Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
அரக்கர்கள் அனைவருமே தர்மத்துக்குக் கட்டுப்படாதவர்கள்...
- மணி மு.மணிவண்ணன்|நவம்பர் 2004|
Share:
இது தீபாவளிக் காலம். அறத்தைத் தின்று மறத்தைப் பூண்ட கரு நெஞ்ச அரக்கர்கள் என்று கம்பன் பழிக்கும் அரக்கர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடும் காலம். அறத்துக்கும் மறத்துக்கு மான போரில் அறம் வென்றதைக் கொண்டாடும் காலம் என்றும் கொள்ளலாம். அப்போதும் சரி, இப்போதும் சரி, அரக்கர்கள் அனைவருமே தர்மத்துக்குக் கட்டுப்படாதவர்கள் என்று சொல்ல முடியாது. அதே போல் அரக்கர்களை அழித்தவர்களிடம் மறம் இல்லை என்றும் சொல்ல முடியாது.

உலகின் தலை சிறந்த இலக்கியங்களுள் தலையாயது என்று பர்க்கெலித் தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் போற்றும் கம்பன் அறத்துக்கும் மறத்துக்குமான போரைச் சித்தரிப்பதிலும் இதைக் காண்கிறோம். இராவணனின் மாபெரும் போர்த்திறனையும், மறத்தையும், வல்லமையையும், இசைஞானத்தையும், சிவபக்தியையும் கொண்டாடும் கம்பன், பிறன்மனை நோக்காப் பேராண்மை வழுவியதால் இராவணன் வீழ்கிறான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறான். அதே சமயத்தில் இராவணனின் சுற்றத்தாரைக் குறைகளுள்ள ஆனாலும் போற்றத்தக்க மறமுள்ள மாந்தர்களாகச் சித்தரிக்கிறான். அதனால்தான், கும்பகர்ணனும், இந்திரசித்தனும், இராவணனும் படைக்களத்தில் வீழும் காட்சிகளிலும் நாம் அவர்கள் வீரத்தைக் கண்டு மலைக்கிறோம். ஒரு கணமாவது பரிதாபப் படுகிறோம்.

*****


மரணதண்டனையை எப்போதுமே நியாயமாய் வழங்கக்கூடிய நீதிமன்றங்கள், நீதிபதிகள், நீதித்துறைகள் உலகில் அநேகமாக இல்லை. மக்கள் சார்பில் அரசு செய்யும் தனிமனிதக் கொலை மரணதண்டனை. அப்படி மரணதண்டனை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால். யாரால் பொதுமக்கள் நலத்துக்குத் தீங்கு வருமோ, யார் ஈவு இரக்கமின்றிப் பல கொலைகள் செய்திருக்கிறார்களோ, யாரால் திருந்தவே முடியாதோ, அவர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதால், சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால் அதைச் சகித்துக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட கொலைகாரர்கள் வரிசையைச் சார்ந்தவன் சந்தனக் கடத்தல் வீரப்பன். இவன் பெயரை வைத்துப் பிழைத்தவர்கள் பலர். பரபரப்புப் பத்திரிக்கைக்காரர்களிலிருந்து, காவல்துறை, அரசியல்வாதிகள் என்று பலருக்கு இவனால் ஆதாயம். ஏழை மக்களும் இவனால் பயனடைந்திருக்கிறார்கள். அதனால் மட்டும் இவனது கொலை, கொள்ளைகளைச் சமுதாயம் மன்னிக்க முடியாது. தங்கள் கொள்கைகளை இவன் தலையில் ஏற்றி இவனை மாபெரும் தலைவனாகச் சித்தரிக்க முயன்றவர்கள் சிலர். தங்கள் கொள்ளைகளை இவன் தலையில் ஏற்றிப் பிழைத்தவர்கள் வேறு சிலர்.

தீபாவளிக்காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் வதைப்படலம் நடந்திருக்கிறது. அவனைப் பிடித்துக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, விசாரித்துப் பின் மரணதண்டனை கொடுத்திருந்தால் நீதிதேவதை வென்றிருப்பாள். யாரையுமே நம்பாமல், பல ஆண்டுகளாகப் பெரிய பெரிய காவல்துறைத் தலைவர்களை ஏமாற்றி வந்திருந்த இவன், இப்போது சில காவல்துறை உளவாளிகளை நம்பி ஏமாந்தான் என்பதை நம்பவே முடியவில்லை. அதிலும், தோட்டாக்கள் அதிகம் கை வசம் இல்லாமல் வண்டிக்கு அடியில் பதுங்கி இருந்தவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டுமா என்றும் தெரியவில்லை. அவனோடு பல உண்மைகளும் மறைந்தன என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.

*****


மகாபாரதப் போர்க் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால், நாம் எந்தக் கட்சியை ஆதரித்திருப்போம்? அப்போதும் பாதிப் பேராவது துரியோதனனை ஆதரித்திருப்பார்கள். அறவோர்கள்கூட பாஞ்சாலியைத் துகிலுரித்த கயமையைக் கண்டிக்காமல் இருந்திருக்கிறார்கள். பாண்டவர்கள் கட்சியை ஆதரித்தவர்கள்கூட வழவழத் தருமன் தலைமையைப் பற்றி நொந்திருப்பார்கள். பாரதக் கதையைப் படிக்கும்போது புரியாமல் இருந்தது இப்போது வாழ்க்கையில் கண் கூடாகப் பார்க்கும்போது புரிகிறது.

எவ்வளவு படிப்பு இருந்தாலும், பணம் இருந்தாலும், கடவுள் நம்பிக்கை, நல்ல மனம் இருந்தாலும், சிந்திக்கும் திறன் இருந்தாலும், உணர்வுகளாலோ அல்லது வேறு ஏதாலோ உந்தப் பட்டு எது அறம் என்பதே புரியாத குழப்பத்தில் மக்கள் வீழக்கூடும். கருச் சிதைவு பெரும்பாவம், அதை ஆதரிப்பவர்கள் கொடும்பாவிகள் என்று நம்புபவர்கள், வாழும் மனிதர்களுக்கு மருத்துவ வசதியைப் பறிப்பதன் அநீதியைக் காண மறுக்கிறார் கள். மற்றவர்களின் சிறு பொய்களை நேர்மையின்மையின் இலக்கணமாகக் கருதுபவர்கள் தமது பெரும் பொய்களை அரசதந்திரம் என்று போற்றுகிறார்கள். எந்தப் பக்கத்திலும் உத்தமர்கள் இல்லை என்பதால் ஒரு பக்கமும் சாயக்கூடாது என்பது சரியா? இந்த மனித குணங்கள் எல்லாக்காலத்திலும் இருப்பதால்தான் மகாபாரத, இராமாயணக் கதைகள் நம்மை இன்னும் ஈர்க்கின்றன.

*****
1977 இந்தியப் பொதுத்தேர்தல் உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தல். நெருக்கடி நிலைச் சட்டத்தின் கீழ் மக்களாட்சி நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்த அரசு நேர்மையாகத் தேர்தல் நடத்துமா, அப்படி நடத்தினாலும், அரசின் பிரச்சார வலிமை, அதிகாரி களின் மிரட்டல் களைக் கடந்து ஆளுங் கட்சியைத் தோற்கடிக்க முடியுமா என்ற ஐயம் நிலவியது. ஏற்கனவே சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டால் இவர்கள் கொடுங்கோலாட்சியை யாரால் கட்டுப்படுத்த முடியும் என்ற கவலை. இந்திரா காந்தி, சஞ்சய் காந்தியின் தோல்விகளை பி.பி.சி. வானொலி அறிவித்த பிறகும், ஆல் இந்தியா ரேடியோ அறிவிக்க வில்லை. விடிய விடிய வானொலியில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு வெளியே போய்க் கொண்டாடுவதற்கும் பயம். இம்மென்றால் வனவாசம், ஏனென்றால் சிறைவாசம் என்று ஆண்டவர்கள் தோல்வியை ஏற்பார்களோ என்ற ஐயம். நல்ல வேளை, நேர்மையாகத் தேர்தல் நடத்தியது மட்டுமின்றி, மக்கள் தீர்ப்பை ஏற்றுப் பதவி விலகி இந்தியாவின் மக்களாட்சி மரபைக் காப்பாற்றினார் இந்திரா காந்தி.

*****


அமெரிக்கா ஒரு பேரரசாக மாறிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சியின் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்லத் தளர்ந்து கொண்டிருக்கின்றன. கெர்ரி வெற்றி பெற்றாலும் இந்த நிலை மாறும் என்று கூறுவதற்கில்லை. அதிபர் புஷ்ஷின் ஆதரவாளர் சிலர் அவரை சர்வ வல்லமை பொருந்திய, மாட்சிமை மிக்க, தெய்வத்தின் வரம் பெற்ற, அரசனாக மதிக்கிறார்கள். அரசன் தெய்வத்தின் வரம் பெற்றவன், அவன் செய்வது ஏதுமே தவறில்லை என்ற நம்பிக்கையைப் பரப்பி வருகிறார்கள். உலகுக்கே மக்களாட்சியின் மாட்சியைக் காட்டிய அமெரிக்காவும் ஓங்கி உயர்ந்து பின் சரிந்த முந்தைய பேரரசுகளின் அழிவுப் பாதையில் போகிறதோ? உலகின் ஒரே வல்லரசாக இருந்தாலும், ஈராக் என்ற புதைகுழியில் மாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவால் ஏனைய எதிரிகளைச் சமாளிக்க முடியுமா? உள்நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா? அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையைப் பற்றி அஞ்சும் பிற நாடுகள் ஈராக் அதன் வலிமையை உறிஞ்சுவதைப் பார்த்து உள்ளூர ஆறுதல் அடைகின்றன. அமெரிக்காவின் நட்பு நாடுகள்தாம் கவலை கொள்கின்றன.

*****


தென்றல் இந்த தீபாவளிச் சிறப்பிதழோடு 4 ஆண்டு நிறைவு பெறுகிறது. டிசம்பரில் 5 வது ஆண்டு தொடக்கம். ஜனவரி இதழ் 50வது இதழ். இந்த வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் தென்றலை ஆதரிக்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், மற்றும் எழுத்தாளர்கள். இந்த ஆதரவுக்கு ஆசிரியர் குழுவின் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி மற்றும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline