|
|
|
எழுதத் தொடங்கி இந்த ஆண்டில் பொன்விழாக் காணும் இவரை விமர்சனப் பிதாமகர் என்று அழைப்பது வழக்கம். இலக்கியம் மட்டுமல்ல, இசை, நடனம், ஓவியம், பன்னாட்டு சினிமா என்று கலைத்துறையின் எல்லாப் பிரிவுகளையும் வெ.சா.வின் விமர்சனக் கோல் தொட்டதுண்டு, சுட்டதுண்டு. "என்னை எல்லோரும் சிங்கம், புலி என்று கூறுகிறார்கள், நான் அப்படியா இருக்கிறேன்" கேட்டபடி பலமாகச் சிரிப்பார். தான் உணர்ந்ததை உணர்ந்தபடி, நீர்க்காத சொற்களால் விமர்சிக்கும் இவரது பாணி பலரை இவரிடமிருந்து எட்டி நிற்க வைத்ததுண்டு. ஆனால் பல புதிய எழுத்தாளர்களை முளையிலேயே இனம் கண்டு, அவர்கள் மீது விளக்கொளியைத் திருப்பி, தழைக்க வைத்த கதைகளும் நிறைய உண்டு. இவரைக் கட்சி, கோட்பாடு என்கிற சிமிழ்களில் அடைக்க முடியாது. 'அக்கிரஹாரத்தில் கழுதை' என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதி, அந்தப் படம் தேசீய விருது பெற்றது. கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது பெற்றவர். தென்றலுக்காக வெங்கட் சாமிநாதன் அவர்களைச் சந்தித்து உரையாடியதில்....
கே: புத்தக ஆர்வம் எப்படித் தொடங்கியது?
ப: நாங்கள் நிலக்கோட்டையில் வசித்து வந்தோம். அப்போது புதிதாகக் குடிபோன ஒரு வீட்டின் பரணில் பழைய சாமான்களையெல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். அதில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று 'பிரதாப முதலியார் சரித்திரம்'. அப்போது எனக்கு 11 வயது. அடுத்து 'சுவாமியும் சிநேகிதர்களும்' கிடைத்தது. ஆனந்த விகடனில் வந்த தொகுப்பு. பள்ளி நூலகத்திலிருந்து சுபாஷ் சந்திர போஸின் தன்வரலாறான 'இளைஞனின் கனவு', வ.ரா. எழுதிய 'தமிழ்நாட்டுப் பெரியார்கள்', நேருவின் பேச்சுக்கள் அடங்கிய நூல், முஸ்தஃபா கமால் பாஷா, வெ. சாமிநாத சர்மா நூல்களெல்லாம் கிடைத்தன. ஒருமுறை கொட்டையூரில் உள்ள கூட படித்த நண்பன் சண்முகத்தின் வீட்டுக்குப் போயிருந்தபோது கோலாலம்பூரில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகம் கொடுத்தான். 'எனது போராட்டம்' என்ற ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்று நூல். அது இங்கே தடைசெய்யப்பட்ட ஒன்று. இப்படித்தான் ஆரம்பித்தது எனலாம்.
கே: ஹிராகுட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்...
ப: ஹிராகுட் அணை கட்டும் கேம்பில் நான் ஆறு வருஷம் இருந்தேன். அங்கேதான் க.நா.சு., தி. ஜானகிராமன் போன்றோரின் எழுத்துக்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. அங்கே ஆரம்பத்தில் சினிமா தியேட்டர் கூட கிடையாது. அப்போது என்னுடைய குவார்ட்டர்ஸில் சிவ கோபாலகிருஷ்ணன் என்ற கவிஞர், வி.வி.சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். சீனிவாசன் நிறையப் படிப்பவர், சிந்தனையாளர். எங்கள் இருவருக்கும் மிக ஆத்மார்த்தமான நட்பு இருந்தது. அவரது பேச்சு, செயல், சிந்தனை எல்லாமுமே மிக வித்தியாசமானதாக இருக்கும். மாலையில் ஒரு 3 மைல் தூரம் நடந்து சென்று, மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு கல்வெட்டில் உட்கார்ந்து ஒருவர் புத்தகம் படிக்க மற்றவர்கள் கேட்போம். இப்படித்தான் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், பெர்னார்ட் ஷா உட்படப் பலரின் புத்தகங்கள் அறிமுகமாகின. Story of Philosophy, 1,2,3 Infinity, Short History of the World போன்று பல புத்தகங்களைப் படித்தோம். இதில் இன்னுமொரு முக்கியமான நண்பர் மிருணாள் காந்தி சக்கரவர்த்தி என்ற வங்காளி.
| இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று இதை வெளியிட்டிருக்கிறீர்கள்? இது மிகவும் அபத்தமான கதையாக இருக்கிறதே! எழுத்தில் வருமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? | |
சில வருடங்களில் ஹிராகுட்டில் தியேட்டர் வந்தது. ரித்விக் கட்டக், ரே போன்றோரின் படங்களை ஹிராகுட்டிலும், சம்பல்பூரிலும் பார்த்தேன். ஒரியா, வாங்காள மொழிகளுக்கு இடையே, தமிழுக்கும் மலையாளத்திற்கும் இருப்பது போல, ஒரு நெருக்கமான உறவு உண்டு. பாட்டு, கூத்து இல்லாமல், காமெடி டிராக் இல்லாமல் நேரடியாகக் கதை சொல்லும் மரபு அங்கே இருந்தது. எல்லாக் கதைகளுமே சரத் சந்திரர், பங்கிம் சந்திரர் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடையது. தமிழ் வாழ்க்கை போலவே வங்காளிகளின் வாழ்க்கையும் பாட்டும், நடனமும் கலந்ததுதான். ஆனால் சினிமாவில் அப்படி வரவில்லையே! சினிமாவை அவர்கள் 'போய்' (boi) என்று சொல்வார்கள். அதற்குப் புத்தகம் என்பது பொருள். 'புத்தகம் பார்க்கப் போகிறேன்' என்று படம் பார்க்கப் போவதைச் சொல்வார்கள்.
ஒருமுறை கல்கத்தா போயிருந்த போது அங்கே விக்டோரியா மெமோரியல் ஹாலில் தாகூர், ஜாமினி ராய் போன்றோரின் ஓவியங்களை முதல் தடவையாகப் பார்த்தேன். ஒரு கண்காட்சியில் எம்.எஃப். ஹூஸைனின் ஓவியங்களைப் பார்த்தேன். அவரது நீலமும், மஞ்சளும் மனதை மயக்குவதாக இருந்தன. நீர்வண்ண ஓவியத்தில் பெரிய மாயங்களைச் செய்வார் கோபால் கோஷ்.
கே: உங்களுடைய அனுபவம் சார்ந்த அறிவு தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் இவ்வளவு விரிவடைந்திருக்குமா?
ப: தற்செயலாக என் முன்னால் வந்து நின்ற பெரிய அனுபவங்கள் அதிகம். அவற்றை நான் தேடிப் போனேன் என்று சொல்ல முடியாது. அங்கே கிடைத்த அனுபவங்கள் இங்கே கிடைக்காது என்று சொல்லலாம். உதாரணமாக, இந்துஸ்தானி சங்கீதம் ஈர்த்த அளவு என்னைக் கர்நாடக சங்கீதம் ஈர்க்கவில்லை. இது மொழியைச் சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் அது மொழியைத் தாண்டியது. ஒன்றரை மணிநேரம் ஸலாமத் அலிகான் பாடுகிறார் என்றால் அவருக்கு வேண்டிய சாகித்யம் இரண்டே இரண்டு வரிகள்தாம். மீதி எல்லாம் இசைதான். ஆனால் அது இங்கே சாத்தியமில்லை இங்கே சாகித்யத்திற்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம். வாத்திய இசையில்கூட இந்தக் கீர்த்தனை என்று சொல்லி வாசிக்கிறார்கள்.
கே: நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது, எப்படி?
பள்ளியிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டேன். ஆனால் என் எழுத்து முதலில் பிரசுரமானது 'எழுத்து' பத்திரிகையில். நான் டெல்லியில் இருந்த காலத்தில் ஒரு வாசிப்பறை இருக்கும். அங்கிருந்த பத்திரிகைகளுக்கு நடுவில் சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிகையைப் பார்த்தேன். அவர் எழுதிய 'மணல் வீடு' கதையை ஏற்கனவே நான் படித்திருந்தேன். அதுபோல க.நா.சு., லா.ச.ரா., ஜானகிராமன், பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமணியன் எழுத்துக்கள் எல்லாம் முன்பே பரிச்சயம். இவர்கள் எல்லாம் எழுத்து பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். நான் சொல்ல வருவதை எல்லாம் இவர்கள் சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் ஆச்சரியம்.
பின் ஜம்முவுக்கு மாற்றல் ஆனது. எனக்கு 'எழுத்து' தவறாமல் வரும். அதில் 'பெரியவன்' என்று ஆர்.சூடாமணி எழுதிய கதை ஒன்று வந்தது. செல்லப்பா அந்தக் கதையைப் பாராட்டி ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். அந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை. உடனே நான் "இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று இதை வெளியிட்டிருக்கிறீர்கள்? இது மிகவும் அபத்தமான கதையாக இருக்கிறதே! எழுத்தில் வருமளவிற்கு இதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டு எழுதினேன். சி.சு. செல்லப்பா அதை பிரசுரம் செய்துவிட்டு, தொடர்ந்து எழுதுமாறு கடிதம் அனுப்பினார். அப்படித் தொடங்கியதுதான் எழுத்துப் பயணம்.
கே: அப்படி நீங்கள் எழுதிய முதல் படைப்பு எது?
ப: எனக்கு விமர்சித்து எழுதலாம் என்று மனசுக்குள் தைரியம் கொடுத்தவர் ரகுநாதன். அவரது கதைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். அவர் ஒரு கட்டுரையில் 'தமிழ்நாட்டுக் கதைகள், நாவல்கள் எல்லாம் காதல், தீபாவளிப் பரிசு என்றிருக்கிறது. வர்க்கப் போராட்டம், பாட்டாளிகள் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சனை என்று மக்களை முன்னெடுத்துச் செல்லும் படைப்புகளை யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள்' என்று எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அவரது 'பஞ்சும் பசியும்' நாவலை முதல் சமூகப் புனர்நிர்மாண நாவல் என்று ஏதோ சொல்லுகிறார்கள். அதன் கதாநாயகன் பாட்டாளி மக்களுக்குத் தலைமை தாங்குகிற ஒரு புரட்சியாளன். அவருக்கு முதலாளியின் மகள்மீது காதல். ஏன் வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? முதலாளியோ ஒரு வில்லன். அது எம்.ஜி.ஆர். பாணி சினிமா கதை. இதைக் கடுமையாக விமர்சித்து நான் எழுத்திற்கு எழுதினேன். செல்லப்பாவும் அதைப் பிரசுரம் செய்து விட்டார். அதனால் ரகுநாதனுக்கு என் மேல் கோபம். "என்ன இருக்குன்னு இதைப் போட்டீங்க" என்று செல்லப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறார். இந்த ரகுநாதன் என் மனதில் இருந்த ரகுநாதன் இல்லை. அதற்குப் பின் நான் எழுதியதுதான் 'பாலையும் வாழையும்'. |
|
கே: அதைப்பற்றிச் சொல்லுங்களேன்!
ப: தமிழ்நாட்டில் எல்லாத் தளங்களிலும், எல்லாக் கலைகளிலும் ஒரு வறட்சி. விமர்சனத்தில் படைப்பாக்கப் பார்வை, ஆற்றல் என்பதே இல்லாத ஒரு வறட்சி. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு நூலுக்கு உரை எழுதினார்களே தவிர, அவர்கள் அதை கிரியேடிவாகப் பார்க்கவில்லை. அதாவது ஏன் என்று பார்க்கவில்லை. நம் பெரிய அறிஞர்கள் வெறும் உரையாசிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். அரும்பத உரையாசிரியரில் இருந்து ஆரம்பித்து பின்னர் வந்த மு.வரதராசன் வரைக்கும். ஆக இது பாலை நிலம் இங்கே வாழைப் பயிருக்கு இடமில்லை என்பதாக எழுதியிருந்தேன். படைப்புத் தளத்தின் எல்லாப் பரப்பும் குறித்த எனது முதல் நெடுங்கட்டுரை அது. எழுத்தில் வெளியானது. 1961ல் என்று நினைக்கிறேன்.
கே: அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
ப: இலங்கையில் நல்ல வரவேற்பு இருந்தது. இங்கே அந்த அளவிற்கு இல்லை.
கே: டெல்லியில் எழுத்தாளர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து...
ப: நான் டெல்லி செல்வதற்கு முன்பாகவே க.நா.சு. 'ஒருநாள்' நாவல் மூலம் எனக்கு அறிமுகமாகியிருந்தார். அது ஒரு அற்புதமான நாவல். அப்போது டெல்லியில் 'Thought' என்று ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் க.நா.சு. எழுதிவந்தார். அவரைச் சந்தித்தேன். எங்களுக்குள் ஒரு நல்ல ஒத்திசைவு இருந்தது. எங்கு சென்றாலும் இருவருமாகத்தான் செல்வோம். பேசுவதெல்லாம் ஒரே இலக்கிய சர்ச்சையாகத் தான் இருக்கும். என்னைவிட எத்தனையோ வயது, அறிவு, படிப்பு எல்லாவற்றிலும் பெரியவர். என்றாலும் என் கருத்துகளுக்குப் பொறுமையாக 'அப்படியும் பார்க்கலாம்' என்றுதான் பதில் சொல்வார்.
அப்போது எனக்கு அசோகமித்திரனோடு கருத்து வேறுபாடு இருந்தது. சண்டை போடாதே என்று க.நா.சு. அறிவுறுத்துவார். அப்படி என்னால் இருக்க முடியவில்லை. தன்னைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்த பி.எஸ். ராமையா மீதும் மிக அன்போடும், மரியாதையோடும் நடந்தவர் க.நா.சு. ஒருவர் தாக்குவதால் தான் அழிந்துவிடப் போவதில்லை. அப்படியாவது அவன் வளரட்டுமே என்ற பெருந்தன்மை கொண்டவர். அப்படி ஒரு மனப்பான்மை தமிழ்நாட்டில் இல்லை. எல்லோரும் சுயம்பிரகாச சுவாமிகளாக மிக உச்சத்தில் இருக்கிறார்கள். இது மோசமான சூழ்நிலை.
செல்லப்பாவும் என்னோடு சண்டை போடுவார், ஆனால் நல்ல நண்பர். நாங்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தால், இவர்களுக்கு ஜென்மப் பகை போலிருக்கிறது என்று நினைப்பர். ஆனால் அவ்வளவு உணர்ச்சிப்பெருக்கோடு ஒரு விஷயத்தை அவர் சொல்கிறார் என்பதுதான் அதற்குப் பொருளே தவிர, கோபத்தில் சொல்கிறார் என்பதல்ல. அவர் மிகவும் கஷ்டப்பட்டவர். மனைவியின் நகைகளை விற்று எழுத்தை நடத்தியவர். எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதவர். கி.வா. ஜகந்நாதன் கலைமகளுக்கு எழுதும்படி கேட்டுக் கொண்டிருந்த போது, செல்லப்பா நிர்தாட்சண்யமாக அதை நிராகரித்தார். எனக்கு அதில் எழுதத் தோணலை என்றார். நா.பா. ஏதாவது புத்தகம் போடுங்கள், சாகித்ய அகாதமிக்காவது முயற்சிக்கலாம் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இவர் அதைச் சட்டை செய்யவில்லை. ஒருமுறை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து விருது கொடுத்தபோது, எனக்கு விருது கொடுக்க நீங்கள் யார் என்று உதறித் தள்ளிவிட்டார். அவருக்கு மிக அதிக பணத்தேவை இருந்தது. ஆனாலும் அனுசரித்துப் போகவில்லை.
கே: ஈழ எழுத்தாளர்களைக் குறித்து நீங்கள் நிறைய எழுதியுள்ளீர்கள். எப்படி சாத்தியமானது?
ப: ஆரம்பகாலம் முதலே என்னுடைய எழுத்துக்கு ஈழத்தில் வாசகர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்கள் பரவலான இலக்கிய வாசிப்பை உடையவர்கள். அங்குள்ள நூல்கள், பத்திரிகைகள் எனக்கு வர ஆரம்பித்தன. டேனியல் போன்றவர்களை அப்படித்தான் எனக்குத் தெரிய வந்தது. படிக்கவும் எனக்குப் பிடித்திருந்தது. சிலரைப் பற்றி எழுதினேன். ஈழ எழுத்தாளர்களைப் பற்றி கொஞ்ச காலம் வரைக்கும் மிக அதிகமாக இங்கே எழுதியது என்றால் அது என்னைத் தவிர வேறு யாருமில்லை.
கைலாசபதியினுடது எல்லாம் யந்திரத்தனமாக, மார்க்ஸியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாக இருக்கும். படிக்கவே கஷ்டமாக இருக்கும். அவரிடம் அதிகாரம், ஆட்சி இருந்ததால் அது செல்லுபடியானது. ஒரு பெண் கவிஞர் - அவர் பின்னால் கொல்லப்பட்டு விட்டார் - சிவரமணி என்பது அவர் பெயர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் அவரது கவிதைகள் எல்லாம் சேர்த்து, தொகுக்கப்பட்டு வெளியானது. மிக நல்ல கவிஞர். பொதுவாக, இலங்கையில் சமகால அனுபவத்தைப் பதிவு செய்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது.
| என் கருத்துக்களுக்கு எதிர்வினையாகக் கருத்துக் கூறாமல் என்னை சாதிப்பெயர் சொல்லித் திட்டியும், அமெரிக்கக் கைக்கூலி என்றும் சிலர் எழுதினார்கள், பேசினார்கள். மற்றவர்களோ, நீ யார் என்னைச் சொல்ல, லட்சோப லட்சம் வாசகர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நீ எதற்கு என்று சொன்னார்கள். | |
கே: எழுத்து வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத அனுபவங்கள், நினைவுகள் பற்றிச் சொல்லுங்களேன்!
ப: 1966-67ல் 'என்லைட்' ஒன்று பத்திரிகை பரோடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. க.நா.சு. என்னை அதில் எழுதச் சொன்னார். சுந்தரராமசாமி, செல்லப்பா, ஆர். சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், ஜெயகாந்தன் என்று வரிசையாக எழுதினேன். ஒருமுறை எம்.வி.வெங்கட்ராமிற்கு அவருடைய போட்டோ கேட்டுக் கடிதம் எழுதினேன். அவர் அப்போது கும்பகோணத்தில் இருந்தார். பின்னர், அவர் தன் நண்பர்களிடம் போட்டோவையும், என் கட்டுரையையும் காட்டியிருக்கிறார். கும்பகோணம் காலேஜில் ஆங்கில பேராசிரியராக இருந்த அவர் நண்பர், 'அவரை விட்டுடாதீங்கய்யா, ரொம்ப நல்லா எழுதறான்' என்று சொல்லியிருக்கிறார். பின் கும்பகோணம் செல்லும் போது எம்.வி. வெங்கட்ராமைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நல்ல நண்பராகி விட்டார்.
ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது தஞ்சை பிரகாஷ், இருளாண்டி, பிரபஞ்சன் ஆகியோரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் சரமாரியாக என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது நான் சர்ச்சைக்குள்ளான ஆள். அதனால் அந்த மூவருக்கும் சிம்பதி அந்தப் பக்கம்தான் இருந்தது. அந்தச் சந்திப்புகுப் பின் எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். அதைப்பற்றிப் பின்னால் இருளாண்டி ஒருமுறை, "உங்களைக் கேள்வி மேல கேள்வி கேட்டு நல்லா மடக்கிப் போட்டுறதுன்னு நினைச்சுதான் வந்தோம். ஆனா வெங்கட்ராம் சொல்லிட்டாரு, 'நான் ஏதும் பேச மாட்டேன். எங்களோட நட்பு வேற மாதிரி. அதுனால நீங்களே பேசிக்குங்கன்னு'. நாங்களும் சரின்னு வந்தோம். ஆனா எந்தத் தயக்கமும் இல்லாமல் நீங்க பேசினது எங்களுக்கு ரொம்ப அபூர்வமா இருந்தது" என்றார்.
கே: உங்கள் விமர்சங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றன?
ப: நாம் ஒரு கருத்தைச் சொன்னால் அதைக் கருத்தாகவே எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே கருத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு கும்பல் சேர்ந்து ஆளை எதிர்க்கிறார்கள். அது மிகமிகத் தவறானது. அதற்கு அவரவர் சார்ந்த கட்சிகள் உதவுகின்றன. உண்மையே இல்லாத விஷயங்களுக்காக, இவர்களும் உண்மையே இல்லாமல் கும்பல் சேர்ந்து, வெற்றுக் கோஷங்கள் எழுப்பி மிரட்டுவதால் மற்றவர்கள் அதற்கு பயப்படுகின்றனர். முதுகெலும்பில்லாத, வன்முறையைக் கண்டு எதிர்க்காமல், அதற்கு உறுதுணையாக இருக்கும் செயல்தான் பாஸிஸம் என்பது. பயிற்றுவிக்கப்பட்ட கும்பல்கள் ஒன்று சேர்ந்து செய்வது. அதை எதிர்க்காமல் கண்டிக்காமல் மௌனமாக இருந்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இந்தக் கள்ள மௌனம் நேர்மையற்றது இல்லையா?
கே: இன்றைய இலக்கியச் சூழல் ஆரோக்கியமானது தானா?
ப: ஆரோக்கியம், ஆரோக்கியமில்லை என்பதைவிட, அவ்வப்பொழுது வருவது வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நமது தேர்வுதான் முக்கியம். என்னைப் பொருத்தவரை எப்போதும் ஒரு படைப்பாளி தனியன்தான். பெரும்பான்மைச் சூழல் அவனுக்கு எதிரானதாகவே இருக்கும். இயல்பாக, அவன் இருக்கும்படிக்கு இருந்தால் அதில் போராட்டங்கள் இருக்காது. சௌகரியங்களுக்காகக் கீழ்ப்படிந்தால், எனக்கு அது கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்திற்காகப் பணிந்தால், அப்போதுதான் அது மனப் போராட்டமாகிறது.
கே: பத்திரிகைச் சூழல் எவ்வாறு உள்ளது?
ப: முன்பெல்லாம் கதை, கட்டுரை என்று நிறைய வரும். ஆனால் தற்போது வெறும் துணுக்குகள்தாம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் மோசமான சினிமாவுக்கு மிக அதிக முக்கியத்துவம். அது பெரிய ஆக்கிரமிப்பாக இருக்கிறது. சினிமா அரசியலைத் தீர்மானிக்கிறது. அரசியல் சினிமாவைத் தீர்மானிக்கிறது. ஒரே விஷச்சூழல் இரண்டு பக்கமும் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு சினிமாவும், சினிமாக்காரர்களுக்கு அரசியலும் அதிகமாக வேண்டியிருக்கிறது. அது ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. அவர்கள் பத்திரிகை என்றில்லாமல் எல்லா ஊடகங்களிலும் விரவியிருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.
கே: படைப்பை விமர்சித்தால், அதை கவனியாமல், விமர்சனம் செய்தவரைக் கடுமையாகச் சாடும் இலக்கியப் போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: என்ன செய்வது, அது மாதிரியான சூழல் இங்கே இருக்கிறது. நான் சில இயக்கங்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கிறேன். அதே போன்று இலக்கியத்தை வியாபாரப்படுத்திய அகிலன், நா.பா. வகையறாக்களைச் சாடி எழுதியிருக்கிறேன். இவர்களெல்லாம் இலக்கியம் என்று சொல்லி வேறு ஏதோ காரியத்தைச் செய்து கொண்டிருந்தவர்கள். அதற்கு எதிர்வினையாகக் கருத்துக் கூறாமல் என்னை சாதிப்பெயர் சொல்லித் திட்டியும், அமெரிக்கக் கைக்கூலி என்றும் சிலர் எழுதினார்கள், பேசினார்கள். மற்றவர்களோ, நீ யார் என்னைச் சொல்ல, லட்சோப லட்சம் வாசகர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நீ எதற்கு என்று சொன்னார்கள். அதாவது பரவாயில்லை. சில இயக்கத்தவர்கள் எனக்கு அமெரிக்காவில் இருந்து மணியார்டர் வருகிறது என்றெல்லாம் சொன்னார்கள். தி.க.சிவசங்கரனும் அவர்களுள் ஒருவர். சிகரம் செந்தில்நாதன் தன்னுடைய பத்திரிகையில் அப்படி எழுதினார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று யாரும் கேட்கவில்லை.
கோவை ஞானி மட்டுமே ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு இவர்கள், 'அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வராமல் நாங்கள் தடுப்போம் இல்லையா?' என்றனர். என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடி போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். இன்னும் நான் அமெரிக்கா போனதில்லை. இந்தத் தகவல்களெல்லாம் நாகர்கோவிலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் வந்திருக்கிறது. அதை எழுதியவர் இப்போதும் இருக்கிறார்.
கே: தற்காலப் படைப்பாளிகளில் தங்கள் மனம் கவர்ந்தவர்கள் என்று யார், யாரைச் சொல்வீர்கள்?
ப: ஜெயமோகன், நாஞ்சில்நாடன், யூமா வாசுகி என்று பலரைச் சொல்லலாம். யூமா வாசுகியின் 'இரத்த உறவு' ஒரு முக்கியமான படைப்பு. படிப்பது இன்பத்துக்காக, பொழுதுபோக்குவதற்காக, சிந்தனையை வளர்ப்பதற்காக என்று ஏதேதோ சொல்வார்கள். ஆனால் இரத்த உறவின் ஒரு வரிகூட உங்களை சந்தோஷப்படுத்தாது. மனதை துக்கப்படுத்தும், பாரமாக்கிவிடும். இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா, இப்படியெல்லாம் பாட்டிகள், அப்பாக்கள் இருப்பார்களா என்று திகைக்க வைக்கும். ஓரிடத்தில் கூட, ஒரு சிறு புன்னகையைக் கூட தராத படைப்பு. குழந்தைகளிடம் கூட ராட்சஸத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்கள். நினைத்துப் பார்க்கவே இயலாத படைப்பு. எப்படி இது சாத்தியமானது?
அதுபோல இமையம். அவருடைய 'செடல்' போன்ற படைப்புகள் முக்கியமானவை. தேவதாசிகளின் வரலாறை மாறுபட்ட கோணத்தில் சொல்வது. ஒரு சின்னப் பெண்ணை பொட்டுக்கட்டி விடுவது, அவள் மாட்டேன் என்று சொல்வது என தலித் இலக்கியத்தில் அது ஒரு மாறுபட்ட படைப்பு. A rebel can be from anywhere, any soceity. இதற்குக் கல்வி வேண்டும், அப்போதுதான் சுதந்திரம் பற்றித் தெரியும் என்பதெல்லாம் கிடையாது. இது மனித சுபாவம். உள்ளுக்குள் இருப்பது. அதை யாரோ ஒருவன் தத்துவமாக எழுதி விட்டுப் போகிறான், அவ்வளவுதான். செடல் எந்தப் பள்ளியில் படித்தாள்? அவளுக்கு எதிர்க்கும் தன்மை எப்படி வந்ததென்று எப்படிச் சொல்ல முடியும்? இது போன்ற படைப்புகள் முக்கியமானவை.
கே: முக்கியமான பெண் படைப்பாளிகள் யார்?
ப: தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, பாமா. சல்மாவின் சில கவிதைகள் செயற்கையாக இருந்தாலும் அவர் எழுதிய 'இரண்டாவது ஜாமங்களின் கதை' ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு. ஒரு சமூகத்து மக்கள் பேசும் வாய்மொழியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இயல்பான படைப்பு. அதுபோல பாமாவின் படைப்புகளையும் சொல்லலாம். எந்த விதமான தியரிகளையும் பின்பற்றாமல், இயல்பாக, வாய்மொழி இலக்கியமாக அவரது படைப்புகள் உள்ளன.
கே: பெண் கவிஞர்கள் அந்தரங்க உடல் மொழியைத் திறந்து பேசுதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: அது வலிந்து சொல்லப்படுவதுதான். இயல்பாக வரக்கூடிய, உள்ளே இருக்கும் ஆதங்கமோ, ஆத்திரமோ, வெளிக்கிளம்பி எரிமலை வெடிக்கிற மாதிரி வெடிக்கக் கூடிய சூழ்நிலையில் தான் நாம் பெண்களை வைத்திருக்கிறோம். அது வேறு விஷயம். ஆனால் இதை எழுதுபவர்கள் உண்மையில், இயல்பாக எந்த மொழியில் சொல்ல வேண்டுமோ அந்த மொழியில் வரவில்லை அது. தேடிச்சென்ற மொழியாக இருக்கிறது. அது செயற்கைதானே! கொத்துக்கடலையில் மசாலா தூவுவது போல. இவை உண்மையான வெளிப்பாடுகளானால் பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசுகிற கூட்டத்தில் போய் அவர்கள் ஏன் சேர வேண்டும்!
கே: விருதுகள் தரப்படும் விதம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இதைப்பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. சமூகம் மாறினால் ஓரளவு இவையெல்லாம் மாறலாம். உஸ்தாத் விலாயத் கான் நீ யார் எனக்கு விருது கொடுக்க என்று கேட்டார். எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை கோட்டூர்புரத்தில் அவர் வசித்த தெருவுக்கு வைக்கலாம் என்று முடிவு செய்தபோது, வேண்டாம், என்னைவிட மூத்த கலைஞர் டி.கே.பட்டம்மாள். அவர் பெயரை வையுங்கள் என்று சொன்னார். அதுபோல ஆந்திராவில் ஓர் எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது டி. சாம்பசிவ ராவ் அதை விளாசித் தள்ளிவிட்டார். சாகித்ய அகாதமியின் பத்திரிகையிலேயே அது வெளியானது. சாம்பசிவ ராவ் சாகித்ய அகாதமியில் பணி செய்தவர். அங்கே வேலை பார்த்துக்கொண்டே, அவர்கள் துறை தேர்ந்தெடுத்துப் பரிசளித்த நூலை எப்படி விமர்சிக்கலாம் என்று பெரிய பிரச்சனை வந்தது. அப்போது சாகித்ய அகாதமியின் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவருக்குப் பிரச்னை ஏற்படாமல் காப்பாற்றினார்.
வயதின் தளர்ச்சி வார்த்தையில் இல்லை. சொல்லில், கருத்தில் வேகம். நெடுநேரம் பல விஷயங்களைப் பற்றி நம்மோடு அளவளாவிய வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியேறினோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
காந்திஜியைப் பார்த்தேன் ஒருமுறை காந்தி எங்கள் ஊருக்கு அருகே உள்ள அம்மையநாயக்கனூருக்கு வருவதாக இருந்தது. உடனே மாமா என்னை அழைத்து, நீ வேண்டுமானால் போய் விட்டுவா என்றார். எனக்கு ஒரே சந்தோஷம், கிளம்பிவிட்டேன். வழியெல்லாம் ஒரே கூட்டம். இத்தனைக்கும் காந்தி அம்மைநாயக்கனூரில் பேசப்போவது கூட இல்லை. வண்டி பிளாட்பாரத்தில் வந்து நின்றது. கதவுக்கு அருகே காந்திஜி நின்று கொண்டிருந்தார். பின்னால் ராஜாஜி. காந்தியைப் பார்த்த மக்கள், என்னவோ திருப்பதி வெங்கடாஜலபதியையே தரிசனம் செய்கிற மாதிரி அப்படியே கையைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டனர். ஒரு பேராற்றல் அவரிடம் இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் ஏதோ பேசினார். கூட்டத்தில் ஒரே பரவசம். ஒல்லியான ஒரு மனிதர், மென்மையான குரலில் பேசிக்கொண்டு, அரையாடைத் துணியுடன் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தார். எல்லோரும் அவர் பெருமையை விதவிதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இவ்வளவு பேரை அவரால் எப்படி ஈர்க்க முடிந்தது என்பது மிகவும் பெரிய விஷயமாக இருந்தது.
வெங்கட் சாமிநாதன்
*****
சுஜாதா "இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்" என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். 'சுஜாதா - தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்' என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டு விட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது. பலபேரைக் கவர்வது வேறு, பலரைக் கவர்வது எது என்று தெரிந்துகொண்டு அதை மட்டுமே செய்வது வேறு. சுஜாதா தனது திறமை மூலம் படைப்பின் மிக உயரிய உச்சத்திற்குச் சென்றிருக்க வேண்டியவர். ஆனால் சமரசங்களின் காரணமாக அவர் அதைச் செய்யாதது நமக்குப் பேரிழப்பு.
வெங்கட் சாமிநாதன்
*****
கண்ணதாசன் கண்ணதாசனை சினிமாவால் கெட்டவர் என்று சொல்லி விடலாம். ஆனால் அவர் மாதிரி தமிழை ஆண்டவர்கள் கிடையாது. தமிழ் அவருடைய நாவிலே விளையாடியது. அவருடைய மூன்றாவது தொகுப்பில் உள்ள மீனாட்சியம்மை பற்றிய பாடல்கள் எல்லாம் அவ்வளவு அற்புதமானவை. தனது மோசமான வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக, அதுபற்றிய எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லும் நெஞ்சுரம் - அது ஒரு பெரிய விஷயம். அவர் ஒரு நல்ல கவிஞர், பாடலாசிரியர்.
வெங்கட் சாமிநாதன்
***** |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|
|