முரண்கள் மங்கலப் பொங்கல்
|
|
அதுவா முக்கியம் |
|
- |ஜனவரி 2004| |
|
|
|
பேருந்தில் அடிக்கடி பர்சைப் பரிசோதித்துக் கொண்டு,
இரயிலில் தூங்காத விழிகளோடு பெட்டிகளைக் கட்டிக் கொண்டு,
வீட்டுமுன் நிறுத்தும் வாகனத்தையும் ஆறுமுறை அசைத்துப் பார்த்து,
இணையத்தில் வங்கிக் கணக்கை நாள்தோறும் வாசித்துப் பார்த்து,
இப்படியே மனிதர்களை நம்பாமல் பூட்டுகளை நம்பியே நடக்கின்ற வாழ்க்கைக்கு மாமூல் வாழ்க்கை என்று நாமமும் இட்டாகி விட்டது.
நாமோ, உறவுகளைப் பலப்படுத்தாமல் இன்னும் கதவுகளைத் தான் பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
******
தீப்பிடித்த திவலைகள்
முன்னோர் செய்த பாவங்கள் உங்கள் தலையில் மூட்டையாய் வந்தமராது.
உங்கள் தலையில் காக்கா எச்சமிட்டால் அதற்காய் கடந்தகாலத் தலைமுறையை காரணம் காட்டலாமா ?
விபத்துக்குக் காரணம் தலைக்கவசமாய் இருக்கலாம் கடந்த தலைமுறையாய் இருக்காது.
நீங்களாய்த்தான் நடக்கிறீர்கள், நீங்களாய்த்தான் நடத்துகிறீர்கள் ஆனால் தவறுகளின் கரங்களுக்கோ முன் ஜென்ம பாவத்தை முன் ஜாமீனாய் கொடுக்கிறீர்கள்.
சூரியன் சுட்டாலும், மழை விட்டாலும் காரணம் தேடி பாட்டனார் புராணங்களைப் புரட்டுகிறீர்கள்.
வீட்டுச் செடியில் வண்டு விழுந்தால் கூட சுடுகாட்டுப் பக்கம் போய் தான் சேதி சேகரிப்பீர்கள் போலிருக்கிதே.
சொல்லுங்கள், நல்லது நடந்தாலும் அல்லது நடந்தாலும் நீங்கள் பொறுப்பாளிகள் இல்லையேல், இந்த வாழ்க்கை எதற்காக ?
முளைக்கப் போகும் தலைமுறையின் முதுகுக்காய் மூட்டைகள் தயாரிக்கவா?
****** |
|
அனுமதிக்கப் படாதவைகள்
வயிறு வளைந்த அம்மியைக் கொத்த கொல்லைப் பக்கமாய் வரும் கொல்லன்,
அவ்வப்போது அவல் சுமந்து வரும் கந்தல் கிழவி,
கூரை கிழிந்த குடைகளுக்கு ஒட்டுப் போட வரும் கூன் கிழவன்,
உடைந்த பக்கெட்டுகளை நெருப்பு ஒத்தடமிட்டு ஒட்டித் தர வரும் தகர டப்பாக் காரன்,
யாரிடமும் கேட்டதில்லை பெயரை.
- சேவியர்
******
சேவியர் கவிதைகள்
சேவியர் தாசையன் ஓர் இளங்கவிஞர். புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழர். கணிதத் துறையிலும், கணினித் துறையிலும் பட்டங்கள் பெற்றவர். ஆனால் தமிழைத் தன் நெஞ்சிலே என்றூம் அகலாமல் தங்க வைத்துக் கொண்டவர். இவருடைய ஏராளமான படைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான இணைய இதழ்கள், சிற்றிதழ் கள், குமுதம், கல்கி போன்ற வணிக இதழ்கள் இவற்றில் வெளியாகியுள்ளன.
சேவியர் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் ஆழமாக, அழுத்தமாக ஆனால் கைகோத்து நின்று சொல்கின்றன. மேடைப் பிரசங்கங்களாக இருந்தால், கவிதைகளுக்குப் பார்வையாளர்கள் மட்டுமே இருப்பார்கள். இவருடைய கவிதைகள் தளிர்க் கரங்களோடு, மேடைகளை விட்டுக் கீழிறங்கி வாசகனின் தோளுரசிக் கொண்டோ, கரம் பிடித்துக் கொண்டோ கூடவே வருகின்றன, ஒரு தோழனைப் போல. அதனால்தான், ஒவ்வொரு கவிதையைப் படித்து முடிக்கும் போதும் மனதுக்குள் கொஞ்சம் அந்நியோன்யம் அதிகமாகிறது. கருத்துக்களைச் சொன்னால் அது கவிதையல்ல என்பவர்கள் தங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றன சேவியரின் கவிதைகள்.
மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் கவிதை என்ற எல்லைகளைக் கடந்து தமிழ்ச் சொல் அழகும், ஆழமான பொருளும், ஓசை நயமும் கொண்டு பழம் நழுவித் தேனில் தோய்ந்து பாலில் விழுவது போல கவிதைகள் வந்து விழுகின்றன. படித்து முடித்ததும் ஒவ்வொரு கவிதை யும் உங்களை விடாது சுற்றிச் சுற்றிக் கருத்துக் குமிழிகளாக வெடித்துக் கொண்டே இருக்கும் அனுபவத்தைக் கண்டுகொள்வீர்கள். கவிதைகள் அழகுணர்ச்சியைத் தூண்டி ரசிக்க வைக்க வேண்டும். அதற்கு அப்பாலும் சென்று படிப்பவரைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கவிதைகள் கட்டியம் கூறும்.
'திருக்குறள் ராம்மோகன்', இயக்குநர், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ. “சேவியர் - கவிதைகள், காவியங்கள்” கவிதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து. |
|
|
More
முரண்கள் மங்கலப் பொங்கல்
|
|
|
|
|
|
|