|
|
|
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.
*****
கேள்வி (தொடர்ச்சி): நான் ஒரு நிறுவனத்தை ஓர் இணைநிறுவனருடன் சேர்ந்து ஆரம்பித்தேன். எனக்கு வணிகத்துறையில் திறமையிருந்ததால் நானே தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணிபுரிந்து வந்தேன். நிறுவனம் நன்கு வளர்ந்துவிட்டதால், ஒரு தொழில்முறை (professional) CEOவை அமர்த்தியுள்ளோம். என் நிறுவனர் பங்குகள் முழுவதும் காலம் தேர்ந்தாயிற்று (vested). இந்தச் சூழ்நிலையில் நான் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி நிறுவனத்தை மேலும் வளர்ப்பது நல்லதா? அல்லது கொஞ்சகாலத்தில் விட்டு நீங்கி வேறு புதுநிறுவனம் ஒன்று ஆரம்பித்து அதில் கவனம் செலுத்துவது நல்லதா? எனக்கு இரண்டில் எது மேன்மையானது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன? (தொடர்கிறது)
கதிரவனின் பதில்: சென்ற பகுதிகளில், இருப்பதா, செல்வதா என்பதை முடிவு செய்வது எளிதல்ல என்றும், இரண்டு முடிவுக்கும் தகுந்த காரணங்கள் உண்டு; எது சரியான வழி என்பது அவரவர் நிலைமையையும் பலதரப்பட்ட அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு செய்யவேண்டும் என்றும் கண்டோம். மேலும் விலகுவதற்கான பல காரணங்களை விவரித்தோம்.
இப்பகுதியில், லாகவமாக விலகிக்கொள்வது எப்படி என்றும் விலகாமல் தங்கிப் பணிபுரிவதற்கான காரணங்களை ஆராய்வோம். (முன்பு குறிப்பிட்டபடி, நிறுவனம் மற்றொரு பெரிய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதன் அங்கமாக இருப்பினும் இக்காரணங்கள் ஒத்துவரும். பொதுவாக நிறுவனம் என்று குறிப்பிடுவது, பெரும் நிறுவனத்தின் அங்கமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்).
விலகுவது என்று முடிவு செய்தபின் அதைச் சூசகமாகச் செயலாக்க வேண்டும். முதலாவதாக உங்கள் புதுத்தலைவர் மற்றும் இயக்குனர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பநிலை நிறுவனர்களுக்கு உயர்நிலையில் உள்ளவர்களின் நற்தொடர்பு மிக அத்தியாவசியம். நீங்கள் பிற்காலத்தில் எதற்கு முனைந்தாலும்,மூலதனத்தார் அல்லது முதற்குழுவில் நீங்கள் ஈர்க்க முனைபவர்கள், உங்களைப்பற்றி உங்கள் முந்தைய நிறுவனத்தில் தங்கள் தொடர்புகள் மூலம் விசாரிப்பார்கள். அதனால், மனக்கசப்பைத் தவிர்ப்பது மிகமுக்கியம். விலகுவதற்கான நற்காரணங்களை மட்டும் அவர்களிடம் எடுத்துக் கூறி அவர்களின் பூரண சம்மதத்தோடு விலக வேண்டும். மேலும் உங்கள் சக ஊழியர்கள் உங்கள் விலகலால் பயந்துவிடாமல், அல்லது அவசரப்பட்டு விலகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் நற்காரணங்களாகக் கூறி விளக்குவது நல்லது. (ஓரிரு மிகமுக்கிய சகாக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதும் தவிர்க்கமுடியாமல் இருக்கலாம். அப்படியானால், அவர்களையும் ரகசியம் காக்க வற்புறுத்த வேண்டும்).
விலகுவதைப் பற்றி நன்கு அலசியாயிற்று. இப்போது தங்குவதைப் பற்றி விவரிப்போம்.
நீங்கள் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டு விலகாமல் மேலும் தொடர்ந்து பணிபுரிவதற்கான முதல் முக்கியக் காரணம், உங்கள் சேவை நிறுவனத்துக்கு இன்னும் மிகவும் தேவை என்பதுதான்! ஏன் அப்படி? அதற்கும் பல உபகாரணங்கள் உள்ளன! இதோ குறுகிய பட்டியல்:
• முதற்படி, நிறுவனத்தின் நுணுகிய வணிகப் பரப்பு (market landscape), மற்றும் வணிகத் தந்திரங்கள் (business strategies) போன்றவை நிறுவனரான உங்களுக்கே மிக நன்றாகத் தெரிந்திருக்கும். புது மேலாண்மைக் குழுவுக்கு அவை அத்துப்படியாகும் வரை நீங்கள் இருந்து உதவுவது நிறுவனத்தின் தொடர்ந்த வெற்றிக்கு இன்றியமையாதது ஆகலாம். புதுத்தலைவர் தனக்கே நன்மை எது என்பதை நன்கு உணர்வாரே ஆனால், உங்களை நாடி நிறுவன நுணுக்கங்களை ஆழமாகப் புரிந்து கொள்ளும்வரை உங்களை விலக விடமாட்டார்! (நெட்ஸ்கேலரை ஸிட்ரிக்ஸ் நிறுவனம் வாங்கிய பிறகு, என் அனுபவம் இதேதான். ஒரு வருடத்தில் நீங்க முற்பட்ட என்னை மூன்று வருடம் தங்கவைத்து விட்டார்கள்!)
• நிறுவனத்தின் மூலக்கருவான தொழில்நுட்பத்தில் (core technology) உங்களை விடச் சிறந்த விற்பன்னர் இல்லாதிருக்கலாம், அல்லது உங்கள் தீர்க்கதரிசனம் (vision) நிறுவனத்தின் விற்பொருளை உன்னதமாக்கத் தேவைப்படலாம். (இதைப்பற்றி பிறகு மேற்கொண்டு விவரிப்போம்).
• நீங்கள் விலகிவிட்டால், உங்களோடு நெருங்கிப் பணியாற்றிய சில அத்தியாவசியமான மேலாண்மையாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் உங்களைப் பின்பற்றி வெளியேறக் கூடும். அதனால், அவர்கள் நிறுவனத்தின் புது மேலாண்மையுடன் ஒத்துப் பழகும்வரை தங்கி ஊக்குவிக்க வேண்டியிருக்கலாம். |
|
விலகாமல் தொடர்ந்து பணி புரிவதற்கான அடுத்த முக்கியக் காரணம், உங்களுக்கே உள்ள ஆர்வமும் பரபரப்புமே! புதுத் தலைவருடன் தோளோடு தோள்சேர்ந்து வேலை செய்து அவரிடமிருந்து பல நிறுவன மேலாண்மை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஆவல் இருக்கலாம். ஏன்! அதையே காரணமாகக் கொண்டு நீங்களே அவரை நிறுவனத்துக்கு ஈர்ப்பதற்கு தூண்டுகோலாகக் கூட இருந்திருக்கலாம். அப்படியானால் அந்நோக்கத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் வரை நிறுவனத்தில் தொடர்வதுதானே சரி?
மற்றொரு முக்கியக் காரணம், வேலை அம்ச மாற்றம். அதாவது, புதுத்தலைவர் வரும்வரை நீங்கள் தலைவராக அல்லது பொறியியல் உபதலைவராக இருந்திருக்கலாம். புதுத்தலைவர் வந்தது, அப்பாடா விட்டது சனியன் என்று அத்தகைய பொறுப்புக்களை அவர்மீதோ, அல்லது அவர் அமர்த்தும் மற்றொருவர் தலையிலோ சுமத்திவிட்டு, அக்கடா என்று நீங்கள் உண்மையில் விரும்பும் வேலையில் ஊக்கத்துடன் முழுச்சக்தியுடன் ஈடுபடலாம். நீங்கள் தலைவராக இருந்திருப்பின், வணிகத் தந்திரங்களிலோ (business strategy), வாடிக்கையாளர்களுக்கு உங்கள் விற்பொருளைப் பிரசாரிக்கும் பணியிலோ அல்லது வேறு சிறு நிறுவனங்களை அல்லது தொழில்நுட்பங்களை வாங்கும் குழுவுக்கு உதவுவதிலோ ஊக்கம் செலுத்தலாம். பொறியியல் உபதலைவராக இருந்திருக்கும் பட்சத்தில், முதன்மை தொழில்நுட்ப வல்லுனராகவோ (chief technology officer, CTO), அல்லது முதன்மை ஆராய்ச்சி வல்லுநராகவோ (chief research scientist) ஆர்வத்துடன் தொடரலாம்.
விலகாமல் தொடர்வதற்கான மற்றொரு முக்கியக் காரணம், பங்குகள் இன்னும் சேர வேண்டியவை உள்ளன என்பது. உங்கள் விஷயத்தில் பங்குகள் அத்தனையும் சேர்ந்தாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரிடும் மற்றவர்களுக்கு மொத்தப் பங்குகளும் சேர்ந்திருக்காத நிலை இருக்கக்கூடும். அப்படியானால், நிறுவனம் வெற்றியடையக் கூடியது என்றால், தொடர்ந்து பணியாற்றிப் பங்குகளைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் தூங்கிக்கொண்டே சேர்க்கலாம் (vesting in peace) என்பது தக்கதல்ல. பிற்காலத்தில் தவறான அபிப்பிராயம் உருவாகும். அதைக் கவனத்தில் இருத்தி, நிறுவனத்துக்குத் தக்க பலனளிக்கும் பணியாற்ற வேண்டும்.
அடுத்து, தொடர்வதற்கான காரணங்களையும், “இருந்தாலும் சென்றாலும் பேர் சொல்ல வேண்டும்” என்பதற்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|