|
|
|
தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை ரயில் நிலையம் அருகில் கபர்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
மூலவர் நாமம் ஸ்ரீ கபர்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், திருவலஞ்சுழிநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் பெரியநாயகி, பிருஹன்நாயகி. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் காவிரி தீர்த்தம், அரசலாறு, ஜடா தீர்த்தம். சைவ சமயக் குரவர்களால் பாடப்பெற்ற பெருமைமிக்க தலம். இந்தக் கோயிலில் சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோயில் 'வெள்ளைப் பிள்ளையார்' கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இது மிகப் பிரபலமான, மிகப் பழமையான கோயில். சோழர்களால் கட்டப்பட்டதெனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவர்கள் அமிர்தம் பிரித்தெடுக்கத் திருப்பாற்கடலைக் கடையும் முன்னர் வணங்குவதற்கும், செயல் தடையில்லாமல் நடப்பதற்கும் கடல் நுரையில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கினர். தேவர்கள் அரசனான இந்திரன் இந்தச் சிலையை வைத்திருந்தார். அவர் இங்கு புனித யாத்திரை செய்யும்போது, சிவனை இரு கை கூப்பி வணங்குவதற்கு முன் இந்த வெண்ணிற விநாயகர் சிலையைத் தரையில் வைத்தார். அதைத் திரும்ப எடுக்க முயன்றபோது அது பூமியில் பதிந்துவிட்டதால் அசைக்கக்கூட இயலவில்லை. அவ்விடத்தில் இந்திரன் விநாயகருக்குக் கோவில் எழுப்பினார். விநாயகர் சதுர்த்தி நாளில் இப்போதும் இந்திரன் இந்த விநாயகரை வழிபட இங்கு வருவதாக நம்பப்படுகிறது.
இந்தத் தலத்தின் வழியாகக் காவிரி ஓடிக்கொண்டிருந்தாலும், திடீரென அதன் திசையை மாற்றியதால் இவ்விடத்திற்கு 'திருவலஞ்சுழி' என்ற பெயர் ஏற்பட்டது. ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் காவிரி பாய்ந்து பாதாளத்தில் இறங்கியது. ஏரண்ட முனிவர் பாதாளத்தில் இறங்க, காவிரி வெளிவந்து வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்றதால் 'திருவலஞ்சுழி' என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள கணபதிப் பெருமானை வெள்ளை விநாயகராக பாவித்து வழிபடுவது மரபு. எனவே 'ஸ்வேத விநாயகர்' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் லிங்கத் திருமேனியாக கபர்தீஸ்வரர் காட்சி தருகிறார். கருவறை வாயிலில் துவாரபாலகர்கள். எதிரே நந்தி, பலிபீடம். இடது புறம் சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமி, நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஷண்முகர் காட்சி தருகிறார். கஜலட்சுமி, 22 வகைச் சிவலிங்கங்கள், தபஸ் நாச்சியார் ஆகியனவற்றைத் தொடர்ந்து பள்ளியறை காட்சி தருகிறது.
அம்மன் பெரியநாயகி சன்னிதி, கபர்தீஸ்வரர் சன்னிதியின் வலப்புறம் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. உள்ளே சன்னிதியின் முன் மண்டபத்தில் வலப்புறம் அஷ்டபுஜ காளி அம்மன் சன்னிதி உள்ளது. கோவில் வளாகத்தில் பைரவர் சன்னிதி உள்ளது. அருணகிரிநாதர் இவ்வாலய முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இரண்டு முருகன் சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் முருகப்பெருமான் ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகளுடன் மனைவியருடன் காட்சி தருகிறார். இரண்டாவது சன்னிதியில் தனியாக சுப்பிரமணியர் என்று போற்றப்படுகிறார். இங்கு சிவபெருமானின் அண்ட நடனச் சிற்பங்கள், நாயக்கர்களின் ஆதரவில் உருவாகியுள்ளன.
கோயிலின் முக்கியத் திருவிழாக்கள் விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, திருவாதிரை, மகர சங்கராந்தி, சிவராத்திரி, பிரதோஷம் யாவும் சிறப்புடன் நடைபெறுகின்றன. இங்கு இறைவனை வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். முந்தைய பிறவியில் செய்த பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. கோயில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஆலயம் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந் தொலையாத வென்றியார் நின்றி யூரும் நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண் டிலையார் படைகையி லேந்தி யெங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே
- திருநாவுக்கரசர் தேவாரம். |
|
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|