Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
ஆண்டுக்கொரு முறை தோன்றும் தொழிற்சாலை!?
- ரா. சுந்தரமூர்த்தி|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeவிநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் முன்பே கலகலப்பாகி விடுகிறது சென்னை குயப்பேட்டையின் கந்தசாமி கோயில் தெருவை அடுத்துள்ள மூன்று நான்கு தெருக்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருவுக்குத் தெரு, வீதிமுனை, பிரதான சந்திப்புகள் என்று 5 அடி உயரப் பிள்ளையார், 10 அடி உயரப் பிள்ளையார் எனத் தொடங்கி 35 அடி, 40 அடி என்று பிரமாண்ட பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் சுமார் 15 ஆண்டுகளாக சென்னையில் பிரபலமாகி விட்டது. இந்தப் பிள்ளையார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பிள்ளையார் செய்வதற்கு முன்பணம் கொடுக்கப் போகும் இடம் தான் குயப்பேட்டை. இந்து முன்னணி. இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி நண்பர்கள் சங்கம், குடியிருப்போர் நலச்சங்கம் என்ற அமைப்புகளும் கூட பிள்ளையார் சிலைகளைச் செய்வதற்கு முன்பணம் கொடுக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் வரை வெறிச்சோடி கிடக்கும் குயப்பேட்டைத் தெருக்கள். அதன் பின் சூடு பிடிக்கத் தொடங்கி தெரு முழுக்க பிள்ளையாரின் உருவங்கள் எழுகின்றன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஐந்து பத்து பிள்ளையார்கள் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கிறார்கள். தெருவில் பெரிய பெரிய பிள்ளையார்கள் இருக்கிறார்கள் என்றால் வீட்டின் உள்ளே சின்னச் சின்னப் பிள்ளையார்கள் குவிந்துள்ளனர். வீட்டில் உள்ள பெண்களே அதைச் செய்கின்றனர். இது ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது.

ஒரே சமயத்தில் 108 கணபதியைத் தரிசனம் செய்ய விரும்புகிறவர்கள் குயப்பேட்டைக்குப் போனால் போதும்; அதை விட பன்மடங்கு பிள்ளையார்களை ரகம் வாரியாகத் தரிசித்து விட்டு வரலாம். ஒரே பகுதியில் பிளாஸ்டர் ஆ·ப் பாரிசில் செய்யப்படும் இந்தப் பிரமாண்ட பிள்ளையார்கள், விநாயகர் சதுர்த்திக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடுகின்றனர்.

விநாயகருக்கு மூஞ்சுறுதான் வாகனம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் குயப்பேட்டைக்குப் போனால் அசந்து போவார்கள். அங்கு சிங்கம், யானை, குதிரை என்று விதம் விதமான வாகனங்களில் பிரமாண்ட பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார்.

ஆண்டுதோறும் ஒரே மாதிரி பிள்ளையாரைச் செய்து, பார்த்துப் பார்த்து அலுத்துப் போன பக்தர்கள் அவரை விதவிதமாகச் செய்து பார்க்கும் ஆவலில் புதுப்புது மாடல்களில் ஆர்டர் கொடுக்கிறார்கள்.

பஞ்சமுக கணபதி, உலக உருண்டை மீது நிற்கும் கணபதி, மும்முகக் கணபதி, இதில் இரண்டு மனித முகம். அதில் ஒன்று சிவனின் முகம், மற்றது பார்வதி முகம் என்று புதிய பாணி விநாயகர். பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்ற விநாயகர். ஷீரடி சாய்பாபா மாதிரி சிம்மாசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தலையில் முண்டாசுடன் உள்ள விநாயகர். ராகவேந்திரா சுவாமி மாதிரி துளசி மாடத்தின் கீழே சம்மணமிட்டு அமர்ந்துள்ள விநாயகர். நடராசர் மாதிரி நடமாடும் விநாயகர் என்று தங்கள் கற்பனைக்கு எட்டிய மட்டும் விதவிதமான விநாயகர் சிலைகள் குயப்பேட்டை தெருக்களில் குவிந்து விடுகிறார்கள்.

ரூ.800லிருந்து 15 ஆயிரம் வரை உயரத்திற்குத் தகுந்த விநாயகர் சிலைகள் தயாரித்துத் தரப்படுகின்றன என்கிறார் குயவர் சங்க உறுப்பினர் ஒருவர்.

குயப்பேட்டையில் குறிப்பாகக் குலாளர் எனப்படும் குயவல் இன மக்களே வசிக்கின்றனர். மண்பாண்டங்கள் செய்வதே அவர்களது குலத்தொழிலாக இருந்து வந்துள்ளது.

விநாயகர் செய்வதில் கைதேர்ந்த டில்லிபாபு என்பவரிடம் பேசிய போது, ''இங்குள்ள பெரும்பாலானோர் மதுராந்தகத்தை அடுத்த வீரலூர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். மண்பாண்டம் செய்வதே இவர்களின் குலத்தொழில். ஒரு காலத்தில் இது சிறப்பாகவே நடந்து வந்தது. ஆனால் இன்று மண்பாண்டத் தொழில் நலிந்து விட்டது. ஆனால் இன்று மண்பாண்டத் தொழில் நலிந்து விட்டது. சில்வர், அலுமினியம் பாத்திரங்களின் வருகையினால் மண்பாண்டம் உபயோகிப்போர் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். அதிலும் இன்று நவீனமாகி குக்கர்கள் எல்லாம் வந்துவிட்ட பின் மண்பாண்டத்தின் தேவை என்பது மிகக் குறைவாகி விட்டது.

அதனால், குயவர்கள் மண்பாண்டம் செய்வதை விட்டுவிட்டு மண் பொம்மை செய்யும் தொழிலில் இறங்கினர். நவராத்திரி காலத்தில் அதிகப் பொம்மைகள் விற்கும். அதற்கு முன் கிருஷ்ண ஜெயந்தி. டிசம்பரில் கிறித்துமஸ். அப்போது ஏசுபிரான் செட் பொம்மைகள் விற்கும்.
Click Here Enlargeமண்ணை விட பிளாஸ்டர் ஆ·ப் பாரீஸ் வந்தவுடன் அதற்கு மாறிவிட்டோம். ஆகஸ்ட் மாதத்தில் பிள்ளையார் செய்யும் வேலை நிறையக் கிடைக்கிறது. இதுவும் பொம்மை மாதிரி 'மோல்டு' வேலைதான். பல பாகங்களாக 'மோல்டு' செய்து பெரிய விநாயகரை ஒன்றிணைப்போம்.

பிளாஸ்டர் ஆ·ப் பாரீஸ் என்பது பவுடராகக் கிடைக்கிறது. சென்னையில் கோடம்பாக்கத்தில் அதற்கு வியாபாரிகள் உள்ளனர். பவுடர் தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதியில் இருந்து வருகிறது. கிளிஞ்சல்கள், ஜிப்சம் உப்பு போன்றவையைக் கொண்டு அந்தப் பவுடரைத் தயாரிக்கிறார்கள். அதில் தண்ணீர் கலந்து பிசைந்து களிமண் போல் குழைத்து அதில் உருவங்கள் செய்யப் பயன்படுகிறது. அதில் தேங்காய் நார் கலந்து கெட்டியாகச் செய்கிறோம். பெரிய உருவம் செய்யும் போதுமட்டும் தேங்காய் நார் பயன்படுத்துகிறோம்.

ஆகஸ்டு மாதம் தான் இந்த வேலை. அதன் பின்னர் சினிமாவுக்கு செட் போடுவது, கோயில்களில் சுதைச் சிற்பம் என்று போய்விடுவோம். படித்து நல்ல வேலைக்குப் போகவில்லை என்று நான் கவலைப்பட்டது இல்லை. இந்தக் கைத்தொழிலே எனக்கு நன்கு கைகொடுக்கிறது.

இங்குள்ள பெண்கள் கூட பொம்மை செய்வதில் ஈடுபடுகின்றனர். எங்களுக்கு என்று தனியாக சங்கமும் உள்ளது. பெரிய விநாயகர் ஆர்டரின் பெயரில் தயாராகிறது. சின்னச் சின்ன விநாயகர்களை நாங்களே எடுத்துச் சென்று விற்போம். விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணில் தயாராகும் பச்சை மண் விநாயகரும் நிறைய விற்பனை ஆகும்'' என்கிறார்.

ராஜஸ்தானில் இருந்து வரும் தெருவோர வியாபாரிகளால் இங்கு தயார் ஆகும் பொம்மைகளின் வியாபாரம் கெட்டுப் போச்சு என்று சொல்லும் தனசேகர், நாங்க 50 ரூபா சொல்வதை அவன் 25 ரூபாய்க்குத் தருகிறான். அவங்க பஞ்சம் பொழைக்க வர்றாங்க; என்ன செய்ய முடியும்? இங்கே விருத்தாசலத்தில் பீங்கான் நிறுவனம் தொடங்கி அவங்க பீங்கான் பொம்மை தயாரித்து விக்கறாங்க. அதுவும் எங்க வியாபாரம் கெடக் காரணம். அகல்விளக்கு கூட வழவழப்பா பீங்கானில் தயாராகி வருது. நாங்க என்ன பண்ண? அந்தக் காலத்தில் எங்க மண் தொழிலுக்குப் பெரிய மவுசு இருந்தது. இப்ப அப்படியில்ல. 5 அடி விநாயகர் சிலையை 800 ரூபாய்க்கு வாங்குகிறோம். அதில் மண், செய்கூலி போக ஏதாவது மிஞ்சினா தான் லாபம். இது எங்கக் குலத்தொழில். அதனால விட முடியல. தொடர்ந்து செய்கிறோம். பெரிய அளவில் வளரவில்லை என்றாலும், இந்தப் பிள்ளையார் சதுர்த்தி வேலை மாதிரி ஒண்ணு மாத்தி ஒண்ணு கிடைக்குது. கோயில்களில் வர்ணம் பூசறது போன்ற வேலைகளும் அதிகம் வருகிறது'' என்றார்.

நாளெல்லாம் சிரமப்பட்டு அழகழகாக விநாயகர் சிலைகளைக் கலையழகுடன் உருவாக்கினாலும், அவை பத்து நாள் பூஜைக்குப் பிறகு கடலில் கரையப் போகிறது என்பது வருத்தம் தான். அதிலும் பிரம்மாண்டப் பிள்ளையார்கள் ஊர்வலமாகக் கடற்கரையை நோக்கிப் போவதை நினைத்தாலும் கிலி பிடிக்கிறது.

இரா. சுந்தரமூர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline