Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
வானமே எல்லை!
அமெரிக்கப் பொங்கல்
எங்கே போகிறோம்?
- ஆசை ஆசைத்தம்பி|பிப்ரவரி 2004|
Share:
மேல் படிப்பு படிக்கப் போகிறோம்
முனைவர் பட்டம் பெறப்போகிறோம்
என்றெண்ணி விமானம் ஏறினேன்
மனதில் அன்று வந்ததும் அதே வினா
இன்று நிற்பதும் அதே வினா
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

மகன் நல்லபடி ஊர் போய்ச் சேர வேண்டி
கோயிலைச் சுற்றி, கால்வீங்கி அன்னை வருந்திய நேரம்
வயிற்றில் பால்வார்க்க மணியடித்தது. தொலைபேசியில்
'அம்மா'வென்ற குரல் கேட்டு அன்று மெய் சிலிர்த்தாள்
இருபது ஆண்டுகள் கழித்து இன்றும் கேட்கிறாள்
"எப்போது வருகிறாய்?" என்று.
அவளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல்
என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

டாலரை ஏழாலே பெருக்கி ரூபாயாய் மாற்றி
''ஐய்யோ! அவ்வளவா?'' என்று வாய்பிளந்த காலம் போய்
ரூபாயை ஐம்பதால் வகுத்து டாலராய் மாற்றி
"அட! இவ்வளவு தானா?'' என்று கேட்டாலும்
என் மனைவி புதுப்பெண்ணாய் வந்த அன்று
வீட்டினுள்ளே அடைபட்டுக் கிடக்கையிலே
வெளியே போவோமா, தமிழொலி கேட்போமா என ஏங்கிச்
சலிப்புடனே என்னைக் கேட்டதும் அதே வினா:
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

குழந்தை வளர்ப்பில் அனுபவம் இன்றி
தமிழுணவா அயலுணவா என்று வாதித்தோம்
சிரிப்பது போல் நடப்பது போல் புகைப்படங்கள் பலவெடுத்து
அனுப்பிவிட்டோம் அஞ்சலிலே உறவினர்கள் ரசிப்பதற்கு
தலைவலியோ பெரும்பசியோ என்று சொல்லத் தெரியாத
குழந்தை (சிறிது வளர்ந்ததுமே) ஹாலோவின்னும் கிறிஸ்துமஸ்ஸ¤ம்
டிஸ்னிவோர்ல்டும் மிக்கி மெளஸ¤ம் அவன் மனதை ஆட்டி வைக்க
கோடை வரும் வேளையிலே கேட்பதுவும், விடுமுறைக்கு
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

அன்றாடம் இயந்திரம்போல் வாகனங்கள் மத்தியிலே
காலையில் ஒரு மணி மாலையில் ஒரு மணி
அலுவலிலே எட்டு மணி என்றெல்லாம் உழைத்தும்
அயல்நாட்டார் என்று நம்மை ஒதுக்குவரோ என்றெண்ணி
நம்மவரின் துணை நாடி நாம் சென்ற வேளையிலே
போட்டியென்றும் பொறாமையென்றும் நமக்குள்ளே சிக்கல்கள்
நாளும் பல ஏற்பட்டு நாமென்ன செய்தோம் என்று
நடுநடுவே யோசிக்க, மிஞ்சியதும் அதே கேள்வி
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

அயல்நாட்டில் பிறந்திட்ட நம் பிள்ளை குட்டிகள்
தமிழ்மொழியும் பண்பாடும் அழகாகக் கற்கவென்றே
பள்ளிகளும் சங்கங்களும் ஆலயங்களும்
மலிந்துவிட்டன இந்த நாட்டில்
ஆனால் தமிழ்நாட்டில் மேற்கத்தி மோகம் கொண்டு
தமிழென்று நாம் நினைக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே
நுனிநாக்கு ஆங்கிலத்தை தொலைக்காட்சி பரப்புவதை
பொறுக்காத தமிழன்னை தனைத்தானே கேட்பாளோ
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?
அண்ணாந்து பார்க்கின்றாற்போல் ஆறடி வளர்ந்திட்ட
நம் சந்ததிகள் இன்று தாம் இந்தியரா அமெரிக்கரா என
தமக்கென்று அடையாளம் தேடித் தேடி
தவிக்கின்றார் இரு தலைக் கொள்ளி எறும்புகளாய்
அமெரிக்க முறைகள் நமக்கு அன்னியம்தான் என்றாலும்
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவைமட்டும் தானல்லவோ
உயர்பள்ளி முடித்தவுடன் எதிர்கால நோக்கினிலே
அவரெல்லாம் தம்மைத் தாம் கேட்பதுவும்
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

பம்பரமாய் காலம் சுழல, நமக்கும் வயதாகிறது
என்பதனை எடுத்துரைக்கவோ என்னவோ
நம் மனதில் நிறைந்திருக்கும் முதியோர்கள்
ஒருவர் பின்னொருவராய் மறைந்திட்ட செய்தி கேட்டு
நாம் வருந்தும் வேளையிலே நம் நண்பர் அனைவருமாய்
நம்மோடு நம் வீட்டில் மெளனமென்னும் மொழி பேசி
ஆறுதல் அளிக்கும் வேளையிலும்
அவர்கள் மனத்துள்ளும் அலைபாயும் கேள்வி
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

விஞ்ஞானம் படிக்கையிலே சொன்னாரே ஆசிரியர்
ஆராய்ச்சி செய்வதற்கு அடிப்படையே கேள்வியென்று
அறிவுப் பசி போக்கக் கேள்வி தான் உணவென்று
அந்தச் சிறு வயதில் அவ்வளவாய்ப் புரியவில்லை
கணிதப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில்
விடைகள் கிடைப்பது போல் வாழ்க்கை அமைவதில்லை
அடிக்கடி நமை நாமே கேட்டுக் கொள்வோம்
எங்கே போகிறோம்? நாம் எங்கே போகிறோம்?

ஆசை ஆசைத்தம்பி
(செயிண்ட் லூயிஸ், மிசெளரி)
More

வானமே எல்லை!
அமெரிக்கப் பொங்கல்
Share: 




© Copyright 2020 Tamilonline