Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
வித்தக இளங்கவி விவேக்பாரதி
'சொல்லருவி' மு. முத்துசீனிவாசன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூன் 2019||(1 Comment)
Share:
அந்த அறையில் எங்கு பார்த்தாலும் கேடயங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும். அலமாரிகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள். "வாருங்கள்" என்று இருகரம் கூப்பி நம்மை வரவேற்கிறார் மு. முத்துசீனிவாசன். புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர், புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகிப்பவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் எனப் பல மகுடங்களை மாற்றி மாற்றி அணிபவர். 'சொல்லருவி', 'இலக்கியத் தேனீ', 'சாதனைச் செம்மல்', 'பேச்சுத் திலகம்', நன்மனச் செம்மல்', 'பாராட்டும் பல்கலைக்கழகம்' எனப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றிருக்கும் இவரது சாதனை மகுடத்தில் மற்றொரு சிறகு, சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய 'தமிழ்ச்செம்மல்' விருது. புதுக்கோட்டையிலிருந்து அன்றுதான் தனது வாழ்நாள் இலக்கியப் பணிக்காக 'வரலாற்று நாயகர்' விருது பெற்றுச் சென்னை வந்திருந்தவருடன் உரையாடினோம்...

*****


கே: இளம்பருவ நினைவுகள்?
ப: விருதுநகர் மாவட்டத்தில் நதிக்குடி கிராமத்தில் ஜனவரி 06, 1944ல், முத்து ஐயங்கார்-ரங்கநாயகி தம்பதிக்கு மூத்தமகனாகப் பிறந்தேன். விவசாயக் குடும்பம். நிலபுலன்கள் இருந்தன. தந்தையாரே ஏர் பூட்டி உழுவார். வயல் வேலை எல்லாமே அவருக்கு அத்துப்படி. கடும் உழைப்பாளி. ஐந்தாம் வகுப்பு வரை நதிக்குடியில் 'சரஸ்வதி வித்யாலயா' பள்ளியில் படித்தேன். ஒரு சூழலில் எங்கள் நிலமனைத்தும் கைவிட்டுப் போயின. வெளிவேலை செய்து சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. அப்பா காரைக்குடிக்குப் போய், என் தாய் மாமனின் ஹோட்டலில் சேர்ந்து பணியாற்றினார். திருமணம் போன்ற விழாக்களுக்குச் சமையல் செய்யவும் போவார். இரவு, பகல் பாராத கடும் உழைப்பு. எனக்குப் பின்னால் ஆறு சகோதரிகள். அப்படிப்பட்ட சூழலில் நான் வளர்ந்தேன். காரைக்குடியில் இருந்த புகழ்பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கலாசாலையில் சேர்ந்து கல்வி பயின்றேன்.



கே: இலக்கிய ஆர்வம் முகிழ்த்தது எப்படி?
ப: காரைக்குடியில் இருந்த தனியார் படிப்பகங்களுக்குப் போய் நாளிதழ்கள், புத்தகங்களைப் படிப்பேன். திராவிட இயக்கக் கூட்டங்களுக்குச் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பேன். அதனால் எனக்கு, எழுதும், பேசும் ஆர்வம் வந்தது. 'எழில்' என்ற பெயரில் கவிதைகளை ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வந்தேன். ஒரு சமயம் பள்ளியில் பேச்சுப் போட்டி வைத்தார்கள். அப்போது எனக்குப் பயந்த சுபாவம் என்பதால், நண்பனைப் பெயர் கொடுக்கச் சொல்லிவிட்டு, அவன் பேசுவதற்கான குறிப்புகளை எழுதிக் கொடுத்தேன். நான் எழுதித் தந்ததை அவன் சிறப்பாகப் பேசினான். ஆனால், அதை எழுதித் தந்தது வேறொருவர் என்பதைத் துணைத் தலைமையாசிரியர் திரு ஆர். சுந்தர்ராஜ ஐயங்கார் கண்டுபிடித்து விட்டார். அவனைக் கூப்பிட்டு விசாரிக்க, அவன் உண்மையைச் சொல்லிவிட்டான். என்னை அழைத்தார். நான் பயந்துகொண்டே போனேன். "எழுதிய நீயே பேசாமல் ஏன் அவனைப் பேசச் சொன்னாய்?" என்று கேட்டார். நான் பயமாக இருந்தது என்ற உண்மையைச் சொன்னவுடன், "ஏன் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறாய், எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?" என்று கேட்டார். காரணம், நான் அந்தக் கட்டுரையில், "தொட்டால் தீட்டு; தீண்டினால் பாவம்" என்று மேடையில் கேட்டதையெல்லாம் எழுதியிருந்தேன். "சரி சரி. இப்படி எழுதிக் கொண்டிராதே; காரைக்குடியில் கம்பன் விழா, திருவள்ளுவர் விழா எல்லாம் நடக்கிறது. அங்கு போய் சொற்பொழிவுகளைக் கேள். நிறையக் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.

அவர் சொன்னபடி, காரைக்குடி கம்பன் விழாக்களுக்குச் சென்று கம்பனடிப்பொடி சா. கணேசன், வ.சுப. மாணிக்கனார் போன்றோரின் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அது எனக்கு ஒரு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. இலக்கியங்களைத் தேடித்தேடி வாசிக்கும் ஆர்வத்தை அது தூண்டிவிட்டது. அன்றைய அந்த அனுபவந்தான் பிற்காலத்தில் நான் இலக்கியச் சொற்பொழிவாளனாக ஆனதற்குக் காரணம். இன்றைக்கும் தேடித்தேடி இலக்கியங்களை வாசிக்கிறேன். நாடக ஆர்வமும் உண்டு. 'அன்பின் ஒளி', 'மாமியாரா மருமகளா' என்ற நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நடித்துமிருக்கிறேன்.



கே: படிப்பை முடித்ததும் என்ன செய்தீர்கள்?
ப: பள்ளியிறுதி வகுப்பை முடித்தேன். மேலே படிக்க ஆவல். குறிப்பாக ஆசிரியராகும் எண்ணம் இருந்தது. ஆனால், அதற்கு இரண்டு வருடம் தனியாகப் படிக்க வேண்டும். குடும்பச் சூழ்நிலை அதற்கு இடம் தராததால், பல்வேறு தற்காலிகப் பணிகளைச் செய்தேன். பின்னர் தமிழக அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதித் தேர்ச்சி பெற்றேன். வேலை கிடைத்தது. ஜூன் 18, 1963ல், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் லோயர் டிவிஷன் க்ளார்க் - தற்போது இளநிலை உதவியாளர் - பணியில் சேர்ந்தேன். அதுமுதல் பல்வேறு பதவி உயர்வுகள் வந்தபோதும் கூடத் தவிர்த்துவிட்டு, புதுக்கோட்டையையே வாழ்விடமாகக் கொண்டு 2001ல் பணி ஓய்வு பெறும்வரை, 38 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினேன்.

ஆரம்பத்தில் காரைக்குடியில் இருந்து புகைவண்டியில் வந்து போய்க் கொண்டிருந்தேன். காலை ஐந்தரை மணிக்குப் புறப்பட்டால், வீடு திரும்ப இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிடும். அதனால், சில ஆண்டுகளுக்குப் பின் புதுக்கோட்டைக்கே குடும்பத்தை மாற்றினேன். 1975ல் எனக்குத் திருமணம் ஆனது. மனைவி ரங்கநாயகி எனக்கு மிகவும் உறுதுணை. ஊதியத்தில் சிறுகச்சிறுகச் சேமித்து ஓர் இடத்தை வாங்கினேன். பின்னர் அங்கு 'வாசன் கபே' என்ற ஹோட்டலைத் தொடங்கி, அப்பாவை 'கல்லா'வில் அமர வைத்தேன். அதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி, நெகிழ்ச்சி. ஒரு மகனாக எனக்கும் மிகுந்த மனநிறைவு.

ஏர் பிடித்த கை
விதியின் வசத்தால்
கரண்டி பிடித்தது
கரண்டி பிடித்த கை
பின்னால் கல்லாவில் உட்கார்ந்து
காசும் வாங்கியது
இதுவே வாழ்க்கையின் சுழற்சி

என்று பின்னால் ஒரு மேடையில் சொன்னேன்.

என் மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து, மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டதால், வருமானத்தில் சிறுகச் சிறுகச் சேமித்து படிப்படியாக எனது சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இவற்றிற்குக் காரணம் எங்கள் முன்னோர் மற்றும் கடவுளின் ஆசிதான்.



கே: புதுக்கோட்டை இலக்கியப் பேரவை , அதன் பணிகள் பற்றி...
ப: புதுக்கோட்டை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு தொடங்கு முன்னால், நான் புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாவட்டத் தலைவராக இருந்தேன். எதற்கெடுத்தாலும் போராடுவது என்பதை விட்டுவிட்டு, "போராடிப் பெறுவதை வாதாடிப் பெறுவோம்" என்பதைத் தாரக மந்திரமாக்கி, உரிமைகளைச் சுட்டிக்காட்டிக் கேட்டுப் பெறுவதில் ஈடுபாட்டுடன் இருந்தேன். அப்படிப் பெற்றும் தந்தேன். அதனால் அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலரது அறிமுகமும் நட்பும் கிடைத்தது. புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத் துணை இயக்குநராக ஜெ. ராஜாமுகமது இருந்தார். அவருக்கு வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு. புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றுப் பேரவையின் செயலாளராக இருந்தார். அவர் பல வருடங்கள் உழைத்து 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூலை எழுதியிருந்தார். (நூலை வாசிக்க) ஆனால், அது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவர்மீது பரவலாக கவனம் ஏற்படுத்தவும், அவரது உழைப்பைப் பாராட்டி அங்கீகரிக்கவும் விரும்பினேன். நான் அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர். அமைப்பு மூலம் பலரை ஒன்றிணைத்து, பல ஜாம்பவான்களை, பிரபலங்களை அழைத்து அவருக்கு விழா எடுத்து 'வரலாற்று வித்தகர்' பட்டம் அளித்துச் சிறப்பித்தோம். அதை விழாவுக்கு வந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாராட்டியதுடன், தொடர்ந்து நடத்துங்கள் என்று ஊக்குவித்தனர். இது அவரைப் போன்றே ஆர்வமுடைய பிற அரசு அலுவலர்களுக்கும் மற்றோருக்கும் தூண்டுதலாக இருக்கும் என்று வாழ்த்தினர். இதுதான் ஆரம்பம்.

இப்படி வருடா வருடம் விழா எடுத்துச் சாதனையாளர்களைப் பாராட்டினோம். முதலில் புத்தகம் எழுதிய அரசு அலுவலர்களை மட்டுமே பாராட்டினோம். இதன் நேர்த்தி கண்டு வியந்து புத்தகம் எழுதுபவர்கள் மட்டுமல்லாமல், பல்துறைச் சாதனையாளர்களையும் பாராட்டலாமே என்று ஆலோசனைகள் வந்தன. அதையும் செயல்படுத்த ஆரம்பித்தோம். சுமார் ஆறு வருடங்கள் சாதனையாளர்களைப் பாராட்டி வந்தோம். 2001ல் பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னும் அரசு அலுவலர் கழகத்தின் மூலம் இதனைத் தொடரமுடியாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பல்வேறு இலக்கியச் சங்கங்களின் நட்பிலும், பொறுப்பிலும் இருந்த நான், நண்பர்களுடன் இணைந்து 2002ல் 'புதுக்கோட்டை மாவட்ட இலக்கியப் பேரவை' என ஆரம்பித்தேன். அதன் மூலம் சாதனையாளர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கும் பணி இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.



கே: "விழாக்களின் நேர்த்தி கண்டு வியந்து" என்று கூறினீர்கள், அதை விளக்குங்கள்.
ப: முற்காலத்தில் வாழ்ந்த பல சாதனையாளர்களின் பெயர்களை நாம் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களது விரிவான வாழ்க்கை வரலாறு கிடைக்காது. காரணம், நம்மிடையே வரலாற்றைத் தொகுத்து வைக்கும் பழக்கம் இல்லை. அந்த நிலைமை தொடரக்கூடாது என்று, சாதனையாளர்களை அடையாளம் கண்டு பாராட்டுவதோடு, அவர்களுடைய அதுநாள் வரையிலான வாழ்க்கையை, சாதனைகளைத் தொகுத்து நூல் வெளியிடுகிறோம். வருங்காலச் சந்ததியினர் தங்கள் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதுடன், சிறந்த வரலாற்று ஆவணமாகவும் அது அமையும் என்பது எங்கள் நம்பிக்கை. இதை எங்கள் விழாவின் முக்கியமான சிறப்பு என்று கூறலாம்.

சான்றோர்கள் கூடிய அவையில், சாதனையாளரை மேடைக்கு அழைத்து, பொன்னாடை போர்த்தி, பதக்கம் அணிவித்து, தலையில் கிரீடம் வைத்து, விருது கொடுத்து கௌரவிக்கிறோம். விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ஒருமுறை சொன்னார், "நீங்கள் சிறப்புச் செய்யும்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால், கிரீடம் வைக்கும்போது பலரின் கண்கள் கலங்கியதைப் பார்த்தேன். சிலர் கண்ணீர் விட்டார்கள். அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். ஏன் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்றால், ராஜ மரியாதையாகத் தலையில் கிரீடம் சூட்டப்படுகிறது. அது மட்டுமல்ல; தான் பிறந்த மண்ணில் தான் யாரையெல்லாம் பார்த்துப் பழகிக் கொண்டிருக்கிறோமோ, அவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்து கொண்டிருக்கும்போது, அவர்கள் முன்பாகத் தனக்கு கிரீடம் சூட்டிக் கௌரவப்படுத்துகின்றார்கள் என்ற நெகழ்ச்சி கண்ணீராக வருகிறது" என்றார். இதை எங்கள் விழாவின் தனிச்சிறப்பு என்று சொல்லலாம்.



கே: இதுவரை எத்தனை பேருக்குப் பாராட்டு அளித்திருப்பீர்கள்?
ப: டிசம்பர் 2018வரை 573 சாதனையாளர்களைக் கௌரவித்திருக்கிறோம். இவர்களில் புதுக்கோட்டையில் பிறந்தவர்கள், வாழ்பவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்துச் சாதனையாளர்கள் பலரும் அடங்குவார்கள். 2018ல் எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், கவிஞர் மலர்மகன், எழுத்தாளர் ஆர்.வி. பதி எனப் பலருக்குச் சிறப்புச் செய்திருக்கிறோம். எழுத்தாளர்கள் கே.ஜி. ஜவஹர், டாக்டர் ஜெ. பாஸ்கரன், கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி, டாக்டர் சியாமா சுவாமிநாதன், கலைமாமணி மக்கள்குரல் ராம்ஜி, ஜெயந்தி நாகராஜன், பத்திரிகையாளர் இடைமருதூர் கி. மஞ்சுளா, வான்மதி எனச் சென்னைவாழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரைக் கௌரவித்திருக்கிறோம். கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், மக்கள்நலப் பணியாளர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிகவாதிகள் எனச் சாதி, மதம், இனம் கடந்து தகுதி ஒன்றே கருதிக் கௌரவிக்கிறோம்.

சிலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அளித்திருக்கிறோம். அருளாளர் ஆர்.எம்.வீ., டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், பாலம் கலியாணசுந்தரம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், வி.என். சிதம்பரம், 97 வயதான, 25 வருடங்கள் பஞ்சாயத்துத் தலைவராக இருந்து கிராமங்களை முன்னேற்றிய வெங்கடாசல நாயுடு, குழந்தை இலக்கியச் செல்வர் பி. வெங்கட்ராமன், டாக்டர் லேனா தமிழ்வாணன், டாக்டர். இரா. கற்பூரசுந்தரபாண்டியன், புதுகைத் தென்றல் ஆசிரியர் எம். தருமராசன், கல்வியாளர் தனலட்சுமி சீனிவாசன், கல்வியாளர் வி. கே. சுந்தரம் எனப் பலர் இவ்விருது பெற்றிருக்கின்றனர்.



கே: 'சொல்லருவி' என உங்களை ஏன் குறிப்பிடுகின்றனர்?
ப: புதுக்கோட்டைவாழ் கவிஞர், பேச்சாளர் மால்கவி நாராயணன். ஆவேசமாகப் பேசுவார். ஆசுகவியும் கூட. அப்போதெல்லாம் புதுக்கோட்டை பாலையா பள்ளியில்தான் பெரும்பாலான விழாக்கள் நடக்கும். அப்படி ஒரு நிகழ்வில், எனது தடையில்லாப் பேச்சைக் கண்டு வியந்து, "சொல் அருவிபோல் வந்து விழுவதால் இவருக்குச் 'சொல்லருவி' என்று பட்டம் சூட்டுகிறேன்" என்று அரங்கில் அறிவித்தார். அது நிலைத்துவிட்டது.

கே: நீங்கள் எழுதியிருக்கும் சாதனையாளர்களின் வரலாற்றுப் புத்தகங்கள் பற்றி...
ப: ஆரம்பத்தில் சாதனையாளர்களின் வரலாற்றை விழா அரங்கில் சைக்ளோஸ்டைல் செய்து கொடுப்போம். அது அவ்வளவு நிறைவு தரவில்லை. இவற்றைத் தொகுத்து நூலாகப் போட்டால் என்ன என்று தோன்றியது. ஆகவே, 1992 முதல் 1996 வரை பாராட்டப்பட்ட 43 பேரின் வாழ்க்கையைத் தொகுத்து, 1997ல் நடைபெற்ற விழாவில், அந்த ஆண்டின் நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டோம். அதுதான் எனது முதல் புத்தகம். புத்தகத்தின் பெயர் 'புதுக்கோட்டையின் சில சாதனையாளர்கள்'. இலக்கியப் பேரவை மூலமாக முதலில் வெளியிட்ட நூல், 'புதுக்கோட்டையின் புகழ் சேர்க்கும் செம்மல்கள்'. 2018ம் ஆண்டுவரை மொத்தம் 18 தொகுப்பு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நூல்களில் விருது பெறுவோரின் சாதனைகள், சிறப்புக்கள் மட்டுமல்லாமல்லாமல், அவர்களது பெற்றோரின் படங்கள், குடும்ப விவரங்கள் எல்லாம் காணக் கிடைக்கும்.

நல்லியாரின் வாழ்க்கையை 'உழைப்பின் சிகரம்' என்ற தலைப்பில் நூலாக்கினேன். அதுபோல 'மீனாட்சி மைந்தன்', மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்த வி.என். சிதம்பரம் பற்றிய நூல், புதுக்கோட்டையில் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய புனிதர் டாக்டர் ராமச்சந்திரன் பிள்ளையின் வாழ்க்கை நூல், புகழ்பெற்ற கவிஞரான தங்கம் மூர்த்தி பற்றி ஒரு நூல் எல்லாம் எழுதியிருக்கிறேன்.



கே: மறக்க முடியாத விருது எது?
ப: புதுக்கோட்டை மாவட்டத் திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கவிதைப்பித்தன் அவர்கள், 'சமூக மத நல்லிணக்க' விருதை அளித்தது மறக்க முடியாதது. அதுபோல பாலம் கலியாணசுந்தரனாரைத் தலைவராகக் கொண்ட அன்புப்பாலம் அளித்த விருதைச் சிறப்பானதாகக் கருதுகிறேன். சென்னை கம்பன் கழகம் விருது, கி.வா.ஜ. இலக்கிய விருது, மகாத்மா காந்தி நூலக விருது, திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, இலக்கியச் சாரல் விருது என்று அடுக்கலாம். சமீபத்தில் தமிழக அரசு எனது தமிழ்ப் பணியைப் பாராட்டி அளித்த 'தமிழ்ச் செம்மல்' விருதும் மறக்கமுடியாத ஒன்றே.

கே: உங்கள் குடும்பம் பற்றி..
ப: துணைவியார் ரங்கநாயகியின் உறுதுணையால்தான் என்னால் இந்த அளவுக்குச் செயல்பட முடிகிறது. எனக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். எல்லாருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருக்குமே இலக்கிய ஆர்வம் உண்டு. மகன் மு. பிரசன்ன வெங்கடேஷ் சென்னை உட்பட வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் நண்பர்களை ஒன்றிணைத்து 'புதுகை இளைஞர்கள் இலக்கிய நட்பு வட்டம்' என்ற அமைப்பைச் சென்னையில் உருவாக்கி, அதன்மூலம் சாதனையாளர்களைக் கௌரவித்து வருகிறார்.

"எனக்கு 76 வயது ஆகிறது. உடல்நிலை ஒத்துழைக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இது நல்ல பணி, சாதனையாளர்களை, சமூகத்திற்காக உழைப்பவர்களை உற்சாகப்படுத்தும் பணி என்பதால் ஆர்வத்துடன் செய்து வருகிறேன். ஒரு மனிதரைச் சிறப்பிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதில் மிகுந்த மன நிறைவு கிடைக்கிறது. இறைவன் என்னைக் கருவியாகக் கொண்டு இத்தகைய பணிகளைச் செய்ய வைக்கிறான் என்ற மனநிறைவு எனக்கு எப்போதும் உண்டு. தென்றல் வாசகர்களுக்கு என் வணக்கங்கள்." நெகிழ்ச்சியுடன் பேசி முடிக்கிறார் சொல்லருவியார்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்
*****


புதுக்கோட்டை அருங்காட்சியகம்
புதுக்கோட்டை அருங்காட்சியகம் மிகப்பழமையான, அரிய பொருட்களைக் கொண்டது. மன்னர்களின் போர்க்கருவிகள், ஆடைகள் போன்றவற்றைக் இங்கே காணலாம். எதிரி வாளால் குத்தினால்கூட உள்ளே போகாத இருப்புச் சங்கிலியாடையை (இருப்புச்சீரா அல்லது அந்தளகம் என முன்னாளில் அழைக்கப்பட்டது) இங்கே காணலாம். வளரி, வளைதடி (Boomerang) எனப்படும் கருவி, சரியாக எய்தால் இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் எய்தவரின் கைக்கே திரும்பி வரும், அதை இங்கே பார்க்கலாம். ஏழு, எட்டாம் நூற்றாண்டுக் கற்சிலைகள், வெண்கலச் சிலைகள், ஐம்பொன் சிலைகள், நாணயங்கள், கல்வெட்டுப் பிரதிகள், செப்பேடுகள் எல்லாம் காணக் கிடைக்கின்றன.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முழு வரலாறு (ஓலைச்சுவடி) பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒரு சமயம், 1921 என்று ஞாபகம், மகாத்மா காந்தி புதுக்கோட்டை வழியாகச் செல்ல இருந்தார். பிரிட்டிஷாருடன் இணக்கமாக இருந்த சமஸ்தானத்தினர், பிரிட்டிஷ் எதிர்ப்பாளரான காந்தியை அவ்வழிச் செல்ல அனுமதித்தால் பிரிட்டிஷ் அரசால் பிரச்சனை வருமோ என எண்ணி, காந்திக்குப் புதுக்கோட்டை சமஸ்தான எல்லை வழியாகச் செல்லக்கூடாது என்று ஒரு கடிதத்தை அனுப்பினர். அது பாதுகாக்கப்பட்டு அங்கே காட்சியகத்தில் இடம் பெற்றிருக்கிறது. "உங்கள் கடிதத்தின்படி நான் பாதையை மாற்றிக்கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்திற்கு மகாத்மா காந்தி பதிலெழுதிய கடிதமும் அங்கே உள்ளது. ஆனால், அதே காந்திக்குப் பிற்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வரவேற்புக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வரவேற்புப் பத்திரமும் காட்சியகத்தில் உள்ளது.

இங்கிருக்கும் நாணயவியல் பகுதி முக்கியமானது. மைசூர் தசராவைப் போல ஒரு காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் தசரா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது 'அம்மன் காசு' வெளியிடுவார்கள். 'அரைக்காசு அம்மன்', 'அம்மன் அரைக்காசு' என்றெல்லாம் அதைச் சொல்வார்கள். நாணயத்தின் ஒருபுறம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாளின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு அச்சிடப்பட்ட பிற தங்க நாணயங்களும் காட்சியகத்தில் உள்ளன. செப்பேடுகளை, கல்வெட்டுக்களைப் படியெடுக்க கற்பிக்கப்படுகிறது. மாதாமாதம் சிறப்புப் பேச்சாளர் ஒருவரை வரவழைத்து, வரலாறு, இலக்கியம், பண்பாடு, ஆய்வுகள் குறித்த விவாதங்களை நடத்துகிறார்கள். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்.

- மு. முத்துசீனிவாசன்.

*****


குருநாதர் பி.வி.
என்னால் மறக்க முடியாத நபர் குழந்தை இலக்கியச் செல்வர் திரு பி.வெங்கட்ராமன். அமெரிக்காவில் வசித்துவரும் கல்வியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு பாலா வி. பாலச்சந்திரன் அவர்களுக்குப் பேரவையின் சார்பாக விழா நடத்தினோம். அவருடன் படித்தவரான திரு. பி.வி.யும் அதில் கலந்து கொண்டிருக்கிறார். அது எனக்குத் தெரியாது. பின்னர் சென்னை சென்ற அவர் என்னுடன் தொலைபேசினார். இதுமாதிரி எங்கும் நடந்ததில்லை, நடப்பதில்லை என்றும் சொன்னார். திரு டாக்டர் நல்லி குப்புசாமிச் செட்டியார் அவர்களிடமும் இவ்விழா பற்றிக் கூறியிருக்கிறார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் என்னை நல்லியிடம் அறிமுகப்படுத்தினார்.

ஒருவர் திறமைசாலி என்று தெரிந்துவிட்டால் அவரை ஊக்குவிப்பதோடு, தனக்குத் தெரிந்த எல்லா சான்றோரிடத்தும் அறிமுகப்படுத்தி, அவர்களை உயர்த்தி அழகு பார்ப்பது பி.வி.யின் போற்றத்தகுந்த குணம். பேரவைக்குச் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டி வருகிறார். அவருடைய வயது மற்றும் தகுதியை வைத்து அவரை எனது குருநாதராகவே கருதுகிறேன்.

- மு. முத்துசீனிவாசன்.

*****


மறக்க முடியாத பாராட்டு
டாக்டர் நல்லி குப்புசாமிச் செட்டியார், சாதனையாளர்களைக் கௌரவிக்கும் என்னைக் கௌரவிக்க விரும்பி, சென்னை பாரதி கலைக்கூடம் சார்பில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். டி.எம். சௌந்தர்ராஜன், குன்னக்குடி வைத்தியநாதன், அருளாளர் ஆர்.எம். வீரப்பன், அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன், சௌந்திரா கைலாசம், மீனாட்சி மைந்தன் வி.என். சிதம்பரம் போன்ற பெரும் சாதனையாளர்கள் அங்கிருந்தனர். விழாவில் நல்லி பேசும்போது, "பாராட்டப்படுபவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, புத்தகமாக்கி விழா எடுப்பதை முத்துசீனிவாசன்தான் செய்து கொண்டிருக்கிறார். இம்மாதிரி தமிழ்நாட்டில் வேறெங்கும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. பலரைப் பாராட்டிவரும் அவரைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கில் நான் தனியாக ஒரு விழாவை எடுக்கிறேன்" என்று சொன்னார். இதை ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

- மு. முத்துசீனிவாசன்.

*****
More

வித்தக இளங்கவி விவேக்பாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline