Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சமயம்
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலயம்
- சீதா துரைராஜ்|அக்டோபர் 2022|
Share:
தமிழ்நாட்டில், திருவாரூர், நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில், பூவனூரில் இறங்கி, பாமினி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

இக்கோயில் ராஜகோபுரம், திருச்சுற்று, மூலவர் கருவறை உள்ளிட்டவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவராக லிங்கத் திருமேனியில் சதுரங்க வல்லபநாதர் உள்ளார். மூலவரின் வலப்புறத்தில் தியாகராஜர் சன்னிதி உள்ளது. மூலவரின் இடப்புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது.

கோயிலுக்கு எதிரே குளம் உள்ளது. கோயிலின் வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது, அடுத்தடுத்துக் கொடிமரம், பலிபீடம் ஆகியன உள்ளன.

தலப் பெருமை
கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலைக்கு அடுத்ததாக இங்குதான் சாமுண்டீஸ்வரி கோயில் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். சாமுண்டீஸ்வரி இங்கு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். கோயிலின் வலப்புறம் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் உள்ளார். அந்தச் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது.

இச்சன்னிதி முன்மண்டபம், கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எலிக்கடி மற்றும் பிற கடிகளால் பாதிக்கப்பட்டுத் துன்புறுவோர், ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில், கையில் வேர் கட்டிக்கொண்டு கோயிலின் முன்பாக அமைந்துள்ள பாற்குளம் என்ற பெயர்கொண்ட தீர்த்தத்தில் நீராடிப் பலன் பெறுகின்றனர்.

கோயிலின் இடப்புறத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. அதை ஒட்டி அடுத்ததாகக் கற்பகவல்லி அம்மன் சன்னிதி உள்ளது அதுவும் தெற்கு நோக்கியே உள்ளது. இரு சன்னிதிகளும் தனித்தனியாக கருவறை, விமானம் ஆகியவற்றோடு அமைந்துள்ளன.



மூலவரை வணங்கிவிட்டுப் பிராகாரத்தில் வரும்போது, அங்கு பிரதான விநாயகர், லக்ஷ்மி நாராயணர், காசி விசுவநாதர் விசாலாட்சி (அவர்களுக்கு முன்பாக) நந்தி, பலிபீடம், கால பைரவர், பசுபதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவக்கிரகம் ஆகிய சன்னிதிகளைக் காணமுடியும். அதே திருச்சுற்றில் சாஸ்தா, சம்பந்தர், மாணிக்கவாசகர், நாகர், திருநாவுக்கரசர், கோதண்டராமர், வசுசேன மன்னர், விசேஷ லிங்கம், அகத்தியர், ஐயனார், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பிக்ஷாடனர் ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியில் உள்ளார்.

மூலவரான சதுரங்க வல்லபநாதர் சன்னிதியின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய நிலையில் அண்ணாமலையார் உள்ளனர். அண்ணாமைலையாரின் வலப்புறத்தில் விஷ்ணு உள்ளார். இடப்புறத்தில் பிரம்மா உள்ளார். கோஷ்டத்தில் வடக்கு நோக்கிய நிலையில் அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.

இத்தலத்தில் சுகப்பிரம்ம மகரிஷி மலர்வனம் வைத்து வழிபட்டார் என்பது ஐதீகம். வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை, சதுரங்கப் போட்டியில் இறைவன் வெற்றிகொண்டு மணந்ததால் இத்தல இறைவனுக்கு 'சதுரங்க வல்லபேசுவரர்' என்ற பெயர் ஏற்பட்டது.இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னரிடம், தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவன் என்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவனும் ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆடினார். ஆட்டத்தில் இறைவன் வென்றார். பின்னர் தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். அதனால் இறைவன் சதுரங்க வல்லபநாதர் என்றழைக்கப்படுகிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாமல்லபுரத்தில், 28 ஜூலை 2022 அன்று, 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்-பார்வதி தேவி குடிகொண்டுள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் பற்றிக் குறிப்பிட்டு, சதுரங்கத்தின் பிறப்பிடம் பாரதம் என்கிற உண்மையை நோக்கி உலகத்தின் கவனத்தைத் திருப்பியது குறிப்பிடத் தக்கது.
சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline