Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சமயம்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
- |டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeதெய்வ மணம் கமழும் தமிழ்நாட்டின் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்று, குரு பரிகாரத் தலமாக விளங்கும் ‘திரு இரும்பூளை' என அழைக்கப்படும் ஆலங்குடி ஆகும். கும்பகோணம் மன்னார்குடி சாலையில் 17வது கிலோமீட்டரிலும், வலங்கைமான் அருகே உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 7 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றாலும் சிறப்புப் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற 127 தலங்களில் 98வது தலமாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்தில் குடிகொண்டுள்ள இறைவன் பெயர் காசி ஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்.

இறைவியின் பெயர் ஏலவார் குழலி, உமையம்மை. விசேட மூர்த்தி - ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி.

நவக்கிரகங்களில் குரு பகவான் தேவ குருவாகக் கருதப்படுகிறார். இவர் பார்வையால் அனைத்து தோஷங்களும் நீங்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது இவர் சிறப்பை விளக்கும்.

ஆபத்திலிருந்து காப்பாற்றியதனால் ஆபத்சகாயேஸ்வரர் என்றும், ஆலமாகிய விஷத்தை உண்டு அருள் புரிந்ததால் இவ்வூருக்கு ‘ஆலங்குடி' என்றும் பெயர் வந்தது
தலம்:
காசி ஆரண்யம், திரு இரும்பூளை, ஆலங்குடி என்பன இத்தலத்தின் பெயர்கள். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தினால் அவதியுற்று, இறைவனை வேண்ட, ஈசன் அத்திரண்ட விஷத்தைப் பெருங் கருணையினாலே தாமே உட்கொண்டு நீலகண்டனாகி, தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியருளினார். ஆபத்திலிருந்து காப்பாற்றியதனால் ஆபத்சகாயேஸ்வரர் என்றும், ஆலமாகிய விஷத்தை உண்டு அருள் புரிந்ததால் இவ்வூருக்கு ‘ஆலங்குடி' என்றும் பெயர் வந்தது. இவ்வூரில் அரவு தீண்டி மரித்தவர் யாரும் இல்லை என்பது இதன் மற்றொரு சிறப்பு.

தீர்த்தம்:
ஆலயத்தைச் சுற்றி உள்ள கிராமங்களிலும், ஆலயத்திலுமாக மொத்தம் இங்கு பதினைந்து தீர்த்தங்கள் உண்டு. குறிப்பாக பிரம்ம தீர்த்தம், அமுத புஷ்கரணி, (ஆலயத்தைச் சுற்றி அகழியாக உள்ளது) ஞானக் கூபக் கிணறு (மகா மண்டபத்தில் திருமஞ்சக் கேணியாக உள்ளது) ஆகியவற்றைச் சொல்லலாம். துலா மாதத்தில் கிழக்கில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு, அத் தீர்த்தத்தினால் இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் படுகிறது.

மூர்த்தி:
ஆலயம், ஊரின் நடுவே உயரமான மதில்களாலும், தாமரை பூத்த அகழியாலும் சூழ்ந்து ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் மிக அழகாகக் காட்சி அளிக்கிறது. தெற்குக் கோபுரத்தில் பழமையான சிற்பங்கள் நிறைந்துள்ளன. ஆலய வாயிலில் நுழைந்ததும் கலங்காமல் காத்த விநாயகர் சன்னதி உள்ளது. கஜமுகாசுரனால் தேவர்களுக்கேற்பட்ட இடுக்கண்களைக் களைந்து காத்தலால் இவர் 'கலங்காமல் காத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
இந்திரன் முதலான அஷ்டதிக் பாலகர்கள் இறைவனை வழிபட்டுத் தம் பெயரால் தீர்த்தமும் சிவலிங்கமும் நிறுவி தமக்கேற்பட்ட இடர்பாடுகள் நீங்கி பேறு பெற்றார்கள். ஆதி சங்கரர் குருமூர்த்தியைத் தரிசித்து சிவஞானம் பெற்றார்.
அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிரகாரம். எதிரே தெற்கு நோக்கி அம்பாள் சன்னதி. மகா மண்டப வாயிலில் துவார பாலகர். கருவறையில் கிழக்கு நோக்கி ஆபத்சகாயரும் தெற்குப் பக்கத்தில் கணபதியும், அடுத்து தலத்தின் சிறப்பு மூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

இங்கே இந்திரன் முதலான அஷ்டதிக் பாலகர்கள் இறைவனை வழிபட்டுத் தம் பெயரால் தீர்த்தமும் சிவலிங்கமும் நிறுவி தமக்கேற்பட்ட இடர்பாடுகள் நீங்கி பேறு பெற்றார்கள். ஆதி சங்கரர் குருமூர்த்தியைத் தரிசித்து சிவஞானம் பெற்றார். முசுகுந்தச் சக்கரவர்த்தி, சுவாசனன் என்ற அரசன் இத்தலத்து இறைவனை வணங்கி பாவம் நீங்கப் பெற்றனர்.

கைலாயத்தில் பார்வதி அம்மை தோழியருடன் பந்தாடிய போது உயரே போன பந்தைப் பிடிக்க கையைத் தூக்கி எதிர்பார்த்து நிற்கும் போது, வானவீதியில் சென்ற சூரியன் தன்னை நிற்கச் சொல்வதாக நினைத்துத் தேரை நிறுத்த, தொழில் தடைப்பட்டு உலகம் அவதியுற்று சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவர் வெகுண்டு சாபமிட்டதால் பார்வதியம்மை, பூலோகத்தில் காசியாரண்யத்தில் அவதரித்து, இறைவனை நோக்கித் தவம் செய்து சாபம் நீங்கி, சிவபெருமானை மணந்து கொண்டார் என்பது வரலாறு.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், பல தலங்களைத் தரிசித்துவிட்டு அகத்திய காவேரி எனும் வெட்டாற்றின் வெள்ளப் பெருக்கினால் அடியார்களுடன் கரையில் கலங்கி நிற்க, இறைவன் ஓடக்காரனாக வந்து இக்கரைக்கு எடுத்துச் செல்வதாக பவுன்கள் பெற்று முதலில் சிவனடியார்கள் சிலரைக் கரை சேர்த்தார். மீண்டும் இக்கரை வந்து மீண்டும் சுந்தரரிடம் சன்மானம் பெற்று, அவரை ஏற்றி வந்தார். நடு ஆற்றில் சிவபெருமான திருவிளையாடலாக சுழல் ஏற்படுத்தி துடுப்பை நழுவவிட்டுப் பின் எடுப்பதுபோல் பாசாங்கு செய்யவும், படகில் நாயனார் சிவபெருமானைத் துதிக்க, சிறிது தூரம் சென்று படகு பாறையில் மோதி நொறுங்கியது. பின் சிவபெருமான் ரிஷபாரூடராக சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் காட்சி அளித்தார் என்பது வரலாறு. சுந்தரர் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு ஞானோபதேசம் பெற்றார்.

குருவாரத்தில் இத்தலத்தில் உள்ள குருமூர்த்தியை வழிபடுவோர்க்கு சிவஞானம் எளிதில் கைகூடும் என்பர். பிரதி வருஷம் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் குருப்பெயர்ச்சித் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று நடக்க இருக்கிறது. லக்ஷார்ச்சனை, விசேஷ அலங்காரம், ஆராதனை போன்றவை அன்றைய தினம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கின்றனர். சிலர் பிரார்த்தனை செய்துகொண்டு கால்நடையாகவே வந்து தரிசனம் செய்கின்றனர். 27 பிட்சாடனம் செய்து, 9 தீபம் ஏற்றி வழிபட்டால் சகல காரியமும் கைகூடும் என்பது ஐதீகம். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகி வருவதால் உள் பிரகாரத்தில் இடம் போதாமல் வெளிப்பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடவும் கோவிலில் வசதி செய்துள்ளனர்.

சீதா துரைராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline