ஒரிசா பாலு
|
|
பேரா. சேதுராமன் பஞ்சநதன் |
|
- வெங்கட்ராமன் சி.கே., யூகி, மீனாட்சி கணபதி, அம்பிகா சங்கர்|அக்டோபர் 2014| |
|
|
|
|
|
இயற்பியல், கணினியியல் போன்றவற்றில் பல்துறை வித்தகரான பேரா. சேதுராமன் பஞ்சநதன் (Senior Vice-President for the Office of Knowledge Enterprise Development (OKED) at Arizona State University) அதிபர் ஒபாமா, National Science Board அமைப்பின் உறுப்பினராக நியமித்துள்ளார். இந்த வாரியம் அமைக்கப்பட்ட 50 ஆண்டுகளில் இதற்கு நியமிக்கப்படும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமை இவருடையது. சென்னையில் பிறந்து அங்கே மயிலாப்பூர் ஸ்ரீவித்யா பள்ளி, சென்னை கிருத்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயின்றபின் விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். பெங்களூரு IISc-யில் இளங்கலை பொறியியலும், சென்னை IIT-யில் முதுகலை பொறியியலும் படித்தார். கனடாவில் ஆய்வு செய்து PhD பெற்றார். அவரைப் பற்றி அரசுக் குறிப்பு கூறுவதை அப்படியே தருகிறோம்: He is a Foundation Chair in Computing and Informatics in the School of Computing, Informatics, and Decision Systems Engineering, and the Director of the Center for Cognitive Ubiquitous Computing (CUbiC) at ASU. He is a Professor of Computer Science and Engineering, an Affiliate Professor in the School of Electrical, Computer and Energy Engineering. He was also an Adjunct Professor at the University of Arizona, College of Medicine, Phoenix. Panch was the Founding Director of the School of Computing and Informatics and was instrumental in founding the Biomedical Informatics Department at ASU. He was also the Chair of the Computer Science and Engineering Department. அதிபருக்கு அறிவியல் குறித்து ஆலோசனை தரும் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமனம் பெற்ற பஞ்சநதன் அவர்களோடு தென்றலுக்காக உரையாடியதில்......
*****
தென்றல்: சிறுவயதில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிவிட்டவர் என்று யாரையாவது நினைவு கூர்கிறீர்களா? பஞ்சநதன்: நிச்சயம். பள்ளி, கல்லூரி இரண்டிலுமே இயற்பியலில் ஆர்வமூட்டும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த ஊதியமென்றாலும் ஆசிரியர்கள் தன்னலமற்ற சேவை செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். நம்ப முடியாத அளவுக்கு அறிவு புகட்டுகிறார்கள்.
விவேகானந்தா கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தெளிவாக நினைவில் உள்ளது. B.Sc. சேர்ந்த ஆறு மாதத்திற்குப் பின், BITS பிலானியில் பொறியியல் வகுப்பில் சேர முடிவுசெய்தேன். ஃபிசிக்ஸ் துறைத் தலைவர் பேரா. லக்ஷ்மிநாராயணன் என்னுடைய விண்ணப்பத்தில் கையெழுத்திட மறுத்தார். "நான் கையெழுத்துப் போடமாட்டேன். வேறு எவரையும் கையெழுத்துப் போடவும் விடமாட்டேன். எஞ்சினியரிங் படிக்கறதுக்கு முன்னால ஃபிசிக்ஸ் பட்டம் வாங்கு. அறிவியலில் பலமான அடித்தளம் இருக்க வேண்டும். அதற்குப் பின்னால் எஞ்சினியரிங் படிக்க ஆசைப்பட்டால் IISc, MIT ஏதாவது ஒன்றில் B.E. படி" என்றார். இப்பொழுது யோசித்தால், உரிமையோடு அவர் நம்மிடம் காட்டிய அக்கறை வியப்பூட்டுகிறது. அதேபோல, நான் IIScயில் Electrical and Communication பிரிவில் பொறியியல் படித்தேன். அங்கு நிலவிய அறிவாற்றல் மிகுந்த சூழல் வியக்கத்தக்கது. சிறந்த விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் வழிகாட்டிகளாகப் பெறமுடிந்தது. பிறகு நான் சென்னை IITயில் MTech படித்தேன்.
கே: நல்லது. ப: அங்கு பேரா. J.P.ரெய்னா எனது ஆய்வுக் கட்டுரை ஆலோசகர். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. இரண்டிலும் எவ்வளவு கற்கமுடியும் என்பது ஆச்சரியமான விஷயம். அதன்பின் டெக்சஸில் PhD செய்ய அழைப்பு இருந்தபோதும், நான் கனடா செல்ல முடிவெடுத்தேன். அங்கு பேரா. மோரிஸ் கோல்ட்பெர்க் என்னை ஆராய்ச்சி மாணவராகச் சேர அழைத்தார். அங்கு இமேஜ் மற்றும் விடியோ கம்ப்ரெஷன் துறையில் ஆய்வுகள் நடத்தினர். எனது ஆராய்ச்சியும் அதிலேயே என்பதால் நான் அட்டவா, கனடா சென்றேன். அந்தச் சமயத்தில் கோடைக்கால வகுப்பு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது கற்பிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. என்னுடைய தந்தையும் ஒரு பேராசிரியர். அவரைப்பற்றிப் பின்னர் சொல்கிறேன். நான் PhD ஆய்வை 2 வருடம், 9 மாதங்களில் முடித்தேன். பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு வந்தது. அதே சமயத்தில் வெளியே தொழில் துறையிலும் வாய்ப்பு வந்தது. எனக்குக் கற்பிப்பது பிடித்த விஷயமானதால் நான் அட்டவா யுனிவர்சிடியில் சேர்ந்தேன்.
கே: உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.... ப: எனது மனைவி சௌம்யா இந்தியாவில் பிறந்திருந்தாலும், வளர்ந்ததெல்லாம் கனடாவில். அவரது பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். தந்தை ஒரு சர்ஜன். சமீபத்தில் காலமானார். தாய் இதயநோய் நிபுணர். அவர்கள் அமெரிக்காவில் பயிற்சி முடித்தபின் கனடாவில் 25 வருடங்கள் மருத்துவர்களாகப் பணிபுரிந்தனர். எனக்கு இப்போது வயது 53. 1989ல் நான் திருமணம் செய்து கொண்டபோது என் மாமனாரின் வயது 54. அவர்கள் அப்போது இந்தியா திரும்ப முடிவு செய்தனர். அவர்கள் இங்கிருந்து இரண்டே சூட்கேஸ்களில் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு நேரே பத்தமடையில் உள்ள சிவானந்தர் ஆசிரமத்திற்குச் சேவை செய்யச் சென்றனர். அங்கிருக்கும் இலவச மருத்துவமனையில் 9 ஆண்டுகள் சேவை செய்தனர். அவர்களுக்கு எப்போதுமே சத்திய சாயி பாபாவிடம் ஈடுபாடு உண்டு. அதனால் அங்கிருந்து புட்டபர்த்தி சென்றனர்.
கே: அற்புதம்! ப: 1984ல் பாபா அவர்களை இந்தியாவுக்குத் திரும்பி வருமாறு கூறியிருந்தார். அதை அவர்கள் மந்திரமாகவே எடுத்துக் கொண்டு 1989ல் இந்தியா சென்றனர். அங்கு சேவை செய்யும் வாய்புக் கிடைத்தது. 1998ல் புட்டபர்த்திக்கு இடம் பெயர்ந்தனர். எனது மாமியார் இப்பொழுதும் அங்குள்ள ஸ்ரீ சத்திய சாயி பொதுமருத்துவ மனையில் சேவை செய்கிறார். 25 வருடங்களாக ஏழைகளுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
கே: My God! கேட்க ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ப: எனது குழந்தைகள் அம்ருதா, ரோஷன் இருவரும் கனடாவில் பிறந்தனர். 1997ல் இணைப் பேராசிரியராகப் பணிவுயர்வு பெற்றபின், அமெரிக்காவுக்குக் குடிபெயர நினைத்தோம். என் தம்பி டெக்சஸில் வசித்ததும் ஒரு காரணம். சௌம்யாவின் சகோதரர் சான் டியகோவுக்குக் குடிபெயர்ந்து விட்டார். அமெரிக்கா திறமைக்கு மதிப்புக் கொடுக்கும் தேசம். அறிவியல் மற்றும் பொறியியலில் வாய்ப்புகளும் இங்கு அதிகம். அதனால் ஃபீனிக்ஸில் குடியேறினோம். சௌம்யா ஒரு குழந்தைகள்நல மருத்துவர். இங்கு இலவச மருத்துவ மனைகளிலும் பணியாற்றுகிறார். அவர் இங்கு பயோமெடிகல் இன்ஃபர்மேடிக்ஸ் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தார். அரிசோனா யுனிவர்சிடி மருத்துவக் கல்லூரியில், இன்ஃபர்மேடிக்ஸ் துறையின் இயக்குனராக உள்ளார். பயோமெடிகல் இன்ஃபர்மேடிக்ஸ் கற்பிப்பதோடு, ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். எங்கள் மகள் அம்ருதா ஃபீனிக்ஸில் உள்ள, அரிசோனா யுனிவர்சிடி மெடிகல் ஸ்கூலில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயில்கிறார். என் மகன் UCB-யில் பயோமெடிகல் எஞ்சினியரிங் இறுதியாண்டு பயில்கிறார். தனது தாய்வழிப் பாட்டனார்போல் மருத்துவராகும் எண்ணமும் அவருக்கு உண்டு.
கே: உங்கள் முன்மாதிரி என்று யாரைக் கூறுவீர்கள்? ப: என் பெற்றோர் இருவருமே. என் தந்தை மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் 25 வருடம் பேராசியராகப் பணியாற்றினார். அவர் 1956 முதல் 59வரை அகமதாபாதில் உள்ள ஃபிஸிகல் ரிசர்ச் லெபாரடரியில் PhD செய்தார். அங்கு சர். சி.வி. ராமனது மாணவரான பேரா. ராமனாதன் அவரது மென்டார். டாக்டர். விக்ரம் சாராபாய் இணை ஆலோசகர். அவரது தாய் அவர் சென்னை திரும்பி, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென விரும்பினார். எனது பாட்டி, தாத்தாவும் எங்களுடனேயே வசித்தனர். என் தந்தை எப்போதும் கடின உழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவார். தானே முன்னுதாரணமாகவும் இருந்தார். என் தாய் சேவை மனப்பான்மை கொண்டவர். குடும்பத்திற்கு மட்டும் அல்லாது சமூகத்திற்கும் தன்னலம் கருதாது உழைப்பார். அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொண்டேன். இருவருமே எளிமையும் பணிவும் கொண்டவர்கள். அவர்கள் இப்போது இங்கு வந்துள்ளார்கள்.
கே: குடும்ப விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் நல்ல கிரிக்கெட் வீரராமே? ப: நான் கிரிக்கெட் விளையாடுவேன். நான் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய இடங்களில் விளையாடியதுண்டு. தமிழ்நாடு கிரிக்கெட் கழகத்தின் முதலாம் பிரிவு லீக் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கனடாவில் அதெற்கெல்லாம் நேரம் இருக்கவில்லை. அரிசோனாவில் நிறைய கிரிக்கெட் அணிகள் உள்ளன. 1997 முதல் 2002 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விளையாடுவேன். அதன்பின் பல்கலைக்கழக நிர்வாக வேலை அதிகமானதால் விளையாட முடிவதில்லை.
கே: உங்கள் தந்தையாரை பற்றி மேலும் சொல்லுங்கள்.... ப: பொறியியல் துறையைப் பொறுத்தவரை அவர் எனக்கு முன்னோடி. பேரா. சங்கரன் (விவேகானந்தா கல்லூரி) மற்றொருவர். என் தந்தை அறிவியலை அதன்பொருட்டே நேசித்தார். ஒரு வேலையாகவோ, பணம் சம்பாதிக்கும் வழியாகவோ பார்க்கவில்லை. அவருக்கு வயது 86. இன்றும் அவர் நாள்முழுவதும் அறிவியல் கட்டுரைகளை ஐபேடில் படிப்பதைப் பார்க்கிறேன். சமீபத்தில் அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முதுகலை சரித்திரப் படிப்பை இரண்டே வருடத்தில் முடித்தார். இப்பொழுது தஞ்சாவூர் SASTRA பல்கலையின் கல்வி ஆலோசனைக் குழுவில் செயல்படுகிறார்.
என்னுடைய PhD மென்டார் பேரா. மோரிஸ் கோல்ட்பர்க் எனக்கு ஆராய்ச்சி எப்படிச் செய்யவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தார். இன்றும் என் மாணவர்களை வழிநடத்திச் செல்ல இவை உதவி செய்கின்றன. அவர் எனது ஆய்வுக் கூடத்திற்கு வருடத்தில் ஒருமுறையாவது வந்து என் மாணவர்களுடன் கலந்துரையாடுவார். அவர் என்னைத் தனது மகனாகவே பார்க்கிறார் என்பது என் பாக்கியம். |
|
|
கே: அரிசோனா பல்கலைக்கழகத்தில் நீங்கள் புதிய ஆராய்ச்சித் துறைகளை ஆரம்பிக்க முன்னின்று வழி நடத்துகிறீர்கள். அதுகுறித்துச் சொல்லுங்கள். ப: நான் 1997ல் வந்தவுடன் அமெரிக்கக் கல்வித்துறையில் காலூன்ற முயற்சித்தேன். நான் இங்கு இணைப்பேராசிரியராக வந்ததால், காலூன்றச் சில காலம் பிடித்தது. 3 வருடங்களில் அறிவியல் ஆய்வு, வளர்ச்சி இவற்றில் என் பங்களிப்பு அதிகரித்தது. IEEE அமைப்பின் அங்கீகாரம் கிடைத்ததும் என் பாக்கியம்தான். IEEE, SPIE போன்ற அமைப்புகளின் உறுப்பினர் ஆனேன். அப்போது 39 அல்லது 40 வயது. மீதி வாழ்நாளில் என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. நான் அதற்குள் 200 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தேன்.
கே: புரிகிறது. ப: மேற்கொண்டு என்ன செய்வதென 40 வயதில் யோசித்தேன். 60 வயதில் மேலும் 200, 300 கட்டுரைகள் வெளிவந்திருக்க வேண்டுமா அல்லது வேறு ஏதாவது சாதித்திருக்க வேண்டுமா? என்னுடைய வேலை எனக்குப் பிடித்திருந்தது. மாணவர்களுடன் உரையாடுவது எனக்குப் பிடித்திருந்தது. நான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததோடு அவர்களிடமிருந்தும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதை மட்டுமே செய்யப் போகிறேனா அல்லது இதற்கு மேலும் ஏதாவது செய்யப் போகிறேனா என யோசித்தேன்.
நான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவைப் பின்பற்றுகிறவன். அவர் அற்புதமான ஆன்மீக வழிகாட்டி. மனித உயர்பண்புகளை, விழுமியங்களை (Human Values) அவரிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். எப்படி சமூகத் தொண்டாற்றுவது, எப்படி வேலையை இறை வந்தனமாகச் செய்வது என்பதையும் கற்றுக் கொண்டேன். நம்முடைய ஒவ்வொரு துளி சக்தியாலும் சமூகத்தொண்டு செய்யவேண்டும்; வேலையே வழிபாடு, கடமையே கடவுள் (Work is worship, Duty is God) என்ற உண்மையை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
இதை அவர் எனக்கு நேரடியாகக் கூறினார். வீட்டிலோ, அலுவலிலோ, அல்லது வேறெந்தச் சூழலிலோ நான் செய்யும் எதுவும் எனக்கானதல்ல, மற்றவர்களுக்கானது. 'Work is Worship' என்பதை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். குடும்பம், பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் சமுதாயத்திற்கு நமது கடமைகளைச் செய்யவேண்டும்.
என் மிச்ச வாழ்நாளில் என்ன செய்ய விரும்பினேன் என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்கிறேன். நான் இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் பாபா வேறொருவரின் கேள்விக்கு பதில் சொல்வது என் காதில் விழுந்தது. அவர் பாபாவிடம், "from information to transformation" என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பாபா, "What information? What transformation? Information is only in formation. There is only transformation of information. But there is no real transformation" என்றார்.
ஒரு கணினி விஞ்ஞானியான எனக்கு இது மிகவும் ஆழமான உண்மையாகத் தோன்றியது. 'Information is in formation' என்பது உண்மை. 'There is only transformation of information' என்பது அதைவிடப் பெரிய உண்மை. நமது தேவை என்னவெனில், நம்முடைய 'transformation' (உயர்மாற்றம்) அவசியம். என்னுடைய உத்தியோக வாழ்க்கையில் நான் என்ன செய்யமுடியும் என யோசித்தேன். என் பணியின் முதல் அம்சமாக, நான் மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு அவர்களைச் சரியான பாதையில் இட்டுச்செல்லும் முயற்சி. அடுத்த அம்சம் ஆராய்ச்சி. மூன்றாவது அம்சம் சேவை. என்னுடைய ஆராய்ச்சி மல்டிமீடியா, இமேஜ் ப்ராசஸிங், கம்ப்யூட்டர் விஷன், parallel processing ஆகியவற்றைப் பற்றியது. என்னுடைய ஆராய்ச்சியை எப்படி சமூகத்துக்கும் பயனுள்ளதாக்க முடியும் என நினைக்கத் தொடங்கினேன். இந்த எண்ணம் வந்தவுடன், மனதுக்குள் அவரது வழிகாட்டுதலை வேண்டினேன். அதன்பின், தானாகவே செயல்கள் நடக்கத் தொடங்கின. ப: நான் திரும்பி வந்து நேஷனல் சயன்ஸ் ஃபவுண்டேஷனிடம் 'The NSF Information Technology Research Program (NSF-ITR)' குறித்த விரிவான ஆராய்ச்சித் திட்டத்திற்கான அறிக்கை சமர்ப்பித்தேன். என் சக ஆசிரியர்களுடன் எந்த திறக்கில் இதைச் செய்யலாம் என விவாதித்தேன். அப்போது ஒருவர் பார்வையற்றோருக்காகச் செய்தால் என்ன என்று கேட்டார்.
கே: அதை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டீர்கள், இல்லையா? ப: ஆமாம். நான் இமேஜ் ப்ராசஸிங்கில் செய்யும் ஆராய்ச்சி. பார்வையுள்ளோருக்கு. பார்க்க முடியாதவர்களுக்கு உதவும் வாய்ப்பாக இதைக் கருதினேன். சமூகத்தில் எவரையும் சார்ந்திராத வெற்றியாளர்களாக அவர்களை ஆக்க எது உதவும் என்ற கேள்வி எழுந்தது. இசை, சரித்திரம் மட்டுமல்லாது, அறிவியல், பொறியியல் போன்ற துறைகளிலும் அவர்கள் உயர்கல்வி பெறத் தடை இருக்கக்கூடாது என நினைத்தேன். அப்படித்தான் 'The Center for Congnitive Ubiquitous Computing' 2002ல்உருவானது. அதன் வலைத்தளத்திற்கு 'CUbiC)' எனப் பெயர். 2004ல் அது அரிசோனா கவர்னரின் புத்தாக்கத்துக்கான விருதைப் பெற்றது.
கே: நான் அதைப் பார்த்திருக்கிறேன். ப: எங்களது திட்டங்களை அதில் பார்த்திருப்பீர்கள். அவற்றைப்பற்றிச் சொல்லப் போவதில்லை. நான் டேவிட் ஹேய்டன் (David Hayden) என்ற மாணவரைப் பற்றிச் சொல்கிறேன். அவர் பார்வைக் குறைபாடுள்ளவர். 2007ல் என்னிடம் வந்தார். "நான் கணிதம் மற்றும் கம்ப்யூட்டரில் (joint degree program) முதலாம் ஆண்டு படித்து முடித்துள்ளேன். ஆனால் இரண்டாம் ஆண்டில் சமன்பாடுகள், நெறிமுறைகள், செய்முறைகள் (equations, algorithm, processing) ஆகியவை கடினமாக இருப்பதை உணர்கிறேன். முதல் வரிசையில் அமர்ந்தாலும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எனக்கு உதவ முடியுமா?" என்றார். நான் அவரிடம் "நீங்கள் ஏன் என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் வேலை செய்யக்கூடாது? இங்கே இளநிலை, முதுநிலை, Ph.D. மட்டுமல்ல, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கூட உள்ளார்கள். அவர்களுடன் நீங்கள் வேலை செய்தால் என்ன? உங்களுக்குள்ள தடைகள் என்னென்ன என்பதை உங்களைவிட நன்கு வேறு யாருக்குத் தெரியும்? நீங்கள்தான் விடைகாண முடியும்" என்றேன். அவர் அதை ஏற்று எனது ஆய்வுக்கூடத்தில் பணி செய்ய வந்தார். இரண்டே வருடத்தில் தனது ஜூனியர் வருட முடிவில், ஒரு கருவியை உருவாக்கினார். He had designed a tablet PC with a USB interface to a Camera. இதன்மூலம் வகுப்புகளின் வீடியோவை tablet PCயில் பார்க்கத் தருவித்தார்.
இன்னுமொரு புத்திசாலித்தனமான காரியத்தையும் செய்தார். அவர் டேப்லெட்டின் திரையை இரண்டாகப் பிரித்து இடப்பக்கம் வகுப்பின் வீடியோ வருமாறு செய்தார். He could freeze frames and do whatever he wanted with it. வலப்பக்கத்தில் வகுப்பறையில் குறிப்புகள் எடுத்து, அதை வீடியோவுடன் இணைத்தார்.
கே: My God! ப: வகுப்புகள் முடிந்தவுடன், பார்வையுள்ள மாணவர்களும் வகுப்பறைக் குறிப்புகளைத் தமக்குத் தருமாறு கேட்பார்கள்.
கே: வெரி நைஸ். வெரி இன்ஸ்பயரிங். ப: அவர், தனது ஜூனியர் வருட முடிவில், இந்த கருவியின் முன்மாதிரி வடிவத்தை சமர்ப்பித்தார். அவரோடு பார்வைக் குறைபாடுள்ள மற்றவர்களும் இதைப் பரிசோதனை செய்திருந்தனர். இங்குள்ள cognitive scientists, college of design students, disability students எனப் பல்வேறு துறையினரையும் கொண்ட ஆய்வுக்கூடத்தில் அதை அறிமுகப்படுத்தினோம். அதனால், இந்தக் கருவியை அவரால் மலிவு விலையில் தயாரிக்க முடிந்தது. அவர் இதை 'மைக்ரோசாஃப்ட் இமேஜின் கப்' போட்டிக்கு அனுப்பி வைத்தார். அந்த உலகளாவிய போட்டியில் 11 பிரிவுகள். இதை 'Touch and Tablet' பிரிவுக்கு அனுப்பினார். பின்னர் பெர்க்கலி, ஸ்டேன்ஃபோர்ட் மாணவர்கள் பங்கேற்ற பிராந்தியப் போட்டியில் பங்கேற்று வெற்றி கண்டார். தேசியப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் போலந்தில் நடந்த உலகப் போட்டியிலும் வெற்றி பெற்றார். இதில் உலகம் முழுவதிலுமிருந்து 325,000 பேர் கலந்து கொண்டனர். 3வது வருடப் படிப்பின் இறுதியில் அவர் இதைச் சாதித்தார். அடுத்த ஆண்டு 'மைக்ரோசாஃப்ட் இமேஜின் கப்' போட்டியில் software design பிரிவிலும் தேசிய அளவில் வெற்றிபெற்றார்.
நான் அவரை முதலில் சந்தித்தபோது "டேவிட், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்" எனக் கேட்டேன். அதற்கு அவர் "நான் உங்களைப்போல் கல்லூரிப் பேராசிரியர் ஆக விரும்புகிறேன். மாணவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன்," என்றார். அவர் அமெரிக்காவின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுக்காகப் பதிவுசெய்தார். அவரை ஏற்க அவை யாவுமே விரும்பின. MITயின் மீடியா மற்றும் செயற்கை அறிவு ஆகிய இரு ஆய்வுக்கூடங்களும் அவருக்காகப் போட்டி போட்டன. அவர் இப்போது MITயில் PhD படிப்பை முடிக்கும் தறுவாயில் உள்ளார். அவர் தனது கண்டுபிடிப்பு அனைவருக்கும் குறைவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
கே: Excellent. இதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ப: 2002ல் நான் CUbiC lab தொடங்கிய நேரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து மைக்கல் க்ரோ எங்கள் பல்கலைக் கழகத்தின் தலைவராக வந்தார். அவர் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கெனப் புதிய தொலைநோக்குத் திட்டம் ஒன்றை உருவாக்கினார். 21ம் நூற்றாண்டின் புதுமைப் பொருளாதாரத்திற்கு மாணவர்களைத் தயார் செய்வது அதன் நோக்கம். அவை விரைந்து செயல்பட்டு, அந்தச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பது நோக்கம். தொழில்முனைவோருக்கான திட்டம் ஒன்றை உருவாக்கினார். அது, உலகச்சூழலைப் புரிந்து கொள்ளுதல், எழுச்சியூட்டும் ஆய்வுகள், இடர்களை எதிர்கொள்ளல், சமூகசேவை, சமூகத் தாக்கம் ஏற்படுத்துதல், பல்வேறு துறைகளுடன் இயைந்து வேலை செய்வது போன்றவற்றை உள்ளடக்கியது.
அவர் க்யூபிக் லேபின் செயல்பாட்டை அறிந்து, என்னை அழைத்து, கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் துறையில் மேலும் என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் ஒரு வருடத்துக்குள் 'Computing and Informatics' என்ற புதிய துறையை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தேன். இத்துறையின் மூலம், கம்ப்யூட்டர் சயன்ஸ் பல்வேறு துறைகளுடன் இயைந்து, பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஊடாடி, கணினிப் பாடத்திட்டத்தைச் செறிவூட்டலாம்.
கே: ஓ, சரி! ப: அவர் அந்த மாற்றம் ஏற்பட வகைசெய்தார். 'School of Computing and Informatics' துறையை உருவாக்கினேன். அரிசோனா பல்கலைக்கழகம், ஃபீனிக்ஸில் புதிதாகத் தொடங்கவிருந்த மருத்துவக்கல்லூரிக்கான ஆளுனரின் ஆணையம் அமைக்கப்பட்ட போது, அவர் என்னை அதன் உறுப்பினர் ஆக்கினார். அக்குழுவின் 8 உறுப்பினர்களில் நான் மட்டுமே மருத்துவரல்லாதவர். எதிர்கால மருத்துவர்களை உருவாக்க இன்ஃபர்மேடிக்ஸ் அவசியம் என அவர் கருதினார்.
கே: பிரமாதம்! ப: அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேயோ கிளினிக்குடன் சேர்ந்து பயோ இன்ஃபர்மேடிக்ஸ் துறையை உருவாக்கினோம். உளவியல், மானிடவியல் துறையைச் சேர்ந்த, கணினி அறிவியலும் பயின்ற பல்துறை வல்லுநர்களை, துறை உறுப்பினர்களாக (faculty members) நியமித்தேன். நல்ல புகழ்பெற்ற கணினி விஞ்ஞானிகளையும் நியமித்தேன். 2002ல் தொடங்கி 2007-8ல் இதைச் செய்து முடித்தேன். அவர் என்னைப் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆராய்ச்சி அலுவலர் பொறுப்பு வகிக்க அழைத்தார். இங்கு 83,000 மாணவர்கள் தவிர 2000 நிரந்தரப் பேராசிரியர்கள் உட்பட 3000 பேராசிரியர்களும் உள்ளனர். பயோடிசைன் இன்ஸ்டிட்யூட், குளோபல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சஸ்டெய்னபிலிடி மற்றும் பல சிறந்த கல்வி நிறுவனங்களும் இங்கு உள்ளன. அவர் என்னிடம் "You can think across disciplines. I want you to incentivise and build this research enterprise" என்றார். 2001ல் எங்களது ஆராய்ச்சியின் மதிப்பு 100 முதல் 110 மில்லியன் டாலர் வரை இருந்தது. இந்த ஆண்டு 425 மில்லியன் டாலர்! தேசிய அளவில், மருத்துவக் கல்லூரியில்லாத பல்கலைக்கழங்களிடையே, நாங்கள் 15வது இடத்தில் உள்ளோம்.
கே: எக்ஸலண்ட் சார். ப: பாபாவின் அருளால் இவையெல்லாம் நடந்தன. நான்கு வருடங்களுக்கு முன் அவர் என்னை சீனியர் வைஸ் ப்ரெஸிடெண்ட் பொறுப்பு வகிக்க அழைத்தார். I am responsible for advancing research, entrepreneurship, innovation and economic development activities of the University. அதே சமயம் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபடுகிறேன். எனக்கு ஆய்வுக்கூடங்கள் உள்ளன. 6 ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளனர். ஒரு நிர்வாகியாக மட்டும் இருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என நாம் சொல்லக்கூடாது, நம்மைப் பார்த்து, மற்றவர்கள் பின்பற்ற வேண்டும்.
கே: வொண்டர்ஃபுல்! ப: I think the future of science is robust, vibrant, exciting. நாம் திறமையை மதிக்கும் நாட்டில் உள்ளோம். எனக்குத் தரப்பட்ட வாய்ப்புகளுக்கு இந்த தேசத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இதன் குடிமகனாக, இந்நாட்டிற்கும், உலகத்திற்கும் சேவை செய்வது எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. மனித ஆற்றலைப் புரிந்து கொள்ளுதல், அதனைத் தளையறுத்தல் போன்ற உற்சாகமான விஷயங்கள் எதிர்காலத்தில் இருக்கின்றன. இயற்கையைப் புரிந்துகொண்டு, அதனிடமிருந்து கற்றுக்கொண்டு, அதனோடு இயைந்து மனிதகுலத்தின், இயற்கையின் நன்மைக்குப் பங்களிக்க வேண்டும்.
கே: நீங்கள் செய்யும் வெட்டுமுனைத் தொழில்நுட்ப ஆய்வுகள் என்ன? ப: Cutting edge technology research என்றால், கம்ப்யூட்டர் விஷனில் மட்டுமல்ல, நாங்கள் தொடுவுணர்வு (haptics) குறித்தும் ஆய்வுகள் செய்கிறோம். காணல், கேட்டல் மட்டுமல்லாமல், எப்படி தொடுவுணர்வு மூலமும் செய்திப் பரிமாற்றம் செய்யமுடியும் என்பதை ஆய்கிறோம். இதில் அடிப்படை வேலை செய்துள்ளோம்.
கே: செக்யூரிடியைப் பற்றி தற்போது கவலைகொள்வது அவசியமா? இல்லை, ஆய்வுகளும் வளர்ச்சியும் நடக்கட்டும், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்பது உங்கள் கருத்தா? ப: பாதுகாப்பு பற்றி ஓரளவு கவலை உண்டு. அறிவியல் வேகமாக முன்னேறும்போது, மக்கள், சுற்றுச்சூழல் இவற்றின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டியுள்ளது. செய்ய வேண்டியது நிறைய உள்ளது. சைபர் செக்யூரிடி அதன் ஒரு அம்சம்தான். வருங்காலத்தில் அறிவியல் என்பது, அந்தரங்கம், பாதுகாப்பு இவற்றைத் தன்னுள்ளே அடக்கியதாக இருக்கும்.
கே; ஆராய்ச்சிகளுக்கு நிதி கிடைப்பதில் உள்ள சவால்கள் என்ன? ப: இப்போதைய நிலை எனக்கு மகிழ்ச்சிதான். இல்லாததைப் பற்றிப் பேசலாம். ஆனால் எவ்வளவோ இருக்கிறதே. அடிப்படை ஆய்விலும் பயன்முறை ஆய்விலும் (applied research) பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் நிறைய முதலீடுகள் வந்தால் நல்லதுதான். ஆனால், உள்ள முதலீடுகளை அதிகபட்சப் பயன் தரும் விதத்தில் பயன்படுத்துவது அவசியம். அப்போதுதான் வருங்காலத்தில் முதலீடுகளை ஈர்க்கலாம்.
கே: மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புவீர்கள்? ப: எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யுங்கள். கடின உழைப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவசியம். விரைந்து மாறிவரும் உலகத்தில் ஏதாவதொரு பட்டம் பெற்றால் போதாது. கூடவே சில திறமைகளும் தேவை. சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் தேவை. அதற்குப் பலதுறை அறிவு வேண்டும். அடுத்து, ஒரு குழுவுடன் இணைந்து வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும். வழிநடத்தவும், பின்பற்றி நடக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இரண்டுமே முக்கியமான குணங்கள். சேவை மனப்பான்மையுடன் வேலை செய்வது முக்கியம். உங்கள் தகுதிக்கேற்பச் சமூகத்துக்குத் திருப்பிச் செய்ய வேண்டும். வீடற்றோருக்குத்தான் சேவை செய்ய வேண்டும் என்றல்ல. என்னால் என்ன சேவை செய்யமுடியும் என்று ஒவ்வொரு நொடியும் துடிக்கவேண்டும்.
அடுத்தது, உலகளாவிய சிந்தனை. இனி, எல்லாமே உலகளாவியதாக இருக்கும். அதனால் உலக சமுதாயத்தைப் பற்றிய அறிவு முக்கியம். படிக்கும்போதே சேவை செய்யுங்கள். மருத்துவமனையிலோ அல்லது வேறெங்குமோ சேவை செய்யுங்கள். ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களை ஊக்குவியுங்கள். இந்த அனுபவ அறிவு உங்கள் கல்விக்குச் செறிவூட்டும். முடிவில் இது கல்வியைப் பற்றியோ, பயிற்சியைப் பற்றியதோ அல்ல. It is about learning for life. கற்பது எப்படி எனக் கற்க வேண்டும்.
கே: வாவ்! ப: ஏனெனில், இன்று கற்றது நாளையோ, அடுத்த மணியிலோ, அடுத்த மாதமோ வழக்கொழிந்து, பயனற்றுப் போகலாம். அதனால் புதியன கற்கும் ஆர்வம் தொடர்ந்து இருக்கவேண்டும். இது வெற்றிக்கு வழி. வெற்றி என்னும்போது, சம்பிரதாயமான வெற்றி அல்ல. சந்தோஷம் மற்றும் சுயமதிப்புடன் இருத்தல்.
கே: இளம்பெற்றோருக்குச் சில வார்த்தைகள்.... ப: இந்தப் பண்புகள் அனைத்தையும் அடையக் குழந்தைகளுக்கு உந்துதலாக இருங்கள். அவர்களிடம் மரியாதையைக் கேட்டுப் பெறாதீர்கள். அவர்கள் மதிக்குமாறு நடந்து கொள்ளுங்கள். உங்கள் செயல்களின் மூலம்தான் மதிப்பைப் பெறமுடியுமே தவிரக் கேட்டு அல்ல. அவர்கள் வெற்றியடைய உற்சாகப்படுத்துங்கள். அற்புதமான, மகிழ்ச்சியான குடும்பத்தை, சமுதாயத்தை நீங்கள் உருவாக்க முடியும். உங்களுக்கும், நீங்கள் ஈடுபட்டுள்ள அனைத்துக்கும், கடவுள் தனது ஆசிகளை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன் மொழிப்பதிவு: யூகி தமிழாக்கம்: மீனாட்சி கணபதி, அம்பிகா சங்கர்
*****
தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக நியமனம் பெற்றது குறித்து... இது ஒரு பெரிய வாய்ப்பு மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இதற்குத் தகுதியானவனாக என்னை நான் நிரூபிக்க வேண்டும். அதற்காக நான் அயராமல் உழைப்பேன்.
- பேரா. சேதுராமன் பஞ்சநதன்
*****
"I என்றால் Instrument" நான் என்று சொல்லிக் கொள்ளும்போது என்னை ஒரு கருவி என்பதாகவே சொல்கிறேன். I என்பது instrument-ஐக் குறிக்கிறது. நான் வெறும் கருவிதான். கடவுள் தான் செய்ய விரும்புவதை என்னை ஒரு கருவியாக உபயோகித்துச் செய்து முடிக்கிறார் என்றுதான் நம்புகிறேன். எதையும் "என் சாதனை" என்று எண்ணாமல், "கடவுள் எனக்குக் கொடுத்த வாய்ப்பு" என்றே நினைக்கிறேன். நம் ஒவ்வொருவரின் வழியாகவும் கடவுள் எதையாவது செய்ய நினைக்கிறார். என் சாதனை என ஒன்றை நினைப்பது முட்டாள்தனம்.
- பேரா. சேதுராமன் பஞ்சநதன்
*****
அறிவியல் ஆய்வும் பொருளாதார முன்னேற்றமும் ஒரு பரந்த நோக்கில், அறிவியல் என்பது இயற்பியல், ரசாயனம், உயிரியல், தொழில்நுட்பம், கணினி அறிவியல், சிவில் எஞ்சினியரிங், எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் போன்றவை மட்டுமல்ல. சமூக அறிவியலும் (Humanities) அறிவியலே. அறிவியல் முன்னேற்றத்துக்கு ஒரு பின்புலம் தேவை. ஹ்யுமானிடிஸ்தான் அந்தப் பின்புலம். அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஹ்யுமானிடிஸ், சோஷல் சயன்சஸ், வணிகச் சட்டம், கலாசாரம், உளவியல், மானுடவியல் இவையெல்லாம் அறிவியல், டெக்னாலஜி, பொறியியல் இவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒரு துறை தன் வளர்ச்சிக்கு, அறிவியல் தொழில்நுட்பம் இவற்றின் உதவியை நாடும்போது, அவற்றின் தேவைகளும், சவால்களும் அறிவியல், தொழிநுட்பம் போன்றவற்றின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவையும் வளர்ச்சி பெறுகின்றன.
It is highly synergistic. தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் முக்கியக் குறிக்கோள். தாக்கம் சமூகத்தில், பொருளாதாரத்தில், கலாசாரத்தில் என எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
- பேரா. சேதுராமன் பஞ்சநதன் |
|
|
More
ஒரிசா பாலு
|
|
|
|
|
|
|
|