|
|
|
நாகராஜன் பிச்சுமணி, பாரதக் கனவுகளோடு அமெரிக்கா சென்ற இளைஞர். ஆம், அங்கு போனபிறகும், பாரதம் திரும்புவதை 'அடுத்த வருடம், அடுத்த வருடம்' என்று தள்ளிப் போடாமல், நினைத்தபடி திரும்பி வந்தவர். வந்ததோடு மட்டுமல்லாமல், இங்கே கிராமப்புறக் குழந்தைகளைக் கல்வியில் மேம்படுத்தும் நோக்கத்தோடு கட்டணமில்லா இணையவழிச் சேவையைத் தமிழகத்திலும் உத்திரப் பிரதேசத்திலும், தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, அவர்கள் தாய்மொழியிலேயே நடத்தி வருபவர். தமிழில் திறமிக்க மரபுக் கவிஞர். மொத்தத்தில் ஒரு லட்சிய இளைஞர். வாருங்கள், 'நாகோஜி' என்ற நாகராஜனுடன் அவரது உந்துசக்திகளைப் பற்றி, உயரிய நோக்கங்களைப் பற்றி உரையாடுவோம். நாமும் உற்சாகம் பெறுவோம்.
★★★★★
கே: உங்கள் இளமைப்பருவம், கல்வி குறித்துச் சொல்லுங்கள். நான் படித்தது முதலில் தேதியூர் கிராமத்தில். எட்டாம் வகுப்புவரை சங்கரா பள்ளியில் படித்தேன். பக்கத்துக் கிராமமான விஷ்ணுபுரம் பிறகு கும்பகோணம் இவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தேன். பிறகு 1988 முதல் 1992 வரை கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் கணினி அறிவியல் படித்தேன். கிராமத்தில் படிக்கும் காலத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. சொல்லிக் கொடுத்த தமிழ் ஆசிரியர்கள் எல்லோரும் சமஸ்கிருதம் தமிழ் இரண்டிலும் வித்துவான்கள். நண்பர்கள், விளையாட்டுகள், பண்டிகைகள் - அது மறக்கமுடியாத காலம்.
கே: மென்பொருள் துறையில் அமெரிக்காவில் பணியாற்றினீர்கள். இந்தியா திரும்பியது எப்போது, ஏன்? ப: அமெரிக்காவில் ஐந்தரை ஆண்டுகள் பணி செய்த பிறகு இந்தியா திரும்ப வேண்டும் என்பதுதான், 1994 அக்டோபரில் அமெரிக்கா செல்லும் முன்பாகவே இருந்த எண்ணம். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், திரும்பி வந்து ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது நோக்கம். என்ன இருந்தாலும் நமது தேசம் நமது தேசம்தான்; அதற்கு எந்த விதத்திலாவது பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் திரும்பி வந்தேன். இதற்கு இன்னொரு உத்வேகம் என்னவென்றால், என்னுடன் கிண்டி கல்லூரியில் படித்த சில நண்பர்களும் அதே எண்ணத்துடன் இருந்தார்கள். அமெரிக்கா என்றில்லை, பல நாடுகளுக்கும் சென்று விட்டுத் திரும்பி இந்தியாவுக்கு வந்து, இப்பொழுது பணி செய்கிறார்கள். கம்பெனி நடத்தி வருகிறார்கள். நிறையப் பேர் திரும்பி வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் எனக்கு ஒரு விதத்தில் ஊக்கம் அளித்தவர்கள். ஜனவரி 2000ல் பாரதம் வந்துவிட்டேன்.
கே: கல்வித்துறைக்குள் ஏன் நுழைந்தீர்கள்? ப: தேதியூர் கிராமத்தில் 1975 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் ஒரே கிராமத்தில் 40 ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள். இத்தனை ஆசிரியர்கள் ஒரே நேரத்தில், அதுவும் ஒரே கிராமத்தில் வசித்துப் பணி செய்வது, பாரதத்திலேயே ஒரு சாதனை என்று சொல்லலாம். என்னுடைய தந்தையார் ஓர் ஆசிரியர். அம்மா வழித் தாத்தா ஆசிரியர்; அப்பாவழித் தாத்தா ஒரு பள்ளி ஆரம்பித்தார், அதுதான் சங்கரா நடுநிலைப்பள்ளி. என்னுடைய மாமாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள். ஆசிரியப் பணி என்பது அறப்பணி, இது எங்களுடைய குடும்பப் பணி என்று நான் கருதுகிறேன் அதனால் கல்வித்துறையோடு ஏதாவது ஒரு விதத்தில் தினந்தோறும் நாம் நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சங்கல்பம்.
தமிழகத்தில் கல்விசக்தி நடக்கும் இடங்கள்
2000-2001ஆம் ஆண்டு காலத்திலே திருச்சியில் காஞ்சி ஆச்சாரியார் முகாமிட்டிருந்தார். தரிசனம் செய்யப் போனபோது, பயிற்சி வகுப்புகள் நடத்துவது பற்றிப் பெரியவாளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர், "எஜுகேஷன் தான்னு வச்சுனுட்டே!" என்று ஒரு வார்த்தை சொன்னார்! என்ன உத்வேகம் அது கொடுத்தது என்று தெரியவில்லை! அதையே தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு அன்றிலிருந்து இன்றுவரை கல்வியிலேயே ஈடுபட்டு வருகின்றேன். பெரியவாளின் ஆசீர்வாதமே இன்றுவரை என்னைச் செலுத்திக்கொண்டு வருகிறது.
கே: நீங்கள் Open Mentor Trust தொடங்கியதன் பின்னணி, செயல்பாடுகள் குறித்துச் சொல்லுங்கள். ப: 2010 காலகட்டத்திலே ஒரு பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டது. மென்பொருள் துறையில் நிறையப் பேருக்கு வேலை போனது. அவர்களுக்கு வேறு திறன்களைக் கற்பிக்கும் நோக்கத்தில் ஓபன் மென்டார் நிறுவனத்தை ஆரம்பித்து, கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுத்தோம். ஜாவா, C++, டேட்டாபேஸ் என்று தினந்தினம் கல்லூரி வகுப்புகள் போல நடத்தினோம். மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அந்த பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
2016-17 காலகட்டத்தில் இதை ஓர் அறக்கட்டளையாக மாற்றி அதன் மூலமாகப் பணியைத் தொடர்கிறோம்.
அறிவியல் கற்பிக்க மெய்நிகர் கருவி
கே: அடுத்த கட்டம் என்ன? அதற்கு எப்படி நகர்ந்தீர்கள்? ப: கடந்த மூன்று வருடங்களாகப் பள்ளிக் கல்வியையும் இதன் மூலம் செய்து வருகிறோம். நிறைய கிராமங்களில் ட்யூஷன் வசதி போதவில்லை; ஆசிரியர்கள் அங்கு இல்லை என்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு இது தடைப்படுகிறது அவர்களுக்கு இலவசமாகக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே, 'கல்வி சக்தி', 'வித்யா சக்தி' என்பவற்றை நடத்தி வருகிறோம். ஐந்து முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், ஆங்கிலம் இவற்றைத் தாய்மொழி வழியாகக் கற்பிக்கிறோம். தமிழ்நாட்டிலே 92 கிராமங்களில் இது நடக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் 100 கிராமங்களிலே நடக்கிறது. அங்கே ஹிந்தி வழியாக.
இதைத் தவிர கிராமப்புற மகளிர் மேம்பாட்டுக்காக, கிராமங்களிலே நன்கு படித்த ஆனால் வேலையில் இல்லாதவர்களுக்கு, நாங்கள் சாஃப்ட்வேர் டெஸ்டிங்கில் (தரப்பரிசோதனை) பயிற்சி கொடுத்து, ஏழு பேரை எங்கள் ரெசிலியோ கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளோம். தினம் 4 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வார்கள்; இன்டர்நெட் லேப்டாப் எல்லாம் நாங்கள் கொடுக்கிறோம். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வேலைகள் வந்தால் போதாது; உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கிராமங்களுக்கும் அந்த வேலை சென்றடைய வேண்டும்; அதன்மூலம் அங்குள்ள படித்த பெண்களுக்குப் பொருளாதார மேம்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கிராமப்புற மகளிர்க்கு அதிகாரமளிக்கும் நிகழ்ச்சியை (Rural Women Empowerment program) நடத்தி வருகிறோம்.
நாகராஜன் குடும்பத்தினருடன்
கே: ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் பல வணிகரீதியாக இயங்கிப் பொருள் ஈட்டுகின்றன. நீங்கள் முற்றிலும் இலவசமாகச் செய்கிறீர்கள். இந்த எண்ணம் வரக் காரணம் என்ன? ப: நான் படித்தது அரசுப் பள்ளிகளில். கல்லூரியும் அரசுக் கல்லூரிதான். செலவு மிகவும் குறைவு. இப்படி இருந்த காலம் மாறி, கல்வியை வணிகமாக்கி விட்டார்கள். இதனால் பணக்காரக் குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் நடுவே இடைவெளி மிகவும் அதிகமாகி வருகிறது. இது நமது சமுதாயத்திற்கே ஒரு சவால். இதன் விளைவுகள் இப்பொழுதே தெரிய ஆரம்பிக்கின்றன. போகப்போக இது இன்னும் மோசமாக இருக்கும்.
நம்முடைய பழைய பாரதத்தின் சித்தாந்தப்படி எந்த ஆசிரியரும் (குருவும்) காசு வாங்கிக்கொண்டு சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால்தான் பாரதம் கல்வியிலே சிறந்து இருந்திருக்கிறது. அதைத் திரும்பக் கொண்டுவர வேண்டும். கல்வியை நாம் பணத்துக்கான விஷயமாகப் பார்க்காமல், நமது எதிர்கால சந்ததிகளுக்கான முதலீடு என்றும் பார்க்காமல், இது என் கடமை என்று பார்க்க வேண்டும்.
அதனால்தான் ஓப்பன் மென்டாரில் நாங்கள் எந்த விஷயத்தையும் வணிகரீதியாக நடத்துவதே இல்லை.
கிராமப்புற மகளிருக்கு லேப்டாப்
கே: ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில்நுட்பம் இவற்றையெல்லாம் எப்படி ஒருங்கிணைத்துச் செயல்படுகிறீர்கள்? ப: ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் இவற்றை நடத்துவதற்கு வெவ்வேறு குழுக்கள் உள்ளன. தாமாக முன்வந்து செய்கின்ற தன்னார்வலர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் நாங்கள் ஒருங்கிணைத்து, அந்தக் குழுக்கள் மூலம் இவற்றை நடத்தி வருகிறோம். அவர்களுக்கெல்லாம் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். எங்களுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிறையப் பேர் இதற்காக சிரமதானம் என்னும் உழைப்புக் கொடை செய்து வருகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய பழைய நண்பர்கள், அவர்களுடைய நண்பர்கள் என்று பலரும் இதற்குத் தாமாகவே முன்வந்து, நேரத்தை ஒதுக்கிச் சிரமதானம் செய்கிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி.
கிராமப்புறச் சவால்கள் கிராமப்புறங்களில் மின்சார வசதி இப்பொழுது மிகவும் நன்றாக இருக்கிறது. இருப்பினும் மழைக் காலங்களில் சில நாட்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படலாம். அது ஒரு சவால். இன்டர்நெட்டும் இப்பொழுது நிறையக் கிராமங்களில் அருமையாக இருக்கிறது. ஆனால் அவ்வப்போது அதன் பட்டை அகலம் (Band width) குறைவதால், வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிமிடங்கள் தடை ஏற்படும். இவையெல்லாம் தொழில்நுட்ப ரீதியான சவால்கள். கிராமத்தின் ஓர் இடத்தில் எமது மையத்தை வைத்தால், அதிலிருந்து குழந்தைகள் ஐந்து நிமிடத்தில் வீடு செல்லும்படி இருக்கவேண்டும். சில சமயம், பொதுவான இடங்கள் கொஞ்சம் தள்ளி இருக்கின்றன. அப்போது அவர்கள் 10 நிமிடம் நடந்து வரவேண்டி இருக்கிறது. அதுவும் மாலை நேரங்களில் வருவதற்கு ச் சிரமமாக இருக்கிறது. குறிப்பாக மழைக்காலம், குளிர்காலங்களில். இது ஒரு நடைமுறைச் சவால். மற்றபடி கிராமங்களில் நடத்துவது பெரிய சவாலாகத் தெரியவில்லை.
கே: இவ்வளவு செய்ய வேண்டுமென்றால் நிதி ஆதாரம் வேண்டுமே. அதைப்பற்றிச் சொல்லுங்கள். ப: எங்களுடைய நோக்கம் மாணவர்களிடமிருந்து பணம் வாங்கக்கூடாது என்பதுதான். ஆனால் எதை நடத்துவதானாலும் பொருளாதாரம் தேவை. இதற்காக கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) நிதிக்காகப் பல நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு, அந்த நிதியின் உதவியால் நடத்துகிறோம்.
ஒரு கிராமத்தில் ஸ்மார்ட் டிவி போடவேண்டும், இன்டர்நெட் வசதி வேண்டும், ஒரு ஒருங்கிணைப்பாளர் வேண்டும், பாடம் நடத்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்; இதற்கெல்லாம் பணம் தேவை. சிட்டி யூனியன் வங்கி, சுந்தரம் ஃபைனான்ஸ், தேயம் பவுண்டேஷன், IFE அகாடெமி, ICICI ஃபவுண்டேஷன், IIT மெட்ராஸ், IIT மெட்ராஸ் பிரவர்த்தக் டெக்னாலஜி ஃபவுண்டேஷன் போன்ற பல நிறுவனங்களும், தன்னார்வலர்களும் எங்களுக்கு உதவி வருகிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற நன்கொடையின் மூலமாகவே இவையெல்லாம் நடந்து வருகின்றன.
தெலுங்கானாவில் ஒரு வகுப்பறை
கே: எதிர்காலத் திட்டங்கள் யாவை? ப: இதே திட்டத்தை குஜராத்திலும் கர்நாடகாவிலும் தொடங்குவதாக உள்ளோம். குஜராத்தி மொழியிலும் கன்னடத்திலும் நடத்துவோம். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மொழியில் 15-லிருந்து 50 வரை மாதிரி கிராமங்களாகத் தேர்ந்தெடுத்து, அவற்றில் செயல்படுத்தி, இவற்றுக்கும் நிறுவனங்களின் ஆதரவைப் பெற்று, விரிவாக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டாயிரம் கிராமங்களையாவது இரண்டு வருடங்களிலே எட்ட வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம்.
ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் 7 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் சி.எஸ்.ஆர். மூலமாகவே கொண்டு செல்வது மிகப்பெரிய சவால். அதனால் மாநில, மத்திய அரசுகளிடம் விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் அறிய அல்லது உதவ விரும்பினல்: வலைமனை: https://www.openmentor.net மின்னஞ்சல்: mentor@openmentor.net
கே: நாகோஜி என்ற கவிஞரை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்… ப: எனக்கு ராமகிருஷ்ணன் சார், பட்டாபிராமன் சார், வெங்கடேசன் சார், இரா கந்தசாமி சார் இந்த நால்வரும் தமிழ் சொல்லிக் கொடுத்தார்கள். இவர்கள் நால்வரும் தமிழ்ப் புலவர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள். வேதம் கற்றவர்கள். அவர்களுடைய ஆழ்ந்த புலமையின் தாக்கம்தான் எனக்கு முதலில் கிடைத்த பொக்கிஷம். தமிழில் ஆர்வம் உண்டு, ஆனால் கவிதை தெரியாது.
1994-ல் காஞ்சி மகான் என் கனவில் வந்து ஓர் அற்புதம் நிகழ்த்தினார். காஞ்சி மகானின் அனுக்கிரகத்தினாலே நான் ஒரு திடீர்க் கவிஞன் ஆகிவிட்டேன். என்னுடைய புலமை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. என்னைப் புலவனாக ஆக்கியது மகாபெரியவருடைய அனுக்கிரகம். அவரே சொல் கொடுத்து அவரே பொருள் கொடுத்து அவரே சந்தம் கொடுத்து என்னை எழுத வைத்துவிட்டார். இப்படித்தான் நான் கவிஞன் ஆனேன்; படித்தோ இயற்கையான புலமையினாலோ அல்ல.
வாரணாசியில் வித்யாசக்தி நடக்கும் இடங்கள்
என்னை சந்தவசந்தம் என்ற இணைய குழுமத்தில் கனடா பேராசிரியர் பசுபதி இணைத்து விட்டார். இன்றும் சாலச்சிறந்த கவிஞர்கள் அதில் இருக்கிறார்கள். அவர்களுடைய புலமை வெளியில் தெரியாமல் இருந்து கொண்டிருக்கின்றது; இணையத்திலேயே மிக அருமையாக எழுதி வருகிறார்கள்; அவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது அடியேன் ஒரு சிறிய குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும்.
காஞ்சி மகான் அனுக்கிரகத்தினாலும் சந்த வசந்த ஆசிரியர்கள் கொடுக்கிற ஊக்கத்தினாலும் அடியேன் எழுதி வருகிறேன். மதிசூடி துதிபாடி என்று சிவனைப் பற்றியும், வேலன்பால் மால்அன்பால் என்று முருகனைப் பற்றியும், குழலூதி கழலோதி என்று திருமாலைப் பற்றியும், சக்திதாள் பற்றிவாழ் என்று சக்தியைப் பற்றியும் விதவிதமான இழைகளிலே முடிந்தவரையில் எழுதி வருகிறேன். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் உந்து சக்தியாக இருப்பது காஞ்சி மகானுடைய அனுக்கிரகம் தான்.
கிராமத்தில் பயிற்சி தர ஒரு பஸ் வகுப்பறையானது
கே: உங்கள் குடும்பம் பற்றிச் சில வார்த்தைகள்... ப: என்னுடைய மனைவி யோகிதா. எங்களுக்கு 1996ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. யோகிதா பரதநாட்டியம் பயின்றவர். தற்போது பரதநாட்டியத்திலே முனைவர் பட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். பிரவசன நாட்டியம் என்ற ஒரு புது வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இரண்டு மகள்கள் எங்களுக்கு. மூத்தவள் பிரசித்தா. அவர் ஐஐடி மெட்ராஸில் வேதியியலில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகள் ஆர்யா. அவர் இளம் அறிவியல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். ஆர்யாவுக்கு வயலினிலும் கர்நாடக இசையிலும் தேர்ச்சி உண்டு. மேலும் பயில்கிறார். நிகழ்ச்சிகள் அளித்து வருகிறார்.
"பாரத நாடு பார்க்கெலாம் திலகம்" என மெய்ப்பிக்க வந்த நாகராஜன் போன்ற இளைஞர்கள்தாம் இந்த நாட்டுக்கு என்றும் தேவை. அவரது சேவை இன்னும் ஆயிரமாயிரம் ஊர்ப்புறக் குழந்தைகளை அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட சேவையினால் உயர்த்தட்டும் என வாழ்த்தி விடைபெறுகிறோம். |
|
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன், மதுரபாரதி |
|
|
|
|
|
|
|
|