|
|
|
|
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது புகழ்பெற்ற பார்த்தசாரதி ஆலயம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இதன் புராணப்பெயர் பிருந்தாரண்ய க்ஷேத்ரம். தியாக பிரம்மம், முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாரதியார் உள்ளிட்டோர் பாடியுள்ள தலம். ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிலம், அயோத்தி ஆகிய ஐந்து திவ்ய க்ஷேத்திரத்தின் எம்பெருமான்கள் ஒரே கோவிலில் தனித்தனிச் சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளது இத்தலத்தின் சிறப்பு. பாரதியார் இத்தலத்து இறைவனையே கண்ணன் பாடல்களில் பாடியுள்ளதாக ஒரு கருத்துண்டு. "மாடமாமயிலை திருவல்லிக்கேணி கண்டேனே" என திருமங்கையாழ்வார் பரவசப்பட்டுப் பாடியுள்ளார். ஸ்ரீஆளவந்தார், வேதாந்த தேசிகர், ஸ்ரீபாஷ்யக்காரர் எனப் பலரும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர்.
இறைவனின் பெயர் `ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன், பார்த்தசாரதி. தாயார் ருக்மிணி தேவி. சுமதி என்னும் பெயருடைய வெங்கடாசலபதியின் பக்தன், வேங்கடவனை கீதையை உபதேசித்த கண்ணனாக தரிசிக்க ஆசைப்பட்டதால் அவன் வேண்டுகோளின்படி அல்லிக்கேணியில் நின்ற கோலத்தில் கண்ணன் காட்சி தந்தார். அதனால் வேங்கட கிருஷ்ணன். பார்த்தனுக்குத் தேரோட்டிய சாரதி என்பதால் 'பார்த்தசாரதி'. ஆலயம் அப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
வேதவியாசர் கண்ணனை அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கோலத்தில் தரிசிக்க விரும்பினார். கண்ணன் அவரிடம் தேரோட்டிக்கோலச் சிற்பத்தைத் தந்தருளினார். தான் மட்டுமின்றி மக்களும் அதே கோலத்தைத் தரிசிக்க வேண்டும் என்று வியாசர் விரும்பி, அதனை ஆத்ரேய மகரிஷியிடம் அருளினார். அவர் தென்திசையில் கிழக்குக்கரையில் பிரதிஷ்டை செய்து கைரவிணி புஷ்கரணியில் ஆலயம் அமைத்ததாகப் புராண வரலாறு.
கோயிலின் எதிரே உள்ளது கைரவிணி புஷ்கரணி (இந்திர, சோம, மீன, அக்கினி, விஷ்ணு) ஆகிய ஐந்து தீர்த்தங்களை உடையது. 'கைரவிணி' என்றால் வெள்ளல்லிக் குளம் என்பது பொருள். புனிதமான இந்தக் குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை. ஆண்டுதோறும் தெப்போத்சவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள் உட்படப் பல மன்னர்கள் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். அழகான சிற்ப வேலைப்பாடுள்ள பல மண்டபங்களை அமைத்துள்ளனர். புஷ்கரிணிக்கு எதிரே அழகிய நாற்கால் மண்டபம், அடுத்து சிற்பவேலைப்பாடுள்ள தூண்கள் நிறைந்த முன்மண்டபம், அதனைத் தொடர்ந்து ஐந்தடுக்கு ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் கம்பீரமாக உள்ளது. பின் கல் தீபத்தூண், பலிபீடம், கருடசன்னிதி. கருவறை நோக்கிச் செல்லும் வழியில் ஸ்ரீராமர், அரங்கன், வராக சன்னிதிகள் எழிலுறக் காட்சி தருகின்றன. கருவறையில் வேங்கடகிருஷ்ணன் கிழக்குமுகமாக நின்ற திருக்கோலத்தில் காட்சிதருகிறார். வலதுகையில் சங்கம் ஏந்திச் சக்கரமின்றி, இடதுகை "என்னைச் சரணடை" எனத் திருவடியைக் காட்டும் கோலம். திருமாலுக்குரிய சக்ராயுதம், துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கின்படி இங்கு இல்லாது மறைந்துள்ளது. |
|
கிருஷ்ணன் எந்தத் திருத்தலத்திலும் இல்லாத அதிசயமாக இத்தலத்தில் மிடுக்கான முறுக்கு மீசையுடன், கம்பீரமான ஆடை தரித்து, இடையில் நீண்ட கத்தி மற்றும் குறுவாளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். வலதுபுறம் ருக்மிணி பிராட்டியார், அண்ணன் பலராமன், இடதுபுறம் தம்பி சாத்யகி பிள்ளை பிரதியும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் பார்த்தசாரதியான வேங்கடகிருஷ்ணனின் அருட்கோலம் கண்டு கண்டு இன்புறத்தக்கது. உற்சவர் பார்த்தசாரதி அர்ஜுனன் மீதான தழும்புகளை தானே ஏற்றதால் முகத்தில் தழும்புகள், வடுக்களுடன் காட்சி தருகிறார். உடன் பூதேவி, ஸ்ரீதேவி எழுந்தருளியுள்ளனர்.
தெற்கே தனிச்சன்னிதியில் பள்ளிகொண்ட பெருமாள் ஸ்ரீரங்கநாதரின் நாயகி வேதவல்லித்தாயார் காட்சிதருகிறார். மேற்கே தனிச்சன்னிதியில் தாயார் காட்சியளிக்கிறார். கஜேந்திரவரதர் கருடன்மேல் ஆரோகணித்தபடி காட்சிதருகிறார். தனிக் கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னிதி இவற்றுடன் நரசிம்மர் தனிச்சன்னிதி கொண்டுள்ளார். மிகுந்த வரப்ரசாதி. மூலவர் தன் கைகளால் கால்களை அணைத்தபடி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். உற்வசர் அழகியசிங்கர் அபயஹஸ்தத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் காட்சிதருகிறார். ஆண்டாள் தனிச்சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
இரண்டு கொடிமரங்கள் இருப்பதால் பார்த்தசாரதிக்கு, நரசிம்மருக்கு என்று இரண்டு பிரம்மோற்சவங்கள் நடக்கின்றன. இத்தல இறைவனை வந்து வழிபட்டே ராமானுஜரின் பெற்றோர்கள் அவரைப் புதல்வராக அடைந்தனரென்பது வரலாறு. ராமானுஜர் தனிச்சன்னிதியில் காட்சிதருகிறார். அருகே வேதாந்த தேசிகர், மணவாள முனிகள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சித்திரைமுதல் பங்குனிவரை மாதந்தோறும் உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்குள்ள ஐந்து மூர்த்திகளையும் தரிசித்தால் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிலம், அயோத்தி ஆகியவற்றை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்து கானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை தேனமர் சோலை மாடமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே
ஸ்ரீ வெங்கடேசனாகவும், ஸ்ரீ கிருஷ்ணனாகவும் இரண்டு திவ்ய மூர்த்திகள் இணைந்து ஒரே உருவத்துடன் காட்சிதரும் இத்திருத்தலம் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.
சீதா துரைராஜ், சென்னை |
|
|
|
|
|
|
|