|
|
|
தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது கூடலழகர் திருக்கோயில். 108 வைணவ திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. பெரியாழ்வார் இத்தலத்தில் 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடியுள்ளார். "மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா.. " என்று தொடங்கி,
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
என்று வாழ்த்திப் பாடியுள்ளார். எல்லாப் பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பாடப்படுவது பெரியாழ்வாரின் 'பல்லாண்டு' பாசுரமாகும். கோவிலைச் சுற்றி வைகை நதியும், கிருதுமால் நதியும் உள்ளன.
பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்குப் பெருமாளை அர்ச்சாவதார மூர்த்தியாகத் தரிசிக்க ஆவல் இருந்தது. அதனால் அவர் மதுரை வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தார். பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சனத்குமாரருக்குக் காட்சியளித்தார். பின்னர் அவர் தேவசிற்பி விஸ்வகர்மாவை அழைத்து, தான் தரிசித்த வண்ணமே பெருமாளின் அர்ச்சாவதார வடிவத்தை அமைக்கச் செய்து அழகிய அஷ்டாங்க விமானத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவரே 'கூடலழகர்' என அழைக்கப்பட்டார். கிருதயுகத்திலேயே இத்தலம் அமைக்கப்பட்டதால் 'நான்கு யுகம் கண்ட பெருமாள்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு. |
|
108 திவ்ய தேசங்களில் திருக்கோஷ்டியூர் கோவிலிலும், இத்தலத்திலும் மட்டுமே பெருமாள் அஷ்டாங்க விமானத்தில் காட்சி அளிக்கிறார். மூன்று நிலைகளுடன் எட்டுப் பகுதிகளாக உயர்ந்து நிற்கும் விமானம் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும். பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார், அஷ்டாங்க விமானத்தில். இரண்டாம் தளத்தில் சூரிய நாராயணர் தனது தேவியுடன் நின்ற கோலத்திலும், மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதன் பள்ளிகொண்ட கோலத்திலும் தாயார்களுடன் காட்சி அளிக்கிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித் தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் உள்ளன. இரண்டாவது தளத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் அஷ்டதிக் பாலர்கள் ஓவியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
பாண்டிய மன்னன் சத்தியவிரதன் இத்தலப் பெருமாள் மீது தீவிர பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய பின், பெருமாள் மன்னனுக்கு மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்ததன் நினைவாகப் பாண்டியன் மீன் சின்னத்தை வைத்துக் கொண்டான்.
இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அப்போது பெரியாழ்வாரின் 'பல்லாண்டு பாசுரம்' பாடப்படுகிறது. பக்தர்கள் வந்து பெருமாளைச் சேவித்து அருள் பெற்றுச் செல்கின்றனர்.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|