|
|
|
நுணுக்கமான விவரங்களில் பிரமிக்க வைக்கிறது எஸ்.ஏ.வி. இளையராஜாவின் கைத்திறன். விளக்கேற்றுகிறாள் ஒரு பெண், அவளது பட்டுப்புடவையின் மடிப்புகள், பாதி எரிந்த தீக்குச்சி, சிலைகளுக்கு முன் சிந்திக் கிடக்கின்ற பூக்கள்; சைக்கிள் ஓட்டும் சிறுவர்கள், ஓடி ஓடித் தேய்ந்து போன டயர், சற்றே நசுங்கி லேசாகத் தூக்கி இருக்கும் மட் கார்ட்; பழம் விற்கும் பாட்டி, பழங்களை வைக்கும் அந்தத் தற்காலிக மேடை; கரகாட்டம் ஆடும் பெண், அவரது ஆடை மடிப்பு, முகத்தில் இழையோடும் சோகம்; வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கும் இளநீர் வியாபாரிகள், யாரேனும் வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு, இளநீர்க் குவியலில் ஒளிந்திருக்கும் ஸ்ட்ரா பாக்கெட்; ஷேர் ஆட்டோவில் அடைந்திருப்பவர்கள், அதன் ஒரு புறத்தில் திரைப்பட விளம்பரம்; சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர், கை வியர்த்தால் துடைத்துக் கொள்ள ஹேண்டில் பாரில் ஒரு துண்டு. எல்லாவற்றையும் நுணுகிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தனது ஓவியங்கள் மூலம் நம்மை வேறோர் உலகத்திற்கே அழைத்துச் செல்கிறார் ஓவியர் எஸ்.ஏ.வி. இளையராஜா. கையாள அரிதான நீர்வண்ணம் இவருக்குக் கைவந்த கலை! நீர்வண்ணம் மட்டுமல்ல; அக்ரிலிக், தைல வண்ணம் என்று ஓவியத்தின் இதர பிரிவுகளிலும் தேர்ந்தவர் இவர். இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். கலை ஆர்வலர்கள் இவரது ஓவியங்களைக் கொத்திக்கொண்டு போய்விடுகின்றனர். காந்தி மெமோரியல் விருது, கோணசீமா சித்ரகலா விருது உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார். இளையராஜாவுடன் சிறிதே உரையாடலாம் வாருங்கள்....
*****
இசை, பாடல், ஓவியம் செஞ்சி அருகே சிங்கவரம் கிராமம் பிறந்த ஊர். எனது தந்தை எஸ்.ஏ. வடிவேலன் பள்ளியில் தமிழாசிரியர். கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாடல்கள் எழுதுவதும், அவற்றுக்கு மெட்டமைத்துப் பாடுவதும் அவருக்கு மிகப் பிடித்தவை. பாரதியின் பாடல்கள் மீது அவருக்குப் பெருங்காதல். அவற்றை அவர் முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன். பாரதி பாடல் வரிகளை மையப்படுத்தி ஓவியங்கள் வரைவார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். எனது தாத்தா ஒரு சிற்பி. இசையிலும் ஈடுபாடு கொண்டவர். அவரை நான் பாரத்ததில்லை என்றாலும் அவர் செய்து வைத்த மர வேலைப்பாடுகளை, சிற்பங்களை நான் ஊரில் பார்த்திருக்கிறேன். இயல்பாகவே எனக்கும் கலையார்வம் இருந்தது. மிருதங்கம், ஆர்மோனியம் எல்லாம் எங்கள் வீட்டில் இருந்தன. சிறு வயதில் அவற்றோடு விளையாடி இருக்கிறேன். எனக்கு மூன்று சகோதரர்கள். மூத்த அண்ணன் இளங்கோவன். இரண்டாவது அண்ணன் இளஞ்செழியன். தம்பி இளையபாரதி. இளஞ்செழியன் அப்பாவுடன் இணைந்து நாடகத்தில் நடித்தும் பாடியும் இருக்கிறார். சகோதரர் இளஞ்செழியன் படித்து முடித்ததும் ஓவியத்தை புரொஃபஷனலாக எடுத்துப் படித்தார். அப்போது நான் சிறுவன்.
வீட்டிலும் வெளியிலும் அண்ணன் இளஞ்செழியன் ஓவியம் மற்றும் சிற்பம் பயின்றார் என்று கூறினேன். அவர் கல்லூரியில் பாடமாகக் கற்றதை எங்கள் ஸ்டூடியோவில் வந்து செய்து பார்ப்பார். அண்ணன் வரைவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் வீட்டில் வரைந்து பார்க்கும் படங்களை என்னிடம் கொடுத்து 'லைன்' போடச் சொல்வார். வண்ணம் நிரப்பச் சொல்வார். அதைப் பார்த்துப் பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன். எனக்கு விரிவாக அதனைச் சொல்லித் தருவார். அது மட்டுமின்றி பல்லவர் காலச் சிற்பங்கள், சோழர்காலச் சிற்பங்கள் பற்றி, அதன் தன்மைகள், தொழில்நுட்பங்கள், சிற்ப நுணுக்கங்கள் பற்றியெல்லாம் எனக்கு விரிவாக விளக்குவார். உருவப்படம், இயற்கையை வரைதல் என்று பல விஷயங்களைப் புதிது புதிதாகச் செய்து பார்த்தேன். கற்றுக்கொண்டேன். ஓவியங்களின் பலவிதமான பரிமாணங்களை அறிந்துகொள்ள இது உதவியது. பின்னர் மைசூரில் இருக்கும் DMS லலிதகலா மஹாசம்ஸ்தானா கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்றேன். என் தம்பியும் உடன் பயின்றார். அது மேலும் எனது திறமைகளை, நுட்பங்களை உயர்த்திக்கொள்ள உதவியது.
ஓவியக் கல்லூரியில் பயில்வதற்கு முன்பாகவே நான் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறேன். படிக்கும்போதும், படித்து முடித்த பின்பும் அது தொடர்கிறது. ஒரு சமயம் குழு ஓவியக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் வரைந்த பத்து நீர்வண்ண ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தேன். பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து நான் தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நடத்த ஆரம்பித்தேன். தனியாகவும் குழுவுடன் இணைந்தும் சென்னை, கோவை, பாண்டிச்சேரி, பெங்களூர், ஆந்திரா, மும்பை, டெல்லி என்று இந்தியா முழுவதும், சென்னை லலித்கலா அகாடமி துவங்கி மும்பை ஜஹாங்கீர் ஆர்ட் காலரி, சென்னை வின்யாஸா ப்ரீமியர் ஆர்ட் காலரி, புதுவை கோலம்பாணி காலரி, தக்ஷிண சித்ரா என பல காலரிகளில் எனது ஓவியக் கண்காட்சிகள் நடந்திருக்கின்றன. சிங்கப்பூரில் நடந்த கண்காட்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறேன். ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்களில் எனது ஓவியங்கள் கவிதைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஓவியங்களுக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது.
உணர்வைக் கடத்தும் ஓவியங்கள் எனது அண்ணன்தான் எனக்கு ஓவிய குரு. அவர் தத்ரூப பாணி ஓவியங்கள் வரைவதில் மிகத் தேர்ந்தவர். அவரது ஓவியத்தில் உயிர்ப்பு இருக்கும். சில சமயங்களில் அது ஓவியமா, நிஜமா என்ற ஐயம் ஏற்பட்டுத் தொட்டுப்பார்க்கத் தூண்டும். அந்தச் சவால் என்னை ஈர்த்தது. எனக்கும் அப்படி வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. என்னைப் பாதிக்கும், நான் ரசிக்கும், நினைவைக் கிளறிவிடும் விஷயங்களை நான் ஓவியத்தில் மொழிபெயர்க்கிறேன். ஐஸ்க்ரீம் சாப்பிடும் பெண்ணுக்கும் ஆலயத்தில் வழிபடும் பெண்ணுக்கும் இடையிலான உடல்மொழி வித்தியாசம் ஓவியத்தில் வரவேண்டும். பழம் விற்கும் பெண்மணிக்கும், பானையில் பொங்கல் வைக்கும் பெண்ணிற்கும் உள்ள முகபாவங்கள், உணர்வுகள் படத்தில் தெரியவேண்டும். இந்த மாதிரியான நுணுக்கமான விஷயங்களுக்காக நான் உழைக்கிறேன்.
இது ஒருமாதிரி உணர்வுக் கடத்தல்; காலக் கடத்தல்; ரசனைக் கடத்தல் தான். இதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை எனது ஓவியங்களுக்கு வரும் பாராட்டுகள் தெரிவிக்கின்றன. அந்த வெற்றியும் பாராட்டும் எனக்கு மேலும் சிறக்க உந்து சக்தியாக இருக்கிறது. நமது கலாசாரம், பண்பாடுகளை ஓவியத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவதை நான் பெருமையாககக் கருதுகிறேன்.
எப்படி வரைகிறேன்? இந்தியாவின் பல இடங்களுக்கு நானும் எனது தம்பியும் ஓவியருமான எஸ்.ஏ.வி. இளையபாரதி விஸ்வகர்மாவும் பயணப்பட்டிருக்கிறோம். அங்கங்கே சென்று களத்திலேயே வரைந்திருக்கிறோம். என்னுடைய ஓவியங்கள் அனைத்தும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைச் சார்ந்ததாகவே இருக்கும். அங்கேயே வரைய முடியாத இடங்களில் புகைப்படமும் எடுப்பதுண்டு. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், கிராமத்தில் விவசாயி ஒருவர் மாடு ஓட்டிச்செல்கிறார். அதைப் பார்க்கும்போதே எனது மனதில் ஓவியமாகப் பதிந்துகொள்வேன். ஏனென்றால் ஓவியனுக்குக் கண்கள்தாம் கேமரா. அது horizontal ஆக இருக்க வேண்டுமா, vertical ஆக இருக்கவேண்டுமா என்பதெல்லாம் அப்போதே தீர்மானமாகி விடும். அது ஓவியமாகும் போது எனது கற்பனையைக் கலந்து தீட்டுவேன். முகபாவனை, உடல்மொழி, உடை, மாடுகளின் உடல்மொழி, ஏன் குறிப்பாக, பார்த்த நேரத்தையும் - அது காலையா, மதியமா, மாலையா என்பதையும் - ஓவியத்தில் கொண்டுவர முடியும். இப்படி நிஜம், கற்பனை என்று எல்லாவற்றையும் துல்லியமாகக் கலந்து தரும்போது அது ஓவியத்தை உயிர்ப்புள்ளதாக்குகிறது. அந்த உணர்வு அதனைப் பார்ப்பவருக்கும் கடத்தப்படுகிறது. அவர்கள் அதனை ரசிக்கின்றனர்.
மனம் கவர்ந்தவர்கள் எனது அண்ணனும் குருவுமான பேராசிரியர், முனைவர் எஸ்.ஏ.வி. இளஞ்செழியன் அவர்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தவர். திரைப்பட விளம்பர பேனர் ஓவியரான திரு. வி. செல்வம், மும்பையின் வசுதேவ் காமத் ஆகிய இருவரும் எனக்கு மிகப் பிடித்தமானவர்கள். கவர்ந்த மூத்த ஓவியர்கள் என்றால் கே. மாதவன் மற்றும் ஆர். மாதவனைச் சொல்வேன். மேலைநாட்டு ஓவியர்கள் என்றால் வெலாஸ்கஸ் (Diego Velázquez), காரவாஜியோ (Caravaggio) மற்றும் ரஷ்யாவின் இலியா ரெபின் (Ilya Repin) ஆகியோரைச் சொல்லலாம்.
நீர்வண்ண ஓவியங்கள் ஓவியமும், சிற்பமும் மிகுந்த கவனம் கோரும் கலைகள். அவற்றில் ஒரு சிறு பிழை, சிறு கோடு தவறாக விழுந்தாலும் அவ்வளவுதான், அதன் நேர்த்தி போய்விடும். சிற்பத்தில் உளியின் செதுக்கு சற்று அதிகமாகப் பட்டாலும் பிளவுபட்டுவிடும். அதனால்தான் இவற்றை நுண்கலைகள் என்கிறார்கள். அதிலும் நீர்வண்ண ஓவியம் கடினமான ஒன்று. சவாலானதும்கூட. ஒரு சிறு பிழை நேர்ந்தாலும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதுவரை உழைத்ததெல்லாம் வீணாகி விடும். தைலவண்ண ஓவியத்தில் தவறு ஏற்பட்டாலும் - தவறான வண்ணத்தைப் பயன்படுத்தி விட்டால் கூட - அதைச் சரி செய்து விடலாம். ஆனால் நீர்வண்ண ஓவியத்தில் அது இயலாது. அதை ஆரம்பிக்கும்போதே இந்த வண்ணம்தான், இந்தக் கருத்துதான் என்று முழுமையாகத் திட்டமிட்ட பின்னர் ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நடுவில் தவறுகள் ஏற்பட்டால் சரிசெய்ய இயலாது. ஆயில் பெயிண்டிங்கில் நிறைய விவரங்கள் தரலாம். வெண்ணிறம் சேர்க்கலாம். நீர்வண்ணத்தில் அப்படிச் செய்ய இயலாது. இது transparent colour. ஆனால், தைலத்தில் வரக்கூடிய அதே அளவு நுண்ணிய விவரங்களை நான் நீர்வண்ணத்தில் கொண்டுவருகிறேன். இதுதான் என் பலம். அல்லது இது என் தனித்துவம் என்றும் சொல்லலாம்.
கணினிப் பயன்பாடு சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்களின் சிற்பங்களை, அவர்களது ஓவியங்களை, அந்தப் பாணிகளை, தொழில்நுட்பங்களை, கற்பனைகளை நாம் இன்னமும் வியந்து பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். காரணம், இயற்கைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதால் தான். அத்தகைய படைப்பில்தான் ஜீவன் இருக்கும். அதற்கு என்றும் மதிப்பும் இருக்கும். மற்றபடி கணினி எனக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது என்றால் நான் எடுக்கும் புகைப்படங்களைச் சேமிக்கவும், எனது ஓவியங்களின் புகைப்படங்களைச் சேமித்து வைக்கவும் அது உதவியாக இருக்கிறது. அதற்கு மட்டுமே நான் கணினியைப் பயன்படுத்துகிறேன்.
குடும்பம் எனது குடும்பத்தினர் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். குறிப்பாக எனது அண்ணனும் வழிகாட்டியுமான பேராசிரியர், முனைவர் இளஞ்செழியன் என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர். என்னை வழிநடத்துபவர். அவர் ஓவியம், சிற்பம் குறித்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது அவர் மதுரை தியாகராஜர் எஞ்சினீயரிங் கல்லூரியில் பேராசிரியர் பணி புரிந்து வருகிறார். அதுபோல என் மனைவி. அவருக்கு ஓவியத்தில் ஈடுபாடு அதிகம். நல்ல ரசனை உண்டு. எனது ஓவியங்களைப் பார்த்துக் கருத்துச் சொல்வார். பாராட்டுவார். ஆலோசனையும் சொல்வார். எனது ஓவியக் கண்காட்சிகளுக்குத் துணை இருப்பார். எனக்கு வரும் பாராட்டுக்களைக் கண்டு பூரித்துப்போவார். அதுபோல எனது தம்பி இளையபாரதி. அவரும் நானும் இணைந்து ஓவியக் கண்காட்சிகள் நடத்துவோம். அவரும் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார்.
ஓவிய ஆர்வலர்கள் என்னுடைய கண்காட்சிக்கு வந்து வாங்கிச் செல்வார்கள். சிலர் ஆர்டர் கொடுத்து, பின்னர் அனுப்பச் சொல்வதும் உண்டு. ஃபேஸ்புக்கிலும் எனது ஓவியங்கள் பலவற்றை இட்டிருக்கிறேன். அதில் விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது விருப்பத்திற்கேற்ப ஆயிலோ, அக்ரிலிக்கோ, வாட்டர் கலரோ எதுவாக இருந்தாலும் பெயிண்டிங் செய்து தரலாம். எனது ஓவியங்களுக்கென விரைவில் ஒரு வலைப்பக்கத்தை (website) உருவாக்க இருக்கிறேன். அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கின்றது. வார இறுதி நாட்களில் ஓவியம் கற்றுத் தருகிறேன்.
மின்னஞ்சல்: sav.elaiyaraja@gmail.com செல்பேசி: 98418 57526 முகநூல்: facebook
விரைவில் நடக்க இருக்கும் ஓவியக் கண்காட்சிக்காகத் தீவிரமாகப் படங்கள் வரைந்து கொண்டிருந்தாலும், தென்றலின் கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி கூறி, வாழ்த்தி விடைபெற்றோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் |
|
*****
பின்னாலே பெரிய வானம் ஓவியத்தின் பின்னணியில் அதிக வெள்ளை வெளி விட்டு வரைவது எனது தனித்த பாணி. அதற்குக் காரணம் உண்டு.
நான் ஒரு சமயம் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் முதன்முதலாக அந்தக் கோயிலுக்குச் செல்கிறேன். அந்தக் கோயிலையும் அதன் பின்னணியில் வானத்தையும் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை. பிரம்மாண்டமான கோயில்... பின்னணியில் மேலும் பிரம்மாண்டமாய் ஆகாயம்... சொல்ல வார்த்தைகளே இல்லை. அதைப் பார்த்ததும் எனக்கு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட்டது. அதுவே நான் இம்மாதிரி வரைவதற்குப் பெரியதோர் இன்ஸ்பிரேஷன். அவ்வாறு space அதிகம் விட்டு வரையும்போது பார்வையாளர்களுக்கு அதுவரை கிடைக்காத புதியதோர் பரிமாணம் கிடைக்கிறது. அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்குப் பாராட்டைத் தருகிறது.
- எஸ்.ஏ.வி. இளையராஜா
*****
கண்காட்சி அனுபவங்கள் எங்களது கண்காட்சிகள் நடக்கும் ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்கள் எனது ஓவியங்களைப் பார்த்துவிட்டு தமது சிறுவயது நினைவுகளை, மறக்க முடியாத சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். டயர் வண்டி ஓட்டி விளையாடியது, குளத்தில் மீன் பிடித்தது, மாட்டு வண்டியின் பின்னால் தொற்றிக்கொண்டு போனது, சைக்கிள் ஓட்டியது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பூம்பூம் மாட்டுக்காரர், மிட்டாய் விற்பவர் என்று பலப்பல நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நினைப்பை ஓவியத்தால் உயிர்ப்பித்ததற்காக என்னைப் பாராட்டுவார்கள். "உங்கள் ஓவியங்களின் மூலமாக நான் எனது சிறுவயதுக்கே போய்விட்டேன்" என்பார்கள். கேட்கச் சந்தோஷமாக இருக்கும். - எஸ்.ஏ.வி. இளையராஜா
*****
மறக்க முடியாத பாராட்டு நான் 30 x 22 அளவில் பானை வியாபாரி ஓவியம் ஒன்று வரைந்தேன். அதனை முடித்த பின்பு அண்ணன் இளஞ்செழியன் அவர்களிடம் காட்டப் போனேன். "உன்னுடைய படைப்புகளில் இது மிகச்சிறந்த படைப்பு" என்று சொல்லி வாழ்த்தினார். அதை என்னால் மறக்க முடியாது. எனது அம்மா உள்பட நிறையப் பெண்கள். "உங்களது ஓவியங்களில் ஆடை வடிவமைப்பு மிகவும் நன்றாக, நேர்த்தியாக வந்திருக்கிறது" என்று பாராட்டியிருக்கிறார்கள். பெண்ணின் ஆடை என்று எடுத்துக் கொண்டால் அது பட்டுப்புடவைக்கு ஒரு மாதிரி இருக்கும், கைத்தறிச் சேலைக்கு மற்றொரு மாதிரி மடிப்பு வரும். ஆடைக்கு ஆடை வித்தியாசப்படும். ஆண்களின் ஆடைகளிலும் அப்படித்தான். அந்த நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு வரையும்போது அது பார்ப்பவருக்கு நிஜமானதாக, துல்லியமானதாகத் தெரிகிறது.
அதுபோல, விளக்கேற்றும் பெண் ஓவியத்தைப் பலர் பாராட்டியிருக்கின்றனர். பல கண்காட்சிகளில் பாராட்டப்பட்ட ஓவியம் அது. ஆலயத்தின் தெய்வீகச் சூழலை அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று பாராட்டுவார்கள். அதுபோல, பழம் விற்கும் பாட்டியின் ஓவியத்தையும் சொல்லலாம். இந்தப் பாராட்டுகள்தாம் எனக்குப் பெரிய அங்கீகாரங்கள்.
- எஸ்.ஏ.வி. இளையராஜா
***** |
|
|
|
|
|
|
|
|