|
விசாகா ரவிசங்கர் - மிஸ் அமெரிக்கா (ஜூனியர் டீன் 2008) |
|
- மதுரபாரதி, காந்தி சுந்தர், ரவிசங்கர் நடராஜன்|மார்ச் 2008| |
|
|
|
|
மதுரபாரதி தகவல் உதவி: காந்தி சுந்தர், ரவிசங்கர் நடராஜன்
பதினைந்து வயதான தமிழ்ப்பெண் விசாகா ரவிசங்கர் அமெரிக்கன் கோஎட் பேஜண்ட்ஸ் (American Coed Pageants www.gocoed.com) ஆர்லாண்டோ, ப்ளாரிடாவில் நடத்திய தேசீயப் போட்டிகளில் 'மிஸ் அமெரிக்கா - ஜூனியர் டீன் 2008' பட்டத்தை வென்றிருக்கிறார். அமெரிக்காவெங்கிலு மிருந்து வந்த 57 போட்டியாளர்களை விஞ்சிய விசாகா, வர்ஜீனியாவிலுள்ள தாமஸ் ஜெ·பர்ஸன் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி. இந்தப் பள்ளியும் அமெரிக்காவிலேயே 2008க்கான நம்பர் 1 பள்ளி என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தப் போட்டிகளின் போது, சிறந்த பேச்சாளர், சிறந்த நேர்காணல் ஆகிய பரிசுகளையும் வென்றுள்ளார்.
இதற்கு முந்தைய கட்டத்தில் வர்ஜீனியா மாநில அளவிலான போட்டி சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற போது, 14 கேடயங்களையும் பதக்கங்களையும் வென்று திரும்பினார் விசாகா, புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்தி வரும் Centre for Tallented Youth (CTY) அமைப்பும் விசாகாவைத் தனது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கிறது. ஸ்பானிய மொழியை நன்கு பேசுவதோடு எழுதவும் படிக்கவும் அறிந்த விசாகா அவரது பள்ளி ஸ்பானிய சங்கத்தின் தலைவரும் கூட.
'சாரங்கதாரா படத்தில் வரும் 'வசந்த முல்லை போல வந்து' தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு' என்று நல்ல தமிழில் சொல்கிறார் விசாகா. தன்னுடைய வளர்ச்சிக்குத் தனது தாய் தந்தையரே முக்கியக் காரணம் என்று சொல்கிறார் இந்த அழகிய இளம்பெண். தந்தை ரவிசங்கர் புகைப்பட ஆர்வலர், தாயார் உமா நல்ல பாடகி.
இம்முயற்சியில் உறுதுணையாய் இருந்த குடும்ப நண்பர் சுஜிதா ஆன்டியையும் மறக்கவில்லை. தனது சித்தி, தாத்தா, பாட்டி தந்த ஊக்கமும் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்கிறார்.
மிஸ். அமெரிக்கா பட்டம் உங்களை எப்படி மாற்றியுள்ளது எனக் கேட்டதற்கு, 'நான் இன்றும் பயத்தங்காயும், ரசம் சாதமும் ரசிச்சு சாப்பிடும் அதே விசாகாதான். என்ன.. இப்போ என் தலையில ஒரு கிரீடம் இருக்கிறது... அவ்வளவு தான்' என்று சொல்லிவிட்டு அழகாகச் சிரிக்கிறார்.
'சரி, இந்தப் பட்டத்தை வைத்து சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று நாம் கேட்டு முடிப்பதற்குள் பதில் வருகிறது. 'நான் உலக அளவில் குழந்தை களுக்கு எழுதப் படிக்க உதவப் போகிறேன். Learning with Love என்ற அறக்கட்டளை யேற்படுத்தி, புத்தகங்கள் மற்றும் கல்வி சாதனைங்களைச் சேர்த்து, பிற்படுத்தப்பட்ட நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப் போகிறேன்' என்று சொல்லும்போது கண்ணில் ஓர் ஒளிப்பொறி. கூடவே 'இந்திய கலாசாரத்தின் பெருமைகளைப் பரப்பு வதிலும் செயல்படப் போகிறேன்' என்கிறார். |
|
எட்டு ஆண்டுகளாகக் குச்சுப்புடி நடனம் பயின்று வரும் விசாகா, வாஷிங்டன் டிசியின் பல விழாக்களில் பாங்க்ரா, குச்சுப்புடி மற்றும் பாலிவுட் ஸ்டைல் நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இவரது வட்டார (D.C.) டி.வி. சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்துவ தோடு மாடலிங்கும் செய்துவருகிறார். பள்ளியின் ஆண்டுவிழா மலருக்குத் தலைமைப் புகைப்படக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். நீச்சல், ஐஸ்-ஸ்கேட்டிங், ரோலர்-ஸ்கேட்டிங் ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு. விசாகா பலவகை இசைகளை விரும்பிக் கேட்பதோடு நன்கு பாடவும் செய்வாராம்.
மருத்துவராவது, அதிலும் குழந்தை மருத்துவர் ஆவதே இவரது லட்சியம்.
தம் வட இந்திய நண்பர்களுடன் ஹிந்தியில் உரையாடுகிறார். வீட்டில் சரளமாகத் தமிழில் பேசுகிறார். சென்னையிலிருந்து இங்கு வந்திருக்கும் பாட்டி ஜெயலட்சுமி கலிபோர்னியாவிலுள்ள தன் மகன் வீட்டில் தென்றலைப் பார்த்துவிட்டு 'இதில் என் பேத்தியைப் பற்றிய செய்தி வந்தால் நன்றாக இருக்கும்' என்று ஆசைப்பட்டாராம்.
இதோ அந்த ஆசையை உங்கள் பேத்தி நிறைவேற்றி விட்டார்!
மதுரபாரதி தகவல் உதவி: காந்தி சுந்தர், ரவிசங்கர் நடராஜன் |
|
|
|
|
|
|
|