Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சமயம்
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சென்னிமலை
- சீதா துரைராஜ்|ஜூலை 2023|
Share:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் உள்ளது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி; தண்டாயுதபாணி. அம்பாள்: அமிர்தவல்லி, சுந்தரவல்லி. தலவிருட்சம்: புளியமரம். தீர்த்தம்: மாமாங்கம். ஆகமம்: காரண காமிக ஆகமம். தலத்தின் புராணப் பெயர்: புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி.

தலப்பெருமை
கந்தசஷ்டி கவச அரங்கேற்றம் நடந்த திருத்தலம் இது. இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் நிகழ்ந்த தலம். மலை மீதுள்ள கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் எடுத்துச் செல்லப்படுவது இந்தத் தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வறட்சியான கோடை காலத்தில், மழை இல்லாத நேரத்தில், மலைக் கோயிலுக்குத் தென்புறம் உள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரெனப் பொங்கி எழுந்து ஓடிய மாமாங்க தீர்த்தம் அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பு. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரைத் திருமணம் செய்துகொள்ள அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்து, தனிப்பெரும் கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது ஒரு சிறப்பு. இவை யாவும் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது மற்றுமொரு சிறப்பு.

அருணகிரிநாதருக்கு முருகன் படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்துக்கொண்ட தலம். அக்னிஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள மூர்த்தி) சுப்பிரமணியர் வேறு எங்கும் இல்லை. புண்ணாக்குச் சித்தர் குகை மலைமேல் உள்ளது. அம்பாள் சன்னதியில் இருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான புண்ணாக்குச் சித்தர் கோயில், வேல்கள் நிறைந்து வேல் கூட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவண மாமுனியின் சமாதிக் கோயிலும் உள்ளது. இங்கு விநாயகர் திருச்சந்தி விநாயகராகக் காட்சி தருகிறார்.



ஆலயச் சிறப்பு
இக்கோவிலில் பிரதான தெய்வமான முருகனை, செவ்வாய் கிரகத்திற்குச் சமன் செய்து, மீதமுள்ள எட்டு கிரகங்களும் இறைவனை முழுமையாகச் சுற்றி வருகின்றன. இங்குள்ள பிரதான தெய்வத்தை வலம்வந்து வழிபட்டால் நவக்கிரகங்களை வலம்வந்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

கோவிலுக்குப் பின்னால் மேலே சென்றால் வள்ளி, தெய்வானை கோவில் உள்ளது. முருகப்பெருமானை அடைவதற்காக அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயரில் அவர்கள் அங்கு தவம் செய்து வருகின்றனர். வள்ளிக்கும், தெய்வயானைக்கும் தனித் தனிக் கோவில் இக்கோவிலின் சிறப்பாகும். இக்கோவிலில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது விசேடம். பலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து கோயில் வளாகத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி தினத்தில் மிகுந்த விமரிசையாகப் பூஜைகள் நடக்கின்றன.

'கந்த சஷ்டிக் கவசம்' இந்த கோவிலில்தான் முதன் முதலில் பால தேவராய சுவாமிகளால் உலகுக்கு வழங்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை பல பக்தர்களுக்குப் பாராயண தோத்திரமாக அமைந்து வாழ்க்கையை உயர்த்தி வருகிறது.

புதிய வீடு கட்டுவது, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்ற எந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்தாலும் இங்குள்ள இறைவனிடம் அனுமதி கேட்டுச் செயல்படுவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து சிரசப்பூ பிரசாதம் வழங்குகின்றனர்.

பகலிரவினிற் றடுமாறா
பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுரைத் தநுபூதி
ரதநிலைதனைத் தருவாயே
இகபரமதற் கிறையோனே
இயலிசையின்முத் தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே
சரவணபவப் பெருமாளே!

(சென்னிமலை திருப்புகழ்)
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline