Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
மரத்துக்கு வீசுவோம் சாமரம்
- மீராசிவகுமார்|ஜூலை 2003|
Share:
மனிதர்களுக்குப் பலவிதங்களில் உதவியாய் இருந்தாலும் கூடு உதாசீனப்படுத்தப்படும் ஜீவன்களில் ஒன்று மரம். பின்னே, மூளை குறைவாய் இருப்பவர்களை, ''மரமண்டு'' என்றுமூ உணர்ச்சிகள் குறைவாய் இருப்பவர்களை ''மரஜடம்'' என்றும் மரத்தின் மேல் உள்ள உயர்ந்த எண்ணத்திலா சொல்கிறோம்?

அந்தக் காலத்தில் மரங்களுக்கு நல்ல பெயர் இருந்தது. ''மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்'' என்று திருவள்ளுவர் இடித்துக் கூறினால் கூட, சரித்திரங்களில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி இருக்கிறது மரம். ''மராமரம்'' இல்லாவிட்டால் நமக்கு வால்மீகி இராமாயணம் கிடைத்திருக்குமா? ''போதிமரம்'' புத்தமதம் தோன்ற வித்திட்டதல்லவா! ஒரு அரசன் நன்கு ஆட்சி செய்தான் என்று சொல்லும்போது சரித்திர புத்தகத்தில் ''அவர் சாலை ஓரங்களில் மரங்கள் நட்டார்'' என்று சொல்வதில்லையா?

ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். ''அரச மரத்தைச் சுற்றி அடி வயித்தை தொட்டுப் பார்த்தாளாம்'' என்று பொறுமை இல்லாத மக்களால் மருத்துவ சக்தி நிறைந்த காற்றைக் கொடுக்கும் அரச மரத்துக்குக் கெட்ட பெயர். ''பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏளித்தானேயாகணும்'' என்று சும்மா இருக்கும் புளிய மரத்தை பேயோடு முடிச்சுப் போட்டுவிட்டார்கள். ''மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்'' என்பதைப் பல சோம்பேறிகள் தங்களுக்குச் சாதகமாகப் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டதோடு மரங்களையும் வாட விட்டார்கள்.

பணம் தாருங்கள் என்று யாரையாவது கேட்டால், ''நான் என்ன பணங்காச்சி மரமா வைச்சிருக்கேன். கேட்டவனுக்கெல்லாம் பறிச்சு குடுக்க'' என்று மரத்தில் பணம் காய்க்காதது தான் பிரச்சனை என்று கேட்டவரையும் மரத்தையும் கோபித்துக் கொள்வார்கள். இதில் வேதனை என்னவென்றால், பணமாக காய்க்காவிட்டாலும், மரத்தை வெட்டி துண்டுபோட்டு, அரைத்து, கூழாக்கி, அந்த மரக்கூழில் இருந்துதான் காகிதம் தயாரித்து பணத்தை அச்சிடுகிறார்கள் என்பதை மறந்து விடுவதுதான். மரங்கள் பல சேர்ந்தால் காடாகும் என்று நல்லவிதமாய் சொல்லலாம். ''தனி மரம் தோப்பாகாது என்று எதிரிடையாய் சொல்லி, ஒரு மரத்தை ஒதுக்கி வைக்கிறார்கள்.

இதில் பனை மரத்தின் பாடு ரொம்பவே பாவம். ''பனை மரத்துக்கு அடியிலே உட்கார்ந்து பால் குடிக்கிறேன்னான்'' என்று குடியால் குடியைக்கெடுத்த மக்களின் மேல் உள்ள கோபத்தை பனை மரத்தின் மேல் காண்பிக்கிறார்கள். ''தென்னை மரத்தை வைச்சவன் திண்ணுட்டு சாவான், பனை மரத்தை வைச்சவன் பாத்துட்டு சாவான்'' என்று, ஏதோ மனிதர்கள் சாவிற்கே அவர்கள் மரம் நட்டதுதான் காரணம் என்பது போல் புரளியை வேறு கிளப்புகிறார்கள்.

அட, மரத்தை மதிக்கிறவங்க யாருமே இல்லியா என்ன? கவிஞர் கண்ணதாசன் ''தென்னை வளர்த்தா இளநீரு; பிள்ளைப் பெத்தா கண்ணீரு'' என்று தென்னம்பிள்ளையை அழகாக உயர்த்திச் சொல்கிறார். பல தலைமுறையாய் செழித்து இருப்பதை ''வாழை அடி போல'' என்று சொல்வதோடு அதைச் சுட்டிக் காட்ட திருமணத்தில் வாழை மரத்தை கட்டுவார்கள்.

மரங்கள் நமக்கு பழங்கள், காய்களைக் கொடுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளை ஈந்தும், நிழல் அளித்தும் (இந்தத் தென்றலுக்கு காகிதம் அளித்தும்!) விழுந்த பின் மேசை நாற்காலி, கட்டிலுக்கு கட்டையாகவும், விறகாகவும் உதவுகின்றன'', என்று சிவாஜி கணேசன் சிவபெருமானாக திருவிளையாடல் படத்தில் மனிதனை மரம் என்று சொல்ல ஆரம்பித்து ''போட்டா விறகுக்காகுமா, ஞானத் தங்கமே, தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா?'' என்று நம் (மர)மண்டையில் உரைக்கும்படி சொல்கிறார்.
பிரச்சனை வந்தால் மரங்களால் ஓடமுடியாது. அவை நின்று சமாளிக்கும், முடியாவிட்டால் ''மண்ணுக்கு மரம் பாரமா?'' என்று தத்துவம் பேசி வீரமரணம் அடையும். மரத்தை ஆடி அடித்தும் பெயரை செதுக்கியும் பல விதத்தில் துன்புறுத்தினால் அவை பதிலுக்கு நம்மை கடித்தோ, கொட்டியோ, கொத்தியோ வஞ்சம் தீர்க்காது. பொறுமைக்கு இலக்கணமாய் இருக்கும் மரங்கள் மண்ணில் புதைந்து நிலக்கரியாகவும், வைரமாகவும், க்ரூட் ஆயிலாகவும் வருகிறது. மரங்கள் இயற்கையில் இலவசமாய்க் கிடைக்கும் வெயிலைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கிறது. அதை ஒளித்து வைக்காமல் எல்லாரும் உண்ணக் கொடுக்கிறது. மழை நீரால் நிலச்சரிவு வராமல் தடுப்பதோடு, காடுகள் மழை உருவாக உதவுகின்றன.

ஆனால், வலியோரை வாழ்த்தி எளியோரை தாழ்த்தும் இந்த உலகத்தில் அப்பாவி மரங்களுக்கு இடமேது? ''வெட்டு ஒண்ணு; துண்டு இரண்டு'' என்று 1-2-3 ... எண்ணுவது போல் மரங்கள் வெட்டப்பட்டு நகரங்கள் உருவாகி வருகின்றன. ''வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்'' என்பதை இடப் பற்றாக்குறையால் பின்பற்ற முடியாததாலும், முதுமலை போன்ற அடர்ந்த காடுகள் திருடர்களாலும், அவர்களைப் பிடிக்க முயலும் அதிகாரிகளாலும் வெட்டப்படுவதாலும் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடும், மாசுபட்டகற்றால் நோய்களும் வருவதை கண்முன்னே பார்க்கிறோம். மரங்கள் அழிவதால், அவற்றைச் சார்ந்த மற்ற தாவரங்களும் பறவைகளும், விலங்குகளும் கூட அழிந்துவிடுகின்றன.

'சிப்கோ' இயக்கம் போல் சிலர் மரங்களைப் பாதுகாக்க அவற்றை அணைத்துக் கொண்டு ''முடிந்தால் என்னையும் சேர்த்து வெட்டுங்கள்'' என்று போராட்டங்கள் செய்கிறார்கள். அரசாங்கம் நடத்தும் ''மரம் நடு விழாக்கள்'' ஒரு காட்சிக்காக மட்டும் இல்லாமல் நடப்பட்ட மரங்கள் பாதுகாக்கப்பட்டால் பல நன்மைகள் விளையும்.

அட, இத்தனையும் கேட்டுட்டு சும்மா மரம் மாதிரி நிற்கப் போறீங்களா? இல்லை ஆக்கப்பூர்வமா ஏதாவது பண்ணப் போறீங்களா? நீங்களே முடிவு பண்ணுங்க!

மீரா சிவா
Share: 




© Copyright 2020 Tamilonline