|
தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு? (பாகம் - 7 |
|
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2009| |
|
|
|
|
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தற்போதைய பொருளாதாரப் புயல் சூழ்நிலையில் எப்படிப் பிழைப்பது என்றும், அதற்கும் மேலாக, தழைத்து மீண்டும் வளர்வது எப்படி என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளும் என் கருத்துக்களும் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன. சென்ற பகுதிகளில், மீண்டும் பொருளாதார நிலை அனுகூலமாக ஆரம்பிக்கும் போது, மூலதனத்துக் கவர்ச்சியுடன் மீண்டும் தழைத்து வளர்வதற்குத் தயாராக இருப்பதற்கு ஆயத்தமாகும் முறையில் செயல் படவேண்டும் என்று பார்த்தோம். அதற்கான செயல்முறைப் பட்டியல் ஒன்றும் அளிக்கப்பட்டது. அப்பட்டியலிலிருந்து இதுவரை செலவுக் குறைப்பு, கவனக் கூர்மை, எண்ண மறுபரிசீலனை பற்றி விவரித்தோம். பட்டியலின் மற்ற செயல்முறைகளைத் தொடர்கிறோம்... *****
சரி, விற்பொருள் தயாரிப்பிலும் வணிக ரீதியிலும் எண்ணங்களை எப்படி மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறினீர்கள். நல்லதுதான். ஆனால் அதற்கெல்லாம் கையில் காசிருக்க வேண்டுமே! அமெரிக்க ஆரம்பநிலை மூலதனத்தார் மிகவும் தயங்கும் இந்நிலையில் எப்படி மூலதனம் பெறுவது. வேறு வழிகள் உள்ளனவா?
அதிர்ஷ்டவசமாக, சிலிக்கான் வேலியிலும் அமெரிக்காவில் மற்ற இடங்களிலுமுள்ள ஆரம்பநிலை மூலதன நிறுவனத்தார் மற்றுமல்லாமல், நிதி திரட்ட வேறு மூலங்களும் உள்ளன! எதையுமே எளிதான வழி என்று கூறிவிட முடியாது. ஆனால், தரமான நிறுவனங்கள் தீவிரமாக முயற்சியெடுத்து வலையை விரிவாக வீசினால், மற்ற வழிகளில் நிதி திரட்ட வாய்ப்புள்ளது.
| வெறும் பணம் கிடைக்கிறது என்று மட்டுமே வாங்கிக் கொண்டால், உங்கள் நிறுவனத்துக்கு சரிப்படாத செயற்கையான வழிமுறைகளில் சென்று, வருங்காலத்தில் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும் பெரும் நங்கூரங்களாக மாறிவிடக் கூடும்! | |
முதலாவதாக, அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகில் வேறிடங்களிலுள்ள ஆரம்பநிலை மூலதனத்தாரை எடுத்துக் காட்டலாம். 2001ல் டாட்-காம் கொப்புளம் வெடித்தபோது எப்படிச் சமாளித்தீர்கள் என்று ஒரு நிறுவனத்தினருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அமெரிக்காவில் 100-க்கும் மேலான மூலதனத்தாரால் நிராகரிக்கப் பட்டவுடன், லண்டனில் உள்ள ஒரு மூலதன நிறுவனத்திடமிருந்துதான் பெற முடிந்ததாகக் கூறினார்கள். நிதி ஒட்டு மொத்தமாக வற்றிய அபாய நிலையில் கிடைத்த அந்தச் சிறு மூலதனத்தை வைத்து நிறுவனத்தை வளர்த்து நூற்றைம்பது மில்லியன் டாலர் தொகைக்கு சில வருடங்களுக்குப் பிறகு அதை விற்றார்கள்.
நகர்வுத் தொலைத் தொடர்பு (mobile communications) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஐரோப்பா, ஜப்பான் போன்ற இடங்களிலிருந்து மூலதனம் பெறுவது பல வருடங்களாகவே புழக்கத்துக்கு வந்துள்ளது. சமீப காலத்தில், இத்துறையில் தென்கொரியா, சீனா மற்றும் இந்தியாவிலிருந்து மூலதனம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. (பலகோடி சந்தாதாரர்கள் பெறும் வளர்ச்சியில் வந்துள்ள உத்வேகம்!) சமீபத்தில் சிங்கப்பூர், துபாய் போன்ற பணத்திரட்சி இடங்களிலிருந்தும் மூலதனம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அங்கு யாரோடாவது தொடர்பிருந்தால் முயற்சிக்கலாம். அதற்கு வசதி செய்து கொடுக்கும் தரகர்களும் உள்ளார்கள்; கிடைக்கும் நிதியில் ஒரு சதவிகிதம் எடுத்துக் கொள்வார்கள்.
இந்தியாவிலும் சீனாவிலும் மற்றும் இஸ்ரேலிலும் ஆரம்பநிலை நிதித்துறையில் அதிக அளவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பெரும் நிதி நிறுவனங்கள் தாங்களேவோ, அங்குள்ள சிறிய நிறுவனங்களை வாங்கியோ, கூட்டுச் சேர்ந்தோ மூலதனமிட ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் அத்தகைய மூலதனங்கள் அவ்வவ்விடங்களில் மட்டுமே கிடைக்கக் கூடும். அதாவது, அமெரிக்காவில் மையத்தை வைத்துக் கொண்டு, அவ்விடங்களில் ஒரு சிறு கிளை மட்டுமே இருந்தால் மூலதனம் கிடைக்காமல் போகலாம். அது மட்டுமல்லாமல், மூலதனம் கிடைத்தாலும் அவ்விடங்களுக்கே உரித்தான வணிகக் கோணத்தில் கொடுக்கப் படலாம். இதைப்பற்றி முழுவதும் புரிந்து கொள்வது நல்லது. உதாரணமாக, இந்தியாவிலிருந்து கிடைக்குமானால் அங்கு எவ்வளவு வணிக முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இருக்கலாம். |
|
உங்கள் நிறுவனத்திற்கு அத்தகைய இடம் குறித்த கோணங்கள் இருக்குமானால் (நகர்வுத் தொலைத் தொடர்பு இதற்கு ஒரு நல்ல உதாரணம்) இத்தகைய மற்ற வட்டார மூலதனங்கள் நன்கு பொருந்தும். அப்படி இல்லாமல் வெறும் பணம் கிடைக்கிறது என்று மட்டுமே வாங்கிக் கொண்டால், உங்கள் நிறுவனத்துக்கு சரிப்படாத செயற்கையான வழிமுறைகளில் சென்று, வருங்காலத்தில் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும் பெரும் நங்கூரங்களாக மாறிவிடக் கூடும்!
ஆனாலும், தீர யோசித்துச் செயல் பட்டால், இத்தகைய மாற்று வட்டார மூலதனங்கள் தற்கால நிதித்தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதோடு, வருங்கால வணிக விரிவுக்கும் உதவக் கூடும். அமெரிக்காவில் மட்டும் விற்கும் முயற்சிக்கான அணுகுமுறையல்லாமல் உலகத்தில் உங்கள் விற்பொருளுக்கு எங்கு மிக்க தேவையுள்ளது, எங்கு அது சரியாகப் பொருந்துகிறது என்று முன்கூட்டியே யோசித்து முயற்சிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு அதனால் வருங்காலத்தில் வணிகம் உலகளாவிப் பரவி முன்பு கணித்திருந்ததை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால், இத்தகைய மற்ற உலக வட்டார மூலதனத்தாரிடமிருந்து மூலதனம் பெறுவதின் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் பற்றித் தீர அலசி ஆராய்ந்துவிட்டு மூலதனம் பெற முயலுங்கள்.
மூலதனத்தார் மட்டுமல்லாமல், சில அயல்நாடுகள் உயர்தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் நாட்டில் ஓர் ஆராய்ச்சி/தயாரிப்பு மையம் (research and development center) அல்லது உற்பத்தி (production) மையம் ஆரம்பிப்பதற்காக ஊக்க முறையில் நிதியுதவியும் மற்ற அனுகூலங்களையும் தருகின்றன. உதாரணமாக சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களைக் கூறலாம். அங்கு ஆராய்ச்சி தயாரிப்பு மையம் வைத்துக் கொண்டால் சம்பளப் பணத்தில் 75 சதவிகிதம் இரண்டாண்டு காலத்துக்கு ஒரு மில்லியன் டாலர்கள் வரை அளிப்பதாக ஒரு திட்டமும் உள்ளது. ஆனால், அத்தகைய ஊக்கத் திட்ட்ங்களை பயன்படுத்திக் கொள்வது எளிதல்ல. அவ்விடங்களில் இந்தியா, சீனா போன்ற இடங்களை விட ஊதியத் தொகையும் மற்ற செலவுகளும் அதிகம். அதனால், மொத்தச் செலவு சற்றுதான் குறைகிறது.
முன்பு குறிப்பிட்டது போல், அவ்விடங்களில் விற்பனைக்காக நிச்சயமாக மையம் அமைக்கும் நோக்கம் உறுதியாக இருந்தால், இந்த ஊக்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஊக்க நிதிக்காக மட்டும் புது மையம் அமைக்க முயன்றால் பயனற்ற கவனச் சிதறலாகவே (distraction) முடியக்கூடும். அதனால் இந்தத் திட்டங்களைப் பற்றி தீர யோசித்து, குறைகளைவிடப் பயன் அதிகமுள்ளது என்ற முடிவுக்கு வந்தால் மட்டுமே முன்செல்லுங்கள்.
வேறு நிதி திரட்டு முறைகளைப் பற்றியும் பட்டியிலில் குறிப்பிட்ட மற்ற செயல்முறைகளைப் பற்றியும் இனிவரும் பகுதிகளில் தொடர்ந்து காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|