|
|
|
ஊட்டத்தூர் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும், பாடலூரில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது.
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முதலாம் ராஜேந்திரன், பேரன் ராஜாதிராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது. மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கோவிலில் உள்ளன. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புடன் மலை, நதி ஆகிய சிறப்புக்களும் சேர்ந்ததனால் பஞ்சமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. நன்னீர் இருந்த ஊர் என்பதால் ஊற்றத்தூர் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் 'ஊட்டத்தூர்' என்று மருவியது. ஊட்டத்தூருக்கு பிரம்மன் வந்து வழிபட்டதால் 'பிரம்மபுரம்' என்ற பெயரும் உண்டு என ரத்தினகிரி புராணம் தெரிவிக்கிறது.
மூர்த்தி - சுத்தரத்னேஸ்வரர். தலம் - ஊற்றத்தூர். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம். நதி - நந்தியாறு. மலை - கோவிலின் வடக்கேயுள்ள சோழீஸ்வரம்.
ராஜராஜசோழனால் கட்டப்பட்ட சோழீஸ்வரம் கோவிலுக்கு அடிக்கடி மன்னன் செல்லும்போது சுத்தரத்னேஸ்வரர் கோவில் மணலில் புதைந்து, அடர்ந்த வில்வமரத்தினால் புதராக மூடப்பட்டிருந்தது. மன்னனின் ஆட்கள் மரத்தின் அடியில் வெட்டும்போது ரத்தம் பீறிட்டது. அதனைச் சுத்தம் செய்து பார்த்தபோது சுத்த ரத்னக் கல்லினால் ஆன சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டனர். அவர்கள் மன்னனுக்குச் செய்தியைத் தெரிவிக்க, மன்னன் ஓடிவந்து பார்த்து உடன், விலைமதிப்பற்ற இந்தச் சிவலிங்கத்திற்கு அற்புதமாகக் கோவில் கட்டித் திருப்பணி செய்ததாக வரலாறு.
ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட, வாதம் இறுதியில் போராக மாற, அப்போது அவர்கள் முன் 'ஓம்' என்ற பேரொளி தோன்றி, இந்த ஒளியின் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டு அறிகிறாரோ, அவரே முதல்வர் என அசரீரி ஒலித்தது.
பிரம்மா, திருமுடி காண அன்னப்பறவையாக மாறி மேல்நோக்கிப் பறக்க, விஷ்ணு வராகமாக மாறி பூமியைக் குடைந்து திருவடியைக் காணச் சென்றாராம். பிரம்மா, சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். தான் ஈசனின் சிரசைக் கண்டதாகச் சாட்சி சொல்லும்படி தாழம்பூவிடம் வேண்டினார். தாழம்பூவும் சம்மதித்து, பொய்சாட்சி சொல்ல, வெற்றிபெற்ற பிரம்மா, தானே பெரியவர் என்று அறிவிக்க, விஷ்ணு தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதனால் சினமுற்ற சிவபெருமான் அக்னிப் பிழம்பாய்த் தோன்றிச் சீறி, பிரம்மாவிடம், "இனி உலகில் எங்கும் உனக்குக் கோயில் கிடையாது" என்றும், தாழம்பூவிற்கு "இனி உன்னைச் சிவபூஜையில் சேர்க்க மாட்டேன்" என்றும் சாபமிட்டார். பிரம்மா தன் தவறை உணர்ந்து, மனம் திருந்தி, வருந்தி, சாப விமோசனம் வேண்ட, சிவன் அவரை உலகிலுள்ள புனிதநீர் அனைத்தையும் கொண்டுவந்து அபிஷேகம் செய்து ஆராதிக்கும்படிச் சொன்னார்.
அதன்படி பிரம்மா ஊட்டத்தூர் வந்து, ஊற்று ஒன்றை உருவாக்கி, அதில் உலகத்துப் புனிததீர்த்தங்கள் அனைத்தையும் கொண்டுவந்து சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் அடைந்தாராம். ஊட்டத்தூர் கோவிலில் சுத்தரத்னேஸ்வரர் சன்னிதி எதிரில் வற்றாத பிரம்மதீர்த்த ஊற்று உருவானதால் 'ஊற்றத்தூர்' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில்'ஊட்டத்தூர்' ஆக மருவியது. |
|
|
பிரம்மதீர்த்தத்தில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. ராஜராஜ சோழனுக்கு உடல்நலம் குன்றியபோது இந்தத் தீர்த்தத்தை அருந்தியதும் நோய் குணமானதாகக் கூறப்படுகிறது. இதுவே இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் இதனை இன்றளவும் புனிதமானதாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். பிரம்ம தீர்த்தம் வற்றுவதே இல்லை.
சைவ சமயக் குரவர்களின் ஒருவரான அப்பர் பெருமான் ஊட்டத்தூருக்குச் சென்றபோது ஊர் எல்லையிலேயே நின்றுவிட்டார். கோவிலுக்குச் செல்லும் வழியில் சிவலிங்கங்கள் இருப்பதை உணர்ந்து தனது பாதங்கள் படுவது தெய்வக்குற்றம் என எண்ணி எல்லையில் நின்றவாறு சுத்தரத்னேஸ்வரர் மீது பதிகம் பாடினார். அந்த இடம் 'பாடலூர்' என அழைக்கப்பட்டு, நாளடைவில் 'பாடாலூர்' ஆனது. (தேவாரத் தலத்தில் இருந்துகொண்டு, வேறொரு தலைத்தைத் தேவாரத்தில் வைத்துப் பாடினால் அந்தத் தலம் தேவார வைப்புத் தலம் எனப்படும்).
கருவறையில் சுத்தரத்னேஸ்வரர், சுத்தமான ரத்தினக் கற்களினால் ஆன பாணலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். மூலவருக்கு அர்ச்சகர் ஆரத்தி காட்டும்போது பாணலிங்கத்தின் மேல் ஒளி பிரகாசிப்பதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
கர்ப்பக்கிரகத்தின் இடதுபுறம் நடராஜர், சிவகாமியம்மன் சன்னிதியைக் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி இருக்கிறார். துர்கை, தக்ஷிணாமூர்த்தி, காலபைரவர் சன்னிதிகள் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. வீரபத்ர சுவாமி நெற்றியில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். சூரிய கிரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசி 12, 13, 14 தேதிகளில் சுத்தரத்னேஸ்வரர் மீது வீசுகிறது. வைகாசி விசாகத்திலும் சூரியகிரணங்கள் தீண்டுகின்றன.
நடராஜர் சன்னதியில் பஞ்சநாதன கற்களினால் செதுக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இங்கு வந்து நடராஜருக்கு பிரம்ம தீர்த்ததிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்து வெட்டிவேர் மாலை சாற்றி வழிபடுகின்றனர். வெட்டிவேர் மாலையையும் அபிஷேக நீரையும் பிரசாதமாகப் பெற்று அந்த அபிஷேக நீரை 45 நாட்கள் அருந்திவர நன்கு குணமடைந்து வருகின்றனர் என்பதால் மக்கள் திரளாக வந்து தரிசித்து, பூஜித்து நோய் நீங்கிச் செல்கின்றனர். இந்திரன் இங்கு வந்து நடராஜரைப் பூஜித்து தானிழந்த பதவியைத் திரும்பப் பெற்றார் என்கிறது புராணம். அதனால்வேலை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த நடராஜரை நம்பிக்கையுடன் பூஜிக்க, பிரச்சனை நீங்குவதாக ஐதீகம்.
பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேற்றூரும் நாரையூரும் உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் துறையூரும் துவையூரும் தோழூர் தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே.
- திருநாவுக்கரசர் தேவாரம்
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|