|
|
|
|
பஞ்சபூதத்தலங்களுள் பிருதிவி எனப்படும் மண் தலமகாகக் கருதப்படுவது காஞ்சிபுரம். 'நகரேஷு காஞ்சி' எனப் பழங்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட ஊர். மோட்சம் அளிக்கும் ஏழு புண்ணியத் தலங்களுள் தென்னாட்டில் இருப்பது காஞ்சிபுரம் மட்டுமே. மற்றவை அவந்திகா (உஜ்ஜயினி), அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்துவார்), காசி, துவாரகை ஆகும்.
காஞ்சித்தலத்தில் சிறப்புமிகு ஆயங்கள் பல உள்ளன. சைவசமயக் குரவர் நால்வராலும் பாடல்பெற்ற ஐந்து சிவத்தலங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 15 திவ்யதேசங்களும் இங்குள்ளன. இவற்றுள் சைவத்துக்குப் பெருமைசேர்க்கும் ஆலயம் ஏகாம்பரநாதர் ஆலயம். இங்கு இறைவன் ஏகாம்பரநாதராக எழுந்தருளியுள்ளார். இறைவியின் நாமம் காமாட்சி. ஏலவார்குழலி என்ற பெயருமுண்டு. தீர்த்தம் - சிவகங்கை தீர்த்தம். தலவிருட்சம் - மாமரம்.
ஒருசமயம் கைலாயத்தில் இறைவன் அம்பிகையோடு போகமூர்த்தியாக வீற்றிருந்தபோது அன்னை விளையாட்டாக இறைவனின் கண்களை மூடினாள். அதனால் உலகமே இருளில்மூழ்கியது. எல்லா ஜீவராசிகளும் இருளில் மூழ்கின. யாகங்கள் அழிந்தன. சூரிய சந்திரரும் ஒளியிழந்தனர். அன்னையின் விளையாட்டு வினையானதனால் சினமுற்ற ஈசன் அன்னையை பூவுலகில் பிறந்து தவமியற்றிப் பின் தன்னை அடையுமாறு ஆணையிட்டார்.
அன்னையும் தவம் செய்துகொண்டிருந்த காத்யாயன முனிவரின் பத்ரிகாச்ரமத்தில் குழந்தைவடிவில் அவதரித்தாள். காத்யாயனர் அன்போடு எடுத்து வளர்த்ததால் 'காத்யாயினி' ஆனார். பாலியப்பருவம் அடைந்ததும் அன்னை தவம்செய்யக் காஞ்சிக்குப் புறப்பட்டார். வழியில் காசித்தலத்தில் மக்கள் பசியால் துன்புறுவது கண்டு இரக்கம்கொண்டாள். மக்களின் வறுமை, பிணியைப் போக்கி தன் கையால் தானே அமுதுபடைத்து 'அன்னபூரணி' என்ற பெயர் பெற்றாள். காஞ்சியை அடைந்து மணலால் லிங்கம் செய்து வழிபட்டு, பஞ்சாக்னி வளர்த்து, அதன் நடுவே ஊசிமுனையில் ஒற்றைக்காலில் நின்று ஈசனை நோக்கித் தவமிருந்தாள். ஈசன், அம்பிகையின் தவத்தைச் சோதிக்கும்பொருட்டு நதியில் வெள்ளம் பெருகிவரச் செய்தார். தோழியின் உதவியால் அதனைத் தடுத்தாள் அன்னை. அதனால் அந்தத் தோழி 'பிரளயம்காத்த அன்னை' என்று பெயர்பெற்றாள். ஆனால் ஈசன் மீண்டும் வெள்ளம் பெருகச் செய்தார். அன்னை விஷ்ணுவின் உதவியைநாட விஷ்ணுவும் உதவினார். ஆனால் மீண்டும் வெள்ளம் பெருகிவரவே, விஷ்ணு, இது ஈசனின் சோதனை என்று கூறி அவரையே சரணடையுமாறு வலியுறுத்தினார். |
|
மீண்டும் வெள்ளம் பெருக அன்னை தவத்தைக் கைவிட்டு, மணல்லிங்கம் வெள்ளத்தில் அடித்துப்போகாமல் அதனை ஆரத்தழுவினாள். அதனால் அகமகிழ்ந்த ஈசன், காத்யாயினியை ஆட்கொண்டருளினார். தழுவக்குழைந்த தலைவனாக எழுந்தருளினார். அம்பிகையையும், ஈசனையும் திருமணக் கோலத்தில் ரிஷிகளும், பூதகணங்களும் காணவிரும்பியதால் பங்குனிஉத்திர நன்னாளில் ஈசன் அன்னையை மணம் புரிந்துகொண்டார். அங்கே கோயில் கொண்டருளினார்.
காமாட்சி அம்மையே காமேஸ்வரியாக, ஏலவார்குழலியாக, காமேஸ்வரனாகிய ஏகாம்பரேஸ்வனை அடைந்ததாகக் கருதப்படுவதால் ஈசன், ஸ்ரீ காமாட்சி அம்மை இடம்கொண்ட ஏகாம்பரநாதர் என்று அழைக்கப்படுகிறார். நான்கு நாயன்மார்களும் பட்டினத்தடிகளும் ஈசனைப் பாடிப் புகழ்ந்துள்ளார். சங்கீத மும்மூர்த்திகளில் முத்துஸ்வாமி தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளனர்.
ஆலயம் 9 நிலைகளுடன் 92 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. இது விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோபுரத்தின் இருபுறமும் விநாயகர், சுப்பிரமணியர் சன்னிதி, தாண்டி உள்ளே சென்றால் சரபேச மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கம்பாநதிக் குளம், திருக்கச்சி மயானம் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தினுள் 'சிவகங்கை தீர்த்தம்' அமைந்துள்ளது. கோயில் முதல்பிரகாரத்தில் 'பிரளய நந்தினி' சன்னதி உள்ளது. நான்கு வேதங்களும் நான்கு கிளைகளாக எழுந்தருளியிருக்கும் மாமரம் இங்கு தலவிருட்சம். இதன்கீழ் அன்னை, ஈசனைத் தழுவிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். இங்கு வந்து திருமணத்தடை விலகப் பிரார்த்தனை செய்துகொள்வர். சஹஸ்ரலிங்கர், பைரவர், லிங்கோத்பவர், தபசு காமாட்சி, நடராஜர் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன.
கருவறையில் மணலாலான ஏகாம்பரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அவர்மீது வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டுள்ளது. ஆவுடையாருக்கே அபிஷேகங்கள் நிகழ்கின்றன. சன்னதிக்கு வெளியே நிலாத்துண்ட பெருமாள் கருவறையை நோக்கியவண்ணம் சேவை சாதிக்கிறார். இவர் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டவர். ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ருத்ரகோடி விமானத்திலும், ஸ்ரீ காமாட்சி அம்மன் காமகோடி விமானத்திலும், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்திலும் எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுகிறது. பங்குனிஉத்திரப் பெருவிழா இங்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 10ம் நாள் இரவு கல்யாண உற்சவம் விமரிசையாக நடக்கிறது. நகரில் எங்கு பார்த்தாலும் கோயில், கோபுரம் என்று காஞ்சிபுரம் கோயில்களின் நகரமாகத் திகழ்கிறது.
சீதா துரைராஜ் |
|
|
|
|
|
|
|