'ஆன்மீகச் செம்மல்', 'சாஸ்தா வியாசர்', 'ஸ்ரீவித்யா உபாசக சிரேஷ்ட' என்றெல்லாம் கௌரவிக்கப்படும் இளைஞர் அரவிந்த் ஸுப்ரமண்யம். எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் வசிக்கிறார். சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்றுநர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழி அறிவு உடையவர். 'சாஸ்தா' பற்றி விரிவாக ஆராய்ந்து பல கட்டுரைகள், நூல்களை எழுதியிருக்கிறார். சபரிமலை ஆலய வழிபாடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இவரது பங்களிப்பும் உண்டு. ஆன்மீகம் மற்றும் உபாசனை குறித்து ஆழமான அறிவும் அனுபவமும் உடையவர். 'ஐயனின் ஆலய தரிசனம்', 'அஹோபிலம் மஹாபலம்', 'திதி நித்யா தேவியர்', 'அம்பிகை அருள்வலம்', 'விநாயகர் விஜயம்' போன்ற இவரது ஆன்மீகத் தொடர்கள் சக்தி விகடன், ஞான ஆலயம், தீபம், ஜகத்குரு போன்ற இதழ்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அவருடன் உரையாடியதிலிருந்து...
★★★★★
கே: எம்.பி.ஏ. பட்டதாரியான உங்களுக்கு 'சாஸ்தா'வைப் பற்றி ஆய்வு செய்யவும், புத்தகங்கள் எழுதவும் உந்துதல் தந்தது எது? ப: நான் பட்டதாரி ஆனது மிகப் பின்னாளில்தான். முதலில் உள்ளே புகுந்தது சாஸ்தாதான். குடும்பத்தில் 4, 5 தலைமுறைகளாகச் சபரிமலை யாத்திரை தொடர்கிறது. 1920களிலிருந்து எனது கொள்ளுப் பாட்டனார் திரு. C.V. ஸ்ரீநிவாஸ ஐயர் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்ததாக ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அதற்கு எத்தனை தலைமுறைக்கு முன் குடும்பத்தில் சபரிமலை யாத்திரை தொடங்கியது என்பது தெரியாது. அந்த பாக்கியத்தினால் நாலரை வயதில் எனது முதல் சபரிமலை யாத்திரை தொடங்கியது. சிறு வயதிலிருந்தே பலவிதமான நூல்களை வாசிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் 10-12 வயதிலேயே பலவிதமான சந்தேகங்கள் எனக்குள் எழ ஆரம்பித்தன.
'பூரணை புஷ்கலை சமேதன்' என்று சொல்லப்படும் சாஸ்தா, சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருப்பது ஏன்?; இஸ்லாமியரான வாவர், புராணகால மணிகண்டனுக்கு எப்படி நண்பராக இருந்திருக்க முடியும்? என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுந்தன. பெரியவர்கள் பலருக்குக் கடிதம் எழுதினேன். பதில் வரவில்லை. நேரில் சென்று கேட்டபோது, கிடைத்த பதில்கள் எனக்குத் திருப்திகரமாக இல்லை. என்னுடைய சொந்தப் புரிதலுக்காகப் புராணங்களையும், தந்த்ர கிரந்தங்களையும், பண்டைய பாடல்களையும், நூல்களையும் தேடித்தேடிப் படித்தேன். அப்படி எனது சொந்தப் புரிதலுக்காக நான் சேகரித்த தகவல்கள் பின்னாளில் நூல்களாக ஆகின. இந்தத் தகவல் தேடல் என்னுடைய 13வது வயதில் தொடங்கியது. 8ம் வகுப்பு படிக்கும்போது தொடங்கிய தேடல் 25வது வயதில் எம்.பி.ஏ. பட்டதாரியான பிறகு நூலாக வெளிப்பட்டது.
கே: தமிழகமெங்கும் வழிபடப்படும் ஐயனாரும், கேரளத்தின் ஐயப்பனும் ஒன்றா, வேறு வேறு தெய்வங்களா? ஒரே தெய்வம் என்றால் இங்கு பூரணை-புஷ்கலையோடு வழிபடப்படுபவர், பிரம்மச்சாரி ஐயப்பனாக கேரளாவில் வழிபடப்படுவது எப்படி? ஒரே தெய்வத்திற்கு சாஸ்தா, ஐயனார், ஐயப்பன் என்று வெவ்வேறு பெயர்கள் ஏன்? ப: தமிழகம், கேரளம் மட்டுமில்லை, பாரத பூமி முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் சாஸ்தா வழிபாடு இருந்திருக்கிறது. இதுபற்றி நான் பல பேட்டிகளிலும், சொற்பொழிவுகளிலும் சொல்லி வருகிறேன். 'சாஸ்தா' என்று சொல்லப்படும் 'ஹரிஹரபுத்திரன்' என்ற அந்த மூர்த்திதான், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் 'ஐயனார்', கேரளத்தில் 'ஐயப்பன்', வட தேசங்களில் 'தேவோத்தமன்', குஜராத் பகுதிகளில் 'ரைவதன்', இன்னும் பல இடங்களில் பல்வேறு வடிவங்களிலும் பெயர்களிலும் சாஸ்தா வழிபாடு உலகெங்கும் வியாபித்திருந்தது.
ஐயனாரும், ஐயப்பனும் ஒருவர்தானா என்றால், சந்தேகமில்லாமல் ஒருவர்தான். வேறு வேறா என்றால், ஒரு வகையில் வேறு வேறுதான். மஹாவிஷ்ணுவும், கிருஷ்ணனும் ஒன்றா என்றால், ஒன்றுதான் ஆனால் வேறு வேறு என்பது போல. 10 அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணுவின் ஓர் அவதாரம்தான் கிருஷ்ணன். அதேபோல 8 அவதாரங்கள் சாஸ்தாவுக்கு உண்டு. அந்த அவதாரங்களில் முக்கியமான அவதாரம் 'மணிகண்டன்' என்று சொல்லப்படும் அவதாரம். ஆதி சாஸ்தாவுக்குப் பூரணை, புஷ்கலை என்று இரு மனைவியர். அவரே, மற்றொரு அவதாரமாக, 'ஆரிய சாஸ்தா' என்ற பெயரில் அவதாரம் செய்தபோது 'ப்ரபா' என்ற மனைவியும், 'சத்யகன்' என்ற மகனும் அமைந்தனர். அவரே மணிகண்டனாக அவதரித்து பிரம்மச்சரியக் கோலத்தில் சபரிமலையில் வீற்றிருக்கிறார்.
சேஷாத்ரி சுவாமிகளின் கருணை முன்னோர் செய்த தவப்பயனால் சிறு வயதில் இருந்தே பல மகாபுருஷர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய தாய்வழிக் கொள்ளுப் பாட்டனார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை நேரில் தரிசித்தவர். சுவாமிகள் எங்கள் பூர்வீக இல்லத்தின் வாசல்வரை வந்திருக்கிறார். ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எங்கள் வீட்டில் தங்கியிருந்து சுவாமிகளின் சரித்திரத்தை எழுதிய பெருமை உண்டு. அந்த அனுக்கிரக விசேஷத்தினாலேயே குருநாதர் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுடைய பரிபூரண கிருபை இன்றுவரை என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஆச்சாரியர்கள் அருள் சிறுவயதிலேயே காஞ்சி ஆச்சாரியாள், சிருங்கேரி ஆச்சாரியாள் போன்றோரைத் தரிசிக்கும் பாக்கியமும் அவர்களுடன் தனித்து உரையாடும் அருளைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. சின்னஞ்சிறுவனான நான் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த சிருங்கேரி ஆச்சாரியாரிடம் நான் வரைந்த படங்களைக் காட்டியபோது, 'ரொம்ப நன்றாகப் போட்டு இருக்கிறாய்' என்று ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் மஹாமேருவை எனக்குக் கொடுத்து ஆசி வழங்கியது வரை அவ்வருள் நீண்டிருக்கிறது.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வந்த காயத்ரி சுவாமிகளிடம் நான் வரைந்திருந்த ஆலிலை கிருஷ்ணன் படத்தைக் காட்டினேன். உடனே அவர், எங்கள் கண் முன்பாகவே, அந்த பேப்பரில் இருந்து, அந்தப் படத்தில் உள்ளது போலவே தத்ரூபமாக, உள்ளங்கை அளவு பெரிய ஆலிலை கிருஷ்ணன் விக்கிரகத்தை உருவாக்கிக் கொடுத்தார். அது இன்னமும் எனது வழிபாட்டில் இருக்கிறது. (பார்க்க படம்) அருணாசலத்தின் மீது அளவுகடந்த பிரியம் உண்டு. பள்ளியில் ஸ்கவுட்ஸ், கேம்ப் என்றும் பலவித காரணங்களைச் சொல்லிக்கொண்டு அடிக்கடி திருவண்ணாமலை செல்வது வழக்கம். அப்படியொரு முறை சென்றபோது, பகவான் யோகி ராம்சுரத்குமாரை ஏகாந்தமாகத் திருவண்ணாமலையில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. அதே பள்ளி காலகட்டத்தில்தான் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்பும், அவரது அருளும் கிடைத்தது.
ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, யோகி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள், ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் போன்ற பல மகான்களின் அருளும் தொடர்பும் சிறுவயதிலேயே கிடைத்தது. ஆன்மீக வாழ்வுக்கு அது ஆழமான அடிப்படையாக அமைந்து விட்டது. இன்றும் 'நெருப்பு யோகி' ராம்பாவு ஸ்வாமிகள் முதல் துவாரகா சங்கராசாரியார் வரை பலருடனும் தொடர்பு உள்ளது. இவர்களில் பலருடன் பல தனிப்பட்ட அனுபவங்களும் உண்டு. அதை எல்லாம் விவரிக்க வேண்டுமென்றால் அது ஒரு தனிப் பேட்டியாக நீளும்!
அரவிந்த் ஸுப்ரமண்யம்
மக்களுடைய புரிதலை அனுசரித்தும், தேச வழக்கத்தை அனுசரித்தும் இம்மாதிரியான பெயர் மாறுபாடுகள் காணப்படுகின்றன. விநாயகப் பெருமானை வட இந்தியாவில் 'கணபதி' என்பார்கள். நாம் 'பிள்ளையார்' என்போம். இது பெயர் மாறுபாடு மட்டும்தான். மூர்த்தி ஒருவரே. கந்தக் கடவுளை வட நாட்டில் 'கார்த்திகேய சுவாமி' என்பார்கள். நாம் 'முருகன்' என்கிறோம். அதுபோலத்தான் சாஸ்தாவைக் கேரளத்தில் 'ஐயப்பன்' என்கிறார்கள். தமிழகத்தில் 'ஐயனார்' என்கிறார்கள். ஒரு சிலர் கேரளத்திலும் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் 'சாஸ்தா' என்ற பெயரிலேயே அழைக்கிறார்கள்.
கே: முருகன் வழிபாடு, திருமால் வழிபாடு போன்றவற்றிற்கு இலக்கிய ஆதாரம் உள்ளதுபோல், ஐயப்பன் வழிபாட்டிற்கும் பண்டைய இலக்கியங்களில் ஆதாரம் உள்ளதா? ப: முருகன் வழிபாடு, திருமால் வழிபாடுபோல ஐயப்பனாகிய சாஸ்தாவினுடைய வழிபாடும் பண்டைய தமிழகத்தில் பரவியிருந்தது. சிலப்பதிகாரத்தில் கூட கனாத்திறம் உரைத்த காதையில்,
"...உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம் வச்சிரக்கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம்..." என்று சொல்லுகிற இடத்தில், அரும்பத உரையாசிரியர், "மாசாத்தன் புறம்பு அணைந்தவிடம் புறம்பணை ஆயிற்று" என்று சாஸ்தாவின் வழிபாடு அங்கு இருந்ததைத் தெளிவாகச் சுட்டுகிறார். அதே சிலப்பதிகாரத்தில், 'இந்திர விழா' பகுதியில், "பிடர்த்தலைக் கொடுவரி யொற்றி" என்ற சொற்றொடருக்கு உரை எழுதும்போதும் அங்கே கரிகால் பெருவளத்தான் சாத்தன் அருளால் செண்டினைப் பெற்று மேருவை அடித்துத் திரித்த வரலாறு கூறப்படுகிறது. "கச்சி வளைக்கச்சி காமக்கோட்டம் காவல் மெச்சி இனிதிருக்கும் மெய்சாத்தன் கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற்கிரி திரித்த செண்டு"
என்கிற பழந்தமிழ்ப் பாடலை மேற்கோள் காட்டலாம். சேரமான் பெருமான் நாயனார், திருக்கைலாய ஞானவுலா பாடும்போது "கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய" என்று சாஸ்தாவைப் பாடுகிறார். மேலும் மற்றொரு சிறப்பாக, பெரிய புராணத்தில் சேரமான் பெருமான் பாடிய இந்த திருக்கைலாய ஞானவுலாவை பூவுலகில் திருப்பிடவூர் என்னும் ஊரில் சாஸ்தாவே கொண்டுவந்து வெளியிட்டதைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். திருமூலர் திருமந்திரத்திலும், "ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்..." என்று ஐயனாரின் கோட்டத்தைப் பற்றி, அது எங்கு அமைந்திருக்கிறது என்பதைப் பற்றி குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அப்பர் தன்னுடைய பாடல்களில், "சாத்தனை மகனாய் வைத்தார்" என்கிறார். ஒட்டக்கூத்தர் தக்க யாகப் பரணியில், சாத்தனை அம்பிகையின் மகனாகக் குறிப்பிடுகிறார். இப்படி நிறையச் சொல்லலாம்.
கே: சில சிவாலயங்களில் சாஸ்தா உபதெய்வமாகவும், ஆலயத்தின் காவல் தெய்வமாகவும் உள்ளார். கிராமப்புறங்களிலோ தனி ஆலயத்தில் வழிபடப் படுகிறார். இந்த மாறுபாடு ஏன்? ப: ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கும்போது, அது எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தேவதைகளின் ஸ்தானங்கள் மாறுபடும். சிவ ஆகமங்களின்படிக் கட்டப்படும் ஆலயத்தில், சிவனே பிரதான தேவதை. பல சிவாலயங்களில் மஹாவிஷ்ணு சந்நிதி இருப்பதைப் பார்க்கலாம். மஹாவிஷ்ணு அங்கே உபதேவதைதான். அதேபோல வைஷ்ணவ ஆகமப்படிக் கட்டப்படும் கோவில்களில் மஹாவிஷ்ணுதான் பிரதான தேவதை. மற்ற எல்லாத் தேவதைகளும் உபதேவதைகளே. இதனால் தெய்வங்களின் தன்மையில் மாறுபாடோ ஏற்றத்தாழ்வோ இல்லை. அந்தந்த சம்பிரதாயத்தை ஒட்டி அமைகின்ற ஒரு மரபு இது. இதனால் அவர்களை வேறு இடங்களில் தனித்தேவதைகளாக வழிபடக்கூடாது என்று ஏதுமில்லை. எப்படிச் சிவாலயங்களில், விஷ்ணுவை இருந்தால் ஒரு தனித்தேவதையாக வழிபடுகிறோமோ, விஷ்ணு ஆலயங்களில் எத்தனையோ தேவதைகள் இருந்தாலும் அந்தத் தேவதைகளைத் தனியாக வழிபடுகிறோமோ, அது போலத்தான் சாஸ்தா வழிபாடும். தனிப்பெரும் தெய்வமாக, பரம்பொருள் வடிவமாக சாஸ்தாவைக் கண்டு வழிபடும் மரபும் உண்டு.
சாஸ்தாவைப் பரப்ரம்மமாகவே போற்றி வழிபடும் பண்டைய புராண நூல்களும் உண்டு. அடிப்படையில் 'ரக்ஷண தேவதை' என்கிற காரணத்தால் ஒவ்வொரு க்ரோசத்துக்கும் சாஸ்தாவுடைய ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது பண்டைய கால நகர நிர்மாண விதி. அதன்படி, காக்கும் தெய்வமாக விளங்கும் சாஸ்தா, கிராமப்புறங்களில் காவல்தெய்வமாக நிர்மாணிக்கப்படுகிறார். நகரங்களிலும், மலைகளிலும், வனங்களிலும் நிர்மாணிக்கப்படுகிறார். ஒவ்வொரு இடத்திலும் சாஸ்தாவை நிர்மாணிக்கும் போது, அவருடைய ரூபபேதம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பண்டைய ஆகம, சில்ப சாஸ்திர நூல்கள் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றன.
கே: சபரிமலைக்குக் குறிபிட்ட வயது எல்லைக்குள் உள்ள பெண்கள்தான் செல்லலாம் என்பதற்கு முக்கியமான காரணம் என்ன? இது குறித்த உச்ச நீதிமன்ற விசாரணையில் தங்களின் பங்கு என்ன? ப: அதற்கு அடிப்படையான காரணம், சபரிமலை ஒரு தபோ பூமி. அந்த ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்றால், தவ வேட்கை கொண்ட, முக்தியை மட்டுமே லட்சியமாகக் கொண்ட விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே செல்லவேண்டும். இதற்கான அடிப்படை நூல் 'ஸ்ரீ பூதநாத உபாக்யானம்'. சபரிமலையின் புராண நூல் இதுதான். இந்த நூலில், "சபரிமலைக்கு வந்து என்னைத் தரிசிக்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்" என்று பகவான் மணிகண்டன், தனது வளர்ப்புத் தந்தையான ராஜசேகர பாண்டியனுக்குத் தெளிவாகக் கூறுகிறார். அப்படி விரதத்தை அனுஷ்டிப்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் இருக்கும் பெண்களால் முடியாத காரணத்தினால்தான், இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தவ பூமியான அங்கு விரதம் இல்லாமல் செல்வதால் உடல் இயக்கத்தில் சில மாறுபாடுகளும், தாக்கங்களும் ஏற்படலாம் என்பது ஆன்றோரின் வாக்கு. ஒரு குறிப்பிட்ட வயது எல்லைக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்பது எவ்வளவு சத்தியமோ, அதே போல விரதம் இல்லாமல் ஆண்கள் செல்லக்கூடாது என்பதும் சத்தியமே.
ஐ.நா. சபையில் ஒருநாள்... ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றபோது ஸ்விட்சர்லாந்தில் தங்கியிருந்து சில நாட்கள் சொற்பொழிவு செய்தேன். ஒருநாள் என்னை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தவருடனும் மற்றொரு நண்பருடனும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம். விசேஷ அனுமதி பெற்று ஐ.நா சபையின் உள்ளே சென்று பார்த்தோம்.
நண்பர் என்னிடம், "இன்று மாலை 'HWPL–World Alliance of Religions for World Peace' என்கிற அமைப்பின் சார்பில் உலக அமைதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் மதப் பிரதிநிதிகளும் கூடும் ஒரு கருத்தரங்கம் நடக்க இருக்கிறது, நாம் செல்வோமா?" என்றார். "அதற்கென்ன கட்டாயம் செல்வோம்" என்றேன். அதை வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில்தான் போனேன். ஆனால், நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன், சொற்பொழிவாளர் என்று தெரிந்தவுடன் அங்கே 'இந்து மதத்தைக் குறித்துப் பேசுங்கள்' என்றொரு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. எல்லா மதங்களில் முக்கியத் தலைவர்களும், குருமார்களும் கிட்டத்தட்ட 130க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கருத்தரங்கத்தில் பங்கு கொண்டனர். எனக்குக் குறிப்புகளை தயார் செய்யக்கூட நேரமில்லை. கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒன்றரை மணி நேரம் நமது சநாதன தர்மத்தைப்பற்றிப் பேசினேன்.
"எப்போதும் அமைதியை விரும்பும், அமைதியை நேசிக்கும் ஒரு நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, நமது தர்மம் என்ன கூறுகிறது என்பதை எடுத்துரைத்தேன். பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களில் பலரும் குறிப்புகள் எடுத்துக்கொண்டார்கள். அதன் பிறகு கலந்துரையாடல் தொடங்கியது. நாம் கூறிய பல விஷயங்களுக்கு அவர்கள் குறுக்குக் கேள்வி கேட்டார்கள். நம் நூல்களை அவர்களும் ஆழ்ந்து படித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. 'புருஷ ஸூக்தம்' கூறும் வேறுபாடு social composition தானே தவிர ஏற்றத்தாழ்வல்ல என்று அவர்களிடம் விளக்கினேன். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு புத்த பிக்ஷுவுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வாத, பிரதிவாதம் நடந்தது. அவர் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்தேன். பவிஷ்ய புராணத்தை மேற்கோள் காட்டி, 'அதமன் ஹவ்யவதி' என்ற ஆதாம் ஏவாள் கதையைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். இறுதியில் அங்குள்ள எல்லோருமே உலக மதங்களின் தாய்மதம் ஹிந்து மதம்தான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். என்னுடைய சொற்பொழிவுகளில் மறக்க முடியாததாக இதனை நான் கருதுகிறேன்.
அரவிந்த் ஸுப்ரமண்யம்
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது, 'People for Dharma' என்ற அமைப்பின் மூலமாக பக்தர்கள் சார்பில் வாதாடப்பட்டது. "பண்டைய நெறிமுறைகள் காக்கப்படவேண்டும். பண்டைய பழக்க வழக்கங்களே சபரிமலையில் தொடர வேண்டும்" என்ற வாதத்துடன், அரசுக்கு எதிராக, பக்தர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக, அந்த அமைப்பு களமிறங்கியது. அந்த அமைப்புடன் இணைந்து நானும் - பண்டைய நூல்களிலிருந்து பல அரிய நூல்களை நான் ஆராய்ந்திருக்கும் காரணத்தினால் - அந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உதவினேன்.
முக்கியமாக 'ஸ்ரீ பூதநாத உபாக்யானம்' என்று சொல்லப்படும் புராணத்தில்தான் சபரிமலையைக் குறித்த முழுமையான தகவல்களும் விதிமுறைகளும் வருகின்றன. அதுவரை அந்த நூல் அச்சில் வராதிருந்தது. இந்த வழக்கை ஒரு காரணமாகக் கொண்டு, எனது 13 வயதில் தொடங்கிய அந்த நூலுக்கான தேடல், கடந்த வருடம் அந்த நூலை மீட்டுருவாக்கம் செய்து வெளியிடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. இப்போது அந்த நூல் நீதிமன்றத்தில் முக்கியமான ஆவணமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கே: நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் 'ஐயப்பன்' நாடகத்திற்குப் பின்னர்தான் தமிழகத்தில் ஐயப்பன் வழிபாடு பெருகியது என்பது குறித்து உங்கள் கருத்து என்ன? ப: ஒரேடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. காரணம் என்னவென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தமிழகம் முழுவதும் ஐயனார் வழிபாடு என்பது நெடுங்காலமாக இருந்த ஒன்றுதான். சபரிமலை திருக்கோவில், அதற்கான விரத முறை, இருமுடியுடன் மலை யாத்திரை செய்வது என்பவைதான் புதிதான விஷயங்கள். கேரளப் பகுதியை ஒட்டியிருந்த கோவை மாவட்டம், அதேபோல கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி வரை உள்ள மாவட்டங்களில் பண்டைய காலத்திலிருந்தே பலர் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செய்து வந்தார்கள். சோழ தேசமான திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளிலும், வட தமிழ்நாட்டில் இருந்தவர்களுக்கும் சபரிமலைபற்றிய அறிமுகம் புதிதாக இருந்தது. அதற்கு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகம் கட்டாயம் மிகப்பெரிய தொண்டாற்றியது என்றால் அது மிகையல்ல. பல தமிழகக் கிராமங்களுக்கு அவர் ஐயப்ப பக்தியைக் கொண்டு சேர்த்தார்.
அரவிந்த் ஸுப்ரமண்யம் எழுதிய நூல்கள் 'பூதநாத உபாக்யானம்' என்ற பகவான் ஐயப்பனின் புராண நூலை கிட்டத்தட்ட 25 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 'மஹாசாஸ்தா விஜயம்' - சாஸ்தாவின் முழுமையான புராண சரிதத்தைக் கூறும் நூல். இது ஏழு காண்டங்கள் கொண்டது. லலிதா சஹஸ்ரநாமம் கூறும் அம்பிகையின் வரலாற்றை 'லலிதையின் கதை' என்று தமிழில் வெளியிட்டு இருக்கிறார். தேவீ மஹாத்மியம் கூறும் சண்டிகா பரமேஸ்வரியின் வரலாற்றை 'சண்டிகையின் சரிதம்' என்ற பெயரில் தந்திருக்கிறார். பகவத் கீதை போல பகவான் சாஸ்தா ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசித்த 'பூதநாத கீதை', சிவனின் 64 திருவிளையாடல்களைப் போல அம்பிகையின் 64 திருவிளையாடல்களைக் கூறும் 'சக்தி பராக்ரமம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார். இதுவரை 23 ஆன்மீக நூல்களையும் 200க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். மேலும் பல நூல்கள் வெளிவர உள்ளன.
வலைத்தளம்: shanmatha.blogspot.com
முகநூல் பக்கங்கள்: facebook.com/Sasthaaravind facebook.com/aravind.subramanyam
கே: தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளீர்கள். அந்த அனுபவங்களைக் குறித்துச் சொல்லுங்களேன். ப: குருநாருடைய அனுக்ரஹத்தினால், பாரத பூமியிலும், பல வெளிநாடுகளிலும் சென்று ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய், குவைத், ஏன் ஆப்பிரிக்காகூடச் சென்று சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஒரு விசித்திரமான அனுபவம்தான். நான் எங்கு சென்றாலும் நெற்றி நிறைய விபூதியுடன் அதற்குக் கீழ் குங்குமத்துடன் செல்வது வழக்கம். இது எனக்குப் பள்ளியில் படிக்கும்போதே தொடங்கிய பழக்கம். ஆப்பிரிகாவில் அவர்கள் ஏதோ நான் முகப்பவுடரைச் சரியாகத் துடைக்காமல் விட்டதால், நெற்றியில் திட்டுத்திட்டாக இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். லுசாகா விமான நிலையத்தில், அங்கிருந்த இமிகிரேஷன் அதிகாரியிடம் 15 நிமிடம் 'விபூதி மஹிமை'யை விளக்கிவிட்டு வந்தேன். இஸ்லாமிய நாடான மஸ்கட்டில், நம் நாட்டில் உள்ளதுபோல முறையாக பிரம்மாண்டமாக 'மஹாருத்ரம்' நடத்தி வருகிறோம்.
கே: 'ஸ்ரீ மஹா சாஸ்த்ரு சேவா சங்கம்' மூலம் நீங்கள் செய்துவரும் பணிகள் என்னென்ன? ப: பக்தி என்கிற ஒற்றைப் புள்ளியில் இணையக்கூடிய பலரையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே 'மஹா சாஸ்த்ரு சேவா சங்கம்'. இதில் இளைஞர்களே அதிகமாக இருக்கிறார்கள். என்னுடைய பாட்டனார் சபரிமலையில் பங்குனி உத்திர மஹோத்ஸவத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அவரது காலத்துக்கு பிறகு அந்த பூஜையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது இந்தப் பெயரைக் கொண்டு சங்கத்தைத் தொடங்கினோம்.
ஆரம்பக் காலகட்டத்தில் எங்கள் இல்லத்தில் சிறிய பூஜையாக இது நடந்தது. பின்னர் பெரிய அளவில் கைங்கர்யங்கள் செய்யச் சாத்தியமானது. சேவா சங்கத்தின் சார்பில் இன்று சபரிமலை மகரவிளக்கு சமயத்தில், பெரியானை வட்டம் காட்டுக்குள், விசேஷ பூஜைகள். ஹோமங்கள் மற்றும் கிட்டத்தட்ட 15,000 பேருக்கு அன்னதானம் நடத்துகிறோம். சங்கம் மூலம் சாஸ்தா வழிபாடு குறித்த பல அரிய நூல்களை வெளிக்கொண்டு வருகிறோம். மேலும் கோவையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் இரண்டு நாள் விசேஷ பூஜைகள், ஹோமங்கள், அன்னதானங்கள் நடைபெறுகின்றன.
வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கான கல்வி உதவி, பாழடைந்து இருக்கும் பல ஐயனார், சாஸ்தா கோவில்களுக்குக் குறைந்தபட்சம் விளக்கு ஏற்றும் வகையிலாவது பூஜைகளைத் தொடர்ந்து நடத்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் 'சாஸ்தாலய ஸேவனம்' போன்ற பல கைங்கர்யங்களை சங்கத்தின் மூலம் செய்துள்ளோம்.
கே: 'Mind Games' மூலம் என்ன பணிகள் செய்கிறீர்கள்? ப: 'மைண்ட் கேம்ஸ்' ஒரு மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி நிறுவனம். நான் இதில் 'மேனேஜிங் பார்ட்னர்'. நாங்கள் பள்ளி கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதவள மேலாண்மைப் பயிற்சி, பேசும் கலை, தனிமனித மேம்பாடு, 'எமோஷனல் இன்டலிஜென்ஸ்' போன்ற பயிற்சி வகுப்புகளையும், வினாடி வினா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்.
கே: உங்கள் குடும்பம் பற்றி... ப: தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், தம்பி, தம்பி மனைவி என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். தந்தையார் வெங்கட்ராமன், ஆனந்தா பிலிம்ஸ், விஜயலட்சுமி பிலிம்ஸ் போன்ற திரைப்பட விநியோக நிறுவனங்களை நடத்தி வந்தவர். 1952ம் ஆண்டிலிருந்து எங்கள் நிறுவனம் கோவையில் செயல்பட்டு வந்திருக்கிறது. தாயார் ரமா பஜனை, நாமசங்கீர்த்தனம் என மகளிர் குழுவினரைக் கொண்டு பல கைங்கரியங்களை செய்து வருகிறார். மனைவி வசுதாரிணி, கர்நாடக இசையும் நாம சங்கீர்த்தனமும் பாடுவார். ஒரு ஆடிட்டிங் நிறுவனத்தைப் பங்குதாரராக இருந்து நிர்வகிக்கிறார். ஸ்ரீ சாஸ்தா, ஜாதவேதன் என்று இரு மகன்கள்.
உலகெங்கும் உள்ள எங்கள் ஆன்மீகக் குடும்பம் மிகப்பெரியது பல நூற்றுக்கணக்கான பேர்களுக்கு 'அரவிந்த் அண்ணா'வாக இருக்கும் பாக்கியம் எனக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கிறது! |