Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13a)
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2017|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்துவளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.

*****


கேள்வி (தொடர்ச்சி): நான் ஒரு நிறுவனத்தை இணைநிறுவனர் ஒருவருடன் சேர்ந்து ஆரம்பித்தேன். எனக்கு வணிகத் துறையில் திறமையிருந்ததால் நானே தலைமை நிறுவன அதிகாரியாகப் (CEO) பணிபுரிந்து வந்தேன். நிறுவனம் நன்கு வளர்ந்து விட்டதால், ஒரு தொழிற்பண்பட்ட (professional) CEOவை அமர்த்தியுள்ளோம். என் நிறுவனர் பங்குகள் முழுவதும் காலம் தேர்ந்தாயிற்று (vested). இந்த சூழ்நிலையில் நான் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி நிறுவனத்தை மேலும் வளர்ப்பது நல்லதா? அல்லது கொஞ்ச காலத்தில் வெளியேறி, வேறு புது நிறுவனம் ஒன்று ஆரம்பித்து அதில் கவனம் செலுத்துவது நல்லதா? எனக்கு இரண்டில் எது மேன்மையானது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?

கதிரவன்: சென்ற பகுதியில், இருப்பதா, செல்வதா என்பதை முடிவு செய்வது எளிதல்ல என்றும், இரண்டு முடிவுக்கும் தகுந்த காரணங்கள் உண்டு; எது சரியான வழி என்பது அவரவர் நிலைமையையும் பல தரப்பட்ட அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு செய்யவேண்டும் என்றும் கண்டோம். இப்பகுதியில் அத்தகைய அம்சங்களை ஆராய்வோம்.

முதலில் விலகிச் செல்வதற்கான காரணங்களையும் அதை லாகவமாக எப்படிச் செய்வது என்றும் பார்ப்போம். நிறுவனத்தை ஆரம்பித்து, நடத்தியவர்கள் வேறோருவர் தலைமை ஏற்கும் பட்சத்தில் தாங்கள் விலகிவிட நினைப்பது இயல்புதான். அதைப்பற்றி அலசுவது சற்று எளிது. அதற்குப் பிறகு இன்னும் கடினமான விஷயமான, கூடவே இருந்து வளர்ப்பதை அலசுவோம்.

விலகுவது இயல்பானது என்பதற்கு ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது. புதுத்தலைமை வரும் பெரும்பாலான தருணங்களில், நிறுவனத்தை ஆரம்பித்து தலைமைப் பொறுப்பை வகித்தவர் இனித் தொடரக்கூடாது என்று நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் (board of directors) முடிவுக்கு வந்துதான் மாற்றும் முடிவெடுப்பார்கள். அதாவது, நிறுவனர், நிறுவனத்தின் அடுத்தநிலை வளர்ச்சிக்குத் தகுந்தவரல்ல, அல்லது நிறுவனத்துக்கு ஏதாவது பிரச்சனை அளிப்பவர் என்பதனால் வேறு தலைமையைத் தேடி அமர்த்துவர். அப்படியானால், நிறுவனர் அந்த மாற்றத்துக்குச் சம்மதித்தாலும், அந்த நிறுவனருக்கு மனத்தாபம் ஏற்படுவது சகஜந்தானே? அப்படியானால் விலகுவது இயல்பு என்கிறேன்.

மேலும், நிறுவனம் ஓரளவு பெரியதாக வளர்ந்து விட்டிருந்தால் ஆரம்பகாலத்தில் இருந்த வேகம் குறைந்து, விவேக மனப்பான்மை வந்து பல வழிமுறைகளைக் கையாண்ட பிறகே முடிவுகள் எடுக்கப்படும். அதுவும் பலருடைய கருத்துக்களையும் (அவை வேண்டாதவையாக இருப்பினும்) அலசிய பின்பே முடிவுகளை எடுக்க இயலும். ஆரம்பகாலத்தில் தனியாகவோ அல்லது ஒரு மிகச்சிறிய குழுவிலோ வேகமாக முடிவெடுத்துப் பழகிய நிறுவனருக்கு இருப்புக்கொள்ளாது. விலகி, வேறொரு நிறுவனத்தை ஆரம்பித்து அதே விறுவிறுப்பை மீண்டும் உணர விழைவது இயல்பு.

அதனால் விலகுவது ஓர் அடிப்படை உள்ளுணர்வாக இருக்கலாம். தவிர விலகுவதற்கு அதற்குமேல் ஓரிரு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, தலைமையாளராக இருந்த நிறுவனருக்கு முழுச்சம்மதம் இல்லாமல் இருக்கலாம். அதனால், அவர் நிறுவனத்தில் (இயக்குனர் உட்பட) ஏதாவது பொறுப்பில் தொடர்ந்தால், புதுத்தலைவரைத் தன் உபாயங்களையும் திட்டங்களையும் தடையின்றிச் செயலாக்க விடாமல் ஏதாவது முட்டுக்கட்டை போட்டோ, சிறுகுற்றம் கண்டு குத்திக் காட்டிக்கொண்டேயோ இருக்கக்கூடும். பழி வாங்குவதற்கு ஏதாவது சதி செய்தாலும் செய்யலாம். இது புதுத்தலைவருக்கு மட்டுமல்லாமல், நிறுவனம் பிழைத்திருப்பதற்கே அபாயமாகவும் இருக்கக் கூடும். அம்மாதிரிச் செய்வது தலைமை நிறுவனராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறுவனத்தில் பெரும்பங்கு உடைய வேறோரு உறுப்பினர் பதவி விலக்கப்பட்டாலும் இந்த விளைவு ஏற்படலாம்.

சமீபத்தில் இப்படிப்பட்ட நிலைமை ஒரு நிறுவனத்துக்கு ஏற்பட்டு, அதை இழுத்து மூடிவிட்டார்கள். பதவி விலக்கப்பட்டு இயக்குனர் குழுவில் தொடரும் உரிமை பெற்ற நிறுவனர் ஒருவர், நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்து, பெரும் வாடிக்கையாளர்கள், புது மூலதனத்தார் யாரும் வரவிடாமல் தடுத்து நிறுவனம் மூச்சுவிட முடியாமல் செய்து மூடச் செய்துவிட்டார். இதனால் யாருக்கு என்ன லாபம்! அவரது பழி வாங்கும் எண்ணத்தால், யாருக்கும் பயனில்லாத வைக்கோல் போர் நாய்போல் நடந்துகொண்டார். தயவுசெய்து இம்மாதிரி யாரும் செய்யக்கூடாது. பூஜ்யத்தின் நூறு சதவிகிதமும் பூஜ்யந்தான் அல்லவா? பழிவாங்க முற்படாமல், விலகிக்கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சியால் அவரது நிறுவிய பங்கு ஓரளவாவது மதிப்படைந்தால் யாவரும் பயனடந்திருப்பார்கள். அதைத்தான் நானும் பரிந்துரைப்பேன். இயக்குனர் வாரியம் சம்மதமின்றி பதவிநீக்கிய மனக்கசப்பில் பழிவாங்க முயலாமல் மொத்தமாக விலகிக்கொள்வது நல்லது.

அப்படிப்பட்ட நிலைமையில்லாமல், தற்போது பதவியிலிருப்பவர் சம்மதத்துடனேயே புதுத்தலைவர் வந்தாலும் விலகவேண்டிய நிலைமை உருவாகக்கூடும். முதலில் பிரச்சனையின்றி நிறுவனம் நடக்கலாம். ஆனால் போகப்போக, புதுத்தலைவரின் முடிவுகளையும் திட்டங்களையும் பற்றிய கருத்து வேறுபாடுகளால் கூட்டுறவு முறிந்து மனக்கசப்பு வளர்ந்து முன்பு கூறியதுபோல் கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்லும் பிரச்சனைகள் எழக்கூடும். அப்படி ஆகிவிட்டால், புதுத்தலைவர் தன் வழிப்படி நடத்த வாய்ப்பளித்து விலகிவிடுவது நல்லது.

ஆனால் அதற்கு ஒரு விதிவிலக்கு உள்ளது. புதுத்தலைவர் உண்மையாகவே திறமையின்றி, அல்லது நிறுவனத்தின் வணிக வாய்ப்பைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான முடிவுகளும் திட்டங்களும் எடுக்கிறார் என்று நீங்கள் உண்மையாகவே கருதினால், விலகுவது தவறான முடிவாகலாம். இதைப்பற்றி முதலில் இயக்குனர் வாரியத்தோடு கலந்தாலோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், நீங்கள் நன்முனைப்போடு தங்கிப் பணி புரிந்தாலும், உங்கள் கருத்துக்களைப் புது மேலாண்மையாளர் குழு மதிக்காமல் போகக்கூடும். புதுத் தலைவரோடு பல வருடங்களாகப் பணிபுரிந்த நம்பத் தகுந்தவர்களை அவர் ஈர்த்து சேர்த்துக்கொள்வது சகஜம். அதனால், நீங்கள் பதவியில் அமர்த்திய சிலர் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடும். மற்றும், என்ன நிறுவனராலும், வணிகத் துறையின் நுணுக்க அம்சங்களை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தாலும் இந்தப் புதுக்குழு, உங்களை ஓரங்கட்டிவிட்டு, தமக்குள்ளேயே கலந்தாலோசித்துக் கொள்ளக்கூடும். அப்படியானால், முக்கிய கலந்துரையாடல்களுக்கு உங்களை அழைக்கமாட்டார்கள். முக்கிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். உங்கள் நிறுவனத்திலேயே நீங்கள் ஒரு அன்னியர்போல உணர்வு எழக்கூடும்.

இப்படிப்பட்ட நிலை உண்டானால், நிலைமை மோசமாகி, வெளிப்படையாக பயனற்றவர் என்று உங்களை அவமானப் படுத்துவதற்குள் நீங்களாக விலகிக்கொள்வதே நல்லது!

ஊதியத் தேவை, அல்லது நிறுவனர் பங்குகள் இன்னும் மொத்தமாக உரிமையாகாவிடில் இன்னும் சில காலம் பல்லைக் கடித்துச் சகித்துக்கொண்டு விலகுவதைத் தள்ளிப் போடலாம் என்று தோன்றலாம். சரிதான். ஆனால் உங்களையும் வருத்திக்கொண்டு, நிறுவனத்துக்கும் பங்கம் வரும் நிலைமை ஆகிவிடக் கூடாதல்லவா? அதைப்பற்றிப் பிறகு விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline