Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சமயம்
பிரம்மதேசம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், பிரம்மதேசம்
- சீதா துரைராஜ்|ஜூன் 2023|
Share:
ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று பலவகை சிறப்புகளும் பெற்றது. மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர். அம்பாள்: ஸ்ரீ பிருஹந்நாயகி, ஸ்ரீ பெரியநாயகி. தல விருட்சம்: இலந்தை. தீர்த்தம்: பிரம்மதீர்த்தம். ஆகம பூஜை: காமீகம்.

தலச்சிறப்பு
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். தட்சிணாயன புண்ணிய காலத்திலும், உத்தராயண புண்ணிய காலத்திலும் சூரியன், சுயம்புத் திருமேனியின்மீது ஒளிக் கிரணங்களைப் பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. கோயில் ராஜகோபுரத்தின் முழு நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது மற்றுமொரு சிறப்பு. இதில் உள்ள ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாக உள்ளன.

திருக்கோவிலின் தல விருட்சமான இலந்தை மரம் தனிச் சன்னிதியில் உள்ளது. இதன் அடியில்தான் சுவாமி சுயம்பு மூர்த்தியாக உரோமச முனிவருக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அருளினார். இங்கு ஆதியில் தோன்றிய இலந்தையடி நாதர் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. இவரை அர்ச்சித்து வழிபட்டால் இழந்த பொருளை மீண்டும் பெறுவர் என்பது ஐதீகம்.

கோயில் பிரகாரத்தில் அம்பாள், காசிவிஸ்வநாதர், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளிலும், தூண்களில் அர்த்தநாரீஸ்வரர், வாலி, சிவன், சுக்ரீவன், மன்மதன், ரதி ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

நவகைலாயங்களில் 'ஆதிகைலாயம்' எனப்படும் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னிதி யில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார். 'அயனீஸ்வரம்' (அயன் - பிரம்மன்; வரம் - தேசம்) என்றும், பிற்காலத்தில் நான்மறை ஓதிய அந்தணர்களுக்கு இவ்வூரை ராஜராஜ சோழன் தானமாக வழங்கியதால் 'ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது.இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் சோழர் காலத்திலும், மர வேலைப்பாடுகள் சேரர் காலத்திலும், மண்டப வேலைப்பாடுகள் பாண்டியர் காலத்திலும், மதிற்சுவர் பணிகள் நாயக்க மன்னர் காலத்திலும் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலின் ராஜகோபுர திருநடைக் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், அக்காலத்தில் அன்னியர் படையெடுப்பின்போது இக்கோவிலுக்குள் தஞ்சம் புகும் மக்கள், கோவில் நடைக் கதவுகளை அடைத்து விடுவர். இத்திருக்கோவில் மதிற்சுவர்களும் அந்நியர்கள் படையெடுத்து வருவதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தூண்களில் இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கும் இராமயண சிற்பம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இராமன் ஒரு தூணிலும், போர் புரியும் வாலி-சுக்ரீவன் மற்றொரு தூணிலும் இருக்கின்றனர். ராமன் இருக்கும் தூண் அருகே நின்றால் வாலி-சுக்ரீவன் தெரியும்படியும், வாலி-சுக்ரீவன் இருக்கும் தூண் அருகே நின்றால் ராமர் தெரியாதபடியும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் கிட்ட, வியாபாரம் சிறக்க, குடும்ப ஐஸ்வர்யம் பெருக, கல்வியில் சிறக்க, தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தித்துக் கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்கின்றனர்.

ஆலயத் திருவிழாக்களாக சித்திரைப்பிறப்பு, வைகாசிவிசாகம், ஆனியில் நடராஜர் அபிஷேகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாலயம், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

தேவார வைப்புப் பாடல் பெற்றது இத்தலம். இதனை அப்பர் பெருமான் கீழே காணப்படும் பாடலில் அயனீச்சுரம் எனக் குறிப்பிட்டுள்ளர்.

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே

- அப்பர் தேவாரம் (திருமுறை 6, பதிகம் 71, பாடல் 8)
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline