|
|
ஜூலை 11 - உலக மக்கள் தொகை தினம்
''வேலையில்லாத் திண்டாட்டம், வளங்களின் பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்குலைவு, பட்டினிச் சாவு, சமூக - கலாச்சாரச் சீரழிவுகள் என்று பூமி இதுவரை கண்டிராத அளவுக்குத் தொல்லை களைச் சந்திக்கப் போகிறது. மிக வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சியை இயற்கை வளங்களுக்குச் சமமாக உனடியாக சமநிலைக்குக் கொண்டு வராவிட்டால் உலக நாகரிகமே அழிந்துவிடும்'' என்ற பலவிதமான அச்சுறுத்தல்களுடன் உலக மக்கள் தொகை 600 கோடியைத் தாண்டியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள் தொகை இப்போது ஒவ்வொரு ஆண்டும், 1.33 சதவீதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 1.33 வீதம் என்பதை எண்ணிக்கையில் சொல்வதானால் 78 மில்லியன் மக்கள். இதன்படி கடந்த 1999 அக்டோபர் 12- ல் 6 பில்லியனுக்கு (Billion) உயர்ந்த மக்கள் தொகை இந்த நூற்றாண்டின் அரைவாசியின் போது உயர்ந்தபட்சமாக 10 பில்லியனைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி பிறப்பிலும் - இறப்பிலும் பெரிய மாற்றங்களைச் செய்து கொடுத்திருக்கிறது. ஒருபுறம் ஒரு காலத்தில் மரண கண்டம் என்ற நிலையில் இருந்த பிரசவத்தில் இப்போது தாயினதும், சேயினதும் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. இருந்தும் வசதிகள் எட்டாத நாடுகளில் பிரசவத்துடன் தொடர்பாக இன்னமும் அரைமில்லியன் ஏழைத் தாய்மார்களும், தகுந்த கவனிப்பு இன்றி ஏழு மில்லியன் குழந்தைகளும் ஆண்டுதோறும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னொருபுறம் மரணத்தின் எல்லை தள்ளிப் போடப்பட்டு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பூமி மெல்ல நரையேறிக் கொண்டிருக்கிறது. 80 வயதுக்கு மேல் 66 மில்லியன் பேர் உயிர் வாழ்கிறார்கள். சமீபத்திய மரபணு வரைபடமும் தன் பங்குக்கு மனிதன் நினைத்தால் ஆயிரம் ஆண்டுகள் வரைகூட வாழலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. பணக்கார நாடுகளில் ஒரே குடும்பத்தில் பல தலைமுறையினர் சகவாழ்வு நடத்துவதென்பது இப்பொழுதெல்லாம் சாதாரணமான ஒன்று. மனிதத் தலைகளால் உலகம் நிறைந்து கொண்டிருப்பதற்கு இவையே அடிப்படைக் காரணங்கள். ஆனால் இந்த அதிகரிப்பு என்பது வரம்பையும் மீறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே இந்த நூற்றாண் டின் மிகப் பெரும் பிரச்சினையாக முன் வைக்கப் படுகிறது.
1804 - இல் ஒரு பில்லியனாக இருந்த உலக மக்கள்தொகை 1927லேயே இரண்டு பில்லியனாக மாறியிருக்கிறது. ஒரு பில்லியன் கூடுவதற்கு அப்போது 123 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இந்தத் தொகை ஒவ்வொரு பில்லியனாய் அதிகரிப் பதற்கு எடுத்த காலப் பகுதியென்பது வேக மாகக் குறையைத் தொடங்கி விட்டது. 1960 இல் 3 பில்லியன் 1974 இல் 4 பில்லியன், 1987 இல் 5 பில்லியன் என்றாகி, அதன் பின் 12 ஆண்டுகளில் 6 பில்லியனை எட்டிப் பிடித்திருக்கிறது.
குறைந்த கால இடைவெளிகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் இத்தகைய போக்கு உலகிலே மக்கள்தொகை வெடிப்பு (population Explosion) என்னும் நிலையை உண்டு பண்ணி பட்டினிச் சாவை ஏற்படுத்தி விடுமென பொருளியற் சிந்தனாவாதிகள் எச்சரித்து வருகின்றனர். பூமியின் உயிரணு மண்டலத்தின் தாங்கும் எல்லையை அதிகரிக்கும் மக்கள் தொகை தாண்டிவிட்டது என்றும், உலகப் பொருளாதாரம் உயிரினச் சூழலை வட்டிக் கெடாமல் செலவழிக்கிறது என்பதை விடக் கவலையின்றி முதலையே விழுங்கி வருகிறது எனவும் சுற்றுச் சூழலியலாளர்களும் தம் பங்குக்குக் குரல் எழுப்பி வருகின்றனர். பெருகி வரும் மக்கள் தொகையால் மனிதர்களுக்கும் புவியின் மற்றைய சொந்தக்காரர்களான விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையே நிலவ வேண்டிய சமநிலை பெருமளவுக்குக் குழம்பிப் போய்விடும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் தீவிரத் தன்மையால் ஐக்கிய நாடுகள் சபை 1999 ஜூலையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்திருக் கிறது. இதில் மக்கள்தொகைப் பெருக்கத்துக் கான தீர்வாகக் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் பற்றியும் கருக் கலைப்பு பற்றியுமே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. அதிலும் மூன்றாம் உலக நாடுகள் குடும்பத்தைத் திட்டமிட வேண்டிய அவசியம் பற்றி மேற்திசை நாடுகளால் அதிகம் வற்புறுத்தப்பட்டுள்ளது.
உலகின் மொத்தக் மக்கள்தொகையில் பெரும்பங்கு மூன்றாம் உலக நாடுகளிலேயே அடங்கி விடுகிறது. மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் மக்கள்தொகைப் பெருக்கமே உலகின் வறுமைக்குக் காரணமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டப்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் மிகுந்த இந்த நாடுகள் எல்லாம் தமது குடும்பத்தின் சராசரி அளவை இரு பிள்ளைகளாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன.
உலக மக்கள் தொகையில் மிகவும் பெருமளவைக் கொண்ட சீனாவில் (125 கோடி) 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' என்ற குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை மிகவும் இறுக்க மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது' கருச்சிதைவும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையும் சீன அரசாலேயே நிர்ப்பந்திக்கப்படுகிறது. அதன் கடுமையான சட்ட விதிகள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வதைத் தடை செய்கிறது. இரண்டாவது குழந்தை பிறக்க நேரிடின் முதலாவது குழந்தைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள், உதவித்தொகைகள், நிறுத்தப் படுவதுடன் பெற்றோரின் வேலையும் பறிக்கப் பட்டு விடுகிறது. சிவப்பு நாட்டின் இந்தத் தீவிரமான நடைமுறைகளால் அங்கு ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சராசரியாக 1.8 என்னும் அளவுக்கு வெகுவாகச் சுருங்கி விட்டிருக்கிறது.
சீனாவை முந்திவிடும் வேகத்தில் இரண்டாவது இடத்தில் வந்து கொண்டிருக்கும் இந்தியா (100 கோடி) 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற அளவுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறது. இருந்தும், முழுமையான அரசியல் ஈடுபாட்டுடன் இந்தத் திட்டத்தை இந்தியா செயற்படுத்தவில்லையென ஐ.நா. அண்மையில் குற்றம் சுமத்தியிருக்கிறது. இதில் உண்மையில்லாமலும் இல்லை. உலக வங்கியின் அழுத்தத்துக்குப் பணிந்து சஞ்சய் காந்தியினால் தீவிரமாக முன் எடுக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைக்குக் கிளம்பிய பூதாகரமான எதிர்ப்பு 1977 இல் காங்கிரஸின் படுதோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. இதனாலேயே இந்த விஷயத்தில் கறாரைக் கடைப்பிடிக்க அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. நிர்ணயித்த இலக்கை எட்டி விட அசுர கதியில் நிகழ்ந்த குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையில் அப்போது திருமணம் ஆகாத பெண்களும் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல நாடுகள் மக்கள் தொகை என்பதைத் தேசிய வலுவாகக் (National Power) கருதி குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தடை விதித்துள்ளன. அங்கெல்லாம் இன்றைய குழந்தைகளே தேசத்தைக் காக்கும் நாளைய போர் வீரர்கள்.
பல்கிப் பெருகும் கோடிக் கணக்கான மக்களின் பெருக்கத்துக்குப் பிறப்புக் கட்டுப் பாட்டையும் கருக் கலைப்பையும், பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதையும் வழிமுறைகளாகக் கைக்கொள்வதை அடிப்படை முஸ்லிம் நாடுகளும் வாட்டிகனும் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இதற்கு இஸ்லாமிய, கிறித்தவ மதக் கோட்பாடுகளே காரணமாக உள்ளன. |
|
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை இருபாலானாருக்கும் பொதுவானதாக இருந்த போதும் சமூகத்தில் பெண்களுக்கான அறுவைச் சிகிச்சையே (Tubectomy) தொடர்ந்தும் வற்புறுத்தப்படுவதற்குப் பெண்ணுரிமை அமைப் புகள் ஏற்கனவே கண்டனம் செய்து வருகின்றன. இந்நிலையில் அறுவை சிகிச்சையையும், கருக்கலைப்பையும் மக்கள் தொகைப் பெருக் கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளாகப் பயன்படுத்துவதற்கு, சுய விருப்பின் பேரில் அவற்றைச் செய்வதைத் தங்களுடைய உரிமை கள் எனப் பிரகடனம் செய்துள்ள பெண்ணிய அமைப்புகள் கூடத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவைத் தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் பெண்கள், மக்கள்தொகை மற்றும் சுற்றுச் சூழலுக்கான அமைப்பு (The committee on women, population and the environment - CWPE) ''வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவுகள், இதனால் ஏற்படும் அரசியல் நிலையின்மை போன்றவற்றைச் சரி செய்வதற்கு பெண்களின் கரு வளத்தைக் குறி வைத்துக் குடும்பக் கட்டுப்பாட்டை மேற் கொள்ளச் சொல்வது ஒரு மேலாதிக்கச் சிந்தனையே. கறுப்பு மக்களின் எண்ணிக்கை யைக் குறைத்து, வெள்ளையர்களின் எண்ணிக் கையை அதிகரிக்கச் செய்து வளர்முக நாடுகளின் பலத்தைக் குறைக்கும் ஒரு தந்தி நோயாக நடவடிக்கையாகவே மேற்குலக நாடுகள் குடும்பக் கட்டுப்பாட்டை ஒரு தீர்வாக முன்மொழிகின்றன. இது பெண்களுக்கு எதிரான - குறிப்பாக ஏழைப் பெண்களுக்கும் வெள்ளையர் அல்லாத பெண்களுக்கும் எதிரான வன்முறையே'' என்று கடுமையாகச் சாடி வருகிறது.
உணவுப் பஞ்சத்தின் மூல காரணமாகப் பெரும் பங்கு உணவைத் தின்று தீர்த்து விடுவதாக மூன்றாம் உலக நாடுகள் சாட்டப்பட்ட போதும் அவர்களின் வறுமைக்கும் அங்கு நிலவும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கும் தொடர் பேதும் இல்லை என்பதே உண்மை நிலை ஆகும். உலக மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் ஒருவர் ஆண்டு ஒன்றுக்கு 800 கிலோ தானியத்தை உணவாகப் பயன்படுத்துகிறார். இந்தியாவுடன் ஒப்பிடும்போது இது நான்கு மடங்கு அதிகம். ஆனால் மேற்குலகின் இத்தகைய ஆடம்பர நுகர்வும், வீரியமும், தற்போது நிறைந்துள்ள வளங்களின் திறமையற்ற உபயோகமும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, 'அவர்கள் வறுமை யாக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய பிள்ளைகள் இருப்பதே யாகும்' என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது மூன்றாம் மண்டல நாடுகளின் முன்னேற்றத் துக்கு உதவுவதற்கான கைத்தொழில் மய நாடுகளின் கடப்பாடுகளைத் தட்டிக் கழிப்பதற் கான காரணங்கள் ஆகும்.
முன்னேற்றமடைந்து வரும் நாடுகளின் பெருமளவு நிலப்பகுதி பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தேவையான பணப்பயிர்களை உற்பத்தி செய்வதற்கே உபயோகப்படுத்தப் படுகின்றன. மேற்கத்திய நாடுகளின் தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் மிக மலிவாக இங்கேயே உற்பத்தி செய்யப் படுகின்றன. அதிகரித்து வரும் தனது மக்கள் தொகைக்கு உணவிடுவதற்காக மூன்றாம் உலக நாடுகள் உணவு உற்பத்தியில் ஈடுபடின் பணப்பயிர் உற்பத்தியைக் குறைத்துவிடும் என்று மேற்குலகு அஞ்சுவதும், அவை மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான தீர்வாகப் பிறப்புக் கட்டுப் பாட்டை முன் வைத்துள்ளமைக்கான பின்னணி களில் ஒன்றாகும்.
உண்மையில், வறிய உலகுக்கு அதிகரிக்கும் செல்வம் அடைய முடியாததொன்றல்ல. இருக்கும் வளங்களைக் கொண்டு இன்றுள்ளதை விடப் பன்மடங்கு மக்களுக்கு வசதியான வாழ்வு அளிக்க முடியும். வளப்பயன்பாடு என்பது விஞ்ஞான - தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சி யிலேயே தங்கியிருக்கிறது. உயர் தொழில் நுட்ப-பிறப்புரிமைத் தொழில் நுட்ப அறிவை மனிதப் படியாக்கலுக்கும் (Human Cloning), உயிர் ஆயுதங்களாக விஷக்கிருமிகளை உருவாக்குவதிலும் வளர்ந்த நாடுகள் செலவு செய்து கொண்டிருக்கின்றன. இந்த 'ஜீன்' புரட்சியை மனித குலத்துக்கு நிறைவான உணவை அளிப்பதில் செய்ய வேண்டும் என்பதே மானிட நேயம் மிக்கவர்களின் குரலாக இருக்கிறது.
மக்கள்தொகையில் நாலாவது பெரிய நாடான இந்தோனேஷியாவில் (80 சதவீதம் முஸ்லிம்கள்) மக்கள் தொகைப் பெருக்கம் இப்போது ஆச்சரியப்படுமளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கருத்தடையையும் கருக்கலைப்பையும் நிராகரிக்கிற அந்த முஸ்லிம் நாட்டில் எப்படி இது சாத்தியமாகியது? இந்தக் கேள்விக்கான பதில்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக இருக்க முடியும். ஒரு காலத்தில் எழுத்தறிவு வீதம் 12 ஆக இருந்த இந்தோ னேஷியாவில் இப்போது அது 80 ஆக உயர்ந்திருக்கிறது. ஆரம்பக் கல்வி 100 வீதமானோருக்கும் கிடைக்கிறது. இங்கு கல்வியறிவுதான் குடும்பத்தைத் திட்டமிட வைத்திருக்கிறதே தவிர, கருத்தடையும் கருக்கலைப்பும் அல்ல. இந்தியாவில், கேரளா வில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு பீகாரிலோ உத்தரப்பிரதேசத்திலோ உள்ள ஒரு இந்துவை விடக் குறைவான குழந்தைகள் இருப்பதற்கும் இதுவே தான் காரணம்.
ஏழை நாடுகளின் வாழ்க்கைத் தரத்தில் கல்வியில் ஏற்படும் வளர்ச்சியே எதிர்காலத்தில் அதன் மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறந்த சாதனமாக இருக்கும். உடனடியாக சுய நன்மைக்காக நீண்ட காலப் போக்குகளைக் கைவிட்டு விடக் கூடாது என்ற கருத்தை உலகப் பொருளாதாரத்தின் கடிவாளத் தைக் கையில் வைத்திருக்கும் நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பொ. ஐங்கரநேசன் |
|
|
|
|
|
|
|