|
|
|
சென்னை. கச்சேரி சீஸன். கர்நாடிகா சகோதரர்களின் கச்சேரி. பட்டுப் பாவாடை சட்டை அணிந்த ஓர் அழகிய பெண், ஏன், சிறுமி என்றுகூடச் சொல்லலாம், மேடையேறி வருகிறார். பின்னால் உட்கார்ந்து கொண்டு தம்பூரா மீட்டுவாரோ என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். பாடகர்களின் வலதுபுறம் உட்காருகிறார். வெல்வெட் உறையைப் பிரித்து அவர் வெளியே எடுப்பது மிருதங்கத்தை!
அவரை அங்கிருக்கும் யாரும் பெரிதாக நினைக்கவில்லை. கர்நாடிகா சகோதரர்கள் மிகப் பெரிய மனது பண்ணி இவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் என்றுதான் வழக்கமான பாதையில் மனது சிந்திக்கிறது.
ஆனால் முதல் வர்ணத்திலேயே தெரிகிறது இவர் கைதேர்ந்த மிருதங்கக்காரர் என்பது. அவர்தான் 17 வயதே ஆன ரஜனா. வாசிப்பில் உமையாள்புரம் சிவராமனின் முத்திரை. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் பல சபாக்களை வென்ற வித்வானின் நேர்த்தி.
சென்னையில் 2005ல் அரங்கேறிய ரஜனா டாக்டர் என். ரமணி, ஜயலக்ஷ்மி சந்தானம், சுகுணா புருஷோத்தமன், ராதா வெங்கடா சலம், ருத்ரபட்டணம் சகோதரர்கள், டாக்டர் கே.எஸ். சுப்ரமணியன், ஷஷாங்க், கர்னாடிகா சகோதரர்கள், பாபநாசம் அஷோக் ரமணி, மாஸ்டர் பாலமுரளி கிருஷ்ணா, சிக்கில் குருசரண், ஆர். சூர்ய ப்ரகாஷ் என்று முன்னணிக் கலைஞர்கள் பலருடன் வாசித்துவிட்டார்.
அதற்கு முன்னரே 2004-ல் உமையாள்புரம் அவர்களுடன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்த ரஜனா, 25 இடங்களிலும் ஒவ்வொரு பாடலுக்குத் தனியாக வாசித்தார். ஏஷியா சொஸைட்டி, ஸ்மித்ஸோனியன், பல்கலைக் கழங்கள் பல என்று மிகப் பெயர்பெற்ற அரங்கங்கள் இதில் இடங்கும். சிவராமன் அவர்களுடன் அரங்கில் வாசித்த முதல் மற்றும் ஒரே பெண்மணி ரஜனாதான் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் ரஜனாவின் முதல் ஒருமணிநேர நிகழ்ச்சியை சிவராமன் அக்டோபர் 2004ல் மேரிலாந்து சின்மயா மிஷனில் வழங்கினார்.
இவருடைய பெற்றோர்கள் மேரிலாந்தில் இருக்கிறார்கள். ரஜனா, பர்ட்டன்ஸ்வில்லில் (மாண்ட்கோமரி கவுண்டி, மேரிலாந்து) உள்ள பெயிண்ட் பிராஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் 11வது கிரேடில் படிக்கிறார். படிப்பிலும் படு சுட்டிதான்.
இவருடைய தந்தை டாக்டர் P.K. சுவாமிநாதன் மிருதங்கம் வாசிப்பார். அவருக்கு உமையாள்புரம் சிவராமனிடம் கற்க வேண்டும் என்று தணியாத ஆசை. ஆனால் முடியவில்லை. அமெரிக்காவுக்கு வந்தபின் தான் அதற்கான பொருளாதார வசதி வந்தது. அவருக்குக் கற்பிப்பதற்கென்றே ஒவ்வொரு முறையும் இரண்டு மாதங்கள் வீதம் ஆறுமுறை உமையாள்புரம் சிவராமன் இவர்களது வீட்டுக்குச் சென்றார். இது நடந்தது ஏப்ரல் 1999க்கும் ஏப்ரல் 2001க்கும் இடையில்.
தனது ஐந்தாவது வயதிலேயே அப்பாவிடம் ரஜனா மிருதங்கம் கற்கத் தொடங்கினார். சிவராமன் ரஜனாவைப் பார்க்கும்போது வயது 8. அப்போது பியானோவும், பரத நாட்டியமும் கூடக் கற்றுக்கொண்டிருந்தார். 46 வயதான சுவாமிநாதன் தனது பாணியை மாற்றிக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் சிவராமனின் கண்களுக்கு ரஜனாவின் திறமையும் ஆர்வமும் தப்பவில்லை. முதல் பெண் மிருதங்கக் கலைஞர் உருவாகத் தொடங்கியது அங்கேதான்.
'நான் எந்தப் பிரபல கலைஞர்களுடன் வாசித்தாலும் அவர்கள் என்னை உற்சாகப் படுத்தியதோடு, சவாலாகவும் அமைந்திருந்தார்கள்' என்கிறார் ரஜனா. 'ஆனால் குரு உமையாள்புரம் அவர்களுக்கு என் இதயத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு. அவர் தீவிர, கட்டுப்பாடுள்ள, கண்டிப்பான ஆசிரியர்; ஆர்வமூட்டும், திறமையுள்ள மேதை; கலகலப்பான, தமாஷான, அன்பான முதியவர். மாதக் கணக்கில் எங்கள் வீட்டில் அவர் இருந்ததால் சொந்தத் தாத்தா போன்ற ஒரு பாசமும் எனக்கு உண்டு' என்னும் போது ரஜனாவின் கண்கள் பளிச்சிடுகின்றன. 'இந்தக் கலையில் முன்னேறும் போது, அதிலுள்ள சிரமங்களும் சவால்களும் எனக்குப் புலப்படுகின்றன. அப்போது எனக்கு என் குருவின் மேலுள்ள மரியாதை பலமடங்காகிறது.'
'மிருதங்கம் சாதாரணமாகப் பெண்கள் வாசிக்கும் கருவியல்லவே. எப்போதாவது வித்தியாசமாக உணர்ந்தது உண்டா?' என்று கேட்டால், 'நான் என்னையே வேறொரு வரின் கண்வழியே பார்த்தால்தானே 'வித்தியாசமாக' தோன்றும். ஆமாம், பிற சிறுமியரிலிருந்து நான் மாறுபட்டு இருப்பதாகத் தோன்றியதுண்டு. ஆனால், அந்த உணர்வு என்னை மிருதங்கத்திலிருந்து பிரித்துவிடவில்லை. மிருதங்கம் என் சிறுவயதின் அங்கமாக இருந்தது. தொடர்ந்த பயிற்சியும் விடாப்பிடியான உழைப்பும் அதை என் அடையாளமாகவே ஆக்கி விட்டது' என்று சொல்லும்போது அவரது அர்ப்பணிப்பு நமக்குப் புரிகிறது.
கிளீவ்லாந்து தியாகராஜ உற்சவம், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல இடங்களில் கச்சேரிகள், பயிற்சி என்றால், படிப்பது எப்போது? 'உயர் வகுப்புகளுக்குச் செல்லும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதுவும் வாழ்க்கையின் ஒரு அம்சம்தானே. சாதாரண நாளில் மிருதங்கம் சிறிது வாசிக்கலாம் என்பதுகூடக் கஷ்டமாகி வருவது உண்மைதான். சென்ற மூன்று வருடங்களாக டிசம்பர் மாதத்தில் 3-4 வாரம் பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்கிறேன். அப்போது கிட்டத்தட்ட தினந்தோறும் மேடையில் வாசிக்கிறேன். ஆண்டின் மிகக் கடுமையான காலம் என்று இதைச் சொல்லலாம். ஆனாலும் வகுப்பில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறேன். நமது கவனம் சரியாகக் குவிய வேண்டும். பொழுதுபோக்குக்கு நேரம் கிடைக்காது. நேரநிர்வாகம் சரியாக இருக்க வேண்டும். கச்சேரி அனுபவம், மற்றக் கச்சேரிகளைக் கேட்டல், ஓரளவு பயிற்சி என்று எல்லா வற்றிலும் முன்னேற்றம் காணுகிற அதிர்ஷ்டவசமான நிலையில் நான் இருக்கிறேன்' என்று பெருமிதத்தோடு சொல்கிறார் ரஜனா.'
ரஜனாவை ஒரு வளரும் கலைஞர் என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியவில்லை. எந்தப் பெண்ணுமே வாசிக்காத ஒரு கருவியில் இந்த இளம் வயதிலேயே இத்தனை தேர்ச்சி காட்டும் ரஜனா ஒரு முன்னோடியும் கூட. இவர்முன் விருதுகளும் பட்டங்களும் கைகட்டி நிற்கும் காலம் அதிகத் தொலைவில் இல்லை. அவரை வாழ்த்தி விடைபெறுகிறோம். உடன் வந்திருக்கும் அவரது தாயார் லலிதா சுவாமிநாதனின் முகத்திலும் ஒரு நியாயமான பெருமிதம்.
இவரைப் பற்றி மேலும் அறிய: www.rajnaswaminathan.com
***** |
|
'உன் பெயர் சிவராமனா?'
'சென்ற டிசம்பரில் திருமதி சுகுணா புருஷோத்தமன் அவர்களுக்குப் பக்கம் வாசிக்கும் அருமையான வாய்ப்புக் கிடைத்தது. 'வெவ்வேறு தாளங்களில் கிருதிகள்' என்ற தலைப்பில் அன்று கச்சேரி. எனக்கு ஒரே நடுக்கம். காலையிலிருந்து ஒத்திகை, முன்னால் மற்றொரு கச்சேரி எல்லாம் இருந்தன. அந்தக் கச்சேரியைக் கேட்கத் திருமதி ஜயலக்ஷ்மி சந்தானம், சித்ரவீணை நரசிம்மன் ஆகியோர் வந்திருந்தனர்.
'கச்சேரி முடிந்ததும் இரண்டு மேதைகளும் என்னைப் பாராட்டினார்கள். ஆனால் நரசிம்மன் மாமா கேட்டது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 'உன் பெயர் சிவராமனா?' என்ற வினோதமான கேள்வியை எழுப்பினார் அவர்.
கச்சேரி முடிந்த பிரமிப்பில் இருந்த எனக்கு அவரது கேள்வி புரியவில்லை. 'என் பெயர் ரஜனா சுவாமிநாதன்' என்றேன். அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டதும்தான் என் வாசிப்பில் உமையாள்புரம் அவர்களின் சாயலை வைத்து அப்படிக் கேட்கிறார் என்பது புரிந்தது. நான் புன்னகைத்தேன். நரசிம்மன் மாமா என்னை அப்படி ஆசிர்வதித்தது என் மனதைத் தொட்டது.'
-'உங்கள் மனதைத் தொட்ட சம்பவம் எது?' என்ற கேள்விக்கு ரஜனாவின் பதில்
மதுரபாரதி |
|
|
|
|
|
|
|