Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
புத்தரின் பெயரால்
- பிரகாசம்|மே 2003|
Share:
'புத்தரின் பெயரால்'' என்ற திரைப்படம் அண்மையில் 'Newport Beach' சர்வதேச படவிழாவில் ஏப்ரல் 10ம் தேதி திரையிடப்பட்டது. இத்திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் "Oslo - Norway" சர்வதேச படவிழாவில் முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப்பட்டது. இதை அடுத்து, இந்தப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. இப்படத்தைத் தடை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் இந்திய, பிரித்தானியா அரசாங்கங்களையும் கோரியிருந்தது. பிரித்தானியா 'திரைப்படச் சான்றிதழ் குழு'' ஐந்து தடவைகள் பரிசீலித்தும் படத்தின் சிறு பகுதியைக்கூடத் தடை செய்யவில்லை. இந்தியாவில் இப்படம் தடை செய்யப்பட்டதற்கான உறுதியான அறிக்கைகள் இன்னமும் எதுவும் வெளியாகவில்லை. இப்படம், இங்கிலாந்தில் வசிக்கும் இரு இளைஞர்களால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சண்முகதாஸ் (தாஸ்) என்பவரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாயி ஜோர்ஜ் (சாயி) என்பவருமே இந்த இரு இளம் தயாரிப் பாளர்கள். இலங்கையில் இருந்து 1990ம் ஆண்டின் முற்பகுதியில் லண்டன் சென்றவர் தாஸ். இதே காலகட்டத்தில் சினிமா துறையில் கல்வி பெற லண்டன் சென்றவர் சாயி. ஒன்பது வருடங்களுக்கு முன்னால் இருவரும் லண்டனில் சந்தித்ததிலிருந்து இப்படத்தைத் தயாரிக்கும் ஆவல் கொண்டிருந்தனர்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங் களில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரச படைகளினாலும், பின்னர் இந்திய 'அமைதி காக்கும் படையினராலும்' கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களின் கோர்வைதான் இப்படத்தின் மையக்கரு. இந்தச் சம்பவங்களையும் சமூகப் பின்னணியையும் புரிந்து கொண்டு, சாயி இதற்கு திரைப்பட வடிவம் கொடுத்திருக்கிறார். கருவையும், கதையையும் புரிந்து கொண்டு, இப்படத்தைச் செம்மையாக செதுக்கியிருக்கிறார், ''ராஜேஸ் ரச்ரிவர்'' என்ற இந்த இயக்குநர்.

இலங்கையில் இப்படியான படங்களை படப்பிடிப்பு செய்யமுடியாத சூழ்நிலையில், தென் இந்தியாவில், இலங்கை அமைப்பை ஒத்து இருக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் அனைவரும் மலையாள நட்சத்திரங்கள். தமிழ், சிங்கள வார்த்தைப் பிரயோகம், தொனி எல்லாம் திறமையாக அமையவில்லை. ஆங்காங்கே சில தொழில் நுட்பத் தவறுகளையும் பார்க்க முடிகிறது. ஒலி, ஒளி நன்றாக இருக்கிறது. கதை சொல்லப் பட்டிருக்கும் பாணியும் சம்பவங்களின் கோர்வையும் திறமையாகக் கையாளப் பட்டிருக்கிறது.

சிவா என்ற ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனின் பார்வையிலிருந்து படம் நகர்கிறது. அவனது தகப்பனார் ஒரு மருத்துவர். தொல்லை நிறைந்த, அல்லல் சூழ்ந்த நிலைகளிலும் மருத்துவக் கடமையைத் தவறாது புரிகிறார் சிவாவின் அப்பா. இவரது கடமையும், நற் சிந்தனைப் போக்கும், இலங்கை இராணுவத் தினால் அழிக்கப்பட்டுவிடுகிறது.

சிவாவின் நெருங்கிய சிங்கள நண்பனான மருத்துவக் கல்லூரி மாணவன், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், பணத்தேவைக் காகவும், இராணுவத்தில் சேர்கிறான். சிங்கள-தமிழ் உறவுகள், மனிதாபிமான உணர்வுகள், பல இடங்களில் சோதனைக்கு ஆளாகிறது.

இப்படத்தின் கதை முக்கியமாக 1985 லிருந்து 1990க்கு இடையிலான காலகட்டத்தில் மையம் கொண்டிருக்கிறது. இயக்கத்தில் சேரச் சொல்லி, சிவாவிற்கு புலிகளின் தலைவர் அழைப்புவிடுத்தும், சிவா மறுக்கிறான். போராட்டத்தில் நம்பிக்கை அற்றவனாகவும், உயிர்க்கொலைகளையும், அர்த்தமற்ற இழப்புகளையும் எதிர்ப்பவனாகவும் சிவா சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தனது தகப்பனாரின் இழப்புக்குக் காரணம் இலங்கை இராணுவம் தான் என்று உறுதியானவுடன், புலிகளோடு சேர புறப்படுகிறான். இத்தருணத்தில் ''இந்திய அமைதி காக்கும் படை'' இலங்கை வருவது உறுதியாகி மனம் மாறுகிறான். ஆனால் காலப் போக்கில் இந்தியப் படையினரும் அமைதி காக்க மறந்து, தமிழரின் எஞ்சியவை களைச் சீர்குலைக்கிறார்கள்.

சிவாவின் இழப்புகள் எல்லை மீறுகிறது. உயிர்காக்கவேண்டி, நாட்டை விட்டு அகதியாக லண்டன் போவதைத் தவிர வேறு வழி தெரியாமல் அந்த வழியையே நாடுகிறான்.

சிவாவின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட இன்னல்கள், அநீதிகளுக்கு மற்றைய தமிழ்க் குடும்பங்களும் விதிவிலக்கல்ல. ஒரு காலத்தில் இந்து சமுத்திரத்தின், முத்தாக, கற்பக தீபமாகக் கருதப்பட்ட இலங்கைத் தீவில் அக்கிரமங்களும் அவலங்களும் தலைவிரித்தாடின. அமைதியாய் வாழ்ந்த மக்கள் போராட்டத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ தள்ளப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் உறுதியான நிலைப்பாடு படம் முடியும் வரை பேணப்பட்டிருக்கிறது.

'உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் உயிரைக் கொடுப்போம்' என்கிறார் தலைவர். 'மரணம் மகத்தானது! ஆனால் வாழ்வு அதைவிட மகத்தானது' என்கிறான் சிவா. போராட்டத்தில் இறந்த புலிகள் வெறும் மரணித்தவர்கள் அல்ல, தமிழர்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக விதைக்கப்பட்டவர்கள் என்கிறார் தலைவர்.

இத்தனை இழப்புகள் தேவைதானா? என்கிறான் சிவா. தெளிவான கொள்கையும், திடமான மனஉறுதியும் கொண்ட ஒரு போராளி, ஆயிரம் இராணுவத்திற்கு சமன் என்கிறார் தலைவர். சிவா போன்ற புத்திசாலி இளைஞர்கள் தமது போராட்டத்திற்குத் தேவை என்ற தலைவரின் வேண்டுகோள்கூட, சிவாவின் தனிமனித இழப்புகளுக்கு முன் அவனது முடிவை மாற்ற முடியவில்லை.
லண்டனில் அகதியாகி, மருத்துவப் படிப்பை முடிக்கிறான் சிவா. தனது குடும்ப உறவுகள் அனைத்தையும் லண்டனில் குடியமர்த்துகிறான். இலங்கைத் தமிழர்களின் எல்லையில்லா துயரங்களின் ஒருபகுதியாகப் படம் நீள்கிறது. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை சம்பவங்களும் ஏதோ ஒரு வழியில் இலங்கையில் நிகழ்ந்தவைதான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

படத்தின் பெயர் ஒரு சர்ச்சைக்குரிய விடயம். ''அமைதி போதித்த புத்தர் எங்கே?'' என்றோ ''புத்தா உன்பெயரில் நிகழும் அழிவுகள் பார்'' என்றோ அர்த்தப்படுத்தலாம். வடபகுதிக்கு அனுப்பப்படும் இராணுவத் தலைவர், புத்த சமய பீடாதிபதியின் ஆசிர்வாதம் பெற்று கடமை ஏற்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் சாதாரண இராணுவ சிப்பாய்கள், புத்த பிக்குகளினால் ஆசிர்வாதம் செய்யப்பட்டு போருக்கு அனுப்பப் பட்ட காட்சி சர்ச்சையை கிளப்பும் என்பதில் ஆச்சரியமில்லை.

'ஒரு துளி கண்ணீரில் கடலளவு சோகம்' 'மனிதம் அநாதையானது' 'எங்களது மண்ணை எப்போது எமக்குப் பெற்றுத் தருவாய்?'

என்ற கவித்துவமான பாடல்கள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. இலங்கைத் தமிழரின் இன்னல் கண்டு எங்கள் கண்கள் பொழிகின்றன!

இத்திரைப்படம் "Beverly Hills" சர்வதேசத் திரைப்பட விழாவின் ஆரம்ப திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. 8th May 6.30 pm காட்சியாக திரையிடப்படும்.

www.beverlyhillsfilmfestival.com
www.inthenameofbuddha.com

பிரகாசம்
Share: 
© Copyright 2020 Tamilonline