்தைச் செய்து நயினாரடியாரிடம் அளித்தார். 'நயினாராடியார் மடம்' ஒன்றையும் திருவாரூரில் உருவாக்கிக் கொடுத்தார். இந்த மடம் இன்றும் இருக்கிறது. சுமார் 10 வேலி நிலமும் மன்னன் அளித்தார்.

அதிகார பூர்வமாக எனக்குக் கிடைத்த சுவடிகள் மூலமாக, ஆதிசாமி ஐயா என்பவரிடமிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட தலைமுறைகளாக இந்த நாதஸ்வரம் எங்களிடம் இருக்கிறது.

கல் நாதஸ்வரமும், திமிரி நாயனமும்

தந்தத்தாலான நாதஸ்வரம் தெய்வீகமானது. இதை எல்லா இடங்களிலும் வாசிக்கக் கூடாது, கோயில் போன்ற தெய்வீகமான இடங்களில்தான் வாசிக்க வேண்டும் என்றும், எங்கெல்லாம் கோயில் கட்டப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த நாதஸ்வரத்தை நயினாரடியார்கள் வாசிக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்தான் மன்னன்.

அப்போது திருவாரூரில் நிறையக் கற்சிலைகள் வடிக்கப்பட்ட காலம். தந்தத் தாலான நாதஸ்வரம் பற்றிய விவரம் சிற்பிகளுக்குத் தெரியவர, நாம் ஏன் கல்லால் நாதஸ்வரம் வடித்து நயினாரடியார்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினர்.

தந்தத்தால் ஆன நாதஸ்வரம் பாரியாக இருக்கும். கல்லால் வடித்ததோ திமிரியாக இருந்தது. திருவாரூரில் வாழ்ந்து வந்த முகவீணை வாசிக்கும் குடும்பத்தினர்கள் கல்லால் வடித்த நாதஸ்வரம் மிகவும் சுகமாகவும், எளிதாகவும் இருப்பதால், இதை ஏன் மரத்தில் வடிவமைத்து நாம் வாசிக்கக் கூடாது என்று நினைத்தனர். பிறகு மரத்தினால் ஆன நாதஸ்வரம் உருவானது. அவர்கள் பின்பு பல்வேறு கோயில்களுக்குச் சென்று நாதஸ்வரத்தை வாசிக்கத் தொடங்கினர். அப்போதுதான் திமிரி நாயனம் என்பது முதன்முதலாக அறிமுகமானது. அந்தக் காலத்தில் இருந்த பெரிய வித்வான்கள் எல்லாம் இந்தத் திமிரி நாயனத்தில் தான் 4 முதல் 6 கட்டை வரை வாசித்து வந்தார்கள்.

வித்வான் சாமிநாத ஐயா

எங்கள் பரம்பரையில் சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு திருவாரூரில் பெரிய வித்வானாக இருந்தவர் சாமிநாத ஐயா. இவர் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார். எங்கள் பரம்பரையில் இதே போல் ராமசாமிப் பிள்ளை என்பவர் நிறைய கீர்த்தனைகள், வர்ணங்கள் எல்லாம் திருவாரூர் இறைவனுக்குப் பாடியிருக்கிறார்.

இருபத்தைந்து நாள் உற்சவம்

முன்பெல்லாம் திருவாரூரில் தியாகராஜருக்கு உற்சவம் மிகச் சிறப்பாக 25 நாட்களுக்கு நடைபெறும். திருவாரூரைத் தவிர வேறு எந்த ஊரிலும் இதுவரை இத்தனை நீண்ட உற்சவம் நடந்தாகத் தெரியவில்லை. சுவாமி புறப்பாட்டின் போது நான்கு நாதஸ்வரம், நான்கு தவில் வாசிப்பது வழக்கம். மாலை 7 மணிக்குப் புறப்பட்ட சுவாமி ஊர்வலம் விடியற்காலை 5 மணிக்குத்தான் கோயில் இருக்கும் சன்னதித் தெருவை வந்தடையும். சுவாமியின் முன் சதிர்க் கச்சேரி நடனம் ஆடிக்கொண்டே வருவார்கள். சன்னதித் தெருவை சுவாமி அடைந்தவுடன் முகவீணை வாசிக்க நடனமாடிக் கொண்டே கோவிலின் உள்ளே செல்வார்கள். பார்க்க அற்புதமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகம் வாசிப்பார்கள். இப்படி 25 ராகங்கள். சில நாட்கள் தவில் வாசிப்பதை நிறுத்திவிட்டு நாதஸ்வரம் வாசிக்க, அந்த வாசிப்புக்குத் தேவதாசிகள் நாட்டியம் ஆடிக்கொண்டு வருவார்கள். நாதசுரம் வாசித்து நடனம் ஆடும் முறை திருவாரூரில்தான் வழக்கமாகத் தொன்று தொட்டு நடந்து வந்ததாகும். மறைந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு 'தில்லானா மோகனம்பாள்' படத்திற்காக நாதஸ்வரத்திற்கு பரதநாட்டியம் ஆடும் முறையைச் சொன்னது நான்தான்.

நான்கு நாதஸ்வரமும், பிரபலங்கள் வருகையும்

திருவாரூரில் நான்கு நாதஸ்வரம், நான்கு தவில் வாசிப்பது வெளியூர்களில் மெல்ல பரவியது. உடனே வெளியூர் நாதஸ்வரக்காரர்கள், ஜமீன்கள், பண்ணையார்கள் என்று எல்லோரும் நான்கு நாதஸ்வரத்தின் வாசிப்பைக் கேட்கத் திருவாரூருக்கு வர ஆரம்பித்தார்கள். அந்நாளில் என் தந்தையார் சாமிநாதப் பிள்ளை மிகப்பெரிய வித்வான். என் தந்தையார் போல் அந்நாளில் மன்னார்குடி பக்கிரியா பிள்ளை, மதுரை பொன்னுசாமிப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை, சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, செம்பள்ளூர் கோவில் ராமஸ்வாமிபிள்ளை, கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை, நாகூர் சுப்பையாப் பிள்ளை, நாகப்பட்டினம் வேணு கோபால் பிள்ளை, வெளிப்பாளையம் ரத்தினம் பிள்ளை, கோட்டூர் செளந்திரராஜம் பிள்ளை, திருச்சேறை வெங்கட்ராம பிள்ளை, முத்துகிருஷ்ண பிள்ளை, சிக்கல் நடராஜபிள்ளை என்று பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் திருவாரூருக்கு என் தந்தையாரின் அனுமதி பெற்றுதான் வருவார்கள். அத்தனை மரியாதை. அவர் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள கோட்டூர் பண்ணையில் எந்த விசேஷம் நிகழ்ந்தாலும் என் தகப்பனாரின் வாசிப்பு இல்லாமல் இருக்காது.

பக்கிரியா பிள்ளையின் பணிவு

ஒருமுறை கோட்டூர் பண்ணையின் திருமணத்திற்கு வாசிக்க என் தந்தையார் சென்றிருக்கிறார். மன்னார்குடி பக்கிரியா பிள்ளையும் வந்திருக்கிறார். மூன்று மணிக்கு கிரகப் பிரவேசத்துக்கான ஊர்வலம் தொடங்கி சரியாக ஆறு மணிக்கு வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று வைத்திருந்தார்கள். மூன்று மணிக்கு என் தகப்பனார் மாயமாளவகெளளை ராகம் வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள் ஜாகையில் இருந்த மன்னார்குடியாரும் வாசிக்க ஓடோடி வந்தார். அப்பாவின் நாதஸ்வர வாசிப்பைக் கண்டு மெய்மறந்தார். வெள்ளைக்காரர்கள் காலத்தில் மன்னார்குடியாருக்கு விருதுகள் வழங்கியிருக்கிறார்கள். தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் போது 'அழுதபிள்ளையும் வாய் மூடும்' என்பார்கள். அவர் வாசிக்க ஆரம்பித்தால் வீதிகளில் நடந்து போகிறவர்கள் அப்படியே நின்றுவிடுவார்களாம்.

அப்பா வாசித்துக் கொண்டு வருவதைப் பத்தடி தள்ளிக் கேட்டுகொண்டு வந்த பக்கிரியா பிள்ளை "ஆஹா.. சபாஷ்...'' என்று தன்னை மறந்து சொல்லிக் கொண்டு வந்தாராம். அப்பா அவரைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று நாதஸ்வரத்தை அவரிடம் கொடுத்து வாசிக்க சொன்னார். ஆனால் அவரோ "இல்லை, நீங்களே வாசியுங்கள்...'' என்று சொல்ல அப்பாவும் வாசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார். பின்பு வாசிக்க ஆரம்பித்தாராம் பக்கிரியா பிள்ளை. முதல் இரண்டு மணி நேரம் அவரது வாசிப்புக்குச் சுருதி சேரவே இல்லை. இரவு 8 மணிக்கு மேல் சுருதி சேர்ந்து அவர் மிகப் பிரமாதமாக வாசித்தார். வாசித்து முடித்தவுடன் அவர் என் தகப்பனாரைத் தேடி வந்தார். அப்பாவைப் பார்த்து, ''தம்பி இந்த உலகத்தில் நான்தான் பெரிய வித்வான் என்று நினைத்தேன். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். அதை நான் இன்று நிதர்சனமாகவே கண்டுகொண்டேன். இது தேவகானம். உன் இசைக்கு நான் அடிமை" என்று சொல்லியது மட்டுமல்லாமல் இனி உங்கள் வீட்டில் எந்த விசேஷமானாலும் நான்தான் வாசிப்பேன் என்றாராம்.

உற்சவ காலங்களில் அப்பாவின் வாசிப்பைக் கேட்க அந்த மாவட்டக் கலெக்டரே வருவார். மியூசிக் அகாதெமி செயலர் டாக்டர் ராகவன் திருவாரூரில் இருந்த காலத்தில் அப்பாவின் வாசிப்பில் தன்னை மறந்தவர். அவரும் திருவாரூர்க்காரர். பள்ளிக் காலத்தில் அப்பா வாசிப்பைக் கேட்டு மெய்மறந்து அவருடனே கூட வருவார். சன்னதித் தெரு வரை கேட்டுக் கொண்டு வருவார். "பின்புதான் குளித்து விட்டுப் பள்ளிக்கூடம் போவேன்" என்று சொல்வார்.

தங்க நாதஸ்வரம் பரிசு

ஒவ்வொரு வருடமும் நாகைப்பட்டினத்தில் புஷ்பப் பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒரு வருடம் நாதஸ்வரப் போட்டி நடத்தி, வெற்றி பெற்ற கலைஞருக்கு 85 சவரனால் ஆன தங்க நாதஸ்வரத்தைப் பரிசாக அளிக்க முடிவு செய்தனர். போட்டியில் கலந்து கொள்ள 18 கலைஞர்களை அழைத்தனர். போட்டி நான்கு வழக்கறிஞர்கள் தலைமையில் நடைபெற்றது. கலைஞர்களுக்குத் தலா ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவராக வாசிக்க ஆரம்பித்தனர். அன்று இரவு முழுவதும் போட்டி நடைபெற்றது. விடியற்காலை சரியாக ஐந்து மணிக்கு என் அப்பா வாசிக்க ஆரம்பித்தார். அவர்தான் கடைசி. நீலாம்பரி ராகம் வாசிக்க ஆரம்பித்தார். வாசிப்பைக் கேட்டதும் கூடியிருந்த மக்களும், பெரியவர்களும் மெய்மறந்து உருகி அழ ஆரம்பித்து விட்டனர். அப்பா வாசிக்கும்போது அங்கு கும்பகோணம் சிவக்கொழுந்து பிள்ளை இருந்தார். அவர் மிகப்பெரிய வித்வான். அப்பா வாசித்து முடித்தவுடன், வழக்கறிஞர்கள் நான்கு பேரும் அவரிடம் சென்று இங்கு வாசித்தவர்களில் யார் நன்றாக வாசித்தார்கள் என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

அப்போது சிவக்கொழுந்து பிள்ளை பேசுகையில், ''இங்கு உள்ள வழக்கறிஞர்களும், கோயிலைச் சேர்ந்தவர்களும் 85 சவரன் மதிக்கத்தக்க நாதஸ்வர சன்மானத்தை நன்கு வாசித்த கலைஞருக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். நானே ஒரு நாதஸ்வரக்கலைஞன்தான். இங்கு கூடியிருக்கும் நீங்கள் எல்லோரும் நாதஸ்வரக் கலைஞர்கள்தாம். இந்த தெய்வசன்னதியில் நீங்கள் எல்லோரும் வாசித்தவர்களில் யார் நன்றாக வாசித்தவர்கள் என்று மனம் ஒப்பிச் சொல்லுங்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே போல் நானும் சொல்கிறேன் என்றார். உடனே அங்கு நாதஸ்வரம் வாசித்த 18 பேரில் 16 பேர் திருவாரூர் சாமிநாத பிள்ளைக்கே இந்த சன்மானம் அளிக்கப்பட வேண்டும் என்றனர். அவரின் நீலாம்பரி ராகத்திற்கே இந்தச் சன்மானம் சரியாகப் போய்விட்டது என்றார்கள்.

சிவக்கொழுந்து பிள்ளையும் தமது தேர்வை அங்கிருந்த வழக்கறிஞர்களுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் தெரிவித்தார். வெள்ளி நாதஸ்வரம், தங்க நாதஸ்வரம் என்று பலர் என் அப்பாவின் நாதஸ்வர இசையைக் கேட்டுச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

என்னைப் பற்றி...

என் தகப்பனார் சாமிநாதப் பிள்ளை இறந்த போது நான் மூன்று மாதக் குழந்தை. என் பெரியப்பா, சித்தப்பா மேலும் திருவாரூரில் உள்ள இன்னும் பல வித்வான்களிடமும் என் தகப்பனாரைப் பற்றிய விவரங்களை அறிந்துக்கொண்டேன். தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் உதவியாளராகப் பணிப்புரியும் சண்முகநாதனின் தாத்தா திருக்கண்டமங்கை ராஜகோபால் பிள்ளை அவர்கள் திருவாரூர் வரும்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டார். என் மீது மிகவும் அன்புடையவர். அவர் என் அப்பாவைப் பற்றியும் அவரின் நாதஸ்வர வாசிப்பைப் பற்றியும் மற்ற வித்வான்களைப் பற்றியும் கதையாகக் கூறுவார்கள்.

யாழ்ப்பாணத்தில் எனது வாசிப்பு

எனது வாத்தியாரின் சிஷ்யர்களில் முக்கியமானவர் இலுப்பூர் கணேசன். அவருடன் நான் வாசிக்க ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது. நாங்கள் இருவரும் சிறுவர்களானபடியால் பல ஊர்களிலிருந்து எங்களைக் கச்சேரிக்குக் கூப்பிடுவார்கள். எனக்கு அப்போது வயது 9 இருக்கும். என்னுடைய பத்தாவது வயதில் நான் பல ஊர்களுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பு நிறைய உருவானது.

இந்தச் சமயத்தில் ஒருமுறை என் வாத்தியார் யாழ்ப்பாணம் செல்ல ஏற்பாடு ஆனது. என்னையும் தன்னுடன் வாசிக்க அழைத்துச் சென்றார். சுமார் ஆறு மாத காலம் யாழ்ப்பாணத்தில் கச்சேரி செய்தேன். பின்பு நான் மட்டும் திருவாரூருக்குத் திரும்பி வந்தேன். அடுத்த ஆண்டும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் என்னை விரும்பி அழைக்க, என் ஆசிரியரின் சம்மதத்துடன் சுமார் 6, 7 வருடங்கள் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் 6 மாதம், திருவாரூரில் 6 மாதம் என்று கச்சேரிகள் நடத்தினேன்.

இதற்கிடையில் குளிக்கரை பிச்சையப்பா பிள்ளை என்னைத் தன்னுடன் வாசிக்க அழைத்தார். அப்போது எனக்கு வயது 17. முதலில் அழைப்பை ஏற்க என் சகோதரர்கள் தயங்கினார்கள். என்னுடைய 18வது வயதில் நான் குளிக்கரை பிச்சையப்பா பிள்ளையுடன் வாசிக்கச் சம்மதித்தனர். பின்பு அவருடன் தொடர்ந்து நான் 3 வருடம் வாசித்தேன்.

இதன்பிறகுதான் நான் தனித்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் பல்வேறு புகழ் பெற்ற வித்வான்களுடன் எனக்கு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, குளிக்கரை காளிதாஸ் பிள்ளை போன்ற வர்களைச் சொல்லலாம். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடன் பல ஆண்டுகள் உடன் வாசித்து இருக்கிறேன்.

நாடக அனுபவம்

சிறுவயதில் நாடகக் கம்பெனிகளில் இருந்த அனுபவமும் எனக்கு உண்டு. மதுரை பால விநோத சபா நாடகக் கம்பெனியில் சுமார் மூன்று ஆண்டுகள் இருந்தேன். சிதம்பரம் ஜெயராமன் தான் என்னை நாடகக் கம்பெனிக்கு அழைத்துச்சென்றவர். தஞ்சை கலாநிதி டி.எம். தியாகராஜனும் இந்தக் கம்பெனியில்தான் இருந்தார். எனக்குக் குரல்வளம் நன்கு அமைந்து இருந்ததால், வாய்ப்பாட்டிலும், நாதஸ்வரத்திலும் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. நிறைய மாணவ, மாணவியர்களுக்கு நான் வாய்ப்பாட்டு வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தேன்.

திருப்பதி வெங்கடேஸ்வரா இசைக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து கொண்டிருந்த பேராசிரியர் சாம்பமூர்த்தி அவர்கள் என்னை நாதஸ்வர இசைக்கு விரிவுரையாளராக நியமனம் செய்தார். அதே சமயத்தில் அப்போது சென்னை இசைக்கல்லூரியும் என்னை விரிவுரையாளராகத் தேர்வு செய்ததையடுத்து நான் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து சுமார் 30 வருடகாலம் பணி செய்தேன்.

பட்டமும் பரிசும்

திருவாரூர் கீழவீதி பழனியாண்டவர் குடமுழுக்கு விழாவில் தம்புரா சுருதியுடன் வாசித்ததைப் பாராட்டி அந்த விழாவிற்கு வந்த திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் எனக்கு 'நாதஸ்வர இசை அரசு' என்ற பட்டத்தை வழங்கினார்.

என்னுடைய 16-வது வயதில் நகரம் ஜமீன்தார் அவர்களினால் பொன்னாடையும், நாதஸ்வர மன்னர் என்ற பட்டமும் பெற்றேன். தமிழ்நாடு அரசின் கலைமாமணி பட்டத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் மூலம் பெற்றேன். இதே போல் சென்னை முத்தமிழ்ப் பேரவையின் 'நாதஸ்வர செல்வம்' என்ற பட்டம் கலைஞரால் அளிக்கப்பட்டது. சென்னை முத்துத்தாண்டவர் விழாவில் 'தொல்லிசை வேந்தன்' என்ற பட்டமும் பெற்றேன்.

குடும்பம்

வழுவூர் சண்முக நட்டுவனாருடைய மகள்தான் என் மனைவி. எங்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். முதல் மகன் தற்போது வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். என் இரண்டாவது மகன் கோதண்டபாணி வயலின் நன்கு வாசிப்பார். அவர் லண்டனில் Trinity Music School என்னும் இசைப்பள்ளியை சுமார் 5 வருடங்களாக நடத்தி வருகிறார். என் மகள் சீதாலட்சுமி தற்போது தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் குரலிசை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்லாமல் பல மேடைகளில் தமிழிசைப் பண் பாடி வருகிறார். என்னுடைய கடைசி மகன் தற்போது சேலத்தில் உள்ள இசைக் கல்லூரியில் பணியாற்றுகிறார். நாதஸ்வரம் நன்கு வாசிப்பார்.
*****


ராஜரத்தினம் பிள்ளையின் பிடிவாதம்

வாத்தியக்காரர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் ராஜரத்தினம் பிள்ளை. அவர் தனது இருபதாவது வயதிலேயே நன்றாக வாசிப்பார். அவருக்குத் தவில் மலைக்கோட்டை பஞ்சாமி பிள்ளை. ராஜரத்தினம் பிள்ளை காலத்தில் ஒரு நாதஸ்வரம் தான் வாசிப்பார்கள். ஒருநாள் ராஜரத்தினம் பிள்ளை தனக்கு யார் முதன்முதலாக 100 ரூபாய் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் நான் வாசிப்பேன் என்று ஒரு வைராக்கியம் எடுத்திருந்தார்.

இந்தப் பிடிவாதத்தால் நாட்கள்தான் நகர்ந்தனவே தவிரப் பணம் வரவில்லை. ராஜரத்தினம் பிள்ளையின் பக்கத்து ஊர்க்காரர்கள் அந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு அவர் வாசிக்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள். வற்புறுத்திக் கேட்டும் அவர் 100 ரூபாய் இல்லாமல் வாசிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அப்போது ஒரு முஸ்லீம் நான் உங்களுக்கு 100 ரூபாய் தருகிறேன். வாசியுங்கள் என்று சொன்னார். அன்றுதான் முதன்முதலாக அவர் ஆடுதுறை பிள்ளையார் கோயிலில் வாசித்தார். மாமா என் தகப்பனாரிடம் ராஜரத்தினத்தின் வாசிப்பைக் கேட்கச் சொன்னார். அன்றுதான் ராஜரத்தினம் பிள்ளை தோடி ராகத்தை முதன் முதலாக வாசித்தார். அருமையாக இருந்தது அந்த நிகழ்ச்சி. அப்பா அவரை வருங்காலத்தில் சக்ரவர்த்தியாக இருப்பாய் என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.

*****


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!

மறக்க முடியாதது

ஒருமுறை என்னுடைய பத்தாவது வயதில் நான் திருவாரூருக்குச் செல்ல நேரிட்டது. நான் சென்ற அன்று திருவாரூர் கோவிலில் நாதசுவரம் வாசிக்கும் முறை எங்களுடையதாக இருந்தது. அன்று என்னுடைய தமையனார் எஸ். பாலசுப்பிரமணியனுக்கு ஜூரம் கண்டு படுத்திருந்தார். கோவிலில் அன்று சாயங்காலம் அவர் வாசிக்க வேண்டும். நான் ஊருக்கு வந்ததை அறிந்த அவர் என்னை வாசிக்க சொன்னார்.

நான் கோவிலுக்குச் சென்று சுமார் 1 மணி நேரம் வாசித்தேன். அன்று என் தந்தையாருக்குத் தவில் வாசித்த முத்துகண்ணு என்பவர் எனக்குத் தவில் வாசிக்க ஆரம்பித்தார். எனக்கு பயம் வந்துவிட்டது. இருந்தாலும் தைரியமாக வாசித்தேன். என் வாசிப்பைக் கேட்ட அவர், என்னை யார் என்று விசாரித்தார். நான் சொன்னதும், அவர் 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா' என்று கூறி என்னை வாழ்த்தினார்.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline