Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கிராண்ட் மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி
இவர் ஒரு பாரதி களஞ்சியம்! - சீனி. விசுவநாதன்
- காந்திமதி|ஏப்ரல் 2003|
Share:
Click Here Enlarge"இதோ ஒரு மனிதன்!

பாரதியையே படித்து, பாரதி நூல்களையே தொகுத்து, அச்சிட்டு, வெளியிட்டு, இரவு பகலாக அதே வேலையில் இருக்கிறான்... பாரதி எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில், எந்தப் பாடலை எழுதினான் என்று இந்த மனிதனைக் கேளுங் கள்!...இவன் ஒரு பாரதி லைப்ரரி!''- என்று அமரர் கண்ணதாசன் அவர்களால் பாரதி அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அதிசய மனிதர் திரு. சீனி. விசுவநாதன் அவர்கள். பாரதி ஆய்வாளர்கள் பலர் இருந்தாலும் அவர்களுள் சீனி. விசுவநாதன் அவர்களுக்கே முதலிடம். இவர் மகாகவி பாரதியின் முழுநேரப் பணியாளர். தன்னைப் பாரதி பணிக் கென்றே அர்ப்பணித்துக் கொண்டு இதுவரை இவர் செய்துள்ள சாதனைகளை எளிதில் மதிப்பிட முடியாது.

''நாட்டின் நலனுக்கே நாளெல்லாம் எழுதிவந்த
'பாட்டுக் கொரு புலவன்' படைப்பின் பான்மையினைக்
காட்டும் நூல்பல நீர்கண்டெடுத்தும், தொகுத்துமெழில்
கூட்டுமுயர் பாங்கினையான் கூறிடவும் வல்லேனோ?''

என்று இவரை பாரதியின் சகோதரர் திரு. சி. விசுவநாதன் பாராட்டியுள்ளார். பாரதியார் சம்பந்தமாக இவர் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புற்று விளங்குகின்றன. சமீபத்தில் பாரதியாரின் 121ஆவது பிறந்த நாளில் ''காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகள் - தொகுதி 3'' என்ற நூலை இவர் வெளியிட்டுள்ளார். இது தவிர ஆய்வு நோக்கில் பாரதி பற்றி இவர் எழுதிய நூல்கள் 12. அச்சில் வெளிவந்தும் கைப்பிரதிகளாகவும் இருந்த பாரதியின் படைப்புகளைக் கண்டறிந்து பதிப்பித்த நூல்கள் 9. பாரதியின் புகழ் பாடும் தொகுப்பு நூல்கள் 4. மலைப்புக்குரிய இந்த வேலையை 42 வருடங் களுக்கும் மேலாக, தனிமனிதனாகச் சாதித் திருக்கிறார். 68 வயதிலும் தளராமல் இன்னும் பாரதியின் படைப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் இவரை 'தென்றல்' இதழுக்காகச் சந்தித்தோம்.

கே: உங்களுடைய இளமைக் கால வாழ்க் கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப : நான் 1934ல் நவம்பர் 22ஆம் தேதி பரமத்தி வேலூரில் பிறந்தேன். தகப்பனார் பெயர் பி.வி.சீனிவாச அய்யர்; தாயார் பெயர் கமலாம்பாள். எனக்கு மூன்று சகோதரர்கள், நான்கு சகோதரிகள். 1935ல் தாலுகா போர்டு அலுவலகத்தில், ஓசூரில் வேலைபார்த்தபோது என் அப்பா ராஜினாமா செய்து விட்டார். அவர் மிகவும் கண்டிப்பானவர். கடமையில் கண்ணாக இருந்தவர். இதனால் அவரால் மற்றவர் களுடன் ஒத்துப்போகமுடியவில்லை.அவர் இறக்கும் வரை நாங்கள் ஓசூரில் இருந்தோம். என் ஆரம்பக் கல்வி அங்குதான் தொடங்கியது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது, (1944 நவம்பரில்) என் தகப்பனார் திடீரென்று காலமானதால், என் மூத்த சகோதரர் ராமலிங்கம் வேலை பார்த்த சேலத்திற்கு வந்தோம். படிப்பு தடைபட்டதால் 1945, ஜூன் மாதம் சேலம் முனிசிபல் பள்ளியில் மீண்டும் நான்காம் வகுப்பில் சேரவேண்டியதாயிற்று. அந்தப் படிப்பும் எனக்கு ஓராண்டே தொடர்ந்தது. 1946ல் என் சகோதரியின் திருமணத்திற்கு வந்திருந்த என் தாயாரின் சகோதரி (என் சித்தி) அப்போதைய குடும்ப நிலையை உத்தேசித்து என்னைத் திருச்சிக்கு அழைத்துச் சென்று படிக்க வைக்க விரும்பினார். அதனால் 1946ல் திருச்சி உருமு தனலட்சுமி வித்தியாலயா ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். S.S.L.C.வரை அந்தப் பள்ளியிலேயே படித்தேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை யில்லை. பத்திரிகைத் துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பதே இலட்சியம். அவ்வப்போது ஆசிரியர் பகுதிக்குக் கடிதம் எழுதிப் போடுவேன். அவை பிரசுரமாகும். S.S.L.C. படிக்கும் சமயத்தில் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அதனால் கழகப் பிரமுகர்களுடன் ஓரளவு தொடர்பு ஏற்பட்டது. கழகத் தளபதிகளில் ஒருவரான சின்ன அண்ணாமலை சென்னையில் 'சங்கப் பலகை' என்றொரு வாரப் பத்திரிகையை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகைக்கு நான் துணுக்குகள் எழுதி அனுப்புவேன். அவற்றைப் பிரசுரித்து சின்ன அண்ணாமலை என்னை உற்சாகப்படுத்துவார். ஒரு கட்டத்தில், 'சங்கப் பலகையில்' பணியாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று 1955 ஆம் ஆண்டு சென்னை வந்த நான், நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டேன்.

பத்திரிகையை இடையிலேயே நிறுத்திவிட்டு, தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டதால், என்னைப் பதிப்பகத்துறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி அங்கு பணி புரியுமாறு பணித்தார். எனக்கும் பதிப்புத் துறையின் மீது நாட்டம் ஏற்பட்டது. சில காலம் பதிப்பகங்களிலேயே பணியாற்றினேன். மனசுக்கு உகந்த பணியாக இருந்த காரணத்தால் வேறு வேலை தேடவில்லை. பின்னிட்டுச் சொந்தமாகவே நூல்களை வெளியிட முன்வந்தேன்.

கே: உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப : 1962 மே மாதம் என் சகோதரியின் மூத்த மகளான சுலோசனாவை மணந்தேன். எங்களுக்கு நான்கு பெண்கள், ஒரு பையன். பெண்கள் நான்குபேருக்கும் திருமணமாகி விட்டது.

கே: உங்கள் பணிக்கு குடும்பத்தார் எந்த வகையில் ஆதரவாக இருக்கிறார்கள்?

ப : முழு ஆதரவு தருகின்றனர். வாய் முணுமுணுத்தல் இன்றி, இட்ட பணிகளை மகிழ்ச்சியோடு இன்றும் செய்து வருகின்றனர். என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த அளவுக்குப் பாரதி நூல் பதிப்புப் பணிகளைச் செய்திருக்க முடியாது. இந்த ஒத்துழைப்பு எனக்குக் கிடைத்த வரம் என்றே சொல்வேன்.

கே: பாரதி மீதான ஈடுபாட்டிற்குக் காரணம் என்ன?

ப : பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மாணவர்கள் சங்கம் என்று ஓர் அமைப்பு இருக்கும். சனிக் கிழமைகளில் இலக்கிய சம்பந்தமான கூட்டங்கள் நடைபெறும். மேல்வகுப்பு மாணவர்கள் தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, இலக்கியத்திற்குத் தொண்டு செய்த சான்றோர்கள் பற்றியோ பேசுவார்கள். சில சமயம் திருச்சியில் அப்போது பிரபலமாக விளங்கிய ஐயன் பெருமாள் கோனார், பட்டுச்சாமி ஓதுவார், கவிஞர் திருலோக கீதாராம் போன்ற தமிழ்ப்பெருமக்களை அழைத்துச் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார், பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வேதநாயகம் பிள்ளை போன்றவர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெறும். இதனால், எனக்கு அப்போதே இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பாட நூல்களில் பாரதியின் பாடல்களைப் படித்த காரணத்தால், என்னையறியாமல் பாரதிபேரில் ஈடுபாடு கொண்டேன். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பாடபுத்தகம் வாங்க புத்தகக் கடைக்குச் சென்றேன். அப்போது கடையில் வைக்கப் பட்டிருந்த 'பாரதி பிறந்தார்' என்ற நூல் கண்ணில் பட்டது. நூலின் ஆசிரியர் கல்கி. வெளியிட்டவர் சின்ன அண்ணாமலை. பாட புத்தகத்திற்குப் பதில் பாரதியின் புத்தகத்தை வாங்கிவிட்டேன். என்னுள் பாரதி சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல் அதுதான். அன்று முதல் எனக்குப் பாரதி நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற தாகம் வந்தது. பள்ளி நூலகத்திலிருந்தும், பொது நூலகத்திலிருந்தும் பாரதி நூல்களைத்தேடி எடுத்துப் படித்தேன். பின்னாளில் சின்ன அண்ணாமலை அவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றோ, பாரதி நூல்களை தொகுத்துப் பதிப்பிக்கும் பணியில் நானே ஈடுபடுவேன் என்றோ கனவிலும் நினைக்கவில்லை.

கே: பாரதி நூல்களை மட்டுமே பதிப்பித்து வெளியிடுகிறீர்களே! வேறு நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் எண்ணம் இல்லையா?

ப : ''வேலை வணங்குவது எனக்கு வேலை'' என்பார்கள் முருக பக்தர்கள். நானோ பாரதிக்கு அடிமை; அதனால், பாரதியைப் பணிந்து அவர்தம் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதை என் வேலையாகக் கொண்டுள்ளேன். பாரதி இலக்கியங்களே இன்னும் பதிப்பிக்கப்பட வேண்டியவை நிறைய இருக்க, வேறு நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் நான் ஏன் ஈடுபடவேண்டும்.?

கே: ஆரம்ப காலத்தில் எந்த மாதிரியான பாரதி நூல்களை வெளியிட்டீர்கள்?

ப : 1962ல் நான் வெளிட்ட முதல் நூல் ''தமிழகம் தந்த மகாகவி''. மகாகவியின் 81-வது பிறந்த நாளையொட்டி பாரதியின் அருமை பெருமைகளை எடுத்துக் காட்டும் தொகுப்பு நூலாக அது அமைந்தது. என்னுடைய முதல்நூலே தொகுப்பு நூல் என்றாலும், பாரதிதாசன், ராஜாஜி, நெல்லையப்பர் சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர் போன்ற அறிஞர் பெருமக்களின் பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மெர்குரி புத்தகக் நிறுவனத்துக்காக என் தேடலில் கிடைத்த பழைய பதிப்புகளைக் கொண்டு, தேவையான பாட பேதங்களை அடிக்குறிப்புகளாக இட்டு, ''பாரதியார் கவிதைகள்'' தொகுதியைத் தயாரித்தேன்.

1977-1979க்குமான இடைப்பட்ட காலப் பகுதிகளில் பாரதியாரின் கட்டுரைகளில் சிலவற்றைத் தெரிந்தெடுத்துச் சிறுசிறு நூல்களாக வெளி யிட்டேன். 1979ஆம் ஆண்டில்தான் திட்டமிட்டு, முறையாகப் பாரதி நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டேன். பாரதியின் இலக்கியச் செல்வங்களைத் தேடிப் பெறவும் முயற்சிகளை மேற்கொண்டேன்.

கே: தொடர்ந்து தாங்கள் வெளியிட்ட நூல்கள் எவை எவை?

ப : பாரதியின் நூல் வடிவம் பெறாத கட்டுரைகளைத் தேடிப் பெற்றுப் பிரசுரம் செய்ய ஆசைப்பட்டேன். நான் படித்த பாரதி தொடர்பான நூல்களிலும் 'குமரிமலர்','தாமரை' போன்ற இதழ்களிலும் பாரதியார் ஆசிரியராக இருந்த ''சக்கரவர்த்தினி'' மாத இதழைப் பற்றிய தகவல்களைக் கண்டேன். 'குமரிமலர்' இதழில் பிரசுரமான சில கட்டுரைகள் பார்த்தேன்.''சக்கரவர்த்தினி''தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பத்திரிகை என்று அறிந்தேன். பழைய பேப்பர் கடைக்காரர்களிலிருந்து மூர் மார்க்கெட் புத்தக வியாபாரிகள் வரை எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் சொல்லி வைத்தேன். குளித்தலை ''தமிழ் கா.சு. நினைவு நூலக'' நிறுவனர் பொறுப்பாளர் திரு. இளமுருகு பொற்செல்வி அவர்களிடம் ''சக்கரவர்த்தினி'' இதழ்கள் இருப்பதாக அறிந்தேன்.

முன்பின் அறிமுகமில்லாத அவரிடம் தொடர்பு கொண்டு பத்திரிகைப் பிரதிகளைப் பெற்று, அதிலிருந்த பாரதி கட்டுரைகளைக் கொண்டு 1979ல் பாரதி நினைவு நாளன்று ''மகாகவி பாரதியின் 'சக்கரவர்த்தினி' கட்டுரைகள்'' என்ற நூலைப் பிரசுரித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த பாரதி இலக்கியத்திற்கு ஒரு புதிய வரவாகவே இந்த நூல் புகழ் பெற்றது.

இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் ''மும்மணிகள்'' என்ற நூலைப் பிரசுரித்தேன். இந்த நூல் கட்டுரைகளைப் பாரதியின் இளைய சகோதரர் சி. விஸ்வநாத ஐயர் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று நூலாக்கம் செய்தேன்.

பாரதிநூல்கள் பதிப்புப் பணிகளில் ஒத்துழைத்த நண்பரும் உறவினருமான திரு டி.வி.எஸ் மணி ஐயர், ஏற்கனவே மெர்க்குரி புத்தகக் கம்பெனிக்காகத் தயாரித்து அளித்த கவிதைகள் தொகுதியைத் திருத்தி விரிவாக்கம் செய்யப்பட்ட பதிப்பாகக் கொண்டுவர விரும்பினார். அதற்காக மிகவும் சிரமப்பட்டு 1908 முதல் 1954 வரையிலான பதிப்புகளில் கிடைத்த நூல்களைப் பெற்று, அவற்றில் பதிப்பிக்கப் பெற்றிருந்த பல செய்திகள், முன்னுரைகள், வரலாற்றுக்குறிப்புகள், அகச்சான்றுகள் ஆகிய வற்றைத் திருத்திய பதிப்பில் தந்தேன். மாதிரிக்காக பாரதி கையெழுத்து வடிவிலான பாடல்களையும் நகல் எடுத்து இணைத்தேன். இந்தப் புதிய மறு அச்சுக்கான வாழ்த்துரையைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களிட மிருந்து பெற்று, அவருடைய கையெழுத்து வடிவிலேயே பதிப்பித்தேன். பதிப்பை கவிஞர் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார். சீரிய பதிப்பாய்க் கொணர்ந்ததால் என்னைக் ''காரிய விசுவநாதன் கண்ணியர்'' என்றும் போற்றினார். அது எனக்குப் புதிய தெம்பை அளித்தது.

இந்த நிலையில், மகாகவிபாரதியின் நூற்றாண்டு சமயத்தில், வெவ்வேறு காலகட்டங்களில் நான் சேகரித்த தகவல்களையும், நண்பர்கள் அளித்த குறிப்புகளையும், 1908-1980 க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வெளிவந்த பாரதியின் நூல்கள், விமர்சன நூல்கள் மற்றும் ஆய்வு நூல்கள் - ஆகியவை பற்றிய விவரங்களையும் இணைத்து நூல் தொகுதியை வெளியிடத் திட்டமிட்டேன். என் திட்டத்தை நண்பர் டி.வி.எஸ். மணி ஐயரும் ஏற்றுக் கொண்டார். 1981 ஏப்ரல் மாதம் ''மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை'' என்ற பெயரில் நூல் வெளிவந்தது. முதன்முதலில் வெளியிடப்பட்ட பாரதி நூற்கோவை இதுதான். நவீன ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு நூல்களை விவரிக்கும் பட்டியல்களும், விவரணத் தொகுதிகளும் இன்றி யமையாதன என்பதைக் கருத்தில் கொண்டே இது தொகுக்கப்பட்டது.

என் தேடலில் கண்டறிந்த பாரதி தொடர்பான பத்திரிகைகளிலிருந்து 1982-1985 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ''கட்டுரைக்கொத்து'', ''மணிவாசகம்'', ''பாரதியின் 'இந்தியா' கட்டுரைகள்'' என்ற மூன்ற நூல்களை வெளியிட்டேன். இவைதவிர ''மறுமலர்ச்சி கவிஞர்'', ''மகாகவிபாரதி - சில புதிய உண்மைகள்'', ''பாரதி ஆய்வுகள் - சில சிக்கல்கள்'' ஆகிய தலைப்புகளில் நான் எழுதிய நூல்களும் வெளிவந்தன. பாரதி செல்வங்களுடன் ஆய்வுக்கு வழிவகுக்கும் நூல்களையும் எழுதிப் பிரசுரம் செய்திருக்கிறேன். தம் இலக்கியப் பணிகளால் மகாகவிபாரதியைத் தமிழ்நாட்டாருக்குக் குன்றாவேகத்துடன் நினை வூட்டிக் கொண்டிருந்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் 'ஆனந்தவிகடன்' இதழில் எழுதிய கட்டுரைகளைக் கொண்டு 'புதுயுகக் கவிஞர்' என்ற அரிய நூலையும் நான் பதிப்பித்து வெளியிட்டேன்.

கே: இப்பணியில் ஏதேனும் பிரச்சினைகள், சிக்கல்களை எதிர் கொண்டீர்களா?

ப : பிரச்சினைகளும், சிக்கல்களும் இல்லாமலா இருக்கும்! தேடல் முயற்சிகளை மேற்கொள்ளும் போது பொறுமை தேவை. பொறுமையை இழந்தால், மேற்கொண்ட காரியம் கைகூடாது, பாரதி இலக்கியங்களைத் தேடிச் செல்வது, புதையலைத் தேடிச் செல்வதற்கு நிகரானது. பாரதி தொடர்பான இதழ் பிரதிகளை வைத்திருப்போரை அணுகினால், உடனே கிடைக்காது. அலைக்கழிப்பார்கள். அவகாசம் இல்லை; பழுதடைந்து உள்ளன; பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கிறேன்...என்று ஏதேதோ சொல்வார்கள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டும், சகித்துக் கொண்டும் மிகுந்த பொறுமையுடன் தேடல் முயற்சிகளில் தொடர்ந்து சோர்வடையாமல் ஈடுபட்டேன்.

கைபட்டாலே நொறுங்கிப் போகும் மிகப்பழைய பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்த பாரதியின் எழுத்துகளை மிகுந்த கவனத்துடன் பிரதி செய்ய வேண்டியிருந்தது. சிறிய எழுத்துகள் - சிதைந்த நிலையில் இருந்து எழுத்துகள் - பூதக்கண்ணாடியின் உதவி கொண்டு சரிசெய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலப் பத்திரிகைகளில் வார்த்தைகள் பிரிவுபட்டு இருந்ததால், அவற்றைப் பொருள் காண்பதிலும் சிரமம் இருந்தது. எடுத்த பிரதியைச் சரி பார்ப்பதிலும், மைக்ரோ - பிலிம்சுருளைப் பார்ப்பதிலும் கூட சிரமங்கள் அதிகம்தான்.

காலவரிசையில் பாரதியின் படைப்புகளைப் பதிப்பிக்க முற்பட்டபோதுதான் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் நான் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 'சுதேசிமித்திரன்', 'சக்ரவர்த்தினி' ஆகிய பத்திரிகைகளில் பாரதியின் பெயர் படைப்புகளில் இடம்பெற்று இருந்ததால், மேற்குறித்த பத்திரிகைகளைப் பொறுத்தவரை எனக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லை. 'இந்தியா' பத்திரிகையில் பாரதியின் பெயர் பொறித்த படைப்புகள் ஒரு சிலவே இருந்தன. பத்திரிகை ஆசிரியராகவும் பாரதியின் பெயர் இல்லை. ஆனால், அரசுக்கு அளிக்கப்பட்ட படிவத்தில் பாரதியின் பெயர் ஆசிரியர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஒருசில பாடல்களிலும், பட்டினத்தார் வரலாற்றுச் சொற்பொழிவிலும், 'ஸ்வர்ணகுமாரி' கதையிலும், தவிர பிறபடைப்புகளில் பாரதியின் பெயர் இல்லை.

பெயர் இல்லை என்ற காரணத்தால், அவை அவர் எழுதியவை அல்ல என்று சொல்லி ஒதுக்கமுடியாது. உதாரணமாக 'சுபேதாநந்த ஸ்வாமிகள் மீது ஸ்தோத்திரக் கவிகள்' என்று பிரசுரமான பாடல்களின் அடியில் 'ஓர் வேதாந்தி' என்று மட்டுமே பெயராக இடம் பெற்றிருந்தது. 'வேதாந்தி' என்ற புனைப் பெயரில் பாடல்களைப் புனைந்தவர் யாராக இருக்க முடியும் என்பதைக் கண்டறியும் முயற்சியில் நான் ஈடுபட்டேன். என் முயற்சிக்கு1909ல் பாரதியே பதிப்பித்த 'ஜன்மபூமி' என்கிற நூல் உதவியது. அந்த நூலில் இந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது. இருந்தாலும் என் சந்தேக நிவர்த்திக்காக மூலச்சான்றுகளைத் தேடினேன். வேறு எவரோ எழுதிய பாடல் பாரதி பெயரால் வெளியிடப் பட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான் தேடினேன்.

இதன் தொடர்பாக, இன்னமொரு தகவலை விளக்கிச் சொல்வது பொருத்தம் என நினைக்கிறேன். பாரதி நூற்றாண்டு நெருங்கிய தருணத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. திரு. ம.பொ.சி. அவர்கள் தம்முடைய 'செங்கோல்' பத்திரிகையில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார். அப்போது அவர் தம் கட்டுரையில் பாரதியின் பெயரால் 3.1.1932 'சுதந்திரச் சங்கு' பத்திரிகையில் 'சுதந்திரப் போர்' என்னும் தலைப்பிட்டிருந்த பாடல் இருந்ததை வெளியிட்டிருந்தார். அதில் ம.பொ.சி. தன் கருத்தாக, ''இந்தப் பாடல் அது வரையில் வெளியாகியிருந்த பாரதியார் பாடல் தொகுப்பு நூலிலே இடம் பெற்றதாகும். அதற்குப் பின்னும் இதுவரை எந்தப் பதிப்பிலும் இந்தப் பாடல் காணப்படவில்லை. இதுபற்றி குறிப்பு எதையும் 'சுதந்திரச் சங்கு' தரவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் போது பாரதியார் இதனைப் புனைந்திருக்கலாம்'' என்று குறிப்பிட்டார். பின்பு அவருக்கே சந்தேகம்வந்து, சிலருடைய அபிப் பிரயாத்தை அறிய விரும்பினார். இதற்காக வாதப்பிரதிவாதங்கள் நடைப்பெற்றன. பாரதி பாடாதது என்று வாதிட்டவர்களும் தக்க சான்றுகளைக் காட்டவில்லை. இந்த நிலையில், நானும் உண்மையைக் கண்டறிவதில் ஆவல் கொண்டேன். உண்மையைக் கண்டறிய மேற் கொண்ட முயற்சிகளுக்கு முன்னே, பாடல் பற்றிய ஓர் அடிப்படைச் செய்தியைத் தெரிவிப்பது பிரச்சினை யைப் புரிந்து கொள்ள உதவும் என்பதாகக் கருதுகிறேன். ('பந்த முற்றெத்தனைநாள்' என்று தொடங்கும் பாடலின் சரியான - பாரதி ஆக்ரமப்பதிப்பில் உள்ளபடி ''புடைபெயர் பாட்டு'' என்பதாகும். ''சத்தியப்போர்'' என்பதன்று.)

பின்னிட்டு, 1973ஆம் வருடத்தில் 'பாரதியார் கவிதைகள்' தொகுப்பைப் பதிப்பித்த 'பாரதி பிரசுராயத்தார் இந்தப் பாடல் பாரதி பாடாதது என்று குறிப்பு தந்துவிட்டு, பின்னிட்ட பதிப்புகளில் பாடலைச் சேர்க்கவில்லை. நீக்கியதற்கான ஆதாரத்தைப் பாரதி பிரசுராலயத்தாரும் குறிப்பிடவில்லை. அப்போது, நான் மானாமதுரையில் இருந்த என் ஞானாசிரியர் சி. விசுவநாத ஐயரிடம் கேட்டபோது, ''மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பின்னால் நினைவுபடுத்திச் சொல்ல இயலவில்லை. தகுந்த காரணம் இல்லாமல் பாடலை நீக்கி இருக்க மாட்டோம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்'' என்று தெரிவித்தார்.

பாடலின் நம்பகத்தன்மையை அறிய நானும் விடாமுயற்சிகளை மேற்கொண்டேன். பல ஆண்டுகளாக எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், மனம் சோர்ந்து போய் விடவில்லை. 1991ல்தான் பாடல்பற்றிய உண்மையை அறிய முடிந்தது. 1981ல் எழுந்த சர்ச்சைக்கு 91ல் ஆதாரப்பூர்வமான நம்பகமான - தகவல் கிடைத்தது. இந்த ஒரு பாடலுக்காக நான் தேடிச் செலவிட்ட ஆண்டுகள் பத்து. கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியார் அவர்களிடமிருந்த செட்டிநாட்டுப் பத்திரிகைப் பிரதிகளை ஆராய்ந்த போது 'தனவைசிய ஊழியன்' இதழில் 1922ஆம் ஆண்டிலேயே செல்லம்மா பாரதி அவர்களே 'புடைபெயர் பாட்டு பாரதி பாடாதது' என்று அறிக்கையிட்டுத் தெரிவித்திருந்த செய்தியைக் கண்டேன்.

என் சந்தேக நிர்வத்திக்காகவே நான் தேடியலைந்தேன். இப்படி எத்தனையோ தகவல்களை - பாரதி தேடலில் எனக்கு ஏற்பட்ட சிக்கல்களை - அடுக்கிக் கொண்டே போகலாம்.

கே: இம்மாதிரியான தேடலில் கண்டறிந்த பாரதி பொக்கிஷங்கள் எவை எவை?

ப : ஏராளமான பொக்கிஷங்கள் என் தேடல் முயற்சியில் கண்டறிந்து, பதிப்பிக்கப் பெற்றுள்ளன. என் முன்னோடிகளுக்குக் கிடைக்காத அரிய பொக்கிஷங்கள் எனக்குக் கிடைத்தன. எந்தவொரு பதிப்பிலும் இடம் பெறாத, பலரும் அறிந்திருந்த, மற்றவர்களின் தேடலில் கிடைக்காத, பாடல்களை நான் கண்டறிந்து பாரதிய உலகிற்கு வழங்கினேன். 'கவிதாதேவி அருள் வேண்டல்' பாடலின் முழு வடிவத்தையும், 'குருகோவிந்த ஸிம்ஹவிஜயம்' என்ற பாடலுக்கான பொருள் விளக்கத்தையும் 'திசை' என்ற பாடலையும், 'அல்லா' பாடலில் விடுபட்டுப்போன ஒரு காரணத்தையும், 'ஸ்ரீகபிலர் அகவல்' என்ற பாடலின் பகுதியையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பாரதியின் பெயரும் புகழும் நாளும் நின்று நிலைக்கவேண்டும் என்கிற ஆசைப்பெருக்கால் மேற்கொண்ட முயற்சிகளே என் தேடல் பணிகளின் நோக்கம். படாதனபட்டு, காலமெல்லாம் தேடிச் சேகரம் செய்து வைத்திருந்த பாரதி பொக்கிஷங் களைக்கொண்டு நான் கால வரிசையில் தயாரித்தளித்த பாடல்களைத்தான் தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழகம் 'பாரதி பாடல்கள்' தொகுப்பை ஆய்வுப் பதிவாக வெளியிட்டது.

கே: பாரதி பாடல் தொகுப்புப் பதிப்பால் தங்களுக்கும் பல்கலைக்கழகத்திற்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டதாகப் பாரதி படைப்பு முதல் தொகுதியில் சொல்லியிருக்கிறீர்கள்... அப்படியென்ன மனத்தாங்கல் ஏற்பட்டது?

ப : மனத்தாங்கல் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. கைப்பிரதி தயாரித்து அளித்த நிலையில் நடைபெற்ற கூட்டங்களுக்கும், அதன் ஆரம்பக் கூட்டங்களுக்கும் பங்கு கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட நான் பதிப்பு முறை பற்றி என் கருத்துகளைத் தெரிவித்தேன். ஆனால், என்ன காரணத்தாலோ அதற்குப் பிறகு நடைபெற்ற கூட்டங்களுக்கு என்னை அழைக்கவில்லை. கூட்டங்கள் நடைபெற்ற விவரம் கூடத் தெரிவிக்கப்படவில்லை. பதிப்புக்குழு உறுப்பினர் என்ற முறையில்கூடக் கூட்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் கூட எனக்கு அனுப்பப் படவில்லை.

இந்த நிலையில் பாடல் தொகுதி அச்சாவதாகவும், பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றிருப்பதாக அறிந்தேன். இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது. செய்தியை அறிந்ததும் உடனே பல்கலைக் கழகத்துடன் கடிதத் தொடர்பு கொண்டேன். பதிலே இல்லை. மாறாக, என்னால் எழுதப்பட்ட குறிப்புகள் பதிப்பாசிரியர் பெயரால் அச்சாவதை அறிந்து மன உளைச்சல் கொண்டேன். இதனால் கொதிப்படைந்த நான், பதிப்பில் என்னுடைய பங்களிப்பை முறையாகத் தெரிவித்து, பணிக்கான ஊழியத்தை வழங்குமாறு கடிதமூலம் புலப்படுத்தினேன். இதற்கும் பதில் இல்லை. இந்த நிலையில் பல்கலைக்கழக 'செய்திமடல்' வாயிலாக கவிதை நூல் வெளிடப்பட இருப்பதை அறிந்து, இதற்கு மேலும் சும்மா இருப்பது சரியில்லை என்று, சற்று கடுமையான சொற்களைக் கொண்டு கடிதம் எழுதினேன். இதற்குப் பிறகுதான் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை சற்று அசைந்து கொடுத்தது. கூட்டம் கூட்டப்பட்டது. என்னைச் சமாதானப்படுத்தினர். அடுத்த பதிப்பில் எல்லாம் சரியாகிவிடும் என்றனர். ஊதியம் என்று கேட்டதற்கு பார்த்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இக்கூட்டம் கூட்டப்படுவதற்கு எனக்கு வந்த கடிதமொன்றில், பல்கலைக்கழகம் என் பணிக்கு அளிக்க முன்வந்த தொகை எவ்வளவு தெரியுமா? பக்கத்திற்கு இரண்டு ரூபாய்! ஆச்சரியமாக இருக்கிறதா! என்னுடைய பதிப்புப் பணிகளைத் துறந்து இரவு பகல் கண்விழித்து சுமார் மூன்று ஆண்டுகள் உழைத்த உழைப்பிற்கு பல்கலைக்கழகம் தர முன்வந்த தாராளத் தொகை பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் என்றால் பாரதி நூல் பதிப்புப் பணிகளை எந்த அளவுக்கு எடைபோடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வழியாகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றுக் கொண்டேன். காலங்கடந்த நிலையில் பாரதிபாடல்கள் நூல்பதிப்பைப் பொறுத்தவரையில், பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறை சரியானபடி என்னைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆரம்பக் கூட்டங் களில் வாக்களித்தபடி கைப்பிரதியைத் தயாரித்துத் தந்தவன் என்ற முறைக்காகக்கூட அச்சுப்படிகள் என் பார்வைக்குஅனுப்பப்படவில்லை.

கே: உங்கள் மனத்தாங்கல் புரிகிறது. பார்வைக்கு அச்சுப்படிகள் அனுப்பவில்லை என்று ஏன் குறைபட்டுக் கொள்கிறீர்கள்?

ப : என் குறைபாட்டுக்கு காரணம் உண்டு. என் பார்வைக்கு அச்சுப்படிகளை அனுப்பியிருந்தால், கைப்பிரதி தயாரித்த காலத்தில் விடுபட்டுப் போன புதிய செய்திகளைச் சேர்த்திருப்பேன். பதிப்பு செம்மையாக அமையப்பாடுபட்டிருப்பேன். பதிப்பில் சில நூதன உத்திகளைக் கையாண்டிருப்பேன். குறைந்தபட்சம் பிழைகள் அதிகம் இல்லாமலாவது பார்த்துக் கொண்டிருப்பேன். அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள், பாரதி நூல்கள் பதிப்பு முறையாக, பிழையின்றிப் பதிப்பிக்கப்பட வேண்டும்'' என்று தமது வாழ்த்துரையில் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவர் விரும்பியதுபோல் பதிப்பு அமையவில்லை. பல்கலைக்கழகப் பதிப்பு என்றால், எப்படி அமையவேண்டுமோ இந்தப் பதிப்பு அப்படி இல்லை. பதிப்பின் இறுதியில், நான்கு பக்கங்களுக்கு பிழைதிருத்தம் போட்டுவிட்டு, ''பிழை திருத்தம் போட்டுக் கொண்டு இதனை கிழித்தெறிக'' என்ற ஆணையிட்டிருந்தார்கள். நான்கு பக்கங்களில் பிழைதிருத்தம் போட்டிருந்தும் கூட காலப்பிழைகள், வரலாற்றுச் செய்திகளில் முரண்பாடுகள், தவறான தகவல்கள் எல்லாம் தாராளமாகவே அந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆய்வுப் பதிப்பில் செய்தி களைத் தரும் போது, செய்திகளின் நம்பகத் தன்மையை மிகுந்த எச்சரிக்கையுடனும், தக்க ஆதராங்களுடனும் ஒப்புநோக்கிப் பதிப்பிக்க வேண்டும். செய்திகளில் முரண்பாடுகள், பிழைகள் தலைகாட்டுமானால், அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பு பதிப்பாசிரியரையே சாரும். பாரதிபாடல் - ஆய்வுப் பதிப்பு நூலில் செப்பம் செய்யப்படவேண்டிய - திருத்தம் செய்யப்பட வேண்டிய பகுதிகள் பலஉள்

கே: பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள்... நீங்களும் எழுதி இருக்கிறீர்கள்... நீங்கள் வரலாறு எழுதக் காரணம் என்ன? உங்கள் வரலாற்று நூல் எந்த வகையில் சிறந்தது?

ப : பாரதிக்கு எண்ணற்ற வாழ்க்கை வரலாற்று நூல்கள் வந்துள்ளன என்பது மெய்தான். அவரவர் தாங்கள் தரிசித்த பாரதியைத் தங்கள் தங்கள் நூல்களில் வெளிப்படுத்தவே செய்துள்ளனர். இருப்பினும் பல நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களும் நிகழ்ச்சிக் குறிப்புகளும் குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டு பண்ணுவதாகவே அமைந்துள்ளன.
முன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக் கணக்கிட்டுப் பிழைகளை நீக்கியும், 'புரளிக் கதை' களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும், இயன்ற வரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்கவேண்டும் என்று என்னுடைய ஞானாசிரியர் துடியாய்த் துடித்தார். என்னுடைய ஞானாசிரியரைக் கொண்டே வரலாற்று நூலை வெளிக்கொணர ஆசைப்பட்டேன். சந்தப்பச் சூழ்நிலைகளால்அந்தப் பொறுப்பு எனக்கே வாய்த்தது. ஏற்கெனவே என் வசம் இருந்த தகவல்களுடன், வேறு பல செய்திகளையும் உறுதி செய்து கொள்வதற்கான ஆதாரங்களைத் தேடிப் பெற்றேன். அரசு ஆவணங்களில் இருந்த, பாரதி தொடர்பான செய்திகளை ஒழுங்குபடுத்திக் கொண்டேன்.

ஆரம்ப கால நூல்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்தி, நூலை எழுத முற்பட்டேன். ஆதாரபூர்வமான - திருத்தமான நிகழ்ச்சிக் குறிப்புகளையே நான் என் நூலில் தர விரும்பினேன். மற்றும், பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு விளக்கம் பெறாதனவும், இடம் பெறாதனவுமான செய்திகளுக்கு முதன்மை தரவும் ஆசைப்பட்டேன். இந்திய தேசிய வரலாற்றில் பாரதியின் பங்களிப்பு கணிசமானது என்பதை எடுத்துக்காட்டவும் விரும்பினேன். பல்வேறு தரப்பட்ட செய்திகளின் துணைகொண்டே நான் பாரதி வரலாற்று நூலை எழுதி முடித்தேன்.

கே: நீங்கள் எழுதியுள்ள பாரதி வரலாற்று நூலில் பாரதி - பாரதிதாசன் சந்திப்பு தொடர்பான தகவல்கள் சொல்லப்படவில்லையே! அதற்குக் காரணம் என்ன?

ப : பாரதி தொடர்பான செய்திகளில் பல இன்னமும் தெளிவுபெற முடியாத நிலையில் உள்ளன. சரிவரவும், வரன்முறையாகவும் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்த தகவல்களும் உறுதி செய்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. அந்த வகையில், நான் மிகமிக முக்கியமானதாகக் கருதுவது பாரதி - பாரதிதாசன் இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி பற்றியதேயாகும்.. இவ்விருவருடைய சந்திப்புப் பற்றிய காலக்குறிப்பை இன்றளவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கணிக்க இயலவில்லை என்பதே என் கருத்து.

சந்திப்பு பற்றிய தகவல் பாரதியின் 'தராசு' நூலில் ஒருவிதமாகவும், 'பாரதிதாசன் கவிதைகள்' நூலில் வேறுவிதமாகவும் காணப்படுகிறது. பாரதியின் தராசு1914-15க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உருவான படைப்பாகக் கருதப்படுகின்றது. இந்தப் படைப்பில்தான் பாரதிதாசனைப் பற்றிய செய்தி காணப்படுகின்றது.

ஆனால், பாரதியை இன்னாரென்று அறியாத நிலையில், வேணுநாயக்கரின் நிகழ்ச்சியில்தான் அவரைத் தெரிந்து கொண்டதாகப் பாரதிதாசன் 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஹிந்துஸ்தான் பாரதி மல'ரில் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கிறார்.

வேணுநாயக்கருக்கு எந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றது? என்பதைக் கண்டறிந்தால்தான் இவர்களது சந்திப்பின் காலத்தைச் சொல்ல முடியும். மேலும் வேணுநாயக்கர் திருமண நிகழ்ச்சியில் பாரதிதாசன் பாடியதாகச் சொல்லும் 'வீர சுதந்திரம் வேண்டிநின்றார்' என்ற பாட்டு 1908 ஜனவரியில் வெளிப்பட்ட 'ஸ்வதேச கீதங்கள்' முதல் பாகத்திலும், 'தொன்று நிகழ்த்த தனைத்தும்' என்ற பாடல் 1909 ஜனவரியில் வெளியான ''ஜன்மபூமி'' (ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம்) நூலிலும் காணப்படுகின்றன.

இங்ஙனமாக, ஒரு செய்தியில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும்போது, தீரத்தெளியாமல் சந்திப்பு நிகழ்ச்சிச் செய்தி என் நூலில் இடம் பெறாமல் தவிர்த்து விட்டேன். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். பாரதிக்குத் தாசனாக இறுதிவரை உறுதியாக இருந்து வாழ்ந்து காட்டியவர் ஒருவர் உண் டென்றால், அவர் பாரதிதாசன் தான்!

கே: கால வரிசையில் பாரதியாரின் படைப்பு களைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு எப்போது ஏற்பட்டது? அப்படி யொரு எண்ணம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்ன?

ப : ''மகாகவி பாரதிநூற்பெயர்கோவை'' நூலைத் தொகுக்கும் காலத்தில் ''பாரதியைக் காலவாரியாக ஆராய்வது நல்லது'' என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அது சமயம் நான் படித்த நூல்களில் எல்லாம் முரண்பாடான செய்திகள் வரலாற்றுக் குழப்பங்கள், காலக் குறிப்பு வேறுபாடுகள், பாரதியின் எழுத்துகளை முன்னும்பின்னுமான பகுதிகளைக் கொண்டு வாதாடுவதும், ஆராய்ச்சி செய்வதுமான போக்கைக் காண முடிந்தது.

அப்போது, ''பாரதியை முழுவடிவத்தில் கண்டு மகிழவேண்டுமானால், அவர் எழுத்துக்களைக் காலச்சிரமப்படி ஆராயக் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். பாரதியின் எழுத்துகளைக் காலநிரலில் கொணர வேண்டும் என்கிற என் ஆசையைப் பூர்த்தி செய்ய முன் வந்தவர் டாக்டர் நல்லிகுப்புசெட்டியார் அவர்கள். இவர் என்னைக் காணாமலேயே நான் வெளியிட்ட நூல்களின் வாயிலாக என்னுடைய பாரதிப் பணிகளில் சொக்கிப் போனவர் என்பது எனக்குப் பின்னிட்டுத் தெரியவந்தது. 1995ஆம் ஆண்டில்தான் அவரிடம் எனக்கு நேரிடையான பரிச்சயம் ஏற்பட்டது. அவ்வப்போது சந்தித்து உரையாடும் சந்தர்ப்பங்களும் வாய்த்தன. அதனால், என் பாரதிப் பணிகளுக்குக் கை கொடுத்து உதவும் நண்பராகவும் ஆனார். ''மகாகவி பாரதி வரலாறு'' நூல் வெளிவருவதில் மிகுந்த அக்கறையும் காட்டினார்.

வரலாற்று நூலைக் கண்டதும் ஸ்ரீ நல்லிச்செட்டியார் பெரிதும் பாராட்டினார். அதுசமயம், ஸ்ரீ நல்லி செட்டியார் பேச்சோடு பேச்சாக ''உங்களுடைய அடுத்த நூல் எது?'' என்று கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு என்னால் உடனே பதிலளிக்க முடியவில்லை. தயங்கினேன். காரணம், அடுத்த நூல் பற்றிய சிந்தனையே அப்போது எழவில்லை. என் தயக்கத்தைக் கண்ட அவர் 'பளிச்'சென்று, ''நீங்கள் பல காலமாகச் சேகரித்து வைத்துள்ள விஷயங்களைக் கொண்டு பாரதி படைப்புகளுக்கு நல்லதொரு பதிப்பைக் கொண்டு வரும் பணியை மேற்கொள்ளுங்கள். இந்த மாதிரி நூல் வருமானால், அது பாரதி இலக்கிய வரலாற்றில் மைல்கல்லாக அமையும் என்று யோசனை தெரிவித்தார். அவர் தெரிவித்த யோசனையின் பேரில் உருவானதே ''காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்'' நூல் வரிசைத் தொகுதிகள்.
கே: தாங்கள் வெளியிட்டுள்ள படைப்புகளுக்கு ஆதரவு எப்படி உள்ளது?

ப : பெருத்த ஆதரவு இல்லையானாலும் மனநிறைவு கொள்ளும்படியாகவும், அடுத்தடுத்த தொகுதிகள் வெளியிடுவதற்குமான உற்சாக ஆதரவு பெருகி வருகிறது. ''மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார்'' என்று பாரதி ''பக்தியுடையோர்க்கு''ப் போதனை செய்ததை வேதவாக்காகவே கருது கிறேன். என் பதிப்புப் பணிகளைப் பொறுத்த வரையில், தொடங்கிய காலமுதலாகவே ஆக்கமும் ஊக்கமும அளித்து வருகின்ற நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நான் ஆற்றி வருகின்ற பாரதிப் பதிப்புப் பணிகளுக்குக் கைம்மாறு கருதாமல் உதவி புரியும் நண்பர்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் அன்பர்களுக்கும் பங்குண்டு. குறிப்பாகவும், சிறப்பாகவும் சொல்லப் போனால் நியூஜெர்சியைச் சார்ந்த டாக்டர். என். முருகானந்தம், கபாலீஸ்வரன், கோ. ராஜாராம், டவ்லஸ் பால்பாண்டியன், லண்டன் விமல் போன்றவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவையும், என்பால் காட்டிவரும் அன்பையும் நான் என்றும் மறவேன்.

கே: பாரதி திரைப்படத்தைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

ப : பாரதியின் வாழ்வில் முத்திரை பதித்த - புகழ்பூத்த வரலாற்றுச் சம்பவங்கள் படத்தில் மிக மிகக் குறைவு. வரலாற்றுச் செய்திகளாகச் சித்தரிக்கப்பட்ட¨வுயும் உண்மை வரலாற்றோடு பொருந்தவில்லை. உண்மை வரலாற்றையே புரட்டிப் புறந்தள்ளும் படியாகவே உள்ளன. செவிவழிச் செய்திகளுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் கூட உண்மையோடு கூடிய செய்திகளுக்குத் தரப்படவில்லை.

பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் மரணமடைந்ததற்குப் பல காரணங்கள் பாரதியின் கனவு நூலில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் 'ஊர் செய்த சதி'யும் ஒன்று. ஊர் செய்த சதியைப் பாரதி படத்தயாரிப்பாளர்கள் 'லண்டனிலிருந்து ஸ்பேர் பார்ட்ஸ் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து போனதாகவும் - கப்பல் நடுக்கடலில் முழுகிப் போனதாகவும் - (தீப்பற்றி எரிந்து கடலில் போனதா அல்லது கடலில் தீப்பற்றிக் கொள்ளாமல் முழுகிப் போனதா என்று குழப்பிக்கொள்ளக்கூடாது!) தந்தி வருகிறதாம்! அந்தத் தந்தியும் ஆங்கிலேயன் அடித்த 'பொய்த் தந்தி'யாம். பொய்த் தந்தியைப் படித்து, முதல்வரியை வாசிக்கும்போதே சின்னச்சாமி ஐயருக்கு நெஞ்சு வலி பொறுக்கமுடியாமல் நாற்காலியில் சாய்ந்துவிடுகிறாராம். பின்னர் அவருடைய உயிர் பிரிகிறராம். அற்புதமான கற்பனை வளம் இந்தக் காட்சியில் பளிச்சென மின்னுகிறது.

எட்டயபுர மகாராஜா நகர்வலம் வந்த போது வரவேற்கவில்லை என்பதோடு ராஜாவை 'முட்டாள்' என்று பாரதி சொன்ன காரணத்தினால், பாரதி அரண்மணை உத்தியோகத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பதாகப் படத்தில் வருகிறது. இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை ஒருபுறமிருக்க, பதறிப் போன செல்லம்மா ''பிழைப்புக்கு வழி என்ன?'' என்று பாரதியைக் கேட்க, அவரும் சற்றும் பதறாமல், ''மதுரையில் தமிழ் வாத்தியார் வேலை காத்துகிட்டு இருக்கு. போய் எடுத்துக்கிட வேண்டியதுதான்!'' என்று பதில் சொல்கிறார். பாரதி வேலையைத் தயாராகக் கையில் வைத்துக் கொண்டு தான் எட்டயபுர ராஜாவிடமிருந்து விடுதலை பெற்றுக் கொண்டாரா? நிகழ்ச்சியைத் தேய்த்து, மினுமினுப்பு ஆக்கி, நகாசு செய்யப்பட்டதற்கு இந்தக் காட்சியையும் கொள்ளலாமா?

பாரதியின் பத்திரிகைப் பணிகள் ஏன் நின்று போயின? பிரிட்டிஷ் இந்திய அரசு விதித்த தடை உத்திரவுகளால்தான் என்று பலரும் கண்டு கொண்ட உண்மை. ஆனால், படத்தயாரிப்பாளர்கள் புதிய தகவலைச் சொல்லவேண்டுமென்பதற்காக பிரெஞ்சுப் போலீசார் இரவோடு இரவாக 'இந்தியா' அச்சகத்தில் திபுதிபுவென்று புகுந்து, பிரதிகளை எரித்து விட்டு ஆபீசிற்கும் சீல் வைத்து விட்டார்கள் என்று கதை கட்டியுள்ளார்கள்.

மேலும் புதுவையில் கனகலிங்கம் என்கிற ஒருவருக்குத்தான் பாரதி பூணூல் அணிவித்ததாகத் தகவல். ஆனால் அவருக்கு அணிவித்ததோடும் நில்லாமல் வேறு பதினைந்து ஹரிஜனர்களையும் பூணூல் அணிந்து கொள்ளக் கட்டளையிடுகிறாராம். இதோடு பாரதியின் செயல் நின்றுவிடவில்லை. பூரிப்படைந்த நிலையில் பூணூல் அணிந்து கொண்ட ஹரிஜனர்களுடன் 'கோரஸ்' பாடுவதாகவும் காட்சி தருகிறார் பாரதி. புனிதமான சடங்கு முடிந்தபின், இப்படி ஒரு கேலிக்கூத்தான காட்சி தேவையா?

திரைப்படம் என்றால் அதில் க்ளைமாக்ஸ் சீன் இருக்கவேண்டுமே என்பதற்காக, இப்படி ஒரு மனதை உருக்கக் கூடிய காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். பாரதி உடல் நலமின்றி தனக்குத்தானே பேசிக்கொண்டு படுத்திருக்கிறார். அப்போது அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் அங்கு வருகிறார். அவரை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு. உற்சாக மேலீட்டால் அவருடன் உரையாடிவிட்டு பாரதி இறந்து போகிறார். இடு காட்டுக் காட்சியிலும் கனகலிங்கம் காட்டப்படுகிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால் பாரதி இறந்த செய்தியே கனகலிங்கத்திற்கு பின்னிட்டுத்தான் தெரியும். ''அந்திமக் காலத்தில் பாரதியின் திருமுகத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்க வில்லையே'' என்றும், ''அவரது உடல்தகனம் செய்யப்பட்ட பிறகே தனக்கு விவரம் தெரியும்'' என்றும் கனகலிங்கம் எழுதிய நூலில் அவரே குறிப்பிட்டுள்ளார்.

இது போல் உண்மைக்குப் புறம்பான பல காட்சிகளைப் பாரதி படத்தில் சொல்லலாம். மொத்தத்தில் 'பாரதி' படத்தை எடுத்தவர்கள் 'பாரதி'யைப் புரட்டி எடுத்துவிட்டார்கள் .

கே: எதிர்காலத் திட்டம் பற்றிச் சொல்கிறீர்களா?

ப : என்திட்டமெல்லாம் பாரதி படைப்புகளைப் பத்துத் தொகுதிகளாக வெளியிட வேண்டும் என்பதுதான். இதுவரை மூன்று தொகுதிகளை மட்டுமே பிரசுரம் செய்துள்ளேன். பாரதி படைப்புகளுக்கான தேடல் பணி என்பது ஒரு தொடர்பணி. தேடித்தேடி அறிய வேண்டியவை நிறையவே உள்ளன. ஓரளவுக்குக் கிடைத்துவிட்டதே என்று திருப்தி கொள்ளும் பணியல்ல இது. பல்வேறு பிரச்சினைகளையும் மனத்திடைக்கொண்டு தேடல் பணியில் என்னால் இயன்ற அளவு இன்னமும் ஈடுபட்டுவருகிறேன்.

நான்காம் தொகுதிக்கான விஷேச தேடல் பணியில் தற்போது ஈடுபட்டு உள்ளேன். காலம் கை கொடுக்குமானால், இந்த 2003 ஆம் ஆண்டே நான்காம் தொகுதியைப் பிரசுரமாக்குவேன். எல்லாம் பாரதி செயல்!

கே: இந்தப் பதிப்புப் பணிகளுக்குத் தாங்கள் எந்த மாதிரியான உதவிகளை எதிர்பார்க் கிறீர்கள்?

ப : நான் தேடிக்கொண்டிருக்கிற பாரதி தொடர் புடைய பத்திரிகைப் பிரதிகள் அல்லது நகல்கள், சொற்பொழிவு விவரங்கள் எவரிடமிருந்தாலும் கொடுத்து உதவலாம். நிதி மிகுந்தவர் தன் நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் நூல்களை வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தலாம். நிதிகுறைந்தவர் நூல்களுக்கு ஆதரவு தரும்படி வசதிபடைத்தவர்களைத் தூண்டலாம். ஆக, எவ்வகையானும் எதுவும் நல்கி, நான் மேற்கொண்டுள்ள பெருந்தொழிலுக்குத் துணை நிற்கலாம். இவையே என்னுடைய பாரதிப் பணிக்கான ஆதரவு எதிர்பார்ப்புகள்!

பல பாடல்களுக்கான பாடபேத - பிரதி பேத வளங்களையும் கண்டறிந்து, பாரதியின் ஆய்வுக்களப் பரப்பை விரிவாக்கியது இவர்தான். மேலும் பாரதி காலத்திய பத்திரிகைகள், பாரதியே பதிப்பித்த பாடல் நூல்கள், நெல்லையப்பர் வெளியிட்ட நூல்கள், பாரதி கைப்பட எழுதிய பிரதிகள், பாரதி ஆச்ரம பாரதி பிரசுராலயத்தின் பதிப்புகள், அரசு வெளியீடு என்று இப்படியான ஆதாரங்களைக் கொண்டு பாரதியார் பாடல்களைக் காலவரிசைப்படி தொகுத்து அளித்த பெருமையும் இவருக்குத்தான் உண்டு.

*****


இவரது நூல்கள்

ஆக்கியவை:

மகாகவி பாரதி - நூற்பெயர்க்கோவை
பாரதி நூல்கள் - விவரக் கோவை
பாரதி நூல்கள் - பதிப்பு வரலாறு
மகாகவி பாரதி - சில புதிய உண்மைகள்
பாரதி ஆய்வுகள் - சில சிக்கல்கள்
புதுநெறி காட்டிய பாரதி
பல்வேறு கோணங்களில் பாரதி
பாரதியின் பத்திரகை உலகம்
பாரதியின் வித்தியாசமான பார்வைகள்
மறுமலர்ச்சிக் கவிஞர்

தொகுத்தவை:

தமிழகம் தந்த மகாகவி
மரணத்தை வென்ற மகாகவி
மகாகவி பாரதி கட்டுரை மணிமாலை
மகாகவி பாரதி மஞ்சுரி.
காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதிபடைப்புகள் - (தொகுதி 1, 2 & 3 ஒவ்வொன்றும் 1000 பக்கங்களுக்கு மேல்)

சந்திப்பு, படங்கள்:க.காந்திமதி
More

கிராண்ட் மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி
Share: 




© Copyright 2020 Tamilonline