|
|
|
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும் வழிபாட்டுக் கூடங்களிலும் ஒலிப்பன திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியன. இதில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 30 பாடல்கள். 143 பாடல்களைக் கொண்டது நாச்சியார் திருமொழி. அன்பின் வழியாக அரங்கனை ஆண்டதால் ஆண்டாள் எனவும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனவும் அழைக்கப்படுகிறாள்.
ஆண்டாள் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இது தென்னிந்தியாவில், மதுரைக்கருகில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலும் ஒன்று. இது புராணச் சிறப்பும், வரலாற்றுத் தொன்மையும் கொண்டது.
வேதாரண்யம் விளக்கழகு, மன்னார்குடி மதிலழகு, திருவிடைமருதூர் தெருவழகு, திருவாரூர் தேரழகு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர அழகு என்று கூறுவர். தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் இடம்பெற்றுள்ளது.
ஆலய வரலாறு 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரை ஆண்ட வில்லி என்பவனின் கனவில் திருமால் தோன்றி, ஆலமரத்தடியில் புற்றினால் மூடப்பட்டிருந்த வடபத்ரசாயி விமானத்தை இனம்காட்டியதாகவும், வேடுவ மன்னர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அக் கோயில் பின்னர் பற்பல மன்னர்களால் பலகால கட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. ராஜகோபுரம் பெரியாழ்வாரால் எழுப்பப்பட்டது என்றும், மதுரை வல்லபதேவனால் விரிவுபடுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி விஷ்ணுசித்தன் என்ற இயற்பெயர் கொண்ட அடியவர், இறைவனை 'பல்லாண்டு பல்லாண்டு' என வாழ்த்திப் பாடியதால் பெரியாழ்வாராகப் பெயர் மாற்றம் பெற்றார். கோவில் நந்தவனத்தில் பூப்பறித்து, மாலை கட்டி இறைவனுக்குச் சூட்டி மகிழ்வது அவர் வழக்கம். ஒருநாள் நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் பெண் மகவு ஒன்றைக் கண்டு, அதற்கு ‘கோதை' என பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்.
| பெரியாழ்வார் கனவில் மாலவன் தோன்றி, ‘கோதை சூடித் தந்த மாலையே தமக்கு உகந்தது, கோதையே தமக்குத் தகுந்தவள்' என்று கூற, பெரியாழ்வார் அகமகிழ்ந்தார். | |
ஞானத் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த கோதையின் மனம் மாலவனையே மணக்க உறுதி பூண்டது. தந்தை இறைவர்க்குக் கட்டிய மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்தது கண்டு மனம் வருந்திய பெரியாழ்வார் கனவில் மாலவன் தோன்றி, ‘கோதை சூடித் தந்த மாலையே தமக்கு உகந்தது, கோதையே தமக்குத் தகுந்தவள்' என்று கூற, பெரியாழ்வார் அகமகிழ்ந்தார்.
ஆண்டாள், தான் கனாக்கண்டபடி காத்திருந்தாள் கண்ணனை மணம் புரிவதற்காக. பின் அரங்கன் ஆணைகேட்டு பெரியாழ்வார் ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்துச் சென்றார். ஆண்டவன் சன்னதியில் திருப்பாவை சொல்லி திருமாலோடு ஜோதியாகக் கலந்த ஆண்டாள், ஸ்ரீ கோதை நாச்சியார் ஆனாள். |
|
தரிசனம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுர வாசலில் இருந்து உள் நுழைந்தால் இடப்புறம் நம்மை வரவேற்பது நம்மாழ்வார், இராமானுஜர், பெரியாழ்வார் சன்னதி. அடித்தளம், மேல்தளம் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட கோவில். கீழ்த்தளத்தில் லக்ஷ்மி நரசிம்மர். மாடி ஏறினால் மகாமண்டபத்தில் கருடாழ்வார். அதனை ஒட்டி கோபால விலாசம் எனும் பகல்பத்து மண்டபம். மேல் தள கர்ப்பகிருஹத்தில் மூலவர் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் கருவறைக்கு மூன்று வாசல்கள் உள்ளன. மார்கழி நீராட்டலின் போது மூன்று வாசல்களும் திறந்திருக்கும். அடுத்து மேற்கு நோக்கி ஆண்டாள் கோவிலின் முகப்பு. அதைத் தாண்டி இருபுறம் கடைகள். அடுத்து திருக்கல்யாண மண்டபம். ராமாயண ஓவியங்கள் விதானத்தில் காட்சி தருகின்றன. தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. வருடம்தோறும் பங்குனி மாதத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அடுத்து கொடிமர மண்டபம். கொடி மரத்தின் வடபுறம் கண்ணாடி மாளிகை. தென்புறம் கஜலக்ஷ்மி கோயில். உள்புரத்தில் பெரியாழ்வார் வழிபட்ட லட்சுமி நாராயணர் சன்னதி. பிரகாரம் சுற்றி வந்தால் 108 வைணவத் தலங்களை வண்ண ஓவியங்களாகக் காணலாம். அடுத்து அர்த்த மண்டபம். வாயிலில் இரு துவார பாலகர்கள். உள்ளே பொன் அரியணையில் செங்கோல் ஏந்திய ரங்கமன்னார். அருகில் கிளியுடன் கூடிய ஆண்டாள். கை கூப்பிய நிலையில் கருடாழ்வார். கருவறையின் மேலே உள்ள விமானத்தில் திருப்பாவையின் 30 பாடல்களையும் விளக்கும் வகையில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இது திருப்பாவை விமானம் என்றழைக்கப்படுகிறது.
அடுத்து சக்கரத்தாழ்வார் கோவில், ஆண்டாள் திருப்பூர நந்தவனம். துளசி மாட நந்தவனம். நடுவில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் திருப்பாவை முழுவதும் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் துறுதுறு பார்வையுடன் ஆண்டாள். ஒவ்வொரு மாதமும் தான் பிறந்த பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் இங்கே எழுந்தருளுகிறார்.
பதினைந்து வயதே நிரம்பிய ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்களில் ஆழ்ந்த நயமும், பக்திச்சுவையும், உபநிஷத், வேதாந்தங்களின் ஆழ்ந்த கருத்துக்களும் காணப்படுகின்றன. நோன்பின் சிறப்பும் கண்ணனின் பெருமையும் பாடல்களில் சுட்டப்படுகிறது. ராமாயணம் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது என்பது போல மார்கழி மாதத்தில் திருப்பாவை பற்றிய பிரசங்கங்கள் பல அறிஞர்களால், பல மொழிகளில் விவரிக்கப்படும் போது கேட்கக் கேட்க அலுக்காததாகவே உள்ளது.
ஆண்டாள் திருப்பாவை பாராயணம் செய்யப்படுவதால் திருமண வயதுள்ளவர்களுக்கு திருமணம் கைகூடி வருவதுடன், இல்வாழ்வும் சிறக்கும் என்பது நம்பிக்கை.
சீதா துரைராஜ் |
|
|
|
|
|
|
|