|
|
|
தஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் புன்னைநல்லூர் உள்ளது. பசுமையான வயல்களுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. மூலவர்: மாரியம்மன். முத்துமாரி, துர்கை என அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வெல்லக்குளம். இது மிகவும் புகழ்பெற்ற பிரார்த்தனைத் தலமாக அமைந்துள்ளது. வெங்கோஜி மகாராஜாவால் உருவாக்கப்படது. 500 வருடங்களுக்கு மேல் பழமையானது. புற்றுவடிவில் அம்பாள் இங்கே சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரருக்குப் புற்று வடிவில் சுயம்புவாகக் காட்சி அளித்தார் அம்மன். அவர் மாரியம்மன் உருவத்தைக் கொடுத்து ஸ்ரீ சக்ரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.
கீர்த்தி சோழன் என்னும் அரசனுக்கு அம்பிகையின் அருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு தேவசோழன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தேவசோழன் ஆளாகிச் சோழ சாம்ராஜ்யத்தைப் பல ஆண்டுகள் ஆண்டான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680ம் வருடம் திருத்தல யாத்திரை செய்தபோது சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை, அரசனின் கனவில் தோன்றி தஞ்சைக்குக் கிழக்கே ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்றுருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படிக் கூற, அரசன் தஞ்சைக்கு வந்து, புன்னைக்காட்டிற்கு வழி அமைத்து அம்மன் இருக்கும் இடத்தைக் கண்டு சிறிய கிராமம் ஒன்றை அமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு, அக்கிராமத்தையும் கோயிலுக்கு வழங்கினார். மேலும் புன்னைவனக் காடாக இருந்த பகுதியில் மாரியம்மன் கோயிலிலிருந்து சிறிது தொலைவில் சிவபெருமானை வழிபட கைலாசநாதர் ஆலயத்தையும் கட்டினார்.
1728-35ம் வருடம் ஆண்ட, துளஜா ராஜாவின் புதல்வி வைசூரி நோயால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டுக் குணமானதால் அம்பிகைக்குச் சிறு கோயிலைக் கட்டினார். காலப்போக்கில் இது பெரிய கோவிலாக மாறியது என வரலாறு. இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றாகும். சோழ மன்னர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத்திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். கிழக்குத் திக்கில் அமைந்த காவல் தெய்வம் புன்னைநல்லூர் மாரியம்மன் எனச் சோழ சம்பு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலினுள் நுழைந்தவுடன் வெளிமண்டபம் மராட்டிய மன்னர்களின் சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம், இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் ஆகியவை கட்டித் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னர் சிவாஜியும் இவ்வாலயத்திற்குத் திருப்பணி செய்திருக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன. |
|
|
சுயம்பு அம்மன் புற்று மண்ணால் ஆனதால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. தைலக்காப்பு சாற்றப்படுகிறது. விஷ்ணு துர்கைக்கும் உற்சவ மூர்த்திக்கும் நித்திய அபிஷேகம் நடக்கிறது. அம்பாளுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அந்தச் சமயம் அம்பாளை, ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்குத்தான் அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். மூலஸ்தான அம்பாளுக்கு சாம்பிராணித் தைலம், புனுகு, ஜவ்வாது, அரகஜா இவற்றால் தினம் இருவேளை அபிஷேகம் நடைபெறும்.
புகழ்பெற்ற பிராத்தனைத் தலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து குணமானதும் வந்து வழிபடுகின்றனர். வயிற்றுவலி, உடல்நோய், தோல்நோய்கள் கொண்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்துகொண்டால் குணமாவதாக நம்பிக்கை. வேலைவாய்ப்பு, தொழில், திருமணம் ஆகியவற்றிற்குப் பிரார்த்தனை செய்தால் அம்மன் நிறைவேற்றி வைக்கிறாள்.
ஆடிமாதம் நடக்கும் முத்துப்பல்லக்குத் திருவிழா மிகவும் விசேஷம். அன்று நடக்கும் பால்குடம் கண்கொள்ளாக் காட்சியாகும். விடிய விடிய அன்று பூஜைகளும், அம்பாள் வீதியுலாவும் மிகச் சிறப்பாக நடக்கின்றன. ஆவணிமாதம் தேரோட்டம், புரட்டாசி தெப்போற்சவம், நவரத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் போன்றவை முக்கியமான விழாக்களாகும். சிறப்பு உற்சவங்களாக வசந்த உற்சவம், தெப்பத்திருவிழா, முத்துப்பல்லக்குத் திருவிழா என்பனவற்றைச் சொல்லலாம்.
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|