|
|
|
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!
*****
கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஓர் இணை நிறுவனருடன் சேர்ந்து ஆரம்பித்தேன். எனக்கு வணிகத் துறையில் திறமையிருந்ததால் நானே தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணிபுரிந்து வந்தேன். நிறுவனம் நன்கு வளர்ந்துவிட்டதால், ஒரு தொழில்முறை (professional) CEOவை அமர்த்தியுள்ளோம். என் நிறுவனர் பங்குகள் முழுவதும் காலம் தேர்ந்தாயிற்று (vested). இந்தச் சூழ்நிலையில் நான் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி, நிறுவனத்தை மேலும் வளர்ப்பது நல்லதா? அல்லது கொஞ்ச காலத்தில் நீங்கி, வேறு புது நிறுவனம் ஒன்று ஆரம்பித்து அதில் கவனம் செலுத்துவது நல்லதா? இரண்டில் எது மேன்மையானது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?
(தொடர்கிறது)
கதிரவனின் பதில்: சென்ற பகுதிகளில், இருப்பதா, செல்வதா என்பதை முடிவுசெய்வது எளிதல்ல; இரண்டு முடிவுக்கும் தகுந்த காரணங்கள் உண்டு; எது சரியான வழி என்பது அவரவர் நிலைமையையும் பல தரப்பட்ட அம்சங்களையும் கணக்கில் கொண்டு முடிவுசெய்ய வேண்டும் என்று கண்டோம். மேலும் விலகுவதற்கான பல காரணங்களையும், தொடர்வதற்கான சில காரணங்களையும் விவரித்தோம். இப்பகுதியில், விலகாமல் தங்கிப் பணி புரிவதற்கான இன்னும் சில காரணங்களையும், அதற்கான நடத்தை நெறிகளையும் ஆராய்வோம். (முன்பு குறிப்பிட்டபடி, நிறுவனம் மற்றொரு பெரிய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதன் அங்கமாக இருப்பினும் இக்காரணங்கள் ஒத்துவரும். பொதுவாக நிறுவனம் என்று குறிப்பிடுவது, பெருநிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் வைத்துக்கொள்ளலாம்).
தொடர்வதற்கான காரணங்களில், இதுவரை குறிப்பிட்டவை: தங்களின் சேவை நிறுவனத்துக்கு இன்னும் தேவை; புதுத் தலைவருடன் சேர்ந்து பணியாற்றுவதில் உங்கள் ஆர்வம்; பங்குகள் இன்னும் முழுவதும் சேராதது (not fully vested).
பங்கு சேர்த்தல்போல், வருமானத் தேவை என்றாலும் (பங்குகள் முழுவதும் சேர்ந்த பின்னரும்கூட), வேறு வேலை கிட்டும்வரை நிறுவனத்தில் தொடர வேண்டியது அவசியமாகலாம். யோசித்துப் பாருங்கள். தற்போதைய நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட வருமானமே இல்லாமல் குடும்பத்தையும் வருத்தியிருக்கலாம். இப்போது நிறுவனம் வளர்ந்துள்ள நிலையில் மாதாமாதம் நல்ல சம்பளம் வந்து கொண்டேயிருக்கும். அதனால், தொடர்ந்து பணிபுரிவது உங்கள் பொருளாதார நிர்பந்தமாக இருக்கக்கூடும்.
அதற்கும், பங்கு சேர்த்தலுக்குக் கூறியதுபோல் நிறுவனத்துக்குப் பலனளிக்கும் பணியாற்ற வேண்டும்.
விலகாமல் தொடர்ந்து பணிபுரிய இன்னொரு முக்கியக் காரணம் உங்கள் தொழில்முனைவுத் (entrepreneurial) தொடர்ச்சி. என்னடா இது, முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே என்கிறீர்களா? இல்லை. ஏனெனில், அடுத்த நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று உங்கள் உள்ளம் துருதுருத்தாலும், உடனே தற்போதைய வேலையை விட்டு விலகிவிட வேண்டும் என்பதில்லையே! ஆரம்பிக்குமுன், அந்த வாய்ப்பைப் பற்றி முதலில் பல கோணங்களில் ஆராய்வது நல்லது. அதற்குக் காலம் தேவை. மேலும், ஓர் இணை நிறுவனரையாவது சேர்த்துக்கொள்வது நல்லது. இப்போதைய நிறுவனத்தின் இணை நிறுவனர் விலகத் தயாராக இருந்தால் சரி. இல்லையென்றால், அத்தகையவரைத் தேடி, ஒருமனதாக இணையச் சற்று வாரங்களோ, மாதங்களோ பிடிக்கும். அதற்குப் பிறகும், ஆரம்பநிலை சிறு மூலதனம் சேர்க்கச் சற்று நேரமாகும். இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தற்போதைய நிறுவனத்தில் சற்றுக் காலம் இருந்து, அதற்குப் பலன்தரும் பணி புரிந்துகொண்டே அடுத்த முனைவிற்குத் தயார் செய்துகொள்வது உசிதம் என்று கருதுகிறேன். ஆனால் அது மாதக் கணக்காக இருக்கலாமே ஒழிய வருடக் கணக்கானால் உங்களுக்கு, நிறுவனத்துக்கு என இரு தரப்புக்குமே நல்லதல்ல!
இதுவரை விலகுவதற்கும், தொடர்வதற்குமான காரணங்களை அலசியாயிற்று. இனி விலகும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று காண்போம். |
|
முதலாவது, விலகுவது என்று இறுதியாக முடிவு செய்தவுடன், புதுத்தலைவரை நேரில் சந்தித்து அவரிடம் உங்கள் முடிவுக்கான காரணங்களை நல்லபடியாக விளக்கிவிடுவது நல்லது. அதை எவ்வாறு விளக்குவது என்பது, காரணங்களைப் பொறுத்து உள்ளது! உங்கள் தனிப்பட்ட வாய்ப்பு அல்லது நிர்ப்பந்தத்தினால் விலகுகிறீர்கள் என்றால் ஒளிவு மறைவின்றி விளக்குவது நல்லது. பொதுவாக அப்படிப்பட்ட தருணத்தில் புதுத் தலைவருக்கு நிறுவனத்துக்கு உதவாமல் வெளியேறுகிறீர்களே என்று வருத்தம் ஏற்படலாம். அது உங்களுக்குப் பெருமை தரக்கூடியதுதானே. இருந்தாலும், நல்லதனமாகப் பேசி, உங்கள் விலகல் தவிர்க்க முடியாதது என்பதை விளக்கி அவருக்கு என்ன உதவி தேவையானாலும் ஆலோசகராகத் தொடர்ந்து செய்வதாக வாக்குறுதியளித்தால், உடனே இல்லாவிட்டாலும், நாளடைவில் சமாதானமாகிவிடுவார்.
ஆனால் எதாவது மனத்தாங்கலினால் விலகுகிறீர்கள், அதுவும், புதுத் தலைவரின் முடிவுகளோடு கருத்து வேறுபாடு அல்லது அவரது மேலாண்மை நடைமுறை பிடிக்காமல் விலகுவதானால் சற்று பூசி மெழுகி நல்லதனமாக விலகுவதுதான் உங்களின் வருங்காலத்துக்கு நல்லது. விலகிய பின் நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் இந்த நிறுவனத்திலிருந்து ஏன், எப்படி விலகினீர்கள் என்ற கேள்வி எழும். உங்களுக்குத் தெரியாமல் பின்புறத் தொடர்புகள் மூலம் நிறுவனத்தில் விசாரிப்பார்கள். மனக்கசப்பு ஏற்படுத்தி விலகினால், அது உங்கள்மேல் பழியாக உணரப்படலாம். தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் மனக்கசப்பின்றி விலகமுடியாமல் போகலாம். அப்படியானால், பிற்கால வாய்ப்புகளில் இக்கேள்வி எழும்போது ஒரு குழப்பத்துக்கும் இடங்கொடாமல் மொத்த விவரங்களையும் பளிச்சென்று விளக்கத் தயாராக இருக்கவேண்டும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்களாக விலகுகிறீர்கள் என்பதால், வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்றில்லாமல், நிறுவனத்துக்கு பங்கம் எதுவும் ஏற்படாமல் நிறுவனத்துக்குத் தேவையான அளவு அவகாசமளித்து, உங்கள் பொறுப்புக்களைச் சரியானவர்களுக்கு மாற்றியளித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சியும் அளித்து சுமுகமாக விலகிக்கொள்ள வேண்டும். இதைச் சரியான வழிமுறையில் செய்தால் நீங்கள் விலகினால் ஒரு படபடப்பும் இன்னலுமின்றி நீங்கள் இருந்திராததே போல் நிறுவனம் தடுமாற்றமின்றி வேலை செய்யவேண்டும்! (அது உங்கள் தற்பெருமைக்குப் பங்கம் என்றாலும் அதுதான் சரிவழி!). சில சமயம் நீங்கள் விலகுகிறீர்கள் என்று கூறியவுடன், "அப்பாடா தொல்லை ஒழிந்தது" என்ற எண்ணத்துடன் உங்களை உடனே இடத்தைக் காலி செய்யக் கூறவும் வாய்ப்புண்டு! மனக்கசப்பிருந்தால் இது நிச்சயம்! அதனாலென்ன, பரவாயில்லை! நீங்களும் "தொல்லை விட்டது" என்ற நிம்மதியுடன் வெளியேறி உங்கள் வருங்காலத்தைக் கவனியுங்கள்! அடுத்து, விலகாமல் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்தால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்பவற்றைக் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|