Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் சங்கர சரவணன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2021|
Share:
டாக்டர் சங்கர சரவணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research – ICAR) நடத்திய நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்றவர். கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும் (M.V.Sc), கால்நடை உயிரித் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றவர். சிறந்த பேச்சாளர். கல்வியாளர். ஐ.ஏ.எஸ் மற்றும் பிற போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வருகிறார். அவர்களுக்காகப் பல நூல்களையும் எழுதியிருக்கிறார். வாருங்கள் அவரோடு உரையாடுவோம்...

★★★★★


கே: உங்கள் இளமைப்பருவம், கல்வி குறித்து ஒரு சிறிய அறிமுகம்?
ப: திருநெல்வேலி மாவட்டம் தேவநல்லூரில் பிறந்தேன். அப்பா டி.ஆர். சங்கரன், கிராம அதிகாரி. அம்மா டி.ஆர். லெஷ்மி, இல்லத்தரசி. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவம் படித்தேன்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில் இந்தியப் பொறியியல் பணியில் அகில இந்திய அளவில் நான்காம் இடம் பெற்றதை சொல்லிக்கொள்வதற்கு சற்றுக் கூச்சமாக உள்ளது என்று கூறியிருப்பார். அதேபோல், நானும் முதுநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்காக ICAR நடத்திய நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றதைக் கூச்சத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் (IVRI) முதுநிலை கால்நடை மருத்துவம் பயின்ற பின் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் பணியில் சேர்ந்தேன்.

முனைவர் பட்ட ஆய்வாளராக, சக ஆய்வாளர்களுடன்



கே: கால்நடை மருத்துவத் துறையிலிருந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநர் பதவிக்கு வந்தது எப்படி?
ப: நான் உத்திரப்பிரதேசத்தில் முதுநிலை கால்நடை மருத்துவம் பயின்று கொண்டிருந்த காலத்தில் UPSC தேர்விற்குத் தயார் செய்தேன். சிறிதே மதிப்பெண்ணில் வெற்றியைத் தவறவிட்டேன். தமிழ் இலக்கியம் மற்றும் பொது அறிவுப் பாடங்களில் எனக்கு இருந்த ஈடுபாட்டைக் கண்டு, இந்திய ஆட்சிப் பணியில் வெற்றிபெற்ற எனது நண்பர்கள், ஆட்சிப் பணித் தேர்வுக்குப் பயிற்றுநராக வகுப்பெடுக்க என்னைப் பரிந்துரைத்தனர். பகுதி நேரமாக அதைச் செய்தேன். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபோது, 2017ல், பள்ளிக்கல்வித் துறைச் செயலராக திரு. உதயசந்திரன், (இ.ஆ.ப.) பணியேற்றார். எனது ஆர்வத்தை நண்பர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மூலமாக அறிந்த அவர், என்னை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய பாடத்திட்டம், பாடநூல் தயாரிப்பு மற்றும் பாடநூல் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடுத்தினார். பின்னர் முழு நேரமாகப் பாடநூல் கழகத்தில் பணியாற்ற வழிவகை செய்தார்.

சென்னை புத்தகத் திருவிழா 2020



கே: தமிழ்நாடு பாடநூல் கழகம் மறுபதிப்புச் செய்து வெளியிடும் நூல்கள் பற்றி, அதன் சிறப்புகள் பற்றிச் சொல்லுங்கள்.
ப: தமிழ்நாடு பாடநூல் கழகம் 1960-70களில் கல்லூரிப் படிப்புக்காக வெளியிட்ட 875க்கும் மேற்பட்ட நூல்களை ஆவணப்படுத்தி மறுபதிப்பு செய்யும் பணிகள் 2017ல் தொடங்கின. இதுவரை 636 புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. இவை புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டு இதுவரை 14 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பில் 8800க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றுள்ளன. இவை ஐ.ஏ.எஸ். தேர்வைத் தமிழில் எழுதும் மாணவர்களுக்குப் பேருதவி செய்கின்றன. வெற்றி பெற்ற மாணவர்கள் பிரபல ஆங்கில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியின் வழியே நீங்கள் இதை அறியலாம். நூற்பட்டியலை என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

திரு பாலகிருஷ்ணன், I.A.S. அவர்களுடன் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்



கே: இந்த நூல்கள் இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன அல்லவா?
ப: ஆம். தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகத்தில் இந்நூல்களின் மின்பிரதி (PDF) இலவசமாகக் கிடைக்கும்.

முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களுடன்



கே: லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆன "கையளவு களஞ்சியம்" நூல்தான் உங்களைத் தமிழகம் முழுக்கக் கொண்டு சேர்த்தது, அல்லவா?
ப: ஆம். 1,50,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி 23 பதிப்புகளுக்கு மேல் கண்டுள்ளது இந்தப் புத்தகம். நான் எழுதியது என்பதைவிட விகடன் பிரசுரத்தின் வெளியீடாக வந்தது என்பதுதான் அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். அதனைத் தொடர்ந்து விகடன் பிரசுரத்திற்கு 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். 'விகடன் இயர் புக்' கௌரவ ஆலோசகராகவும் உள்ளேன். இந்த அனுபவங்கள் புதிய பாடத்திட்ட தயாரிப்பில், பல்வேறு வடிவமைப்பாளர்களை ஒருங்கிணைப்பதில் எனக்கு உதவின. அதற்காகத் திரு. உதயசந்திரன் சாரிடம் நான் பெற்ற சான்றிதழ் மறக்கமுடியாத ஒன்று.



கே: ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கும் போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறீர்கள். இன்றைய மாணவர்களின் பலம், பலவீனம் என்று எதைப் பார்க்கிறீர்கள்?
ப: ஐ.ஏ.எஸ். தேர்வைப் பொருத்தமட்டில் மாணாக்கர்களின் தனித்திறன்தான் முக்கியமானது. என்போன்ற பயிற்றுநர்கள் அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை முறையே மேம்படுத்தவும் திருத்தவும் உதவுகிறோம் அவ்வளவுதான். தேர்வின் தன்மை, எதிர்பார்ப்பு, போட்டியாளர்களின் நிலை, விடாமுயற்சி, தொடர்பயிற்சி போன்றவற்றால் வெற்றி சாத்தியமாகிறது. ஒரு பயிற்றுநரிடமே நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சமயத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் அவர்களில் சுமார் 10 முதல் 15 மாணவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதைக் கொண்டு இத்தேர்வில் மாணவர்களின் தனித்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

எனது மாணவர்கள்
எங்களிடம் பயின்று இன்று முன்னணி அதிகாரிகளாகத் திகழும் மாணவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஒரு சிலரைச் சிறப்பித்துச் சொல்லவேண்டும். டாக்டர் ஆர். ஆனந்தகுமார், 2003ல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர். இவரை, எனது முதல் மாணவர் என்றும், கல்வி நாட்டம் குறையா (Ever Green Student) மாணவர் என்றும் சொல்வேன். இவரும் என்னைப்போல் கால்நடை மருத்துவர். கல்லூரியில் எனக்கு ஓராண்டு ஜுனியர். "அண்ணாச்சி என்னை வைத்துத்தான் தொழில் கற்றுக்கொண்டார்" என்று என்னைப்பற்றி அன்போடும் வேடிக்கையோடும் குறிப்பிடுவார். தமிழகத்தின் தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவராக ஆனந்த குமாரை ஆனந்த விகடன் அண்மையில் பாராட்டியது பலருக்குத் தெரிந்திருக்கும்.

2010ல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற சண்முகப்ரியா. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். இவர் பெற்ற வெற்றி, நான் சிறந்த பயிற்றுநராக உருவாக முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் வலுப்படுத்தியது.

2013ல் முழுத்தேர்வையும் தமிழில் எழுதி வெற்றிபெற்ற தம்பி ஜெயசீலன். இவர் வேளாண் பட்டதாரி. தணியாத தமிழார்வம் கொண்டவர். தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற சரவணன், மதுபாலன், அலர்மேல்மங்கை என்று பலரையும் சொல்ல வேண்டும். பட்டியல் நீண்டு கொண்டே போகும், பக்கங்கள் போதாது.

டாக்டர் சங்கர சரவணன்.


தங்கள் தனித்திறனை மதிப்பீடு செய்யத் தவறும் மாணவர்கள், என்போன்ற பயிற்றுநர்கள் மதிப்பீடு செய்து சொன்னாலும், ஏற்று நடைமுறைப் படுத்துவதில்லை. அதனால் சிலர் வெற்றி வாய்ப்பை ஓராண்டில் தவற விட்டுவிட்டுப் பின்னர் உணர்ந்து திருந்தி தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். வாசிப்பில் தணியாத ஆர்வமும், படித்த கருத்துக்களைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தும் திறனும் தேர்வில் வெற்றிபெற மிகவும் அவசியம்.

நடிகர் திரு சிவகுமாருடன்



கே: உங்கள் நூல்களுக்கான மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: உதயசந்திரன் சாரிடம் பெற்ற பாராட்டினைப் பற்றி முன்பே சொல்லிவிட்டேன். ஏழு, எட்டு வருடங்களுக்கு முன் விகடன் கல்வி மலர் ஒன்றைத் தயாரித்தது. அப்போது, சிந்துவெளி ஆய்வாளரும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தமிழில் எழுதி வெற்றிபெற்ற முதல் பட்டதாரியுமான பாலகிருஷ்ணன் சாரை பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின், அவருடைய நட்புக் கிடைத்தது. பொது அறிவில் எனக்கிருக்கும் ஈடுபாட்டையும் விகடன் இயர் புக் தயாரிப்பில் நான் செலுத்தியிருந்த கவனத்தையும் பார்த்து அவர், 'நான் படிக்கிற காலத்தில் நீங்கள் இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்றுநராக இருந்திருந்தால் அகில இந்திய அளவிலேயே நான் முதலிடம் பெற்றிருப்பேன்' என்று வழங்கிய சான்றிதழ் மறக்க முடியாதது.



கே: உங்கள் தமிழார்வத்திற்கும் தகவல்களை ஆவணப்படுத்தும் ஆர்வத்துக்குமான காரணிகள் என்ன?
ப: எனக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே மிகுந்த தமிழார்வம் உண்டு. அது, அடிப்படையில் அதிக வாசிப்புப் பழக்கம் கொண்ட எனது அன்னையாரிடமிருந்தும் கவிஞராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் திகழும் எனது சகோதரர் நெல்லை ஜெயந்தாவிடமிருந்தும் வந்தது. நான் கல்லூரியில் தமிழ் பி.ஏ. சேர விரும்பியிருந்தேன். மேல்நிலைக் கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்ததால் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர வேண்டியதாயிற்று. பள்ளிப் பருவத்தில் என் தமிழார்வத்திற்கு விதையிட்ட ஆசிரியர்கள் புலவர் சு. நம்பி மற்றும் சேரை பாலகிருஷ்ணன் எனில், கல்லூரிக் காலத்தில் அது வளர உரமிட்டவர் பேராசிரியர் பெரு. மதியழகன். கல்லூரியில் பயின்ற பொழுது தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் 'தமிழால் இயலும்' என்ற தலைப்பில் உரையாற்றி அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. தகவல்களை அதிகம் தெரிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வமே தகவல்களை ஆவணப்படுத்தும் ஆர்வமாக மாறியது என்று சொல்லலாம்.

திரு மயில்சாமி அண்ணாதுரை திரு. உதயசந்திரன் ஆகியோருடன்



கே: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மூலம் இன்னும் எந்தெந்த நூல்களை இம்மாதிரி மறுபதிப்புச் செய்யத் திட்டம் வைத்துள்ளீர்கள்?
ப: மொத்தம் 32 துறைகளைச் சார்ந்த 875 நூல்களை பாடநூல் கழகம் 1960-70களில் வெளியிட்டது. அவற்றுள் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், விண்வெளியியல், உளவியல், தத்துவவியல் போன்ற துறைகளைச் சார்ந்த நூல்கள் வந்துள்ளன. சட்டம், பொதுத்துறை ஆட்சியல், மருத்துவம், வங்கியியல், கணக்குப் பதிவியியல், புள்ளியியல் போன்ற துறைகளைச் சார்ந்த நூல்கள் வர வேண்டியுள்ளது. இந்தத் துறைகளில் புதிய நூல்களை எழுதுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகை நயன்தாராவுடன் ஒரு விழாவில்



கே: பொறியியல் கல்வித் தேர்வுகளைத் தமிழிலேயே எழுதலாம் என்ற புதிய அறிவிப்புக் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: நீண்ட காலமாகவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டடப் பொறியியல் மற்றும் எந்திரப் பொறியியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பாகப் பயின்று வருகின்றனர். பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியே பயின்ற மாணவர்கள், கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்திலேயே நடத்தப்படுவதைக் கண்டு அஞ்சிவிடக்கூடாது. படிப்படியாக அவர்களின் மொழி சார்ந்த பயம் போக்கப்பட வேண்டும். அதற்கு ஆங்கிலக் கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தந்து தமிழ் வழியில் எழுதப்பட்ட இணைப்புப் பாடநூல்கள் (Bridge materials) உதவும்.



கே: உங்கள் குடும்பம் பற்றி . . .
ப: அம்மாவையும் மூத்த சகோதரரையும் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். அப்பா கிராம அதிகாரியாக இருந்தவர். குடிமைப்பணி பற்றிய கனவுகளை விதைத்து வளர்த்தவர். 1950-60களில் வெளியான திரைப்படங்களைப் பார்க்க வைத்து தமிழார்வம் ஊட்டியவர். இன்னொரு மூத்த சகோதரர் செல்வகுமார், பொது அறிவுப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஆர்வம் ஊட்டியவர். அண்ணிகளும் அவ்வாறே. இன்று நான் பல பணிகளைத் தொய்வின்றி செய்ய உதவுபவர்கள் என் மனைவி உஷா கௌரியும் எனது மகன் சிவசங்கரும். எனது குடும்பத்தின் அன்றாடப் பணிச்சுமைகளைக் குறைப்பதில் என் மனைவியின் பெற்றோர்களது பங்கும் குறிப்பிடத்தக்கது.



கே: வரும் புத்தகக்காட்சிக்கான தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் திட்டங்கள் என்ன?
ப: சட்டவியல் நூல்களை மறுபதிப்பு செய்வது, நாட்டுடமையாக்கப்பட்ட சில முக்கிய நூல்களைப் பதிப்பிப்பது, குழந்தைகளுக்கான குறுநூல்களைக் கொண்டு வருவது, தமிழ் இலக்கிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.



கே: உங்கள் வாட்ஸப் DP-யில் நிரந்தரமாக வள்ளுவர் படம் வைத்திருப்பதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உள்ளதா?
ப: வள்ளுவர் மனதிற்கு நெருக்கமானவர் என்பது ஒரு காரணம். நம் படத்தையே விதவிதமாக வைத்துக் கொள்வதில் இருக்கும் தேவையற்ற கூச்ச உணர்வு இரண்டாவது காரணம். அதைத் தினம் மாற்றுவதில் இருக்கும் சோம்பேறித்தனம் மூன்றாவது முக்கியக் காரணம். மற்றபடி எல்லோரையும் போல் பிரபலங்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது எனக்கும் பிடிக்கும்தான்.



உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

★★★★★
என்னை ஊக்குவிப்பவர்கள்
கால்நடைத் துறையிலிருந்து கல்வித் துறைக்கு நான் வரக் காரணமாக இருந்த திரு. உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களை முதன்மையாகக் குறிப்பிட வேண்டும். பாடநூல் கழக ஆலோசனைக் குழுவில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து என்னையும் பதிப்பகப் பணிகளில் என்னோடு ஈடுபட்டுள்ள நண்பர் அப்பணசாமி அவர்களையும் ஊக்குவித்து வருகிறார். கல்வித்துறை ஆணையர் திரு நந்தகுமார், கல்விசார்ந்த எனது பணிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஊக்குவித்து வருகிறார். அதேபோல் வாரம் தவறாமல் என்னிடம் அலைபேசியில் பேசி ஊக்குவிக்கும் மற்றொரு ஆளுமை மூத்த நடிகரும், ஓவியரும், பேச்சாளரும், பன்முகக் கலைஞருமான திரு. சிவகுமார்.

கையளவு களஞ்சியம் புத்தக வடிவம் பெறுவதற்கு முன்பே (சுட்டி விகடனோடு தகவல் டைரி என்ற பெயரில் இணைப்பாக வந்தது) அதைப் பாராட்டியவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். கையளவு களஞ்சியத்தைப் படித்து மிகவும் பாராட்டினார் கவிப்பேரரசு வைரமுத்து.

பாடநூல் கழகத்தில் எங்கள் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டியதில் மறைந்த எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், பிரபஞ்சன் போன்றவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு. அனந்தகிருஷ்ணன் எங்கள் ஆலோசனைக் குழுவில் இருந்து வழிகாட்டினார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

டாக்டர் சங்கர சரவணன்.


★★★★★


டாக்டர் சங்கர சரவணன் எழுதிய நூல்களின் பட்டியல் :
கையளவு களஞ்சியம்
பொது அறிவுக் களஞ்சியம்
பொதுத் தமிழ்க் களஞ்சியம்
பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும்
வி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம்
இந்திய அரசமைப்பு
இந்திய வரலாறும் பண்பாடும்
இந்தியா கையேடு
டி.என்.பி.எஸ்ஸி. தேர்வு வினா வங்கி (பொதுத் தமிழ்)
டி.என்.பி.எஸ்ஸி. தேர்வு வினா வங்கி (பொது அறிவு)
டி.என்.பி.எஸ்ஸி. குரூப் II A தேர்வு
டி.என்.பி.எஸ்ஸி. குரூப் IV தேர்வு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்
விகடன் இயர் புக்
Share: 




© Copyright 2020 Tamilonline