Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஆர். சூடாமணி
- மதுசூதனன் தெ.|மே 2005|
Share:
Click Here Enlargeதமிழ்ச் சிறுகதை வளர்ச்சியும் வளமும் ஆண் படைப்பாளர்களுக்கு மட்டுமே தொடர்புடையதல்ல. பெண் படைப்பாளர்களும் புதிய களங்கள், புதிய அனுபவங்களைக் கொடுத்துச் செழுமைப்படுத்தியுள்ளனர். இந்த வகையில் இருவர் கவனிப்புக்குரியவர்கள். ஒருவர் ராஜம் கிருஷ்ணன். மற்றவர் ஆர்.சூடாமணி. நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்விருவரின் ஆளுமை, படைப்புகள் யாவும் தனித்துக் கணிக்கப்பட வேண்டியவை.

தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் வணிக நோக்கமற்ற, இலக்கியத்துவம் மிகுந்த எழுத்துகளால் வாசகர்களின் நன்மதிப்பினைப் பெற்று இருப்பவர் ஆர். சூடாமணி. இவர் 1954-ல் 'சிறுகதை' எழுத்தாளராகத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கி, நாவலாசிரியராகப் பரிணமித்தார். இருப்பினும் சிறுகதை எனும் இலக்கிய வகையில் இவர் கொண்டுள்ள ஆர்வம் தனியானது. தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

இவரது கதைகள் எளிமையானவை. கதைமாந்தர்களின் நுண்ணிய உணர்ச்சி நிலைகளைச் சித்தரித்துக் காட்டுவதில் கைதேர்ந்தவர். உணர்வுநிலை யதார்த்த பூர்வமான சம்பவத்தினடியாகவே தோன்றும். சிறுகதையின் வடிவச் செழுமைக்காகச் சிலசமயங்களில் நிகழ்ச்சிக் கோவையைப் பின்னோக்கிய பார்வையில் சொல்ல வேண்டிய இடங்களில் கூட அந்த உத்தியை இயல்பாகவே கையாளும் திறன் வாய்க்கப் பெற்றவர்.

குடும்பம், சமூகம், மனிதர், வாழ்க்கை, முரண்கள், உறவு... எனத் தொடரும் சுழற்சியின் கதியை வெகு இயல்பாக நடத்திச் செல்வதில் இவரது படைப்பு நுட்பம் தனித்துவமானது. வாசிப்பு சார்ந்த வாசக அனுபவம் படைப்பாளியின் அனுபவத்துடன் சக உறவாடல் கொள்ளும் தன்மை கொண்டது.

ஆர். சூடாமணி 1954 முதல் படைப்பு வெளியில் தொடர்ந்து பயணம் மேற் கொண்டாலும், இவரது படைப்பு அனுபவம் ஒரே நேர்கோட்டுத் தன்மை கொண்டதல்ல. பன்முக அனுபவச் சேகரங்களின், மாந்தர்களின் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தும் திறன்கள் வாய்க்கப் பெற்றதாகவே உள்ளது.
பல்வேறு சமூக நிலைகளில் பழகும் பெண்களின் உணர்வுகளை மிக நுண்ணியதாக வெளிப்படுத்துவதில் சமர்த்தர். ஆண்மை / பெண்மை என்ற பண்பாட்டுப் பின்னணியில் இவரது படைப்புலகம் இயங்கும் நுட்பம் இன்னும் விரிவாக ஆயப்படவில்லை. ஆனால் இவரது படைப்புக்கள் யதார்த்தம், எளிமை, கதைகூறும் முறைமையில் தனக்கான தர்க்கம் ஆகியவற்றை முன்வைக்கிறது. அதனோடுதான் ஆர். சூடாமணியின் சமூகப்பார்வை வெளிப்படுகிறது.

சூடாமணியின் படைப்புகள் கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி முதலிய பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளன.

இவரது படைப்பாளுமையின் தனித் தன்மைகள் இன்றும் முழுமையாக ஆய்வு ரீதியில் நோக்கப்படாமலேயே உள்ளன. ஆனால் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் ஆர். சூடாமணியின் படைப்புலகு முக்கியம். இன்றும் அவரது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுடன் நாம் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வது இயல்பானது. அதைவிட அந்த எழுத்துகள் பற்றிய கணிப்பை அடைந்து கொள்வதும் முக்கியம்.

தெ. மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline