Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
ஊருக்குத்தான் உபதேசமா?
- மணி மு.மணிவண்ணன்|டிசம்பர் 2004|
Share:
ஒரு வழியாக அதிபர் தேர்தல் சென்றமுறைபோல் குழப்பம் ஏதும் இன்றி முடிந்து விட்டது. ஓஹையோ விலும், ·பிளாரிடாவிலும் மற்றும் சில மாநிலங்களிலும் வாக்கு எண்ணுவதில் குளறு படி நடந்திருக்கிறது. இது திட்டமிட்டுச் செய்த சதி என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள். நாடாளுமன்ற அரசு பொறுப்பேற்பு அலுவலகம் (Congressional Government Accountability Office) தேர்தல் குளறுபடிகளை விசாரிக்க இசைந்துள்ளது. வாக்குச்சாவடி வாயில் கணிப்புகள் (Exit Polls) கெர்ரி வெற்றி பெறுவார் என்று ஊகித்தன. தேர்தல் முடிவுகளோ நேர் எதிர். வாயில் கணிப்புகளை வைத்துத் தேர்தல் நேர்மையாக நடந்ததா என்று பார்ப்பது வழக்கம். இப்போது யுக்ரேனில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றியை அமெரிக்கா எதிர்ப்பதே இந்த வாயில் கணிப்பை வைத்துதான். ஊருக்குத்தான் உபதேசமா என்று சிலர் முணுமுணுப்பது தெரிகிறது.

தேர்தல் நியாயமாக நடந்ததா என்று வெளியிலிருந்து குறை சொல்வதற்குப் பதில், தேர்தலை எப்படி நடக்கிறது என்று உள்ளிருந்தே பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். வாக்குச் சாவடி அலுவலுக்கு ஒவ்வொரு தேர்தல் சமயமும் தன்னார்வத் தொண்டர்களைத் தேடுவார்கள். இந்த முறை என் அலுவலகத்திலிருந்தும் இந்த அறிவிப்பு வந்தது மட்டுமல்லாமல், இது போன்ற பொதுத்தொண்டு செய்வதன் தேவையையும் வலியுறுத்தி இருந்தார்கள். உடனே மாவட்டத் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தேன். நான் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் இடமில்லை ஆனால் பக்கத்து ஊர் வாக்குச் சாவடிக்கு ஆள் தேவை, வருகிறீர்களா என்று கேட்டார்கள். ஆஹா, விடுவேனோ!

நாங்கள் வாழும் அலமேடா மாவட்டம் கணினி அட்டையில் ஓட்டை குத்தும் முறையிலிருந்து மாறி தொடுகணினி வாக்குப் பெட்டிக்கு சென்ற ஆளுநர் தேர்தல் சமயத்திலேயே மாறி இருந்தது. இந்த மின் வாக்குப் பெட்டியில் இருக்கும் சிக்கல்களைப் பற்றிப் பல ஆய்வாளர்கள் கட்டுரை படைத்திருக் கிறார்கள். பயிற்சி நேரத்தில் டிபோல்டு அக்யூவோட் டிஎஸ் வாக்குப் பெட்டியை அருகிலிருந்து கவனித்துப் பார்த்தேன். முதல் ஏமாற்றம், அது மைக்ரோ சா·ப்ட் விண்டோஸ் சி.இ.ல் செயல்படும் சாதாரணத் தொடு கணினிதான். அவ்வப்போது தங்கள் கோப்பு களை விண்டோஸில் தொலைத் திருக்கும் வாசகர்கள், இதை நம்பி அதிபர் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்களை உணருவார்கள்.

மேரிலாந்தில் இதே வாக்குப்பெட்டியைப் பற்றிப் பேராசிரியர் ரூபின் எழுதிய கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்த பிழைகள் பலவற்றிற்கு இன்றுவரை தீர்வு இல்லை. இருந்தாலும், கலி·போர்னியா மாநில அரசு, தேர்தலை நடத்தும் முறை மூலம் வாக்குப் பெட்டியில் கள்ள ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க முடியும் என்று அறிவித்திருந்தது. தேர்தல் அலுவலர் பயிற்சிக்கு என்னுடைய வாக்குச் சாவடியிலிருந்து நான் மட்டும் தான் சென்றிருந்தேன். பயிற்சி கட்டாயமில்லை!

என்னுடைய வாக்குச்சாவடி, ஒரு வீட்டின் வண்டிக் கொட்டகையில் (garage)தான். தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை தேர்தல் அலுவலர்கள் சந்தித்தோம். தேர்தல் நடத்தும் முறை பற்றிய சிறிய பயிற்சி நடந்தது. வாக்குப்பெட்டிகளைத் தாங்கிகள் மேல் வைத்து வரிசைப்படுத்தி விட்டு அவற்றை மீண்டும் பூட்டினோம். மொத்தம் ஐந்து அலுவலர்கள். அவர்களில் இருவர் பள்ளி மாணவ மாணவியர். மாணவர்களின் பொறுப்பு வாக்காளர்களை வரவேற்று வாக்காளர் பட்டியலில் கையெழுத்து வாங்கு வதும், எவ்வளவு பேர் வாக்களித்திருக் கிறார்கள் என்று பட்டியலிட்டு வாக்குச் சாவடிக்கு வெளியே அறிவிப்பதும்தான். அலமேடா மாவட்ட வாக்காளர் பட்டியல்களில் வாக்காளர் பெயர்கள், முகவரி, அவர்கள் கட்சி எல்லாமே இருக்கும். இதை யார் வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கலாம். கட்சிக்காரர்கள் வாக்குச் சாவடிக்கு வெளியில் இருக்கும் பட்டியலைப் பார்த்து தங்கள் கட்சிக்காரர்கள் எத்தனை பேர் வாக்களித் திருக்கிறார்கள் என்று கவனித்து, வராதவர்களை அழைத்து வரலாம்.

தேர்தல்நாள் காலை 6 மணிக்கு வாக்குச் சாவடியில் சந்தித்தோம். நவம்பர் மாதக் காலைகள் கலி·போர்னியாவிலும் குளிர் தான். போதாதற்கு சான் ·பிரான்சிஸ்கோ குடாவிலிருந்து சில்லென்ற காற்று வேறு. வாக்குப் பெட்டிகளைத் திறந்து ஒவ்வொன்றையும் முடுக்கி விட்டோம். ஒவ்வொன்றும் மொத்த வாக்குகள் 0 என்று பட்டியலிட்டதை அச்சிட்டு அலுவலர்கள் ஐவரும் கையொப்பமிட்டோம். அறிவிப்புப் பலகைகள், அமெரிக்கக் கொடி, மக்கள் வாக்குரிமைச் சட்ட அறிக்கை எல்லாவற்றையும் முறையான இடத்தில் வைத்து விட்டுச் சரியாக 7 மணிக்குச் சாவடியைத் திறந்தோம்.
தேர்தல்நாள் இங்கு விடுமுறையில்லை. அலுவலுக்குச் செல்லும் அவசரத்திலும் மக்கள் சாரை சாரையாக வந்து வாக்களித்துச் சென்றார்கள். சாவடியின் தலைமை ஆணையர் வாக்களிக்க வந்தவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என்றார். இந்தத் தொகுதியில் கிழக்கு ஆசியர்களும் வெள்ளை அமெரிக்கர் களும் சம அளவில் இருந்தார்கள். பல இந்தியர்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஒரு பஞ்சாபிக் குடும்பம் வாக்களிக்க வந்த போது அவர்கள் கொச்சை ஆங்கிலம் புரியாமல் அலுவலர்கள் விழித்தனர். எனக்கோ பஞ்சாபியோ இந்தியோ தெரியாது. ஓரளவுக்கு அவர்கள் சொன்னதைப் புரிந்து கொண்டு அவர்கள் பெயரை அடையாளம் கண்டு பிடித்து வாக்களிக்க வைத்தேன். சில இந்தியர்கள் தங்கள் பெயர்களை அமெரிக்க உச்சரிப்பில் சொல்லவே எனக்கும் புரியவில்லை, மற்றவர்களுக்கும் புரியவில்லை. ஏஷ் வாரன் என்பது ஈஸ்வரன் என்பது யாருக்குத் தெரியும்! முதன்முறையாக வாக்களிக்க வந்தவர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தனர். உலகை மாற்றும் வாய்ப்பு தங்கள் கையில் இருப்பதாகக் குதித்துக் கொண்டிருந்தனர். அந்த உற்சாகம் என்னையும் தொத்திக் கொண்டது.

வாக்குச்சாவடியில் குளறுபடி நடக்க முடியுமா? எல்லோரும் ஒத்துழைத்தால், எப்படிச் செய்வது என்று தெரிந்திருந்தால் செய்யக் கூடும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அலுவலர்கள் யார் வருவார் என்று கூடத் தெரியாத நிலையில் வாக்குச் சாவடியில் திருட்டுத்தனம் செய்வது கடினம். பயிற்சி யின்மையால் குளறுபடி நடக்கலாம். தேர்தல் விதிகள் புரியாத அலுவலர்களால் சில வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆகலாம். உதாரணமாக, வாக் காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் தற்காலிக வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்த வாக்குச் சீட்டின் உறையில் வாக்காளரின் முழு விவரங்களும் கையெழுத்தோடு இருக்க வேண்டும். சில அலுவலர்கள் கையெழுத்து மட்டும் வாங்கினால் போதும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் சில வாக்குகள் செல்லாத வாக்குகளாக ஆகிவிட்டன.

கட்சிப் பிரதிநிதிகள் யாரும் வந்து எட்டிப் பார்க்கக்கூட இல்லை. 700 வாக்காளர்கள் கொண்ட சாவடிக்கு ஆள் அனுப்பத் தேவை இல்லை என்று எண்ணினார்களோ என்னவோ. வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கையோடு மின் வாக்குப் பெட்டி காட்டிய எண்ணிக்கையையும் ஒப்பிட்டோம். பட்டியலில் இருந்த 60% பேர்தான் வாக்களித்திருந்தார்கள். எங்கள் சாவடியில் கெர்ரி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். பிற்பகலில் வாயில் கணிப்புகளிலும் கெர்ரி முன்னணியில் இருந்தார் என்று எனக்கு ஒழிவு நேரத்தில் செய்தி வந்திருந்தது. நல்ல காலம் பிறக்கிறது என்ற நம்பிக்கையோடு வீட்டுக்குத் திரும்பினேன்.

வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்
Share: