|
|
|
நியூ ஜெர்சியில் வசிக்கும் பதினேழு வயது இளைஞர் செல்வன். சித்தார்த் துப்பில் ஓர் வளரும் ஓவியர். தனது ஓவியத்திறன் தனது மூதாதையர் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். அதன் காரணமாக ஜூன் 17, 18 தேதிகளில் நியூ ஜெர்சியில் தான் படைத்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்றை நடத்தி, விற்றுக் கிடைத்த பணத்தை, தமிழ்நாட்டின் பூண்டிப்பட்டு கிராமத்தில் கழிப்பறை கட்டக் கொடுக்கலாம் எனத் தீர்மானித்தார்.
பாரதப் பிரதமரின் "துாய்மை இந்தியா" திட்டம் இவரது ஊக்கத்துக்குக் காரணமாக அமைந்தது. கண்காட்சியில் கிடைத்த $2,500 நிதியைப் புதுவசந்தம் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கச் சென்னைக்குத் தன் குடும்பத்துடன் வந்தார்.
பூண்டிப்பட்டு கிராமத்தில் ஒரு பழைய கட்டடம் மூன்றாண்டுக்கு மேலாக மூடி வைக்கப்பட்டிருந்தது. அதைப் புதுப்பித்து 50 குழந்தைகள் அமர்ந்து கற்கும் வகையில் சித்தார்த் அமைத்துத் தந்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தின் அறைகளுக்கு கிராமத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து நீலம் மற்றும் வெள்ளை வண்ணம் பூசினார்; ஸ்டென்சில்ஸ் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களை எழுதவும் வரையவும் வைத்தார். ஒரு சுவரை ஓவியம் வரைந்து அலங்கரித்தார். குழந்தைகள் எழுதிப் பழகும் வகையில் அந்தச் சுவரின் கீழ்ப் பகுதி கரும்பலகை ஆக்கப்பட்டுள்ளது. |
|
|
சித்தார்த்தின் தாய்வழி மூதாதையரான திரு. ஸ்ரீநிவாசன் பூண்டிப்பட்டு கிராம மக்களுக்காக அமைத்த அரசுசாரா அமைப்புதான் முன்கூறிய 'புதுவசந்தம் டிரஸ்ட்'. அவர் அதன்மூலம் பல ஆண்டுகளாகக் கழிப்பறைகள் கட்டியும், மரக்கன்றுகள் நட்டும் சுற்றுச்சூழலை பராமரித்துப் பாதுகாத்தும் திறம்படச் செயல்பட்டு வருகிறார். நியூ ஜெர்சி, பிரின்ஸ்டனில் 12வது வகுப்பு படிக்கும் சித்தார்த் அந்தக் கிராமத்துக் கட்டடத்தைச் சீரமைத்து குழந்தைகள் பயில்வதற்கேற்பப் புதிய சூழலை உருவாக்க முடிவுசெய்து, அதில் வெற்றியும் பெற்றார்.
இந்தியக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தன்னுடைய நியூஜெர்சி கண்காட்சியை அமைத்திருந்தார் சித்தார்த். இதுபற்றி அவர், "எனது கண்காட்சியில் வைக்கப்பட்ட 50 ஓவியங்களும் நீர்வண்ண (Water Colour) ஓவியங்கள். இவற்றின் மூலம் இந்திய கலாசாரம், முக்கியமாக, தென்னிந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவை" என்கிறார்.
நியூஜெர்சியில் நடைபெற்ற ஒவியப்போட்டி ஒன்றில் திருவரங்கம் கருட மண்டபத்தை வரைந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார் சித்தார்த். கட்டட வடிவமைப்பாளர் ஆகவேண்டும் என்பது அவரது லட்சியம். ஓவியக்கலையின் மூலம் தொடர்ந்து மக்களுக்குத் தொண்டாற்றும் விருப்பமும் தொடர்கிறது. சித்தார்த்தின் பெற்றோர்களான திரு. கேசவன் துப்பில் மற்றும் திருமதி. சாந்தி இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து அமெரிக்கா குடிபெயர்ந்தனர்.
இந்தத் தலைமுறை இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழும் சித்தார்த் துப்பில் இன்னும் பலவற்றைச் சாதிக்கத் தென்றல் வாழ்த்துகிறது.
தகவல்: திருமதி. சாந்தி துப்பில் கட்டுரை: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|