|
|
|
|
சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் க. ரவி. சிறந்த கவிஞரும்கூட. இளவயதிலேயே "மாணவரிஸம்" என்ற கையெழுத்து இதழை நடத்தியவர். நாடகங்கள் எழுதித் தயாரித்திருக்கிறார். நடித்திருக்கிறார். திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இசை ஆல்பங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். 'நமக்குத் தொழில் கவிதை', 'உன்னோடு நான்', 'மின்னற்சுவை', 'சொற்களுக்குள் ஏறிக்கொள்', 'இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு', 'வள்ளுவரின் வாயிலில்' போன்ற இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. சட்டம் மற்றும் நீதித்துறை பற்றி 'Justice vs Natural Justice', 'Law, logic and liberty' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். ஆண்டுதோறும் பாரதிக்கு ஜதிபல்லக்கு எடுத்துப் பிறந்தநாள் விழா கொண்டாடும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர். அவருடன் உரையாடியதில் இருந்து.
தென்றல்: உங்களுக்குள் கவிதை முகிழ்ப்பதை எப்போது இனம் கண்டீர்கள்? ரவி: நான் செயின்ட் பீட்டர்ஸ் கான்வென்டில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஜேன்ஸ் என்ற தமிழாசிரியையின் தமிழ் உச்சரிப்பு என்னைக் கவர்ந்தது. சிவாஜி பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம், இளங்கோவன் எழுதிக் கண்ணாம்பா பேசிய வசனங்கள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன. ஆனால் கான்வென்டில் படித்த காரணத்தால் என்னால் தமிழைச் சரியாக எழுதமுடியாமல் இருந்தது. நான் ஏழாம் வகுப்பு படிப்பதற்காக சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். ஒரு தேர்வில் 'கோழி'க்கு 'கேழி' என்று எழுதி இருந்தேன். தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் என் தமிழாசிரியர். அவர் அந்த விடைத்தாளைப் பார்த்ததும் அதை அப்படியே கசக்கி என் முகத்தில் விட்டெறிந்து என்னைத் திட்டினார். திட்டு வாங்கிய வேகத்தில், அந்தக் கோடை விடுமுறையில் சென்னை மத்திய நூலகத்திற்குச் சென்று தமிழ்ப் புத்தகங்களைத் தேடியெடுத்துப் படித்தேன். நன்னூல், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, பாரதியார், பாரதிதாசன் என்று வாசித்தேன். வாசிக்க வாசிக்க எழுத்தார்வம் என்னுள் சுடர்விட்டது. எழுத ஆரம்பித்தேன். சாம்ராட் அசோகன், நூர்ஜஹான் போன்ற கவிதை நாடகங்களை எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எழுதினேன். எந்த ஆசிரியர் என்னைத் திட்டினாரோ அவரிடமிருந்தே "சபாஷ்" பெற்றேன். "அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்" என்பதுதான் என் முதல் கவிதையின் முதல் வரி. அப்படித்தான் ஆரம்பித்தது என் கவிதைப் பயணம்.
தெ: ஒரு கவிதை எப்படி உருவாகிறது? ரவி: கவிதை தானாகச் சம்பவிப்பது. இந்தத் தலைப்பில் ஒரு வெண்பா, ஆசிரியப்பா எழுதவேண்டும் என்று எழுத முயற்சிப்பதில்லை. அது திடீரென்று பிரவாகமாக வரும். அதை உள்வாங்கிக்கொண்டு அல்லது நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் அதை எழுதுவதுண்டு. ஒரு வார்த்தை அல்லது வரி வந்து, தடைப்பட்டு, பின் வெகுநேரம் கழித்து மீண்டும் வருவதெல்லாம் எனக்கு நடந்ததில்லை. முழு கவிதைப் பிரவாகமாகவே வரும். அது எதைப்பற்றியது, எங்கே கொண்டுசெல்கிறது என்பதெல்லாம் எனக்கே தெரியாது. அது பிற்பாடுதான் புரிய ஆரம்பிக்கும். சொல்லப்போனால் இன்னும் பல கவிதைகள் எனக்கே முழுதாகப் புரிந்துவிடவில்லை. என் அகவாழ்க்கை அனுபவங்களே கவிதையாகின்றன. வேறு ஏதோவொரு தளத்தில் இருந்து பொங்கிவரும் அவற்றை விளக்குகிறேன் என்று உரைநடையில் நான் எழுதத் துவங்கினால் நான் தான் தடுக்கிவிழுவேன். மற்றபடி என் கவிதைகளுக்கு நான் சொந்தம் கொண்டாடுவதில்லை எப்படி ஒருவருக்கு அவருடைய குழந்தை எவ்வளவு சொந்தம் அல்லது சொந்தமில்லையோ அவ்வளவுக்கு என் கவிதைகள் எனக்குச் சொந்தம், சொந்தமில்லை. தான் வெளிப்பட கவிதை என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது, அவ்வளவுதான்.
தெ: கவிதை என்றால் என்ன? ரவி: சுஜாதா சொன்ன பதில்தான் நினைவுக்கு வருகிறது. கவிதை ஓர் அனுபவக் கடத்தல் என்பார் அவர். எந்த ஒரு படைப்பு ஒரு சாதாரண அனுபவத்தளத்திலிருந்து வேறோர் அனுபவத்தளத்திற்கு ஒருவரைக் கடத்திச் செல்கிறதோ அதுதான் கவிதை. இதுதான் எனது விளக்கம். என்னுடைய அனுபவங்களில் பங்கேற்க உங்களை அழைத்து அதில் பங்கேற்க வைக்கிறேன். இன்றைக்கு மட்டுமல்லாமல் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வருபவர்களையும் அந்தத் தளத்திற்கு அழைக்கக்கூடிய ஆற்றல் இருக்கும் படைப்புகளைக் கவிதைகள் என்று அந்தக் காலமும் ஒப்புக் கொள்ளும்.
தெ: பாரதி கலைக்கழகத்துடனான உங்கள் தொடர்பு பற்றி... ரவி: 1967 என்பதாக ஞாபகம். பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். கவிஞர் தேவநாராயணன் என் வீட்டுக்கு வந்திருந்தார். என் தந்தை அவரிடம், 'இவன் கவிதை எல்லாம் எழுதுவான்' என்று என்னை அறிமுகப்படுத்தினார். உடனே அவர், ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி, 'என் வீட்டுக்கு வா. அங்கே ஓர் கவியரங்கம் நடக்கிறது' என்று சொன்னார். .நானும் போனேன். ஒரு சிறிய அறையில் 20 பேர் அமர்ந்திருந்தார்கள். நடுவில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் அழைக்க அழைக்க ஒவ்வொருவராக வந்து கவிதை படித்தார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பாரதியின் 'புதிய ஆத்திசூடி'யிலிருந்து ஆளுக்கு ஒரு தலைப்பு. எனக்கு 'சைகையில் பொருளுணர்' என்ற தலைப்பு. சின்முத்திரையோடு தக்ஷிணாமூர்த்தி அருளிய மௌன உபதேசம்பற்றிக் கவிதை வாசித்தேன். அதுதான் கலைக்கழகத்தில் நான் வாசித்த முதல் கவிதை. தலைவர் பாரதி சுராஜின் தலைமையில் மாதாமாதம் ஒரு உறுப்பினர் வீட்டில் கவியரங்கம் நடக்கும். அது ஒரு கவிதைக் குடும்பம்.
ஒருமுறை ஒரு கோவிலின் அரங்கில் கலைக்கழகக் கவியரங்கம் நடந்துகொண்டிருந்தது. பொதுவாகப் படித்தவர்களும், கவிதைரசனை உள்ளவர்களும் தான் கவியரங்கத்திற்கு வருவார்கள். ஒருவர் கவிதை படித்துக் கொண்டிருந்தபோது அங்கே வேலை செய்துகொண்டிருந்தவர்கள், பெருக்கிக் கொண்டிருந்தவர்கள், காம்பவுண்டிற்கு வெளியே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தங்கள் வேலையை விட்டுவிட்டுக் கவிதையைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். கவிதை வாசித்தவர் கொத்தமங்கலம் விஸ்வநாதன். அவர் தனது தந்தை கொத்தமங்கலம் சுப்பு அவர்களது கவிதையை வாசித்தார். பாமர மக்களையும் ஈர்க்கும் சக்தி கவிதைக்கு உண்டு. அதை திரைப்படம் பயன்படுத்திக் கொண்டது. அதில் கவியரசர் கண்ணதாசன் விஸ்வரூபம் எடுத்து நின்றார்.
தெ: உங்களைப் பாதித்த கவியாளுமைகள், எழுத்தாளர்கள் யார் யார்? ரவி: பாதித்த என்பதைவிட அப்படியே ஈர்த்து தன்வயப்படுத்திக் கொண்ட கவிஞன் பாரதி. வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதிதாசன், கண்ணதாசன் என அந்தப் பட்டியல் மிக நீளமானது. வாழும் கவிஞர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்றால் வ.வே.சு., இசைக்கவி ரமணன், சு. ரவி, இலந்தை ராமசாமி, இளையவன், ஜவஹர்லால் என்று பலரைச் சொல்லலாம். இப்படிப்பட்ட நல்ல கவிஞர்களிடையே நான் வாழ்கிறேன் என்பது எனக்கு ஒரு பெருமை. சிறுவயதில் என்னை ஈர்த்தவர்கள் என்றால் கல்கி, நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், லா.ச.ரா. ஆகியோரைச் சொல்லலாம். குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம் படிக்காத இளைஞர்கள் என் வயதில் யாருமே இருந்திருக்க முடியாது. அரவிந்தன், சத்தியமூர்த்தி போன்ற பாத்திரங்கள் எல்லாம் என்னை அந்த வயதில் மிகவும் பாதித்தன.
தெ: உங்கள் துணைவியாரும் ஒரு கவிஞர் அல்லவா, அவருடனான அறிமுகம், கவிதா அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்.. ரவி : ஷோபனாவை நான் முதன் முதலில் சந்தித்ததே ஓர் இலக்கிய நிகழ்ச்சியில்தான். நான் விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் ஒரு பேச்சுப்போட்டி. நானும் போயிருந்தேன். நிறையப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு பெண் அச்சடித்த பொம்மை மாதிரி வந்து பேசும்போது நான் அப்படியே அந்தப் பேச்சில் லயித்துவிட்டேன். திடீரென்று எனக்குள் ஏதோ தோன்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு சிவம் (சுகிசிவம்) வீட்டிற்குப் போனேன். சிவம் என்னுடைய வகுப்புத் தோழன். 'என்னுடன் வா. ஒரு பொம்மை பேசுகிறது. நீ அவசியம் பார்க்கவேண்டும்' என்று சொல்லி அழைத்துப் போனேன். அந்தப் பொம்மைதான் ஷோபனா. பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவியாகத்தான் முதன்முதலில் ஷோபனாவைச் சந்தித்தேன். அப்போது ஷோபனா பள்ளி இறுதியாண்டு மாணவி என்பதாக ஞாபகம். அப்படி எங்கள் நட்பு வளர்ந்தது. 'மாணவரிஸம்' இதழில் நான் எடிட்டர். ஷோபனா ஜாயின்ட் எடிட்டர். பின்பு நட்பு வலுப்பட்டு திருமணம் செய்துகொண்டோம். Joint Editor Joined with the Editor என்று சிலர் அப்போது வேடிக்கையாகச் சொன்னார்கள்.
கவிதை, இசை இரண்டிலுமே ஷோபனாவிற்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அதனால் கல்யாணத்துக்கு முன்னாலும் சரி, பிறகும் சரி உட்கார்ந்து பேசுவதென்றால் இலக்கியம், கவிதை, ஆன்மீகம் பற்றித்தான் பேசுவோம். ஆன்மீகமும் இலக்கியமும் எங்களுக்கு இரண்டு கண்கள்.
தெ: உங்களது ஆன்மீக ஆர்வம் பற்றிச் சொல்லுங்களேன்! ரவி: ஆரம்பத்தில் எனக்கு தீர்க்கமான கடவுள் நம்பிக்கை என்பது இருக்கவில்லை. காரணம், நான் தத்துவ நூல்களை அதிகம் படித்ததுதான். அந்தத் தாக்கத்தினால் ஆன்மீகத்தில் அதிகம் பற்றில்லாமல் தான் இருந்தேன். ஆனால் சாயிபாபாவின் மீது சின்னதாக ஒரு ஈர்ப்பு இருந்தது. அக்காலகட்டத்தில் என் மனைவி டாக்டர் நித்தியானந்தம் அவர்களை குருவாகப் பெற்றிருந்தாள். அவர் Sports Medicine Doctor. அவரைப்பற்றி என்னிடம் நிறைய ஷோபனா சொல்லியிருந்தாள். ஒருநாள் அவரை அறிமுகப்படுத்தியும் வைத்தாள். அதற்கு ஓரிரு நாட்கள் கழித்து ஒருநாள் மாலை நான் எனது இல்லத்து மொட்டைமாடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தேன். திடீரென கண் திறந்து பார்த்தபொழுது மாடிக் கைப்பிடிச் சுவரில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு சாயிபாபா அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். நெருங்கிச் செல்ல முயன்றபொழுது பாபாவின் முகம் டாக்டர். நித்தியானந்தம் அவர்களது முகமாகத் தெரிந்தது. பாபாவே டாக்டர் நித்தியானந்தத்தின் உருவில் வந்து என்னை ஆட்கொள்வதாக ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த ஒரு கணத்திலேயே ஆன்மீகம் விஸ்வரூபம் எடுத்து விட்டது. இறைநம்பிக்கை என்னுள் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது. |
|
|
தெ: நீங்கள் எழுதிய ஞானத்தாழிசை - உரை விளக்க நூல் பற்றி... ரவி : எனது குருநாதர் டாக்டர். நித்தியானந்தம் ஒரு பழைய தமிழ்நூலை என்னிடம் தந்து அதை ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்றார். அதுதான் ஞானத்தாழிசை. மாணிக்கவாசகர் எழுதியது. அதற்கு தமிழில் ஒருவர் வியாக்கியானம் எழுதியிருந்தார். நான் அதைப் படித்துவிட்டு "பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் விளக்கவுரை இன்னமும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை" என்று குருநாதரிடம் சொன்னேன். "எனக்கும் அது திருப்தியாக இல்லாததால்தான் உன்னிடம் கொடுத்தேன். நீ எழுது. இது உலகம் முழுவதும் செல்லவேண்டும். அதனால் ஆங்கிலத்தில் எழுது" என்று சொன்னார். அது பனிரெண்டு பாடல்களைக் கொண்டது. அந்தப் பாடல்களையும், விரிவான விளக்கவுரையையும் ஆங்கிலத்தில் எழுதினேன். The verses of wisdom என்பது நூலின் பெயர். குருநாதரின் தூண்டுதலால் சாத்தியமானது அது.
தெ: கவிதை, நாடகம் தவிர்த்து சிறுகதை, நாவல் எழுதியுள்ளீர்களா? ரவி: ஓரிரண்டு கதைகள் எழுதியிருக்கிறேன். என்னவோ அது எனக்கானதல்ல என்று நினைக்கிறேன். அப்படி வலிந்து எழுத ஆரம்பித்தால் அது வேறு மாதிரி Mystic ஆகப் போய்விடும். லா.ச.ரா. மாதிரி இருக்கும். அதற்குத் தனியாக விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். அதனால்தான் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கதை என்ற பெயரில் நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி, ஒரு வாழ்க்கையைப்பற்றி எழுதுவதில் எனக்குப் பெரிய ஈடுபாடில்லை என்பதும் முக்கிய காரணம்.
தெ: உங்கள் நண்பர்கள் பற்றி.. ரவி : என்னுடைய நண்பர்கள் மிக இனிமையானவர்கள். கவிதையிலும் இலக்கியத்திலும் ஆர்வம் உடையவர்கள். பள்ளி, கல்லூரி, சட்டக்கல்லூரியில் நானும் சிவமும் ஒன்றாகப் படித்தோம். சிவத்திற்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சிவம் மிகவும் சிந்தனைவயப்பட்டவன். நான் உணர்ச்சிபூர்வமானவன். ஆனால் என்னுடைய தொழில் மிகவும் சிந்தனைபூர்வமானது. அதனாலேயே என்னுடைய எழுத்துக்களில் சிந்தனைகளைவிட உணர்ச்சிகள் அதிகம் இருக்கிறதோ என்று நினைக்கிறேன். அதுபோல என்னை இசைத்தமிழில் திசைதிருப்பிவிட்ட தென்றல் காற்று வ.வே.சு. நான் அதற்கு முன்னால் இசைப்பாடல் எழுதியிருந்தாலும் அதைத் தூண்டிவிட்டது வ.வே.சுவின் பாடல்கள்தான். பாரதியாரின் ஆவேசத்தை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டு வந்த நெருப்பு என்று ரமணனைச் சொல்லலாம். சுப்பு ஒரு வேதாந்தி. அவனைப் புரிந்துகொள்வதே கஷ்டம். சு. ரவி ஒரு இனிய நண்பன். பள்ளிநாட்களில் செருப்புக்கூடப் போட்டுக்கொள்ள மாட்டான். தலை வாரிக்கொள்ள மாட்டான். விவேகானந்தர் மாதிரியே தன்னை நினைத்துக் கொண்டு வாழ்ந்தவன். மிகவும் ஆக்ரோஷமாக எழுதக் கூடியவன். அதுபோல கிரேசி மோகன். அவரைப் பலருக்கும் நகைச்சுவையாளராக மட்டுமே தெரியும். ஆனால் அருமையான பல கவிதைகளை எழுதக்கூடிய கவிஞன். இவர்களெல்லாம் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தது என் பெரிய பாக்யம்.
தெ : இக்காலக் கவிஞர்கள், கவிதைகள், கவிதைச் சிற்றிதழ்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? ரவி : இன்றைக்கு நிறையக் கவிஞர்கள், நிறையக் கவிதைகளை எழுதுகிறார்கள் ஆனால் ஏன் கவிதை எழுதுகிறோம் என்பதை அவர்களில் பலர் தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதுகிற எழுத்தாளர்கள் இன்றைக்கு அதிகமாகி விட்டார்கள். அதைத் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் பாராட்டும் புகழுமே எழுத்துக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதைக் கடந்து சென்றாக வேண்டும். அதுதான் முதல்படி. மற்றபடி லட்சத்தில் ஒருவருக்குத்தான் கவிதை எழுதும் உந்துதலே வரும். அதிலும் ஆயிரத்தில் ஒருவரே கவிஞராக நிலைபெறுவார். எந்தக் கவிதையை ஓர் இதழில் படித்தாலும் அது நன்றாக இருந்ததாக நான் கருதினால் அதைப் பாராட்டி அவரிடம் பேசிவிடுவது என் வழக்கம். கவிஞரை எனக்குத் தெரியுமோ தெரியாதோ, நான் பாராட்டி விடுவேன். ஒரு நல்ல வரி கிடைத்தால் அதற்காக ஒரு விழாவே எடுக்கலாம் என பாரதி சுராஜ் சொல்வார். அந்த வழியில் வந்தவன் நான்.
கவிதைகளை ஆதரிக்கும் இதழ்கள் குறைந்துவிட்டன. ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் 'கவிதை உறவு', அமுதசுரபி, நண்பர் மெய்கண்டாரின் "இளந்தமிழன்" மற்றும் "கவிதா மண்டலம்" ஆகியவைதாம் கவிதைகளைப் பிரசுரிக்கின்றன. மணிக்கொடி காலம் என்று பேசுகிறோமே அதுபோல எதிர்காலத்தில் "இளந்தமிழன் காலம்", "கவிதா மண்டலம் காலம்" எனப் பேசுமளவுக்கு அவை காலங்கடந்து நிற்கும் என்பது என் நம்பிக்கை.
தெ: வழக்கறிஞர் பணிச் சுமைக்கிடையே கவிதை எழுத எப்படி நேரம் கிடைக்கிறது? ரவி : என்னுடைய சட்டநூல் ஒன்றை ஒருமுறை ப. சிதம்பரம் அவர்கள் வெளியிட்டார். அந்த விழாவில் அவர் பேசும்போது, "I don't know Ravi, how do you find time for all these things?" என்றார். நான் என் ஏற்புரையில் அதற்கு பதில் சொன்னது இதுதான். "I don't find time. Time finds me". காலம் என்னைத் தன் கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. நான் ஒன்றைச் செய்யவேண்டும் என்று நிர்ணயித்திருந்தால், அது என்னைக் கருவியாகக்கொண்டு, எப்படிப்பட்ட நிலையிலும் என் மூலமாக நடந்தே தீரும்.
தெ: உங்கள் குடும்பம் பற்றி... ரவி: நான், என் மனைவி ஷோபனா. எனக்கு இரண்டு மகள்கள். மூத்தமகள் மதுமதி. இரண்டாவது மகள் ஐஸ்வர்யா. மூன்று பேத்திகள். என் பெண்கள் இருவருமே நன்றாகக் கவிதை எழுதுவார்கள். முதல் மகள் மதுமதி ஃபேஸ்புக்கில் எழுதி வருகிறாள். 'Un Mind' என்ற தலைப்பில். அதைப் புரிந்துகொள்ள எனக்கே கடினமாக இருக்கிறது. அத்தனை ஆழம். அவள் ஜே.கே. ஸ்கூலில் படித்தவள் என்பதால் அந்தச் சிந்தனை அவளுக்குள் உள்ளதென நினைக்கிறேன். ஆன்மீக ஆர்வம் என்பது இரண்டு பேருக்குமே இருக்கிறது.
இந்தச் சமயத்தில் பிரபல தமிழ்ச் செய்திவாசிப்பாளர் திருமதி. ஷோபனா ரவி அங்கே வந்தார். தமது கடமைகளைச் செய்து முடித்துவிட்ட நிறைவில் வாழும் ஒரு பெண்மணியின் அமைதியை அவரிடம் பார்த்தோம். ரவி எழுதும் கவிதைகளின் முதல் ரசிகராக இருப்பதோடு தானும் அவ்வப்போது கவிதைகள் எழுதியதுண்டு என்றார். இருவரும் ஆன்மீக ஈடுபாட்டில் கைகோத்து நடப்பவர்கள் என்பதையும் காணமுடிந்தது. "ரவி ஒரு நல்ல மனிதர். அவரது நல்ல மனம்தான் அவரிடம் என்னை ஈர்த்தது. குடும்பமாகட்டும், சமூகமாகட்டும், அவர் எங்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளமாட்டார். அது அவரது இயல்பு" என்று ஷோபனா சொல்லும்போது அவரது பெருமிதத்தையும் அடக்கத்தையும் ஒருசேர நம்மால் காணமுடிகிறது.
கவிஞர் ரவி - ஷோபனா ரவி எனத் தன்னிறைவு கண்ட ஒரு தம்பதியைச் சந்தித்த நிறைவோடு, இருவரிடமும் நன்றிகூறி விடைபெற்றோம்.
சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்
*****
பாரதி விழா எட்டையபுர ஜமீன்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், "சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை" தந்த தன்னை, ஜமீன்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சால்வை, பொற்பை எல்லாம் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருப்பான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் கண்ட அந்தக் கனவை பிறகாவது நிறைவேற்றி வைக்கலாம் என்று முடிவு செய்து அதை பாரதி விழாவாக, கவிஞர் திருநாளாக 'வானவில் பண்பாட்டு மையம்' மூலம் கொண்டாடி வருகிறோம். பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11 அன்று பாரதி உருவச்சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்து பாரதி அன்பர்கள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்
- க. ரவி
*****
குருநாதரும் நானும் என் குருநாதர் அதிகம் பேசமாட்டார். வருவார். மலைக்க வைத்த ஓர் அனுபவம்: தூக்கத்தில் எனக்கு சில சமயம் கவிதைகள் வரும். காலையில் கண் விழித்ததும் அதை ஞாபகத்திற்குக் கொண்டுவந்து எழுதுவேன் அல்லது பாடுவேன். அப்படி ஒருமுறை கனவில் நான் உட்கார்ந்து பாடுவதாகவும் எல்லாரும் அந்தப் பாடலைக் கேட்பதாகவும் ஒரு காட்சி. காலையில் கண் விழித்ததும் அது மறந்துவிட்டது. என் மனைவி ஷோபனாவிடம் அந்தக் கனவுபற்றிச் சொல்லிப் பாடல் மறந்து போனதையும் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ஃபோன் அடித்தது. மறுமுனையில் டாக்டர். நித்தியானந்தம். சிரித்துக் கொண்டே, "என்னப்பா, பாட்டு மறந்துபோச்சா?" என்றார். என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை. நம் கனவில் வந்த பாட்டைப்பற்றி இவர் எப்படிச் சொல்கிறார் என்று ஒரே திகைப்பு. "வந்துரும்" என்று சொல்லிவிட்டு வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார். சிறிதுநேரத்தில் அவர் சொன்ன மாதிரியே அந்தப் பாடல் முழுமையும் நினைவுக்கு வந்துவிட்டது! இந்த அனுபவம் என்னை ஆன்மீகத்துள் மேலும் ஆழமாகச் செலுத்தியது.
கோலார் போகும்வழியில் குறடுமலை இருக்கிறது. அங்கு 18 அடி உயர விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. ஒரே சாளக்ராமக் கல்லால் ஆனது. சாளக்ராமக் கல்லில் அவ்வளவு பெரிய சிலை செய்வது மிகவும் கஷ்டம். அதை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக என் குருநாதர் சொல்லியிருந்தார். அவர் அடிக்கடி செல்லும் இடம் அது. அது மிக விசேஷமான இடம்.
- க. ரவி
*****
ஆன்மீக அனுபவங்கள் ஒருமுறை காலடிக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பூர்ணா நதியில் குளித்து பின் தியானம் செய்யலாமே என நினைத்து பத்மாசனத்தில் அமர்ந்தேன். இடுப்புவரை மட்டுமே நீர் இருந்தது. என் கழுத்து மட்டும் வெளியில் தெரிய நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். என்னுடன் இருந்த என் சித்திமகன் ஸ்ரீதர் கழுத்து மட்டுமல்ல; பத்மாசனம் போட்டமர்ந்த என் கால்களும் தண்ணீருக்கு மேலே இருந்ததாகப் பின்னர் சொன்னான். ஆனால் அப்போது எனக்கேற்பட்ட தியான அனுபவம் மிக வித்தியாசமானது. தியானம் செய்ய ஆரம்பித்ததுதான் எனக்குத் தெரியும் அதன் பின். நான் ஒரு பெரிய ஏரி போன்ற ஒன்றில் மூழ்கி உள்ளே செல்கிறேன். அங்கே ஒரு குகை தெரிகிறது. அதற்குள் போனதும் மார்கண்டேய மகரிஷி என்னை அழைத்துக் கொண்டு போவதாகவும், உள்ளே ஒளிமயமாக ஆதிசங்கரர்போல ஒருவர் தியானம் செய்து கொண்டிருப்பதாகவும் காட்சி தெரிந்தது. பின்னால் நான் ஊருக்குத் திரும்பி என் குருநாதரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் அந்த இடம் கைலாயத்தில் உள்ள மானசரோவர் ஏரி என்றும் அங்குள்ள குகையில் ஆதிசங்கரர் தியான நிலையில் இருப்பதாகவும் சொன்னார்.
பல வருடங்களுக்குப் பிறகு நானும் என் மனைவியும் பத்ரிநாத் போயிருந்தோம். வழியில் ஜோஷிமடம் என்ற இடத்திலுள்ள ஆதிசங்கரர் தவம் செய்த குகைக்குச் சென்றோம். பூட்டியிருந்த அந்த குகையைத் திறக்கச்செய்து, அங்கே சிறிது நேரம் தியானம் செய்தோம். தியானம் முடிந்து வெளியே வந்ததும் நான் ஷோபனாவிடம், "இந்த இடத்துக்கும் கைலாஷ்-மானசரோவருக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை" என்று சொன்னேன். பின் பத்ரிநாத் சென்றோம். அங்கிருந்து அருகே உள்ள மன்னா என்ற கிராமத்திற்குச் சென்றோம். அது இந்திய எல்லையில் இருந்த கடைசி கிராமம். அங்குதான் திபெத் எல்லை ஆரம்பிக்கிறது. அங்கு ஓடும் ஆற்றில், பீமன் போட்ட பாறைதான் அங்கு பாலமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அலக்நந்தா நதியுடன் சரஸ்வதி நதி சங்கமிக்கும் இடம் அது. அந்தர்வாஹினியாக ஓடும் சரஸ்வதி நதி அங்கே மட்டும் வெளியில் வந்து காட்சி தருகிறது. அங்கே ஒரு குகையிருந்தது. அதன் சுவரிலிருந்து துளித்துளியாக நீர் கசிந்து கொண்டிருந்தது. அது பார்ப்பதற்கு துத்தநாக (காப்பர் சல்பேட்) நிறத்தில் இருந்தது. அங்கிருந்த சுவரில், "இந்த நீர்த்துளிகள் மானசரோவரில் இருந்து வருகின்றன" என்று எழுதியிருந்தது. இப்படி விசித்திரமான பல அனுபவங்கள்! அருகேயிருந்த வியாசர் குகைக்குச் சென்று தவம் செய்தோம். நான் பிரம்ம சூத்திரத்திற்கு ஆங்கிலத்தில் உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான ஓர் வைப்ரேஷனை அங்கே பெற்றேன்.
- க. ரவி
*****
யோகி ராம்சுரத்குமாருடன் சந்திப்பு நானும் ஷோபனாவும் யோகி ராம்சுரத்குமாரை ஆரம்ப காலகட்டத்தில் திருவண்ணாமலையில் பலமுறை சந்தித்திருக்கிறோம். அவர் சொன்ன இடத்தில் உட்கார வேண்டும், மாற்றி உட்கார்ந்தால் கோபப்படுவார். ஷோபனாவை 'தி கிரேட் லேடி' என்று கூப்பிடுவார். 'தி கிரேட் லேடி ப்ளீஸ் சிட் தேர்' என்பார். நான் அவரிடம் சரளமாகப் பேசுவேன். ஏன் இப்படி இந்த வரிசையில் தான் உட்கார வேண்டும் என்கிறீர்கள்? ஏன் விசிறியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்பேன். யாரும் அவரிடம் இப்படி எல்லாம் கேட்க மாட்டார்கள். நான் அப்படிக் கேட்பதால் ஏதாவது ஒரு புத்தகத்தை என் கையில் கொடுத்து இதைப்படி என்று சொல்லி விடுவார். பின் விசிறியை அப்படியே காண்பித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை அவர் என்னிடம் நீ ஆலமரக்குகை ஆசிரமம் போயிருக்கிறாயா என்றார். இல்லை என்றேன். அங்கு அவசியம் போ என்றார். ஆலமரக்குகை ஆசிரமத்தில்தான் பப்பா ராமதாஸுக்கு ராம தரிசனம் கிடைத்ததாம். பின் ஒரு தடவை "நீ கண்டிப்பாகக் காஞ்சங்காடு போகவேண்டும். அப்போதுதான் ராமநாமத்தின் மஹிமை தெரியும்" என்றார். இன்னமும் காஞ்சங்காடு போகும் வாய்ப்பு அமையவில்லை.
பின்னர் யோகியாருக்கென்று ஒரு ஆசிரமம் உருவாகி, சுமார் பத்து வருடம் கழித்து அவரைப் பார்க்கச் சென்றோம். சுற்றி ஒரே கூட்டமாக இருந்தது. எல்லாரும் அவரது நாமாவளியைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கதவு சாத்தியிருந்தது. சரி, திரும்பி விடலாம் எனத் தீர்மானித்தபோது யாரோ ஒருவர் வந்து யோகியார் அழைப்பதாகச் சொன்னார். அவர் என்னை நினைவில் வைத்திருந்தார். பார்த்தவுடன் புன்னகை செய்து என் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டார். பஜனை முடியும்வரை என் கையைப் பிடித்துக் கொண்டிருந்தவர் பின் ஒரு பழத்தை என் கையில் வைத்து ஆசிர்வதித்து அனுப்பினார். அதுதான் கடைசியாக அவரைச் சந்தித்தது.
- க. ரவி |
|
|
|
|
|
|
|
|