Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சமயம்
பிரான்மலை
- ஸ்ரீவித்யா ரமணன்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeமூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. புரவலர்களாலும் புலவர்களாலும் ஆராதிக்கப்பெற்ற அக்கோயில்களுள் சிறப்பானதாக விளங்குவது திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும் பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்ற நாதர் ஆலயமாகும். புதுக்கோட்டை-சிங்கம்புணரி செல்லும் சாலையில் மேலைச்சிவபுரி அருகே அமைந்துள்ளது இத்தலம். மதுரையிலிருந்து பொன்னமராவதி, சிங்கம்புணரி வழியாக திண்டுக்கல் செல்லும் பேருந்துகளிலும் இத் திருத்தலத்திற்கு வரலாம்.

கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. இன்று காலப்போக்கில் மருவி ‘பிரான்மலை' ஆகிவிட்டது.

ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான்
பாண்டி நாட்டின் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பதினான்கினுள் ஐந்தாவது தலம் திருக்கொடுங்குன்றம். திருஞானசம்பந்தர் கொடுங்குன்ற நாதரை,

வானிற் பொலிவெய்தும் மழைமேகம் கிழித்தோடிக்
கூனற் பிறை சேரும் குளிர்சாரல் கொடுங்குன்றம்

ஆனிற்பொலிவைந்தும் அமர்ந்தாடி உலகேத்தத்
தேனிற்பொலி மொழியாளுடன் மேயான் திருநகரே

என்று புகழ்ந்து பாடியிருக்கிறார்.

ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். ஆகாயப்பகுதியான உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இறைவன் உமாமகேஸ்வரர் என்றும் இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். சந்தனம், புனுகு தைலக் காப்பிட்டு, அபிஷேகம், ஆராதனை செய்து இவரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும், திருமணத் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.

தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க, இறைவன் மங்கையொரு பாகனாகக் காட்சி அளித்த பல தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அழகான சிற்ப வேலைப்படுகளுடன் கூடிய குடைவரைக் கோயில் இது.
Click Here Enlargeபூமிப்பகுதியில் மிக முக்கியமான சன்னதியாய் விளங்குவது பைரவர் சன்னதியாகும். இங்குள்ள பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளியிருக்கிறார். வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் எனத் திகழ்கின்றது பைரவர் கோயில். தெற்கு நோக்கிய சன்னதி. பைரவர் சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றார். நின்ற திருக்கோலம். சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. பண்டை அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமாக வாள் சார்த்தி வைக்கப்பட்டுள்ளதாம். பைரவருக்கு வலப்புறம் உள்ள சன்னதியில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். வடுக பைரவர் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி சன்னதிகளும் உள்ளன.

முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்தினான். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவர் ஆகும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் களைபவர் இத் தலத்து பைரவர். கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து இவரிடம் வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அடுத்து கீழே உள்ள பகுதியில் கிழக்குப் பார்த்து கொடுங்குன்ற நாதர் உக்ரகிரீஸ்வரராக எழுந்தருளியிருக்கின்றார். அம்பாள் தேனிற் பொலிமொழியாள் என்றும் அமிர்தேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். நின்ற திருக்கோலம். அபய ஹஸ்தம். மேற்குப் பார்த்த தனிக் கோயிலில் வள்ளி தெய்வயானை உடனிருக்க சுப்பிரமணியர் யானை வாகனத்தில் காட்சி அளிக்கின்றார். அருணகிரிநாதரும் இத்தலத்து முருகனை, 'அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் கண்களாலே' என்றும், 'எதிர்பொருது கவிகடின கச்சுக்களும்பொருது குத்தித் திறந்துமலை' என்றும் சிறப்பாக விவரித்துப் பாடியுள்ளார்.

மலை மேலே காரண ஆகம முறையிலும், கீழே காமிக ஆகம முறையிலும் பூஜைகள் நடைபெறுவது இத்தலத்தின் விசேஷம். தலவிருட்சம் உறங்காப்புளி மரம் என்றும் பெயரில்லா மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுகாறும் இம்மரத்தை என்ன பெயர், எந்த வகையைச் சார்ந்தது என்பதை யாராலும் அறிந்து கொள்ளமுடியாததால் இதனை 'பெயரில்லா மரம்' என்று அழைக்கின்றனர். தீர்த்தம் தேனாழி தீர்த்தம். மகோதர மகரிஷி, ஆதிசேஷன், பிரம்மா, சரஸ்வதி, சுப்ரமண்யர், நந்தி ஆகியோர் வந்து வழிபட்டு அருள் பெற்றிருக்கின்றனர்.

மலையடிவாரத்தில் கோயிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது. அதனை அடுத்துள்ள ராஜா மண்டபத்தைக் கடந்து, விநாயகரை வழிபட்டுப்பின் உச்சிக் கோயில், இடைக்கோயில், அடுத்து அடிவாரக் கோயில் என வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. சித்திரை மாதத்தில் பெருவிழாவும், தை மாதத்தில் பைரவருக்கு சிறப்பு விழாவும் நடைபெறுகின்றது. ஆலயத்தில் குலசேகரன் பாண்டியன் காலத்துப் பழைமையான பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

ஏறுவதற்கு மிகவும் அரியமலை என்பதாலும், கொடிய பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் இது கொடுங்குன்றம் என்றழைக்கப்படுகின்றது. அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு சுமார் ஐந்து கி.மீ. நடக்க வேண்டும். செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் படிக்கட்டுகள் இல்லை. சித்தர்கள் பலர் இன்னமும் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. மலையுச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சமாதியும் (தர்கா) உள்ளது. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.

ஸ்ரீவித்யா ரமணன்
மேலும் படங்களுக்கு
Share: 
© Copyright 2020 Tamilonline