'லைஃப் ட்ரஸ்ட்' கலைவாணி
|
|
|
|
ஒரு காலத்தில் இறைவனுக்கே தன்னை ஒப்படைத்து வாழ்ந்தவர்கள் 'தேவரடியார்கள்' என அழைக்கப்பட்டனர். இவர்களில் ஆண்களும் உண்டு; பெண்களும் உண்டு. காலப்போக்கில் ஆண்களின் எண்ணிகை குறைய, தேவரடியார்கள், 'தேவதாசிகள்' ஆயினர். இறைவனுக்கான ஆடல், பாடல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டு இறைவனுக்கும், கலை வளர்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்த இவர்களுக்கு, அக்காலத்தில் ஆலயங்களில் தனி மரியாதை இருந்தது. 1947ல் தேவதாசி ஒழிப்பு முறைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. மன்னர்களும் ஜமீன்களும் மறையவே இந்தக் கலையும் ஆதரிப்பார் இல்லாமல் மறைந்து போனது.
இன்றைக்கு இறைவனுக்கு அடியவர்களான 'தேவதாசிகள்' என்போரே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், முந்தைய தலைமுறைகளின் நீட்சியாக, ஆறாவது தலைமுறையாக ஒரே ஒருவர் இன்னமும் நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவர்தான் 85 வயதான முத்துக்கண்ணம்மாள்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இவரது சொந்த ஊர். பாரம்பரிய இசைக்குடும்பம். தந்தை நட்டுவனார், இசை விற்பன்னர். குடும்பமே தலைமுறை தலைமுறையாக சதிர் ஆட்டத்தில் தேர்ச்சிபெற்ற குடும்பம். தந்தையிடமிருந்து இசை, நாட்டிய நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்த முத்துக்கண்ணம்மாள், அக்கால வழக்கப்படி தனது ஏழாவது வயதில் விராலிமலை முருகனுக்கு அடியவராக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 32 தேவதாசிகளில் இவர்தான் கடைசி நபர். அந்த 32 தேவதாசிகளுக்கும் சதிர் ஆட்டத்தின் நுணுக்கங்களைக் கற்பித்தவர் முத்துக்கண்ணம்மாளின் தந்தையான ராமச்சந்திரன்தான்.
ஆலயத் திருவிழாக்களில், ஆலயத்தில் தொண்டு செய்வதுடன் சதிர் ஆடுவதும் தேவதாசிகளின் வழக்கம். சுவாமி மண்டபத்தில் எழுந்தருளும்போதும், வீதி உலாவின் போதும் விசேஷமாக சதிர்க் கச்சேரிகள் நடக்கும். இன்றைய பரத நாட்டியத்திற்கு மிக நெருக்கமானதாகவும், அதன் முன்னோடிக் கலையாகவும் மதிப்பிடப்படுவது 'சதிர்.'
சதிருக்கும் பரதநாட்டியத்திற்கும் என்ன வேறுபாடு? அதுபற்றி முத்துக்கண்ணம்மாள் கூறுகிறார் "சதிர் ஆட்டத்தை நாங்கள் பாடிக்கொண்டே ஆட வேண்டும். பரதநாட்டியத்தில் நட்டுவனார் பாடுவார். மற்றவர்கள் ஆடுவார்கள். ஆனால், நாங்கள் பாடிக்கொண்டே ஆடுவோம். இன்றைக்குப் பலர் எழுதிய பாடல்களுக்கு ஆடுகிறார்கள், அபிநயம் செய்கிறார்கள். ஆனால் அன்றைக்கு எங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பாடல் எழுதுவார்கள். என் தந்தை எங்களுக்குப் பாடல்கள் எழுதுவார். நாங்கள் அதனை மனப்பாடம் செய்து, பாடிக்கொண்டே ஆடுவோம். இன்றைக்கும் அந்தப் பாடல்கள் எனக்கு மறக்காமல் நினைவில் உள்ளன. அன்றைக்கு இப்போது போல் மைக் செட், லைட் எல்லாம் கிடையாது. தீவட்டி, பெட்ரோமாகஸ் வெளிச்சத்தில்தான் ஆடுவோம். விளக்கில்லாமல் கூட ஆடியிருக்கிறோம். நூற்றுக்கணக்கான படிகள் ஏறிக் கோயிலுக்குச் சென்று ஆடியிருக்கிறோம். அதெல்லாம் சிறப்பான காலம்" என்கிறார். "மாதவிலக்கு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் நாங்கள் தினந்தோறும் கோவிலுக்குச் செல்வோம். ஆடிப்பாடி இறைவனை வணங்குவோம்" என்பவர், இன்றும் விராலிமலை முருகன் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான படிகளை ஏறிச் சென்று முருகனைத் தொழுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆலயங்களிலும், புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் நூற்றுக்கணக்கான முறை நடனம் ஆடிய சிறப்புக்குரியவர் முத்துக்கண்ணம்மாள். 'God's last wife' என்ற தலைப்பில் இவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்துள்ளார் கலை, வரலாற்று ஆய்வாளர் இயக்குநர் ஜெயகுமார். சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரபல நாட்டியத் தாரகையான பத்மா சுப்ரமணியம், முத்துக்கண்ணம்மாளின் தந்தை ராமச்சந்திரனிடம் விராலிமலை குறவஞ்சியைக் கற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பரம்பரைக் கண்ணியின் தொடர்ச்சியாக விராலிமலை குறவஞ்சியையும், சதிராட்டத்தையும் இன்றளவும் பலருக்கும் பயிற்றுவிக்கிறார் முத்துக்கண்ணம்மாள். நாட்டிய ஆர்வலர்கள், மாணவ, மாணவியர் இன்றும் இவரை நாடிச் சென்று நாட்டிய நுணுக்கங்களைக் கற்று, குறிப்பெடுத்துச் செல்கின்றனர். இப்போதும் பல ஊர்களுக்குச் சென்று, ஆர்வமுள்ளோருக்கு இக்கலையின் நுணுக்கங்களைப் போதித்து வருகிறார். இத்தனை வயதானாலும் சளைக்காமல் இவர் நடனமாடுவது குறிப்பிடத்தகுந்தது.
இவரது சில நாட்டியங்களைக் காண:
இவரது கலைச்சேவையைப் பாராட்டும் வகையில் இந்திய அரசு இவருக்குச் சமீபத்தில் 'பத்மஸ்ரீ' வழங்கிச் சிறப்பித்துள்ளது.
முத்துக்கண்ணம்மாளுக்கு தென்றலின் நல்வாழ்த்துகள். வணக்கங்கள். |
|
ஸ்ரீவித்யா ரமணன் |
|
|
More
'லைஃப் ட்ரஸ்ட்' கலைவாணி
|
|
|
|
|
|
|